ஆய்வுக்கட்டுரை எழுதுபவர்- லண்டன் சுவாமிநாதன்
ஆய்வுக்கட்டுரை எண்:–1642; தேதி 11 பிப்ரவரி 2015
கடந்த சில நாட்களில் எழுதிய கட்டுரையில் 1500 ஆண்டுகளுக்கு முன் வராகமிகிரர் என்ற மாமேதை யாத்த பிருஹத் சம்ஹிதா என்னும் அற்புத நூல் பற்றிக் கண்டோம். இது சம்ஸ்கிருதத்தில் உள்ள ஒரு கலைக் களஞ்சியம் என்றும் அவர் பேசும் 106 தலைப்புகள் பற்றியும் கண்டோம். இன்று வைரங்கள், ரத்தினக் கற்கள் பற்றி அவர் சொன்ன சில சுவையான விஷயங்களைக் காண்போம்.
22 வகை ரத்தினக் கற்கள்
மனிதருள் மாணிக்கம் என்று சிலரைப் போற்றுகிறோம்; ஆங்கிலத்தில் அவன் ஒரு ரத்தினம் என்று நல்லோரைப் போற்றும் மரபுச் சொற்றொடர் உண்டு. மாமன்னன் விக்ரமாதித்தன் அரசவையில் உலக மஹா கவிஞன் காளிதாசன் உள்பட ஒன்பது அறிஞர்கள் இருந்ததை நவரத்தினங்கள் என்று அழைக்கிறோம். இதே போல பெண்கள், குதிரை, யானையில் சிறந்த ஜாதிகளை ரத்தினம் என்பர். சிறந்த பெண்ணை நாரீரத்னம் என்பர். இதை வராகமிகிரரும் அமரகோசம் நிகண்டு எழுதிய அமரசிம்மனும் பகர்வர்:
ரத்னம் ஸ்வ ஜாதி ஷ்ரேஷ்டேயி – என்று செப்புகிறது அமரம்.
ரத்னக் கற்கள் எங்கே தோன்றுகின்றன?
இது குறித்து தனது காலத்துக்கு முன் ஆயிரக்கணக்கான, ஆண்டுகளாக இருந்து வரும் நம்பிக்கைகளை எழுதிவிட்டு தனது அறிவியல் பூர்வ கருத்தையும் மொழிகிறார் வராகமிகிரர்:
பலன் என்னும் அசுரனின் எலும்புகளில் இருந்து ரத்தினக் கற்கள் உற்பத்தியானதாகச் சிலரும், ததீசி முனிவர் இடமிருந்து உற்பத்தியானதாகச் சிலரும், பூமியின் குணங்கள் மூலம் உற்பத்தியானதாகச் சிலரும் கூறுவர். இதற்கு வியாக்கியானம் எழுதிய உத்பலர் என்பவர் சில புராண ஸ்லோகங்களை முன்வைத்து பூமியின் நிலையே காரணம் என்பார். தற்கால அறிவியலும் பூகர்ப்ப இயலின் ஒரு பகுதியாகவே ஜெம்மாலஜி (ரத்ன பரீக்ஷா) சாஸ்திரத்தை வைத்துள்ளது.
22 வகை ரத்தினக் கற்களை இரு ஸ்லோகங்களில் தருகிறார் வராக மிகிரர்:
வஜ்ரேந்திர நீலசரகதககர்தே பத்மராகருதிராக்யா:
வைடூர்யபுலகவிமலக ராஜமணிஸ்படிக ஸஸிகாந்தா:
சௌகந்திககோமேதகசங்ரவ மஹாநீல புஷ்பராகாக்யா:
ப்ரஹ்மணிஜ்யோதிரஸஸஸ்யகமுக்தாப்ராவாலானி
(இந்த சம்ஸ்கிருத ஸ்லோகங்களைச் சந்தி பிரித்துப் படித்தால் பல ரத்னக் கற்கள் நமக்கு முன்னரே தெரிந்தவை என்பதை உணர்வீர்கள்)
வைரம், நீலம், மரகதம், பச்சைக்கல் (அகேட்), மாணிக்கம், சிவப்புக்கல் (பிளட் ஸ்டோன்),வைடூர்யம், அமெதிஸ்ட், விமலக, ராஜமணி (க்வார்ட்ஸ்), ஸ்படிகம், சந்திரகாந்தம், சௌகந்திகம், ஓபல், சங்கு, நீலநிறக் கல், புஷ்பராகம், பிரம மணி, ஜோதிரஸ, சஸ்யக, முத்து, பவளம்
ஒவ்வொரு ரத்தினக் கல்லுக்கும் யார் அதிதாவதை என்றும் வராஹமிகிரின் பிருஹத் சம்ஹிதா சொல்கிறது:
வெள்ளை நிற அறுகோண வைரம்= இந்திரன்
பாம்பின் வாய் போன்ற கறுப்புநிற வைரம்=யமன்
வாழைத் தண்டு நிறம்= விஷ்ணு
கர்ணிகார பூவின் நிறம்=வருணன்
நீலம்,சிவப்பு கலந்தது= அக்னி
அசோக மலர் வர்ணம்= வாயு
வைரம் கிடைக்கும் இடங்களை இன்னும் ஒரு ஸ்லோகத்தில் சொல்கிறார்:
வேணா நதிக் கரை, கோசலம், சௌராஷ்ட்ரம்,சௌர்பார தேசம், இமயமலை, மதங்க, கலிங்க, பௌண்டிர தேசங்கள்.
ஜாதியும் வைரமும்
பிராமணர்கள் வெள்ளை நிற வைரங்களை அணியலாம்; சிவப்பு, மஞ்சள் நிறம் க்ஷத்ரியர்களுக்கும், வெள்ளை-மஞ்சள் (சீரிச மலர்) வைரம் வைஸ்யர்களுக்கும், வாளின் நிறம் உடைய வைரம் சூத்திரர்களுக்கும் நன்மை பயக்கும் என்று ஒரு ஸ்லோகத்தில் சொல்லுவார்.
வைரங்களின் எடை, அதன் விலைகள் ஆகியவற்றையும் பட்டியல் இடுகிறார் (என் ஆங்கிலக் கட்டுரையில் விவரம் காண்க)
பெண்கள் வைரம் அணிவது பற்றி அவர் சொல்கிறார்: குழந்தைகளை வேண்டும் பெண்கள் வைரங்களை அணியக்கூடாது என்று சிலர் சொல்லுவர். ஆனால் என் கருத்து, ஆண் குழந்தைகளை விரும்பும் பெண்கள் முக்கோண வடிவுள்ள அல்லது, கொத்தமல்லி விதை வடிவமுள்ள வைரங்களை அணியலாம்.
இன்னும் ஒரு ஸ்லோகத்தில் வராஹமிகிரர் செப்புவது யாதெனில்: குறையுள்ள வைரங்களை அணிவது வாழ்க்கையையே பாதிக்கும்; செல்வம், குழந்தை, குடும்பத்தையே பாதிக்கும்; நல்ல வைரங்களோவெனில் எதிரிகளை அழித்து வெற்றிக்கொடி நாட்டவைக்கும்; விஷம், இடி, மின்னல் கூட அவர்களைப் பாதிக்காது. மன்னர்கள் அணிந்தால் கூடுதல் சுகபோகங்கள் கிட்டும்.
பிருஹத் சம்ஹிதா கூறும் முத்து, நீலம், மரகத விஷயங்களை இன்னும் ஒரு கட்டுரையில் சுருக்கி வரைவேன்.
You must be logged in to post a comment.