நாட்டிய நாடகம் பார்ப்பது வேதம் ஓதுதலுக்கு இணையானது – பரத முனி (Post No.9938)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9938

Date uploaded in London – 5 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் ஸம்ஸ்க்ருத மொழியில் பரத முனிவர் நாட்டிய சாஸ்திரத்தை எழுதினார். அதில் 36 அத்தியாயங்கள் உண்டு. முதல் அத்தியாயமும் முடிவான 36ஆவது அத்தியாயமும் சுவையான செய்திகளைத் தருகின்றன . நாட்டிய சாஸ்திரத்தை ஏன் எழுதினேன்

எப்படி எழுதினேன் என்று பரத முனிவரே சொல்லுவது முதல் அத்தியாயத்தில் உள்ளது . சொர்க்கத்தில் மட்டுமே பயன்பட்ட நாட்டிய சாஸ்திரம் பூமிக்கு வந்தது எப்படி என்பதை கடைசி அத்தியாயம் சொல்கிறது (முந்தைய கட்டுரைகளில் இரண்டு விஷயங்களையும் காண்க)

அந்தக் காலத்தில் நாட்டியமும் நாடகமும் ஒன்று. அதாவது புராண, இதிஹாசக் கதைகளை நாட்டியம் மூலம் கதைகளாக அபிநயித்துக் காட்டுவர். பின்னர் இடையிடையே வசனங்கள் நுழைக்கப்பட்டன. பழைய கருப்பு வெள்ளைத் திரைப்பட (BLACK AND WHITE FILMS) விளம்பரங்களில் கூட இந்தச் செய்திகளைக் காணலாம்- இந்தத் திரைப்படத்தில் 26 பாடல்கள் உள்ளன! என்று. அதாவது பாடலுக்கு அவ்வளவு மதிப்பு.ஆடலுக்கு அவ்வளவு மதிப்பு.

கடைசி அத்தியாயத்தில் உள்ள ஒரு முக்கிய விஷயம் நாட்டிய- நாடகம் பார்ப்பதால் என்ன பலன் என்பதாகும் . முதல் அத்தியத்திலேயே நாட்டிய சாஸ்திரம் மஹாபாரதம் போல ஐந்தாவது வேதம் என்று சொல்லப்பட்டது. அது மட்டுமல்ல வேதம் போல் அல்லாது எல்லா ஜாதியினரும் பங்கு பெறக்கூடியது என்றும் பகர்ந்தார் பரத முனி. “இதில் இல்லாதது உலகில் இல்லை; உலகிலுள்ள எல்லாம் இதனில் உளது” என்ற மஹாபாரத அடைமொழியை நாட்டிய சாஸ்திரத்துக்கு சேர்த்துச் சொன்னார்கள்.

நாட்டிய நாடகம் பார்ப்பதால் ஏற்படும் பலன்களை பரத முனிவரே சொல்கிறார்:-

மங்களம் – ஸ்லோகங்கள் 71-82

இந்த சாஸ்திரம் மகிழ்ச்சி அளிப்பது ; புனிதமானது; கேட்போரை தூய்மையாக்குவது. ஒருவர் செய்த பாவத்தை அழித்துவிடும் இதைப் படிப்போரும், கேட்போரும் , இதன்படி நாடகங்களை தயாரிப்போரும், அவற்றைக் காண்போரும்  வேதங்களை ஓதுவோர் அடையும் அதே பலன்களைப் பெறுவார்கள். யாகங்களை செய்வதாலும் தான தருமங்களை செய்வதாலும் கிடைக்கும் பலன்களும் இதனால் கிடைக்கும்  தானங்களில் மிகப்பெரிய தானம் , ஒரு நாட்டிய நாடகத்தைக் காணச் செய்வதாகும்.

ஒரு நாட்டிய நாடகத்தை மேடை ஏற்றுவது கடவுளுக்கு திருப்திதரும். சந்தனத்தாலும் மலராலும் பூஜிப்பதைவிட இது மேலானது.

இகலோக வாழ்க்கையில் சங்கீதத்தையும் நாட்டியத்தையும் ரசிப்பவர்கள் ஈஸ்வரன், கணேசன் ஆகியோரின் அருளுக்குப் பாத்திரமாகி இறைநிலை எய்துவர் .

நான் பல்வேறு விதிகளைச் சொல்லி பல விஷயங்களை விளக்கி நாட்டிய/நாடகம் நடிப்பத்தைச் சொல்லிவிட்டேன். இங்கே சொல்லாத விஷயங்களை மக்களின் நடை உடை பாவனைகளிலிருந்து அறிந்து  அவைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள் .

இதற்கு மேல் நான் சொல்ல என்ன இருக்கிறது?

உலகிலிருந்து மக்களின் வறுமையும் நோய்களும் அகலட்டும் ;

உணவும் இனிய செல்வங்களும் செழிக்கட்டும்;

பிராமணர்களுக்கும் பசுக்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கட்டும்; எங்கும் அமைதி நிலவட்டும்.

நாடாளும் அரசர்கள் எல்லோருக்கும் பா துகாப்பு வழங்கட்டும் “

இவ்வாறு சொல்லி பரத முனிவர் எழுதிய நாட்டிய சாஸ்திர நூலை நிறைவு செய்கிறார்.

Xxx

என்னுடைய கருத்துக்கள் :

சம்ஸ்க்ருத இலக்கிய வரலாற்றை எழுதுவதாகச் சொல்லி 5, 6 அரை வேக்காட்டு, இந்து விரோத வெளிநாட்டினர் நூல்களை இயற்றியுள்ளனர். நாடகம் என்று வருகையில் நாம் அதை கிரேக்க நாட்டிலிருந்து கடன் வாங்கியதாக ‘மாக்ஸ்முல்லர் கும்பல்’ எழுதியுள்ளது. இது முற்றிலும் தவறு.

ரிக் வேதத்திலேயே 16 சம்பாஷணைக் கவிதைகள்- உரையாடல்கள் உள்ளன. அவை யாவும் அக்காலத்தில் நடிக்கப்பட்ட நாட்டிய நாடகங்கள். ஒரு வேளை அதனிடையே சிறிய உரை நடைப் பகுதிகள் இருந்திருக்கலாம் என்பதும் தற்கால ஆராய்ச்சியில் தெரியவருகிறது.

ஆனால் கிருத யுகத்தில் நாட்டிய நாடகம் இல்லை; திரேதா யுகத்தில்தான் அது பிரம்மாவினால் உருவாக்கப்பட்டது என்று பரத முனிவரே செப்புவதால், ரிக் வேத பாடல்களை நாம் நாடகத்தின் வித்துக்கள் என்றே சொல்ல  வேண்டும்.

கிரேக்க நாடோ வேறு நாடுகளோ நம் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை மேலும் சில சான்றுகளுடன் மீண்டும் சொல்கிறேன் :-

மேலே, பரத முனி நாடகத்தின் புனிதம் பற்றிச் சொல்கிறார். பாஷா, காளிதாசன் வரையுள்ள நாடகங்களில் நாம் இந்த புனிதத்தைக் காண்கிறோம். கிரேக்க நாடகங்கள் இப்படி புனிதமானவை அல்ல. அவை பகடியும், அரசியல் நக்கல்களும் சிலேடைகளும் செக்ஸும் கொண்டவை.

மேலும் சிலப்பதிகாரத்தில் வரும் மாதவி ஆடிய 11 வகை ஆடல்களும் கூட கண்ணன், சிவன், துர்க்கை, லட்சுமி முதலிய தெய்வீக நாட்டியங்களே. ஆக, இரண்டாம் நூற்றாண்டுத் தமிழகத்தில் கூட  புனிதமே நிறைந்து இருந்தது.

மேலும் ஒரு முக்கிய விஷயம்- பரதரும் “கோ ப்ராஹ்மணேப்யோ  சுபமஸ்து நித்யம்” என்று முடிக்கிறார். 1400 வருடங்களுக்கு முன்னர் தேவாரத்திலும் வாழக அந்தணர் வானவர் ஆனினம் என்ற பாடல் உளது. இதற்குப் பொருள் அந்தணர் முதலான எல்லோரும், பசு முதலிய எல்லா பிராணிகளும் என்று பொருள். இப்படிப் பிராணிகளும் நலமுடன் வாழ வேண்டும் என்பதை உலகில் வேறு எங்கும் காண முடியாது. ரிக் வேதம் முதலிய இந்து நுல்களில்தான் காணலாம்.எல்லா உயிரினங்களும் வாழ வேண்டும் என்பதே இதன் பொருள் .

இன்று நம் கையில் தவழும் நாடிய சாஸ்திரத்தில் முன்னுக்குப் பின்  முரணான விஷயங்களும் உள்ளன . இதையும் பரதரே இறுதியில் நியாயப்படுத்திவிட்டார். மக்களின் பேச்சு , நடை உடை பாவனை ஆகியவற்றைக் கண்டு அவ்வப்போது அவைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று மங்களம் பாடுகிறார். ஆகையால் இப்போதைய நாட்டிய சாத்திரத்தில் சுமார் 500 ஆண்டுகளுக்குப் புதிய விஷயங்கள் சேர்க்கப்பட்டதை அறிகிறோம். பகவத் கீதையில் கூட கண்ணன் , நான் சொல்ல வேண்டியத்தைச் சொல்லி விட்டேன்; ஏற்பதும் மறுப்பதும் உன் இஷ்டம் என்னும் தொனியில்தான் கிருஷ்ணன் பேசுகிறான். அதே போல மக்களின் சுய சிந்தனைக்கும், சுதந்திரத்துக்கும், மனோ தர்மத்துக்கும்  பரத  முனிவரும் இடம் தருவது 2500 ஆண்டுக்கு முன்னுள்ள முற்போக்கு சிந்தனையைக் காட்டுகிறது. உலகம் மாறிக்கொண்டே இருக்கும் என்பதை அறிந்த இந்துக்கள் தங்களுடைய எல்லா நூல்களையும் ‘அப் டேட்’ UPDATE  செய்திருப்பதை நாம் காண்கிறோம்.

இந்தியாவில் ‘எல்லாம் இன்பியல் படைப்புகள்’. சுபம் என்றே முடிவடையும்; கிரேக்கத்திலும் பாபிலோனிய கில்காமெஷிலும் அப்படி இராது. ஆகையால் நமது கலாசாரம் நாமே உருவாக்கியது. வெளித் தொடர்பு இல்லை .

மேலும் நாடகத்தின் முதல் அங்கத்தில் டைரக்டர்/ சூத்ரதாரர் தோன்றி இது என்ன நாடகம், ஏன் வந்தது என்பதை அறிவிக்கும் வழக்கமும் நூற்றுக் கணக்கான சம்ஸ்க்ருத நாடகங்களில் உண்டு. கிரேக்கத்தில் இல்லை.

கிரேக்க நாடகங்களில் தேசீய கீதம் கிடையாது. சம்ஸ்க்ருத நாடகங்கள் அனைத்தும் ‘பரத வாக்கியம்’ என்னும் தேசீய கீதத்துடன் முடிவடையும். நாடு செழிக்க, மன்னன் வாழ்க, மக்கள் வாழ்க எனும் பொருள்படுபடும் படி 6 முதல் 8 வாக்கியங்கள் இருக்கும். தேசீய கீதம் பாடும் வழக்கத்தை உலகிற்குக் கற்பித்ததும் இந்துக்களே. இதுவும் கிரேக்க நாடகத்தில் இல்லை. ஆக புனிதமான நாடக , நடனக் கலைக்கு முதல் முதலில் நூல் யாத்த பரத முனிக்கு நாம் என்றும் கடமைப்பட்டுள்ளோம். இன்று அவர் எழுதிய விதிகள், விஷயங்கள் நமக்குத் தேவைப்படுவதில்லை. ஆயினும் அவர் கூறிய அடிப்படை கருத்துக்கள் மாறவில்லை. மேடை அமைப்பது முதல், மேடையில் செய்யப்படவேண்டிய பூஜைகள் முதல், நடிகர்களுக்குப் போட வேண்டிய வே ஷம்வரை அவர் நிறைய விதிகளை இயற்றியுள்ளார்.

வாழ்க பரத முனி!  வளர்க நாட்டிய/நாடக சாஸ்திரம்!!

–subham–

tags –நாட்டியம், நாடகம், பலன், நன்மைகள் , பரத முனி , வேதம் ஓதுதல்

தியானம் மூலம் கிடைக்கும் நன்மைகள்! (Post No.5800)


Written by S Nagarajan

Date: 19 DECEMBER 2018


GMT Time uploaded in London –7 -03 am


Post No. 5800

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

தியானம் மூலம் கிடைக்கும் நன்மைகள்!

ச.நாகராஜன்

தியானம் என்பது கவனக் குவிப்பைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஒரு தனி நபரின் பிரக்ஞையை உயர்த்தும் உத்தியே என அறிவியல் விளக்குகிறது. ஆனால் ஹிந்து தத்துவமோ ஒருவரின் ஆன்மாவை உணர்வதற்கான வழிமுறையே தியானம் என வரையறுக்கிறது. தியானத்தின் பலன்கள் சொல்ல முடியாத அளவு ஏராளம். சிலவற்றை மட்டும் இங்கே பார்க்கலாம்.

1)பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தியானமானது ஒருவருக்கு ஆக்கபூர்வமான தொடர் வரிசை விளைவுகளை ஏற்படுத்துகிறது.

2) நடத்தையைச் சீராக்கும் சிகிச்சையில் இது தன்னைத் தானே கட்டுப்படுத்தும் ஒரு சிறந்த வழிமுறையாக ஆகிறது

3) கவலையை விரட்டுகிறது.

4) ஒருவனின் உண்மையாக தற்போது இருக்கும் ஆன்ம அடையாளத்தை இலட்சியபூர்வமான ஆன்ம அடையாளத்துடன் சமப்படுத்துகிறது.

5) அனைத்தும் உள்ளடக்கிய மருந்தாக அமைகிறது.

6) அகங்காரத்தைப் போக்குகிறது.

7) தனிநபரை எப்போதும் நிகழ்காலத்தில் வாழ வைக்கிறது.

8) எண்ணங்களைத் தளர்த்தி வெளியேற்றும் உத்தியாக அமைகிறது.

9) ஆரோக்கியத்தின் அற்புதத் திறவுகோலாக அமைகிறது.

10) தியானம் மூலமாக உடல் ரீதியான அற்புத ஆற்றல்களைப் பெற முடிகிறது.

11) தியானம் மூலமாக தானியங்கி நரம்பு மண்டலத்தை நினைத்தபடி கட்டுப்படுத்த முடிகிறது.

12) மன அழுத்தம் மூலமாக வரும் அனைத்துச் சிக்கல்களையும் போக்குகிறது.

13) மனித ஆற்றலைப் பற்றிய விரிவான காட்சியைத் தருகிறது.

14) வேக யுகத்தின் தொழில்நுட்ப கலாசாரத்தின் கொடுமைகளை நீக்குகிறது.

15) வாழ்க்கையின் மதிப்புகளை அறிய வைக்கிறது.

16) கற்பதற்கு மிகவும் சுலபமானது.

17) பயிற்சி செய்ய மிகவும் சுலபமானது.

18) பணச் செலவில்லை.

19) வயது வரம்பில்லை.

20) ஆண், பெண் பாகுபாடு இல்லை.

21)  எங்கு வேண்டுமானாலும் தியானம் செய்யலாம்.

22) எப்பொழுது வேண்டுமானாலும் தியானம் செய்யலாம்.

23) இனம், மதம், மொழி, நாடு என்று எந்த பேதமும் கிடையாது.

24) அந்தஸ்து ஒரு தடையில்லை.

25) உடல் ரீதியான முன்னேற்றம் தருகிறது.

26) மனரீதியான முன்னேற்றம் தருகிறது.

27) ஆன்மீக ரீதியான முன்னேற்றம் தருகிறது.

28) மனிதனின் பாரம்பரியத்துடன் தொடர்பு படுத்தும் அனைத்து நற்குணங்களையும் தியானம் உள்ளடக்கியுள்ளது.

29) தியானத்தின் போது இன்பமான, ஆச்சரியகரமான அனுபவங்கள் கிடைக்கிறது.

30) நீடித்த ஆரோக்கியமான வாழ்வு உறுதி செய்யப்படுகிறது.

31) கெட்ட கனவுகளை நீக்குகிறது.

32) இரவில் நன்கு தூங்க முடிவதை உறுதி செய்கிறது.

33) மன அழுத்தம் ஏற்படுகையில் உருவாகும் தாடை, முதுகு, தோள்கள் ஆகியவற்றில் ஏற்படும் இறுக்கம் வராது.

34) எப்போதும் சாந்தியுடன் இருக்க முடிகிறது.

35) தெளிவாக, தூய்மையாக, மலர்ச்சியுடன் எப்போதும் இருக்க முடிகிறது.

36) வெட்கப்படுவது போய் விடுகிறது.

தியானம் தரும் ஏராளமான நற்பயன்களில் சில மட்டுமே மேலே தரப்பட்டுள்ளது.

இன்று அறிவியல் அங்கீகரிக்கும் அற்புத வழிமுறையாக தியானம் அமைகிறது.

ஏற்றத்திற்கும், வளத்திற்கும், வளர்ச்சிக்கும், அமைதிக்கும், மலர்ச்சிக்கும் உற்ற துணை தியானமே!

 tags–தியானம், நன்மைகள்

***