புறநானூற்றில் நரகம்! திருக்குறளில் நரகம்!! (Post No.4407)

Written by London Swaminathan 

 

Date: 18 NOVEMBER 2017

 

Time uploaded in London- 10-51 am

 

 

Post No. 4407

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

தமிழர்களின் பண்பாடு இந்துப் பண்பாடே. அவர்களுக்கு பாவம், புண்ணியம், சுவர்க்கம், நரகம், மறு பிறப்பு, உருவ வழிபாடு, விதி, கர்ம வினை, யாகம், யக்ஞம் முதலியவற்றில் நம்பிக்கை உண்டு என்பது சங்கத் தமிழ் இலக்கியத்தின் 18  மேல் கணக்கு நூல்களிலும் , திருக்குறள் அடங்கிய 18 கீழ்க்கணக்கு நூல்களிலும் விரவிக் கிடக்கின்றன. தொல்காப்பியமோவெனில் அறம், பொருள், இன்பம் (தர்ம-அர்த்த- காம) என்ற சொற்றொடரைப் பல இடங்களில் பகர்கின்றது.

 

இப்பொழுது நரகம் பற்றி மட்டும் காண்போம்.

 

ரிக் வேதத்தில் ஒரே ஒரு நரகம் பற்றி மட்டும் காண்கிறோம்.

மத நம்பிக்கையற்றோரை அவன் அதள பாதாளத்தில் தள்ளுகிறான் என்ற வாசகம் (9-73) ரிக்வேதத்தில் வருகிறது மனு நீதி நூல் 21 வகை நரகங்களை நாலாவது அத்தியாயத்தில் பட்டியல் இடுகிறது. சிவ புராணம் 28 வகை நரகங்களைச் சொல்லும். பவிஷ்ய புரா ணக் கதையில் யமலோகத்தில் நரகப் பகுதியில் நடக்கும் சித்திரவதைகள் பற்றி வருகிறது ஆனால் ரிக் வேதத்தில் சித்திரவதை முதலியன பற்றி இல்லை.

 

மரம் வெட்டினால் நரகம், பொய் சொன்னால் நரகம், பசுவைக் கொன்றால் நரகம்– என்று ஒவ்வொரு தப்புக்கும் ஏற்ற 21 வகையான நரகங்கள் பற்றி மனு பேசுகிறார். அதை மற்ற  ஒரு கட்டுரையில் விரிவாகக் காண்போம்.

 

தமிழில் அளறு (Tamil) , நிரயம் (Sanskrit word) என்ற இரு சொற்களில் நரகம் குறிப்பிடப்படுகிறது. சமயம் தொடர்பான சொற்கள் பெரும்பாலும் சம்ஸ்கிருதமாகவோ, அல்லது தமிழ் மயமாக்கப்பட்ட சம்ஸ்கிருதச் சொற்களாகவோ இருக்கும் ( எ.கா. யூப, ஆகுதி). ஆனால் நிரயம், அளறு என்ற சொற்கள் தூய தமிழ்ச் சொற்களாக இருப்பதால் இது இற க்குமதி செய்யப்பட்ட விஷயமன்று, தமிழர்களின் பழைய நம்பிக்கை என்பது புலப்படும்.

 

அளறு என்பது சங்க காலத்தில் சேறு, சகதி என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டு, திருவள்ளுவர் காலத்தில் நரகம் என்ற பொருளுக்கு ‘பதவி உயர்வு’ பெற்றுவிடுகிறது!

சுவர்க்கம் (துறக்கம்) பற்றிப் பெரும்பாலான இடங்களில் வருவதால் தமிழர்கள் புண்ணியவான்கள் என்பதும் பெறப்படும்.

 

முதலில் புறநானூற்று நரகத்தைப் பார்ப்போம்:-

 

இது மிகவும் பழைய பாட்டு. சுமார் 2100 ஆண்டுகளுக்கு முன் நரிவெரூஉத் தலையார் பாடியது.

சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்ட ஞான்று, நின் உடம்பு பெறுவாயாக! என, அவனைச் சென்று கண்டு, தம் உடம்பு பெற்று நின்ற நரிவெரூஉத் தலையார் பாடியது:-

 

எருமை அன்ன கருங்கல் இடை தோறு,

ஆனின் பரக்கும் யானைய, முன்பின்,

கானக நாடனை! நீயோ, பெரும!

நீ ஓர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்:

அருளும் அன்பும் நீக்கி, நீங்கா

நிரயம் கொள்பவரொடு ஒன்றாது, காவல்,

குழவி கொள்பவரின், ஓம்புமதி!

அளிதோ தானே; அது பெறல் அருங்குரைத்தே”.

 

பொருள்:

எருமை போன்ற கரிய பாதைகள் உடைய இடமெல்லாம் பசுக்கூட்டம் போல யானைகள் உலவும் காட்டிற்கு உரிய சேர மன்னனே! நீயோ பெருமகன்! ஆகையால் ஒன்று சொல்கிறேன், கேள். அருளையும் (கருணை) அன்பையும் நீக்கியவர்கள் நரகத்தில் வீழ்வர். அத்தகையோரோடு சேராதே. பெற்ற தாய் குழந்தையைப் பாதுகாப்பது போல, உன்னுடைய நாட்டு மக்களைக் காத்து வருவாயாக. அரச பதவி எளிதில் கிடைப்பதன்று. ஆகையால் கருணையுடன் செயல்படு.

 

(நரகம் பற்றிய கருத்து, ரிக் வேதக் கருத்தை ஒட்டிச் செல்கிறது).

 

திருக்குறளில் நரகம்!

 

பேதை என்பவன் யார் தெரியுமா? ஒரு பிறவியிலேயே எல்லா அட்டூழியங்களையும் செய்து ஏழு பிறவிகளில் அனுபவிக்க வேண்டிய நரகத் துன்பத்தைச் சேர்த்துக் கொள்பவன் பேதை!

 

ஒருவருக்கு லாட்டரி பரிசு கிடைத்துவிட்டால், அவனுக்கு என்ன கவலை? இனி ஏழு தலைமுறைகளுக்குக் கவலை இல்லை என்போம்.

ஒருவனுடைய தந்தை நிறைய பணத்தை ஒருவனுக்கு உயில் எழுதி வைத்துவிட்டு இறந்தால், அவன் எதற்கு வேலைக்குப் போகவேண்டும்;  அவன் அப்பன் ஏழுதலை முறைக்கான சொத்தை விட்டுச் சென்றிருக்கிறானே! என்று பேசுவது உலக வழக்கு.

 

இது போல ஒருவன் எல்லா தீய செயல்களையும் செய்வதைப் பார்த்தான் வள்ளுவன்; அம்மாடி! கவலையே இல்லை; இவன் ஏழு தலைமுறைகளுக்கு அல்லது ஏழு பிறவிகளுக்கு வேண்டிய நரகத் துன்பத்தை ஒரே பிறவியில் செய்து விட்டானே! சபாஷ்! சபாஷ்! என்கிறார் வள்ளுவர்.

 

இன்னுமொரு குறளில் செப்புவான்:

வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப்

பூரியர்கள் ஆழும் அளறு (919)

 

ஆரியர்களுக்கு எதிர்ப்பதம் பூரியர்கள்; இதிலிருந்து ஆங்கிலச் சொல் ஸ்பூரியஸ் SPURIOUS என்பது வந்தது

 

பொருள்

ஒழுக்கம் இல்லாத வேசிகளின் தோள், கீழ்மக்கள் (பூரியர்) சென்று விழும் நரகம் ஆகும்.

 

இதையே கிருஷ்ண பகவான் கீதையிலும் புகல்வார்:

 

த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாசனமாத்மன:

காமக்ரோதஸ் ததா லோபஸ் தஸ்மாதேதத் த்ரயம் த்யஜேத் (கீதை 16-21)

பொருள்:

ஒருவனுக்கு நாசத்தை விளைவிக்கும் நரகத்திற்கு மூன்று வாசல்கள் இருக்கின்றன; அவை காமம், க்ரோதம், லோபம்; அதாவது பெண்வழிச் சேரல், சினம் அல்லது கோபம், பேராசை. ஆகையால் இம்மூன்றையும் விலக்கிவைக்க வேண்டும்.

 

 

கீதை போன்ற சமய நூல்களில் நிறைய இடங்களில் நிரயம் பற்றிக் காணலாம்.

இறுதியாக இன்னும் ஒரு குறள்:-

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண

அண்ணாத்தல் செய்யாது அளறு (255)

 

ஒருவன் மாமிசம் சாப்பிட மாட்டான் என்ற தர்மத்தின் அடிப்படையில் உயிர் வந்து, உடம்பில் தங்கி இருக்கிறது. அப்படி அவன் அதையும்  மீறி மாமிசம் சாப்பிட்டால், நரகம் வாயைத் திறந்து ‘லபக்’ என்று ஆளை விழுங்கிவிடும்.  பின்னர் நரகத்தின் வாய் திறக்காவே திறக்காது.

ஆளின் கதி– சகதி (அளறு என்பதற்கு சேறு, சகதி என்றும் நரகம் என்றும் பொருள் உண்டு; அலறு என்றாலும் பொருத்தமே. மக்கள் அலறும் இடம்தானே!!

திருவள்ளுவரின் கற்பனை மிகவும் அருமையான கற்பனை;  ‘நீ ஒரு உயிரைக் கொன்று முழுங்கினாய் அல்லவா? இப்பொழுது பார்! உன்னை நான் விழுங்கி விட்டேன்; இனி மேல் வாயைத் திறக்கவே மாட்டேன்’ என்று நரகம் சொல்லுமாம்.

 

திருக்குறள் பொது மறையன்று. யார் இந்து மதக் கொள்கைகள், கொல்லாமை ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளோரோ அவர்களின் மறைதான் திருக்குறள்.

 

இதோ நான் முன் சொன்ன கதை

பவிஷ்ய புராணத்தில் சுவையான யமன் …

https://tamilandvedas.com/…/பவிஷ்ய-புராணத்தி…

 

1 Oct 2017 – பவிஷ்ய புராணத்தில் யமன் பற்றிய ஒரு சுவையான கதை உளது; அதை நான் இப்போது உரைப்பேன்: …யமன் கதை, பவிஷ்ய புராணம், விஜயா, பாவ புண்ணியம், நரகம் … கழுதைக்கும் ராஜா மகளுக்கும் கல்யாணம்; இந்திரன் மகன் பற்றி …

 

TAGS: நரகம், அளறு, நிரயம், பாவம், புறநானூறு, மனு

–சுபம், சுபம் —

 

பவிஷ்ய புராணத்தில் சுவையான யமன் கதை! (Post No.4261)

Written by London Swaminathan

 

 

Date: 1 October 2017

 

Time uploaded in London- 1-08 pm

 

Post No. 4261

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

பவிஷ்ய புராணத்தில் யமன் பற்றிய ஒரு சுவையான கதை உளது; அதை நான் இப்போது உரைப்பேன்:

 

யம தர்ம ராஜன் பூமிக்கு வந்தார். அழகான ஒரு பிராமணப் பெண்ணைக் கண்டார்; காதல் கொண்டார்; அவள் பெயர் விஜயா.

 

ஓ பேரழகியே, உன் மீது காதல் கொண்டேன்; என்னைத் திருமணம் செய்து கொள்;  யம லோகம் போகலாம். இனிதே வாழலாம் என்றான்– யமதர்ம ராஜன்.

அடச் சீ, தள்ளி நில்; உன் மூஞ்சியும் முகரையும் பார்க்கச் சகிக்கவில்லை; வாஹனமோ உன்னை விடக் கருத்த எருமை- என்றாள் விஜயா.

யமதர்ம ராஜனோ விடவில்லை.

பெண்ணே! என் வீரப் பிரதாபங்களைக் கேள்; யுதிஷ்டிரன் எனப்படும் தர்மனுக்கு அடுத்தபடியாக, சொல்லப்போனால் அதற்கும் முன்னதாகவே , என் ஒருவனுக்குத்தான் தர்மராஜன் என்று பெயர்; அவரவர் செய்த பாப புண்ணியங்களுக்கு ஏற்ப தண்டனை அளிப்பது என் கடமை; ‘ஆளைக் கண்டு ஏமாறாதே ஊது காமாலை’ என்ற பழமொழியை அறியாயோ? பேதையே1 பெண் மானே1 இளங்கிளியே; கருங்குயிலே; என் குணத்தைப் பார் –என்றான் யமன்.

அவளும் குணத்தில் மயங்கினாள்; கல்யாணத்துக்கு இணங்கினாள்.

 

இருவரும் யமலோகத்துக்கு ‘ஹனிமூன்’ போனார்கள்; இல்லற வாழ்வு இனிதே விளங்கியது.

 

பெண்ணே; ஒரே ஒரு கண்டிஷன்/ நிபந்தனை; இந்த ராஜ்யத்தில் தெற்கு திசைப் பக்கம் போய்விடாதே; எல்லாம் உன் நன்மைக்குதான் சொல்லி வைத்தேன்– என்றான் யமதர்மன்.

 

சந்தேகப் பேர்வழிகள்!

பெண்புத்தி வேறு வகையில் செல்லும்; ஆண்கள் ஒரு கணக்குப் போட்டால் அவர்கள் வேறு ஒரு கணக்குப் போடுவர்; சந்தேகப் பேர்வழிகள்; வீட்டிற்குத் தாமதமாக வந்தால் வேறு ஒரு பெண் பின்னனியில் இருக்கிறாளோ? என்பர். தும்மல் போட்டால் இப்போது உம்மை யார் நினைத்தாள்? யார் அந்தப் பழைய காதலி? (காண்க திருக்குறள்) என்பர். உன்னை நான் இப்போது மறப்பேனா? என்று அவன் சொன்னால் ஏன் ‘எப்போதும்’ என்று சொல்லவில்லை என்று ஊடல் கொள்ளுவர் (காண்க காமத்துப்பால்-திருக்குறள்)

 

 

சம்சயாத்மா விநஸ்யதி= சந்தேகப் பேர்வழி அழிவான்– என்று கண்ணபிரான் பகவத் கீதையில் சொன்னதையும் உதறிவிட்டு தென் திசைக்குப் பயணமானாள் இளஞ் சிட்டு விஜயா- யமனின் புது மனைவி!

 

கோரமான காட்சி; ஐயோ அம்மா

என்று சத்தம்; அடி உதை, எத்து, குத்து, வெட்டு, தட்டு என்று யமகிங்கரர் முழக்கம். பாபாத்மாக்கள் தண்ணீர் தண்ணீர் என்று கதறல்; ஏண்டா வந்தோம் என்று ஆகிவிட்டது விஜயாவுக்கு; சரி திரும்பிப் போகலாம் என்று நினைத்த போது “மகளே! பார்த்த ஞாபகம் இல்லையா? நாந்தான் ம(க்)களைப் பெற்ற மகராசி!” என்று கூச்சல் போட்டாள் விஜயாவின் அம்மா!.

 

அன்றிரவு விஜயாவின் கதவைத் தட்டினான்; எமன்; ஒரு ‘பிராமிஸ்’ (Promise)  கொடுத்தால்தான் இன்றிரவு உமக்கு அனுமதி என்றாள் விஜயா.

அன்பே, ஆருயிரே! உனக்கு இல்லை என்று சொல்வேனா? என்றான் யமன். கதவும் திறந்தது.

 

மெதுவாக அவிழ்த்துவிட்டாள்! அம்மாவின் கதையை!

என் அம்மாவை சித்திரவதை நடை பெறும் தென் திசையிலிருந்து விடுவித்தால் என்னைத் தொடலாம்; படலாம் என்றாள்.

 

அடக் கடவுளே; தென் திசை செல்லக்கூடாது என்று சொன்னேனே! இந்து மதத்தில் ஒரு விதி உள்ளது அதுதான் வேதத்தில் முதல் மந்திரம்; சத்யம் வத= உண்மையே பேசு; உபநிஷத்தில் ஒரு மந்திரம் உள்ளது சத்யமேவ ஜயதே நான்ருதம்= ‘’வாய்மையே வெல்லும் – பொய் அல்ல’’ என்று.– அதுதானே இந்திய அரசின் , நீ வாழ்ந்த தமிழ்நாட்டின் அரசியல் சின்னம்; நானே கூட உண்மையை மீற முடியாது; உன் அம்மா செய்த பாவங்களுக்கு அவள் நரகத்தில் அனுபவிக்கிறாள். அதற்கு நான் என்ன செய்வேன்? கடவுளேகூட சாபமோ, வரமோ கொடுத்துவிட்டால் அதை அனுச ரித்தே ஆக வேண்டும்– நான் ‘தீர்க சுமங்கலி பவ:’ என்று சொல்லி சாவித்ரியிடம் சிக்கிய கதைதான் உலகப் பிரசித்தமே என்றான் யமன்

அவளோ கெஞ்சினாள்; மன்றாடினாள்; சரி இந்து மதத்தில் எல்லாப் பாவங்களுக்கும் விமோசனம் உண்டு; எல்லா சாபங்களுக்கும் ஒரு குறுக்கு வழியும் உண்டு. அதன்படி கொஞ்சம் தப்பிக்கலாம். உங்கள் அம்மாவின் பாவம் போவதற்குச் சமமான புண்ணிய கருமங்களை – யாக யக்ஞங்களை பூலோகத்தில் ஒருவர் செய்து கணக்குக் காட்ட வேண்டும்– எனது அக்கவுண்டண்டு (Accountant) சித்திர குப்தன் லாப-நஷ்டக் கணக்கில் மன்னன். அவன் ஓகே சொன்னால் உன் அம்மா    பிழைப்பாள் என்றான் யமன்

 

அவளும் பூலோகத்தில் உள்ள எல்லாப் பத்திரிக்கைகளிலும் விளம்பரம் செய்தாள்; மாற்று “கிட்னி” (Kidney) கேட்டு அல்ல; புண்ய கருமங்களைச் செய்ய ஒரு பெண் தேவை என்று. மிகவும் சிரமப்பட்டு ஒரு பெண் கிடைத்தாள்

யாக  யஞங்களை முறையே செய்து, சித்திரகுப்தன் கணக்குகளைச் சரி பார்த்து யம தர்மனுக்கு ஒரு சிபாரிசுக் கடிதம் கொடுக்கவே விஜயாவின் அம்மா விடுதலை ஆனாள்

விஜயாவுக்கும் சந்தோஷம்; இல்லறம் இனிதே நடந்தது!

 

கதையில் சுவை கூட்ட கொஞ்சம் சொற்களை மட்டும் கூட்டினேன்; ஆனால் கருத்துப் பிழை எதுவுமிலை.

 

இந்தக் கதை நமக்கு தெரிவிப்பது என்ன?

1.தென் திசை பற்றி  திருக்குறளும் சங்கத் தமிழ் (புறநானூறு) பாடல்களும் சொன்னது வேதத்தில் உள்ள இந்து மதக் கருத்தே; ஆகையால் தமிழ் பண்பாடு, வடக்கத்திய பண்பாடு என்று எதுவுமிலை.

 

2.ஆரியர்கள், ஐரோப்பாவில் இருந்து வந்தனர்- மத்திய ஆசியாவில் இருந்து,  ஸ்டெப்பி புல் வெளியிலிருந்து வந்தனர் என்று உளறிக்கொட்டி கிளறி மூடும் மாக்ஸ்முல்லர்கள், கால்டுவெல்களுக்கு செமை அடி கொடுக்கிறது இந்தக் கதை. ஏனெனில் தென் திசை யமன் திசை என்பது இந்து மதக் கருத்து- தமிழர் கருத்து- திருவள்ளுவர் கருத்து– இது உலகில் வேறு எங்கும் இல்லை. ஆக இந்துக்கள் இந்த மண்ணில் பிறந்தவர்கள் என்பதை நிரூபிக்கும் ஆயிரம் விஷயங்களில் இதுவும் ஒன்று.

 

3.இன்னும் ஒரு கருத்து; கடவுளே ஆனாலும் உண்மை என்னும் விதி முறையை- நியாயம், நீதி, நேர்மை என்ற விதி முறைகளைப் பின்பற்ற வேண்டும் சொந்தக்காரர்கள், வேண்டியவர்களுக்குச் சலுகை இல்லை; ஆனால் பாப விமோசனம் பெற வழிகள் உண்டு.

 

 

4.வில்லியம் ஜோன்ஸும் மாக்ஸ்முல்லரும் கால்டுவெல்லூம் காட்டிய ஓரிரு ஒற்றுமைகளைவிட நமக்கும் ஐரோப்பியர்களுக்கும் வேற்றுமைகளே அதிகம். நம்முடைய கலாசாரத்தில் கொஞ்சம் மிச்சம் மீதி அவர்களுக்கு நினைவிருக்கிறது ஏனெனில் உலகம் முழுதும் இந்து மத சம்பிரதாயங்கள் இருந்ததன் மிச்சம் சொச்சம்தான் இவை என்று காஞ்சிப் பெரியவர் (1894-1994) உரைகளில் மொழிந்துள்ளார்.

எகிப்து முதலிய கலாசாரங்களில் மேற்கு திசைதான் மரணதேவன் திசை!

 

5.யமனும் கூட நல்லவன்; நீதி நெறிப்படி– சட்டப் புத்தகப் படி- தண்டிப்பவனே. ஆனால் நசிகேதன், மார்கண்டேயன், சாவித்திரி போன்றவர்களிடம் ‘ஜகா’ வாங்கினார். காரணம்? ஒரு சொல் சொல்லிவிட்டால் அதை மாற்ற முடியாது; இறை அருள் இருந்தால்

பாரதி போல  “காலா என் காலருகே வாடா! உனை நான் சிறு புல் என மதிக்கிறேன்/ என்றன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்” எனலாம்.

 

வாழ்க புராணக் கதைகள்! வளர்க

அவை உணர்த்தும் நீதி நெறிகள்!!

 

–SUBHAM—

 

TAGS:

யமன் கதை, பவிஷ்ய புராணம், விஜயா, பாவ புண்ணியம், நரகம்