நட்பின் சின்னம் ஆப்ரஹாம் லிங்கன்!

lincoln india

Article No.2015

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 24  July 2014

Time uploaded in London : காலை 8-53

அமெரிக்காவின் 16-ஆவது ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர் ஆப்ரஹாம் லிங்கன். அடிமைத்தனத்தை ஒழித்து, அமெரிக்க உள்நாட்டுப் போரில் வென்று, அமெரிக்க ஐக்கியத்தைக் காப்பாற்றியவர். அவரது பதவிக்காலத்தில் கடமையிலிருந்து தவறிய படைவீரர்களுக்கு மன்னிப்பு வழங்கினார். ஆயினும் ஒவ்வொரு சிப்பாயும், செல்வாக்குமிக்க ஒரு ஆளிடமிருந்து சிபாரிசுக் கடிதம் பெற்று வரவேண்டும்.

ஒரு படைவீரனின் கடிதம் மொட்டையாக, தனிக் கடிதமாக இருந்தது. “அட! என்ன இது? இதனுடனிருந்த சிபாரிசுக் கடிதம் எங்கே?” — என்று இதைக் கவனித்த ராணுவ அதிகாரியிடம் கேட்டார்.

அவரும், அந்த வீரன் எந்தக் கடிதமும் இணைக்கவில்லை – என்றார்.

அட! முக்கிய ஆள் சிபாரிசுதான் வேண்டுமென்பதில்லை. யாராவது நண்பர், ஒரு ஆதரவுக் கடிதம் கொடுத்தால் போதுமே! – என்றார் லிங்கன்.

அதையும் நான் கேட்டுவிட்டேன்; அவருக்கு நண்பர் எவருமே இல்லை என்று சொல்கிறார் – என்றார் அதிகாரி.

அப்படியா? நானே அவருடைய நண்பன்! – என்று சொல்லி அந்தப் படைவீரனுக்கு மன்னிப்பு அளித்தார்!

குகன் என்னு வேடனையே தம்பி என்று உறவு முறை கொண்டாடினான் இராமன். ஒன்றும் தெரியாத, முன்னைப்பின் அறியாத, ஒரு படைவீரனை ஒரு நொடியில் நண்பனாக்கி உயிர்ப் பிச்சை அளித்தார் லிங்கன்!

Brahms (1)

அன்பின் சின்னம் யொவன்னாஸ் பிராம்ஸ்

ஜெர்மானிய இசை அறிஞர் யொவன்னஸ் பிராம்ஸ். அவரை அறியாத மேல்நாட்டு இசைப் பித்தர் யாரும் இருக்கமுடியாது. ஆஸ்திரியாவில் தனது வாழ்நாள் முழுதும் இருந்தவர். இரக்க உள்ளம் படைத்த மாமேதை.

ஒருநாள் சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். பிளாட்பாரத்தில் ஓவியம் வரைந்து கொண்டிருந்த சாலைக் கலைஞனைக் கண்டு வியந்தார். அவ்வளவு தத்ரூபமான படங்கள்! இத்தகைய சாலையோரக் கலைஞர்கள், எல்லோரும் காசு போடுவதற்காக ஒரு தட்டு வைத்திருப்பார்கள். அப்படி ஒரு தட்டைப் பார்த்த பிராம்ஸ் மனமுருகி, ஒரு பெரிய நாணயத்தை அதில் போட்டார். அது பாறை மீது பட்ட நாணயம் போல ‘டங்’ என்ற ஒலியுடன் எகிரிக் குதித்தது. அவருக்கு மஹா வியப்பு! பின்னர்தான் அறிந்தார்: அது தட்டு அல்ல; உண்மையில் தட்டு போல தத்ரூபமாக வரையப்பட்ட படம் என்று!

அவரே ஒரு இசைக் கலைஞர். இதனால் கலையின் பெருமையை உணர்ந்து அதைப் போற்றினார். ஆனால் அவருடைய அந்தஸ்துக்கு ரோட்டில் போகும், வரும் கலைஞரை நின்று பார்க்க வேண்டிய தேவையே இல்லை. இது நடந்த இடம் பொலொஞா என்னும் இத்தாலிய நகரம் ஆகும். இவ்வளவுக்கும் அந்த சாலையோர ஓவியன் ஒரு ஊமை!

பிராம்ஸ், எங்கு திறமை இருந்தாலும் அதைப் போற்றிப் புகழ்வார். தன்னைவிட இளம் கவிஞர்களை ஊக்குவித்தார். பிரபல இசை மேதைகளின் படைப்புகளை வெளியிட உதவினார். ஒரு முறை ஒரு பிரபல இசைமேதைக்குப் பணம் உதவியும் அவரது நூலை வெளியிட அவருக்கு ‘ப்ரூப்’ பார்க்கத் தெரியவில்லை. பெரிய இசைமேதையாக இருந்த போதும் அவருக்காக பிராம்ஸே படி திருத்தும் பணியை மேற்கொண்டார்.

brahms

இளிச்சவாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்!

உலகில் எவ்வளவோ நல்லவர்கள் உளர். அவர்களைத் தவறாகப் பயன்படுத்தும் ஆட்களும் உண்டு. ஆகையால், உதவி செய்வதிலும்கூட கவனம் தேவை.

ஒரு சிறு பையன் மிக கனமான சாமானை ஏற்றிக் கொண்டு மேட்டில் ஏற முடியாதபடி தவித்தான். அதைப் பார்த்த  ஒரு வயதான நபர் அவனுக்கு மிகவும் கஷ்டப் பட்டு உதவினார்.

இருவரும் வெற்றிகரமாக,  மேட்டுக்கு வண்டியைக் கொண்டு சேர்த்தனர். பையன் நன்றி சொன்னான்.

யாரப்பா உன் முதலாளி? பெரிய கல் நெஞ்சக்கரானாக இருப்பான் போல இருக்கிறதே? ஒரு சின்னப் பையனிடம் இவ்வளவு பாரத்தைக் கொடுத்தால் அது தாங்காது என்று அவர்க்குத் தெரியாதா? – என்று கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டார் வயதான அந்த நபர்.

அதைக் கேட்ட அந்தப் பையன் சொன்னான்: “என் முதலாளிக்கு இது என்னால் செய்ய முடியாத காரியம் என்று நன்றாகவே தெரியும். ஆனால் அவர் சொன்னார்:

“இப்படியே போ, எவனாவது ஒரு இளிச்சவாயன், வழியில் கிடைப்பான்; அவனே உன் வண்டியை மேலே தள்ளிக் கொண்டுவந்து கொடுப்பான்” – என்று முதலாளி சொன்னார் என்றான்.

சும்மாவா சொன்னான் தமிழன்: “இளிச்சவாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்” என்று!!

உத்தமனாக வாழ வேண்டும்தான்; ஆனால் அதற்காக “ஊருக்கு இளைத்த பிள்ளையார் கோவில் ஆண்டி”யாக இருத்தல் கூடா.

Abraham_Lincoln_1923_Issue-3c