அதிசய நட்சத்திரம் ஸ்வாதி!

ராம பக்தனான ஹனுமானை ஸ்வாதி நட்சத்திரத்துடன் ஒப்பிடுகிறார் மாமுனிவர் வால்மீகி. அதிசயமான ஸ்வாதி நட்சத்திரம் மர்மத்தைப் பார்ப்போம்!

 

நட்சத்திர அதிசயங்கள்!

அதிசய நட்சத்திரம் ஸ்வாதி!

ச.நாகராஜன்

 

அதிசயமே ஸ்வாதி

 

27 நட்சத்திரங்களுல் 15வதாக இடம் பெறும் ஸ்வாதி நட்சத்திரம் ஒரு அதிசய நட்சத்திரம். இது துலா ராசியில் உள்ளது. பெரிய பெரிய மகான்களுடனும் ஆசார்யர்களுடனும் தொடர்புடைய இந்த நட்சத்திரம் வால்மீகி முனிவரால் அதிசயமான விதத்தில் குறிப்பிடப்படுகிறது.

 

ஸ்வாதி போல முன்னேறுவேன்

 

சப்த ரிஷி  மண்டலத்தின் தென் கிழக்கில் ஒரு அபூர்வ நட்சத்திரத் தொகுதி உள்ளது.இதை பூடஸ் என்று மேலை நாட்டு வானியல் குறிப்பிடுகிறது. இந்த ஆல்பா பூடஸ் செக்கச் சிவந்து ஜொலிக்கும் ஒரு நட்சத்திரம். இதையே மேலை நாட்டின்ர் ஆர்க்ட்ரஸ் எனப் பெயரிட்டு அழைக்கின்றனர். இதையே நாம் ஸ்வாதி என அழைக்கிறோம்! குரங்கு போன்ற வடிவமுள்ளதாக இதை நம் முன்னோர் கண்டுள்ளனர்!

 

வானில் ஸ்வாதி நட்சத்திரம் முன்னேறுவதைப் போல நான் செல்வேன் என்று ஹனுமான் வால்மீகி ராமாயணம் கிஷ்கிந்தா காண்டம் 67ம் ஸர்க்கம் 20ம்  சுலோகத்தில் சொல்வது (பவிஷ்யதி ஹிமே: யதா ஸ்வாதே: பந்தா இவாம்பரே) பொருள் பொதிந்த வார்த்தை. வாயு புத்திரனான ஹனுமான் குரங்காக அவதரித்ததை அனைத்து தேச மக்களும் அறிந்திருக்கின்றனரோ என்று எண்ண வைக்கும் விதத்தில் ஆர்க்ட்ரஸ் நட்சத்திரத் தொகுதியை பண்டைய எகிப்து நாட்டினர் குரங்கு போன்றது என்றும் சீனர்கள் கன்னியா ராசி அருகில் உள்ள குரங்கு என்றும் குறிப்பிட்டுள்ளனர். வான மண்டலத்தைப் பல பிரிவுகளாகப் பிரிக்கும் நவீன கால கிரிமால்டி கேடலாக்கில் எகிப்து தேசத்தினர் குரங்கு எனக் குறிப்பிடுவதை 29 எண்ணுடைய நட்சத்திரமாகவும் சீனர்கள் குரங்கு வடிவம் என குறிப்பிடுவதை 142,143 எண்ணுடைய நட்சத்திரங்களாகவும் இந்த கேடலாக்கில் காணலாம்!

 

ஸ்வாதி பவனோ

 

இந்த ஸ்வாதி நட்சத்திரம் சாதாரணமாக அக்டோபர் 20ம் தேதி முதல் நவம்பர் 2ம் தேதி முடிய சூரியனுடன் இணைகிறது. அப்போது இந்தியாவில் பயங்கரமான சூறாவளியும் புயல் காற்றும் ஏற்படுவது வழக்கம். 1864ம் ஆண்டு நவம்பர் முதல் தேதியன்று மசூலிபட்னத்தில் ஏற்பட்ட கோரமான சூறாவளியால் கடல் கொந்தளித்து 30000 பேர் பரிதாபமாக நீரில் முழ்கி சில நிமிடங்களுக்குள்ளாகவே மாண்டனர். ஒரிஸாவில் அக்டோபர்-நவம்பரில் ஏற்படும் புயல் மற்றும் சூறாவளியை மக்கள் ஸ்வாதி பவனோ (ஸ்வாதிக் காற்று) என்றே குறிப்பிடுகின்றனர்.

 

ஸ்வாதிக்கும் வாயுவுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது! ஸ்வாதியின் அதி தேவதை வாயு! வேதம் ஸ்வாதி நட்சத்ரம் வாயு தேவதா எனக் குறிப்பிடுகிறது. புராண இதிஹாஸங்களில் மருத் தேவதைகளே ஸ்வாதியாகக் குறிப்பிடப்படுகிறது. சாந்தி கல்பம் என்னும் நூல்  ஸ்வாதியை எப்பொழுதும் வடக்கு முகமாகவே நகர்வது என விவரிக்கிறது.

 

வான மாணிக்கம்

 

ஸ்வாதி என்றால் வாள் என்று பொருள்.  வாயு தேவன் கையில் வாள் சித்தரிக்கப்படுகிறது. ‘நிஷ்டா’ அல்லது ‘நிஷ்த்யம்’ என்னும் இருளை சுவாதியின் ஒளிக் கிரணங்கள் அகற்றி விடுமாம்! அதாவது தமஸ் என்னும் இருளை ஜோதி என்னும் ஒளி நீக்கி விடும். (தமஸோ மா ஜ்யோதிர் கமய – இருளிலிருந்து ஒளிக்கு எங்களை இட்டுச் செல் என்பது வேத பிரார்த்தனை)

 

அற்புதமாக வானில் பிரகாசிக்கும் ஸ்வாதி வான அதிசயம் தான்! கோரல் சிவப்பு, குங்குமச் சிவப்பு ஸ்கார்லெட் சிவப்பு என்றெல்லாம் வர்ணிக்கப்படும் மாணிக்கமே சுவாதி. ஆகவே தான் இது வான மாணிக்கம் என்று போற்றப்படுகிறது. அராபியர்கள் இதை ‘சுவர்க்கத்தின் காவலன்’ என வர்ணிக்கின்றனர்.பைபிளும் ஆர்க்ட்ரஸை வெகுவாகப் புகழ்கிறது.இதன் குறுக்களவு பேராசிரியர் மிகல்சனால்19 கோடி மைல்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

வாயு மூலமாகவே விஷ்ணுவை அடைய முடியும்!

 

திருவோண நட்சத்திரம் விஷ்ணு பதம் எனக் குறிப்பிடப் படுவதை முன்பே பார்த்தோம். அதன் அருகில் உள்ள மருத் தேவதைகளே ஸ்வாதியாக விளங்குகிறது. விஷ்ணுவின் பக்கத்தில் அவனது பக்தனான ஹனுமான் அமைந்திருப்பது பொருத்தம் தானே!

மாத்வ சம்பிரதாயத்தில் ஸ்வாதி நட்சத்திரத்திற்கு ஒரு முக்கிய இடம் உண்டு.ஹனுமனை சிறப்பாக வழிபடுவது மாத்வ சம்பிரதாயத்தில் இடம் பெறுகிறது, வாயு மூலமாகவே விஷ்ணுவை அடைய முடியும் என்று அது கூறுவது குறிப்பிடத் தகுந்தது.

 

ஹனுமத் ஜெயந்தி என ஹனுமான் அவதரித்த தினத்தை இந்த நட்சத்திரத்தின் சஞ்சாரத்தை வைத்தே நிர்ணயிக்கின்றனர்!

சுவர்க்கத்தின் நுழைவாயில் என்றும் பிரபஞ்சத்தின் தலைநகரமான விஷ்ணுலோக வாயில் என்றும் போற்றப்படும் ஸ்வாதியையும் ஹனுமானையும் தொழுது அனைத்து நலன்களோடு விஷ்ணுவின் அருளையும் பெறலாம்!

 

***********************

 

நிலவைக் கவர்ந்த ரோஹிணி! நட்சத்திர அதிசயங்கள்

Aldebaran= star Rohini

நட்சத்திர அதிசயங்கள்

வானில் உள்ள மர்மங்களைப் புரிந்து கொள்ள சிவ புராணத்தைப் படிக்க வேண்டும். நட்சத்திரத் தோற்றம், அவற்றின் இயல்புகள் மற்றும் மர்மங்களை அற்புதமாக விளக்குகிறது சிவ புராணம். நிலவைக் கவர்ந்த நிலவின் காதலி ரோஹிணியைப் பற்றிப் பார்ப்போம்

நிலவைக் கவர்ந்த ரோஹிணி! – Part 1

By ச.நாகராஜன் Santanam Nagarajan

 

சிவ புராணம் கூறும் ரோஹிணியின் கதை

வானில் உள்ள மர்மங்களைப் புரிந்து கொள்ள சிவ புராணத்தைப் படிக்க வேண்டும். நட்சத்திரத் தோற்றம், அவற்றின் இயல்புகள் மற்றும் படைப்பு மர்மங்களை அற்புதமாக விளக்குகிறது சிவ புராணம்.

தட்சன் தனது புத்திரிகள் 27 பேரை சந்திரனுக்கு மணம் செய்து வைத்தான். சந்திரன் ரோஹிணியின் பால் தீராத காதல் கொண்டான்.மற்ற இருபத்தி ஆறுபேரையும் புறக்கணித்து ரோஹிணியை மட்டும் பிரியாமல் எப்போதும் அவள் கூடவே இருந்தான்.இதனால் மனம் வருந்திய இருபத்தி ஆறு பேரும் தங்கள் தந்தையான தட்ச ப்ராஜாபதியிடம் சென்று முறையிட்டனர்.தட்சனுக்கு எல்லையற்ற கோபம் உண்டானது. அவன் சந்திரனை அழைத்துக் கடுமையாக எச்சரித்தான். ஆனால் சந்திரனோ அந்த எச்சரிக்கையை சட்டை செய்யவில்லை. தீராத மையலில் ரோஹிணியுடன் கூடவே இருந்தான்.இரண்டு முறை எச்சரித்தும் பயனில்லை.

தனது புத்திரிகளின் புலம்பலை மூன்றாவது முறை கேட்ட தட்சன் பெரிதும் வெகுண்டான்.சந்திரனை க்ஷயரோகம் பிடிக்கக் கடவது என்று சாபம் இட்டான். சாபத்தினால் சந்திரன் நாளுக்கு நாள் இளைத்துப் பொலிவை இழக்க ஆரம்பித்தான். சந்திரனே மூலிகைகளின் அதிபதி. அவன் இளைத்ததால் மூலிகைகள் வாடி வதங்க ஆரம்பித்தன.அவைகள் தொடர்ந்து வீரியத்தை இழக்கவே தேவர்கள் பெரிதும் கவலை அடைந்தனர்.சந்திரனை அடைந்து காரணத்தைக் கேட்டனர். சந்திரனும் தட்சனின் சாபம் பற்றிக் கூறினான். தேவர்கள் தட்சனை அடைந்து சந்திரனை மன்னிக்குமாறு வேண்டினர். சிவனின் அருளால் சரஸ்வதி தீர்த்தத்தில் சந்திரன் மூழ்கி எழுந்தால் அவன் க்ஷய ரோகத்திலிருந்து விடுபடுவான் என்று சாப நிவிர்த்திக்கான வழி பிறந்தது. மனம் மகிழ்ந்த சந்திரன் சரஸ்வதி தீர்த்தத்தில் குளித்து வளர ஆரம்பித்தான். மாதத்தில் பாதி நாட்கள் தேய்ந்து        மீதிப் பாதி நாட்கள் வளர்வதுமாக இருக்க ஆரம்பித்தான். அமாவாசையும் பௌர்ணமியும் தோன்றக் காரணமான இந்தக் கதையை விளக்கமாகச் சிவ புராணம் விளக்குகிறது!

 

புராதன நாகரிகங்கள் புகழும் ரோஹிணி

ரோஹிணி என்றால் சிவந்தவள் என்று பொருள். ஆறு நட்சத்திரங்களைக் கொண்ட தொகுதி ரோஹிணி மண்டலம்! அருகே இருக்கும் ஐந்து நட்சத்திரங்களையும் சேர்த்து இதைச் சகடம் எனக் குறிப்பிடுகின்றனர். சிவந்த குதிரை என்று பொருள் படும் லோஹிதாச்வ என்ற பெயராலும் இதைக் குறிப்பிடுவர். அராபிய மொழியில் அல்டிபெரான் என்று இந்த நட்சத்திரத்தை அழைக்கின்றனர். இதற்கு வரிக்குதிரை அல்லது குதிரை என்று பொருள். சந்திரனின் பிறை தரிசனத்தை எப்படி இந்து மதம் வலியுறுத்துகிறதோ அதே போல பிறை தரிசனத்தை இஸ்லாமும் வலியுறுத்துகிறது!

ரோஹிணி நட்சத்திரம் புராதனமான எல்லா நாகரிகங்களாலும் பெரிதும் போற்றப்பட்ட ஒரு நட்சத்திரம். சீனர், பாபிலோனியர், எகிப்தியர்,அராபியர், இந்தியர், கிரேக்கர் என அனைவரும் போற்றிய நட்சத்திரம் இது என்பதோடு அனைத்து நாகரிகங்களிலும் இதைப் பற்றிய ஏராளமான கதைகளும் உண்டு என்பது குறிப்பிடத் தகுந்தது. சந்திரன் – ரோஹிணி பற்றி அகநானூறு, மலைபடுகடாம்,நெடுநல்வாடை உள்ளிட்ட ஏராளமான சங்க நூல்கள் புகழ்ந்து பாடுகின்றன!

எடுத்துக் காட்டாக ‘அறுமீன் பயந்த அறம் செய் திங்கள் செல் சுடர் நெடுங்கொடி போல’ என இணை பிரியாத காதலர்கள் சந்திரனும் ரோஹிணியும் என்று புகழும் சங்கப் பாடல் வரிகளைச் சுட்டிக் காட்டலாம்! தமிழ் ஆர்வலர்கள் நெடுநல்வாடையில் வரும் 159 முதல் 163 வரிகள் சுட்டிக்காட்டும் ‘உரோகிணி நினைவனள் நோக்கி நெடிதுயிரா’ உள்ளிட்ட பல பாடல் வரிகளைப் படித்து மகிழலாம்.

மஹாபாரதக் கதை

இந்த நட்சத்திரத்தின் அதி தேவதை பிரஜாபதி, மஹாபாரதத்தில் வன பர்வத்தில் வரும் ஒரு முக்கியக் கதை ரோஹிணியைப் பற்றி விளக்குகிறது.

அனைவரது பார்வையிலிருந்து  சில காலம் ரோஹிணி மறைந்து விட்டாள் என்றும் ரோஹிணி மேலிருந்து கீழே விழுந்து விட்டாள் என்றும் பிறகு சிறிது காலம் கழித்து ரோஹிணி தன் இடத்தை மீண்டும் பிடித்தாள் என்றும் கதை கூறுகிறது.  இந்தக் கதை கூறும் மர்மத்தைச் சற்று விளக்கமாகப் பார்ப்போம்

-தொடரும்

இந்தக் கட்டுரை ஸ்ரீஜோஸியம் வாரப் பத்திரிக்கையில் வெளியானது. இதை விரும்புவோர் இந்தக் கட்டுரை ஆசிரியர் S. Nagarajan எழுதிய அஸ்வினி, கார்த்திகை, திருவாதிரை உள்ளிட்ட அனைத்து நட்சத்திர அதிசயங்களையும் படித்து மகிழலாம்.