சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க நவீன சாதனங்கள்!  (Post No.10,359)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,359

Date uploaded in London – –   20 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ச.நாகராஜன் எழுதியுள்ள சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பற்றிய பத்து உரைகள் ஆல் இந்தியா ரேடியே சென்னை வானொலி A அலைவரிசையில் (720 Hz) 11-11-2021 முதல் ஒலிபரப்பாகி வருகிறது. நேரம் தினமும் காலை 6.55 (மாநிலச் செய்திகள் முடிந்த பின்னர்). இதை ஆன்லைன் வாயிலாகவும் கேட்டு மகிழலாம்.

இணையதளம் : https://onlineradiofm.in/tamil-nadu/chennai/all-india-air-chennai-pc

14-11-2021 காலை ஒலிபரப்பான நான்காவது உரை கீழே தரப்படுகிறது.

சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க நவீன சாதனங்களின் பயன்பாடு!             ச. நாகராஜன் 

அறிவியல் முன்னேற முன்னேற ஏராளமான நவீன சாதனங்கள் அன்றாடப் பயன்பாட்டிற்கென உலகளாவிய விதத்தில் அனைவருக்கும் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்று சாமானியனிடமும் கூட இன்று நாம் காணும் கைபேசி அல்லது அலைபேசி என்று அழைக்கப்படும் மொபைல் ஃபோன்.

நாளுக்கு நாள் சுற்றுப்புறச் சூழலில் ஏற்படும் கேடுகள் அதிகமாவதை உணர்ந்த ஏராளமான மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் இது பற்றிய விழிப்புணர்ச்சியை அதிகப்படுத்த இதைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். உத்வேகமூட்டும் உண்மைச் சம்பவங்களையும் காட்சிகளையும் இந்த இயற்கை ஆர்வலர்கள் போன் மூலமாகப் பரப்புகின்றனர்.

கணினி மூலமாகவும் யூ டியூப் போன்ற சமூக ஊடகங்கள் மூலமாகவும் பல்லாயிரம் பேருக்கு இந்த நல்ல செய்திகள் அனுப்பப்பட ஏராளமானோர் அதை ‘LIKE’செய்கின்றனர்; விரும்புகின்றனர்.

உதாரணத்திற்கு சில சமூக ஊடகச் செய்திகளைப் பார்ப்போம். மரங்களை வளர்ப்பதால் ஏற்படும் பயன்கள் பற்றிய ஒரு காட்சி; பறவைகள் இல்லாத உலகம் அழிந்து விடும் என்பது பற்றிய பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் கருத்து; காற்றில் உள்ள துகள்மப் பொருள்களினால் ஏற்படும் அபாயமும் சுத்தமற்ற காற்றை சுவாசிப்பதால் ஏற்படும் ஆரோக்கியக் கேடுகள் பற்றியுமான ஒரு (வீடியோ) காணொளிக் காட்சி; பூமி தின (EARTH DAY) வாழ்த்துச் செய்திகள்; நதிகளைக் காப்பது பற்றிய விழிப்புணர்வுக் காட்சிகள்; எலக்ட்ரிக் கார்கள் இயங்குவது பற்றிய காணொளிக் காட்சியும் அதனால் படிம எரிபொருள்களின் தவிர்ப்பு பற்றிய செய்திகளும் – இப்படிப் பல தலைப்புகளில் செய்திகள் WHATSAPP  போன்ற நவீன மென்பொருள் வசதி மூலம் பரிமாறப் படுகின்றன.

வாழ்த்துக்கள், நலமா என்பன போன்ற செய்திகளுக்குப் பதில் இப்படி அர்த்தமுள்ள புவி காக்கும் செய்திகள் எத்தனை லட்சம் பேருக்கு உத்வேகம் ஊட்டுகின்றன என்பதை சமூக ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம். நாமும் ஏன் இப்படிச் செய்யக் கூடாது என்ற ஆர்வமும் அதன் வாயிலாக உந்தப்பட்டு, நமது நல்ல கருத்துக்களையும் பதிவு செய்யும் போது ஏற்படும் ஆனந்தம் அர்த்தமுள்ள ஆனந்தமாக மாறுகிறது.

ஒவ்வொரு வருடமும் வரும் ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி மற்றவருக்கு சாதாரணமான தினம்; ஆனால் புவியைக் காக்க வேண்டும் என்று சூளுரை கொண்ட ஆர்வலர்களுக்கோ அது பூமி தினம். 1970ஆம் ஆண்டு கொண்டாடப்பட ஆரம்பித்த இந்த தினம் இப்போது நூறு கோடி மக்களால் 193 நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் வரும் ஜூன் ஐந்தாம் தேதி மற்றவருக்கு சாதாரணமான தினம்; ஆனால் சுற்றுப்புறச்சூழல் ஆர்வலருக்கோ இது உலக சுற்றுப்புறச் சூழல் தினம்; 1914ஆம் ஆண்டிலிருந்து அனுஷ்டிக்கப்பட்டு வரும் இந்த தினத்தைப் பற்றிய முக்கியத்துவத்தைப் பரப்புவதும் சுற்றுப்புறச்சூழலைக் காப்போம் என்ற உறுதி மொழி ஏற்பதற்குமான தினம் இது. இப்படிப்பட்ட தினங்களை நாமும் ஏன் காணொளிக் காட்சி பலவற்றை இணையதளத்திலிருந்து தேர்ந்தெடுத்து அனுப்பி உத்வேகம் பெறக் கூடாது; நமது சுற்றத்திற்கும் உறவினருக்கும் நண்பருக்கும் உத்வேகம் ஊட்டக் கூடாது?

நல்லனவற்றை நாளும் நவீன சாதனங்கள் மூலம் பரப்புவோம்; நமது பூமியைக் காப்போம்!

**

tags- நவீன சாதனங்கள், பூமியைக் காப்போம்