நாட்டிய நாடகம் பார்ப்பது வேதம் ஓதுதலுக்கு இணையானது – பரத முனி (Post No.9938)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9938

Date uploaded in London – 5 AUGUST  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் ஸம்ஸ்க்ருத மொழியில் பரத முனிவர் நாட்டிய சாஸ்திரத்தை எழுதினார். அதில் 36 அத்தியாயங்கள் உண்டு. முதல் அத்தியாயமும் முடிவான 36ஆவது அத்தியாயமும் சுவையான செய்திகளைத் தருகின்றன . நாட்டிய சாஸ்திரத்தை ஏன் எழுதினேன்

எப்படி எழுதினேன் என்று பரத முனிவரே சொல்லுவது முதல் அத்தியாயத்தில் உள்ளது . சொர்க்கத்தில் மட்டுமே பயன்பட்ட நாட்டிய சாஸ்திரம் பூமிக்கு வந்தது எப்படி என்பதை கடைசி அத்தியாயம் சொல்கிறது (முந்தைய கட்டுரைகளில் இரண்டு விஷயங்களையும் காண்க)

அந்தக் காலத்தில் நாட்டியமும் நாடகமும் ஒன்று. அதாவது புராண, இதிஹாசக் கதைகளை நாட்டியம் மூலம் கதைகளாக அபிநயித்துக் காட்டுவர். பின்னர் இடையிடையே வசனங்கள் நுழைக்கப்பட்டன. பழைய கருப்பு வெள்ளைத் திரைப்பட (BLACK AND WHITE FILMS) விளம்பரங்களில் கூட இந்தச் செய்திகளைக் காணலாம்- இந்தத் திரைப்படத்தில் 26 பாடல்கள் உள்ளன! என்று. அதாவது பாடலுக்கு அவ்வளவு மதிப்பு.ஆடலுக்கு அவ்வளவு மதிப்பு.

கடைசி அத்தியாயத்தில் உள்ள ஒரு முக்கிய விஷயம் நாட்டிய- நாடகம் பார்ப்பதால் என்ன பலன் என்பதாகும் . முதல் அத்தியத்திலேயே நாட்டிய சாஸ்திரம் மஹாபாரதம் போல ஐந்தாவது வேதம் என்று சொல்லப்பட்டது. அது மட்டுமல்ல வேதம் போல் அல்லாது எல்லா ஜாதியினரும் பங்கு பெறக்கூடியது என்றும் பகர்ந்தார் பரத முனி. “இதில் இல்லாதது உலகில் இல்லை; உலகிலுள்ள எல்லாம் இதனில் உளது” என்ற மஹாபாரத அடைமொழியை நாட்டிய சாஸ்திரத்துக்கு சேர்த்துச் சொன்னார்கள்.

நாட்டிய நாடகம் பார்ப்பதால் ஏற்படும் பலன்களை பரத முனிவரே சொல்கிறார்:-

மங்களம் – ஸ்லோகங்கள் 71-82

இந்த சாஸ்திரம் மகிழ்ச்சி அளிப்பது ; புனிதமானது; கேட்போரை தூய்மையாக்குவது. ஒருவர் செய்த பாவத்தை அழித்துவிடும் இதைப் படிப்போரும், கேட்போரும் , இதன்படி நாடகங்களை தயாரிப்போரும், அவற்றைக் காண்போரும்  வேதங்களை ஓதுவோர் அடையும் அதே பலன்களைப் பெறுவார்கள். யாகங்களை செய்வதாலும் தான தருமங்களை செய்வதாலும் கிடைக்கும் பலன்களும் இதனால் கிடைக்கும்  தானங்களில் மிகப்பெரிய தானம் , ஒரு நாட்டிய நாடகத்தைக் காணச் செய்வதாகும்.

ஒரு நாட்டிய நாடகத்தை மேடை ஏற்றுவது கடவுளுக்கு திருப்திதரும். சந்தனத்தாலும் மலராலும் பூஜிப்பதைவிட இது மேலானது.

இகலோக வாழ்க்கையில் சங்கீதத்தையும் நாட்டியத்தையும் ரசிப்பவர்கள் ஈஸ்வரன், கணேசன் ஆகியோரின் அருளுக்குப் பாத்திரமாகி இறைநிலை எய்துவர் .

நான் பல்வேறு விதிகளைச் சொல்லி பல விஷயங்களை விளக்கி நாட்டிய/நாடகம் நடிப்பத்தைச் சொல்லிவிட்டேன். இங்கே சொல்லாத விஷயங்களை மக்களின் நடை உடை பாவனைகளிலிருந்து அறிந்து  அவைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள் .

இதற்கு மேல் நான் சொல்ல என்ன இருக்கிறது?

உலகிலிருந்து மக்களின் வறுமையும் நோய்களும் அகலட்டும் ;

உணவும் இனிய செல்வங்களும் செழிக்கட்டும்;

பிராமணர்களுக்கும் பசுக்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கட்டும்; எங்கும் அமைதி நிலவட்டும்.

நாடாளும் அரசர்கள் எல்லோருக்கும் பா துகாப்பு வழங்கட்டும் “

இவ்வாறு சொல்லி பரத முனிவர் எழுதிய நாட்டிய சாஸ்திர நூலை நிறைவு செய்கிறார்.

Xxx

என்னுடைய கருத்துக்கள் :

சம்ஸ்க்ருத இலக்கிய வரலாற்றை எழுதுவதாகச் சொல்லி 5, 6 அரை வேக்காட்டு, இந்து விரோத வெளிநாட்டினர் நூல்களை இயற்றியுள்ளனர். நாடகம் என்று வருகையில் நாம் அதை கிரேக்க நாட்டிலிருந்து கடன் வாங்கியதாக ‘மாக்ஸ்முல்லர் கும்பல்’ எழுதியுள்ளது. இது முற்றிலும் தவறு.

ரிக் வேதத்திலேயே 16 சம்பாஷணைக் கவிதைகள்- உரையாடல்கள் உள்ளன. அவை யாவும் அக்காலத்தில் நடிக்கப்பட்ட நாட்டிய நாடகங்கள். ஒரு வேளை அதனிடையே சிறிய உரை நடைப் பகுதிகள் இருந்திருக்கலாம் என்பதும் தற்கால ஆராய்ச்சியில் தெரியவருகிறது.

ஆனால் கிருத யுகத்தில் நாட்டிய நாடகம் இல்லை; திரேதா யுகத்தில்தான் அது பிரம்மாவினால் உருவாக்கப்பட்டது என்று பரத முனிவரே செப்புவதால், ரிக் வேத பாடல்களை நாம் நாடகத்தின் வித்துக்கள் என்றே சொல்ல  வேண்டும்.

கிரேக்க நாடோ வேறு நாடுகளோ நம் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதை மேலும் சில சான்றுகளுடன் மீண்டும் சொல்கிறேன் :-

மேலே, பரத முனி நாடகத்தின் புனிதம் பற்றிச் சொல்கிறார். பாஷா, காளிதாசன் வரையுள்ள நாடகங்களில் நாம் இந்த புனிதத்தைக் காண்கிறோம். கிரேக்க நாடகங்கள் இப்படி புனிதமானவை அல்ல. அவை பகடியும், அரசியல் நக்கல்களும் சிலேடைகளும் செக்ஸும் கொண்டவை.

மேலும் சிலப்பதிகாரத்தில் வரும் மாதவி ஆடிய 11 வகை ஆடல்களும் கூட கண்ணன், சிவன், துர்க்கை, லட்சுமி முதலிய தெய்வீக நாட்டியங்களே. ஆக, இரண்டாம் நூற்றாண்டுத் தமிழகத்தில் கூட  புனிதமே நிறைந்து இருந்தது.

மேலும் ஒரு முக்கிய விஷயம்- பரதரும் “கோ ப்ராஹ்மணேப்யோ  சுபமஸ்து நித்யம்” என்று முடிக்கிறார். 1400 வருடங்களுக்கு முன்னர் தேவாரத்திலும் வாழக அந்தணர் வானவர் ஆனினம் என்ற பாடல் உளது. இதற்குப் பொருள் அந்தணர் முதலான எல்லோரும், பசு முதலிய எல்லா பிராணிகளும் என்று பொருள். இப்படிப் பிராணிகளும் நலமுடன் வாழ வேண்டும் என்பதை உலகில் வேறு எங்கும் காண முடியாது. ரிக் வேதம் முதலிய இந்து நுல்களில்தான் காணலாம்.எல்லா உயிரினங்களும் வாழ வேண்டும் என்பதே இதன் பொருள் .

இன்று நம் கையில் தவழும் நாடிய சாஸ்திரத்தில் முன்னுக்குப் பின்  முரணான விஷயங்களும் உள்ளன . இதையும் பரதரே இறுதியில் நியாயப்படுத்திவிட்டார். மக்களின் பேச்சு , நடை உடை பாவனை ஆகியவற்றைக் கண்டு அவ்வப்போது அவைகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று மங்களம் பாடுகிறார். ஆகையால் இப்போதைய நாட்டிய சாத்திரத்தில் சுமார் 500 ஆண்டுகளுக்குப் புதிய விஷயங்கள் சேர்க்கப்பட்டதை அறிகிறோம். பகவத் கீதையில் கூட கண்ணன் , நான் சொல்ல வேண்டியத்தைச் சொல்லி விட்டேன்; ஏற்பதும் மறுப்பதும் உன் இஷ்டம் என்னும் தொனியில்தான் கிருஷ்ணன் பேசுகிறான். அதே போல மக்களின் சுய சிந்தனைக்கும், சுதந்திரத்துக்கும், மனோ தர்மத்துக்கும்  பரத  முனிவரும் இடம் தருவது 2500 ஆண்டுக்கு முன்னுள்ள முற்போக்கு சிந்தனையைக் காட்டுகிறது. உலகம் மாறிக்கொண்டே இருக்கும் என்பதை அறிந்த இந்துக்கள் தங்களுடைய எல்லா நூல்களையும் ‘அப் டேட்’ UPDATE  செய்திருப்பதை நாம் காண்கிறோம்.

இந்தியாவில் ‘எல்லாம் இன்பியல் படைப்புகள்’. சுபம் என்றே முடிவடையும்; கிரேக்கத்திலும் பாபிலோனிய கில்காமெஷிலும் அப்படி இராது. ஆகையால் நமது கலாசாரம் நாமே உருவாக்கியது. வெளித் தொடர்பு இல்லை .

மேலும் நாடகத்தின் முதல் அங்கத்தில் டைரக்டர்/ சூத்ரதாரர் தோன்றி இது என்ன நாடகம், ஏன் வந்தது என்பதை அறிவிக்கும் வழக்கமும் நூற்றுக் கணக்கான சம்ஸ்க்ருத நாடகங்களில் உண்டு. கிரேக்கத்தில் இல்லை.

கிரேக்க நாடகங்களில் தேசீய கீதம் கிடையாது. சம்ஸ்க்ருத நாடகங்கள் அனைத்தும் ‘பரத வாக்கியம்’ என்னும் தேசீய கீதத்துடன் முடிவடையும். நாடு செழிக்க, மன்னன் வாழ்க, மக்கள் வாழ்க எனும் பொருள்படுபடும் படி 6 முதல் 8 வாக்கியங்கள் இருக்கும். தேசீய கீதம் பாடும் வழக்கத்தை உலகிற்குக் கற்பித்ததும் இந்துக்களே. இதுவும் கிரேக்க நாடகத்தில் இல்லை. ஆக புனிதமான நாடக , நடனக் கலைக்கு முதல் முதலில் நூல் யாத்த பரத முனிக்கு நாம் என்றும் கடமைப்பட்டுள்ளோம். இன்று அவர் எழுதிய விதிகள், விஷயங்கள் நமக்குத் தேவைப்படுவதில்லை. ஆயினும் அவர் கூறிய அடிப்படை கருத்துக்கள் மாறவில்லை. மேடை அமைப்பது முதல், மேடையில் செய்யப்படவேண்டிய பூஜைகள் முதல், நடிகர்களுக்குப் போட வேண்டிய வே ஷம்வரை அவர் நிறைய விதிகளை இயற்றியுள்ளார்.

வாழ்க பரத முனி!  வளர்க நாட்டிய/நாடக சாஸ்திரம்!!

–subham–

tags –நாட்டியம், நாடகம், பலன், நன்மைகள் , பரத முனி , வேதம் ஓதுதல்

ரிக் வேதத்தில் 19 நாட்டிய நாடகங்கள் (Post No.9860)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9860

Date uploaded in London –17 JULY   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நாடகத்தின் தோற்றம் ரிக்வேதத்தில் உள்ளது. இந்திய நாட்டிய நாடகங்கள்  அனைத்தும் சமயம் சம்பந்தப்பட்டவை. கிரேக்க நாடகங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் எள்ளவும் இல்லை.

ரிக் வேதத்தில் 19 உரையாடல் கவிதைகள் உள்ளன. அவை 12 ஆண்டுகள் முதல் 100 ஆண்டுகள் வரை தொடர்ந்து நடந்த வேள்விகளின்  போது கேளிக்கைக்காக நடித்து ஆடப்பட்டன. அதாவது மேடை நாடகங்கள் அல்ல. காமன் பண்டிகைகளின் போது தமிழ் நாட்டின் தெருச்  சந்திப்புகளில் நடக்கும் கூத்து போல இவை நடந்தன. ஏனெனில் வேதங்களுக்கு உரை எழுதிய சாயனரும் இவைகளை மதச் சடங்குகளுடன் தொடர்புபடுத்தவில்லை. அதிலிருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளே என்பது புலனாகிறது.

இந்துக்களை மட்டம் தட்டுவதற்காக கிரேக்க நாடகங்களை இந்தியர்கள் ‘காப்பி’ அடித்ததாக வெள்ளைக்காரர்கள் எழுதினர். அது தவறு என்பதை தமிழ் இலக்கியங்களை ஊன்றிப் படிப்போர் உணர்வர். கிருத யுகத்தில் நாட்டியம் இல்லை என்றும் திரேதா யுகத்தில்தான் நாட்டிய நாடகம் தோன்றியதாகவும் பரத முனி எழுதிய நாட்டிய சாஸ்திர நூல் பகரும். ஆகையால் ரிக்வேத உரையாடல் கவிதைகள் மேடை நாடகங்கள் அல்ல, தெருக்கூத்து போன்ற கேளிக்கை நாட்டியங்களே என்று தெரிகிறது.

***

முதல் கட்டம் கி.மு. 3000

ரிக்வேத சம்பாஷணைக் கவிதைகள்.

கிரேக்க மொழியின் முதல் காவியமே கி.மு 800-ல்தான் வந்தது என்பதையும் தமிழ் மொழியின் முதல் நூலே கி.மு 100 ஒட்டித்தான் வந்தது என்பதையும் நினைவிற் கொள்க. தமிழுக்கும் முன்னர் லத்தின் மொழி , எபிரேய மொழி, சீன மொழி நூல்கள் உள்ளன. இவை அனைத்த்துக்கும் முந்தியவை சம்ஸ்க்ருத நூல்கள். ரிக்வேத சம்பாஷணைக் கவிதைகள்.

***

இரண்டாவது கட்டம் கி.மு. 1000க்கு முன்

யஜுர்வேத சாகையான வாஜசநேயி சம்ஹிதையில் நடிகரைக் குறிப்பிடும் சைலூச என்ற சொல் வருகிறது. இது சிலாலின் என்பவர் எழுதிய நட சூத்திரத்துடன் தொடர்புடைய சொல். இதை பாணினியும் தனது சூத்திரத்தில் குறிப்பிடுவதால் 2700 ஆண்டுகளுக்கு முன்னரே நடிப்போருக்கான சூத்திரங்கள், அதாவது ஒரு வழிகாட்டிப் புஸ்தகம் (HAND BOOK) இருந்தது தெரிகிறது.

பாணினி எழுதியது இலக்கண புஸ்தகம். ஆகையால் அதில் ஒரே ஒரு குறிப்புதான் கிடைக்கிறது.

போதாயன தர்மசூத்திரமும் நாடக நடிகர்களை ஆதரிக்கவில்லை. அது சமயத்துக்குப் புறம்பான செயல் என்பது போல அதைத் தள்ளி வைக்கிறது. ஆகையால் நாடகம், நடனம் என்பது பற்றிய அக்கால சமயக் கருத்து தெளிவாகிறது.

****

மூன்றாவது கட்டம் , கி.மு 3000- கிமு.1000

திரேதா யுகத்தில்தான் முதல் முதலில் நாட்டிய நாடகங்கள் இடம்பெற்றதாக பரத முனி கூறுகிறார். இதற்குச் சான்று ராமாயணத்தில் கிடைக்கிறது. லவனும் குசனும் ராமாயணக் கதையை ராமன் முன்னரே வாத்தியக் கருவிகளுடன் நடித்துக் காட்டினார்கள். இதைத் தொடர்ந்து அப்படிப் பாடுவோரின் இனத்தை குசி லவ பாடகர் என்று அர்த்த சாஸ்திரம் கூறுகிறது.

****

நாலாவது கட்டம் கி.மு 4-ம் நூற்றாண்டு

அர்த்த சாஸ்திரத்தை எழுதிய கௌடில்யர் எனப்படும் சாணக்கியர் நடன, நாட்டிய , நாடக சொற்களை விரிவாகவே பேசுகிறார். இவர் பாணினிக்கு 300 ஆண்டுகள் பிற்பட்டவர். இவர் சொல்லும் விஷயங்கள் அக்காலத்தில் எந்த அளவுக்கு நாடகம் பரவி இருந்தது என்பதைக் காட்டுகிறது. இதோ அவர் தரும் விவரங்கள் :-

பாணினி இசைக்குழு /ஆர்கெஸ்ட்ரா பற்றியெல்லாம் பேசுகிறார். கௌடில்யர் அதற்கு மேல்  ஒரு படி செல்கிறார்.

நட = நடிகர்கள்

நர்த்தக – நடனம் ஆடுவோர்

காயக = பாடுவோர்

வாதக = வாத்தியம் வாசிப்போர்

வாக் ஜீவன = கதா காலட்சேபம் செய்வோர்

குசி லவ = பாணர்கள்

ப்லவக = கழைக் கூத்தாடிகள்

செளபிக = அதிரடிச் செயல் செய்வோர், மாஜிக் செய்வோர்

சாரணர் = ஊர் ஊராகப் போய்ப் பாடும் பாணர்கள்

இதுமட்டுமின்றி இவை அனைத்துக்கும் கலா = கலை என்று பெயர்கொடுத்து இப்படி சம்பாத்தித்து வாழ்க்கை நடத்துவோரை ‘ரங்கோப ஜீவினி = அரங்க வாழ்வுடையோர்’ என்றும் சொல்கிறார் கௌடில்யர்.

சுருங்கச் சொல்லின் சம்ஸ்க்ருத நாடகங்கள், முழுக்க, முழுக்க இந்தியாவில் தோன்றி இந்தியாவில் வளர்ந்தவையே. பாணினி இலக்கணத்துக்கு  மஹாபாஷ்ய உரை எழுதிய பதஞ்சலியும் கம்சனைக் கிருஷ்ணனின் கொன்ற நாடகத்தையும் ரசிகர்களையும் வருணிக்கிறார் .

இதற்கெல்லாம் நமக்கு வேறு வட்டாரங்களில் இருந்தும் சான்று கிடைக்கிறது. வடநாட்டில் இருந்து மல்யுத்தம் புரியவந்த மள்ளர்கள் பற்றி சங்க இலக்கியம் பாடுகிறது. ஆரியக் கூத்தாடிகள் வந்ததையும் அவை செப்புகின்றன.

உலகிலேயே முதலில் பெண்களுக்கு SYLLABUS சிலபஸ் போட்ட காம சூத்திர நூல் ஆசிரியர் வாத்ஸ்யாயனர், 64 கலைகளை பெண்களுக்கான பாட  திட்டத்தில் பட்டியல் போட்டுள்ளார். இதை சிலப்பதிகாரமும் பகர்கிறது. மேலும் பல பழைய சம்ஸ்க்ருத நூல்களும் உரைக்கின்றன.

அரை வேக்காட்டு வெள்ளைக்காரர்கள் இந்தியாவின் சிறப்பு மிகு 1000 நூல்களை 400 ஆண்டுகளில் வந்ததாக – கி.மு.2ம் நூற்றாண்டு முதல்- கி.பி 2ம் நூற்றாண்டு வரை வந்ததாக உளறிக்கொட்டி இருக்கின்றனர். மொழியியல் ரீதியிலும் இது தவறு ; கலை வளர்ச்சி வேகத்தைப் பார்க்கிலும் இது தவறு என்று எவரும் அறிவர்.

****

கிரேக்கர்களிடம் நாம் ஜோதிடத்தைக் கற்றோம், நாடகத்தைக் கற்றோம், காவியம் எழுதும் கலையைக் கற்றோம் என்று எழுதாத வெள்ளைக்காரன் இல்லை. இவர்கள் எவருக்கும் தமிழ் தெரியாது. தமிழில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே வட இந்திய மல்லர்களும் , ஆடுநரும் , பாடுநரும் வந்ததை சங்க இலக்கியம் முதல் திரு விளையாடல் புராணம் வரை மொழிகின்றன . அவை எல்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தவை என்பதை அப்பர் தேவாரம், கல்லாடம், சிலப்பதிகாரம் ஆகியன நமக்குக் காட்டுகின்றன.

சிலப்பதிகாரத்தையும் பரத சாஸ்திர நூலையும் ஒப்பிட்டு ஆராய்ந்தால் மேலும் தெளிவான சித்திரம் கிடைக்கும்.

கிரேக்க நாடகங்களுக்கும் நமக்கும் ஸ்னானப் பிராப்தி கூட இல்லை.

1.கிரேக்க நாடகங்கள் சமயத்துக்குப் புறம்பான நாடகங்களை, குறிப்பாக அரசியல் கிண்டல், ‘செக்சி’ SEXY  நாடகங்கள். சம்ஸ்கிருத நாடகங்கள் சமயம் தொடர்பானவை .

2. கிரேக்கர்கள் சோக நாடகங்களையும் எழுதினார்கள் . சம்ஸ்கிருத நாடகங்கள் சுப முடிவானவை. இன்றைய திரைப்படங்கள் போல அன்றே ‘சுபம்’ என்று நாடகங்களை முடித்தன

3.சம்ஸ்க்ருத, கிரேக்க நாடகங்களின் அமைப்பு முற்றிலும் வேறுபட்டவை. நம்முடைய நாடகங்களில் பிராமண விதூஷகர்/ COMEDIANS காமெடியன்ஸ் உண்டு. இதனால்தான் சமீப காலம் வரை பிராமண கிண்டல் திரைப்படங்களில் இருக்கிறது. இதை காளிதாசன் நாடகங்களிலும் காணலாம்.

4.சம்ஸ்க்ருத நாடகங்கள் முதலில் டைரக்டர்/ சூத்ரதாரர் அறிமுகத்துடன் துவங்கும். அவர் நாடகத்தை அறிமுகம் செய்து என்ன வரப்போகிறது என்பதைக் கோடிட்டுக்காட்டுவார். கிரேக்க நாடகங்களில் இப்படி திட்டமிட்ட அமைப்பு கிடையாது .

5. சம்ஸ்க்ருத நாடகங்கள், பரத வாக்கியம் என்னும் தேசீய கீதத்துடன் நிறைவு பெறும் . இதில் மன்னர் வாழ்க, குடி மக்கள் வாழ்க, வளம் சுரக்க என்றெல்லாம் கீதம் இசைப்பர்.

கி.மு காலத்தில் தோன்றிய பாஷாவின் நாடகங்களையும் காளிதாசரின் நாடகங்களையும் பார்க்கையில் இதை அறியலாம். காளிதாசன் காலம் 2000 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை பிரபல சம்ஸ்க்ருத அறிஞர்கள் காட்டியுள்ளனர். நானும் சங்க இலக்கிய உவமைகள் மூலம் காட்டியுள்ளேன்.

சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய 11 ஆடல்களும்  இந்து  மத புராணக் கதைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. தமிழை எள்ளி நகையாடிய பிருஹத் தத்தன் என்ற வட நாட்டுக்காரனை அழைத்து குறிஞ்சிப் பாட்டு பாடிக் காண்பித்தார் கபிலர் என்னும் சம்ஸ்க்ருதம் தெரிந்த பிராமணப் புலவர் . இது காளிதாசன் காவிய நடையின் செல்வாக்கில் பிறந்தது என்பதை ஜி.யூ . போப் போன்றர்  பார்த்த மாத்திரத்திலேயே எழுதிவிட்டனர். சிலப்பதிகாரத்தில் கோவலனுக்கு சம்ஸ்கிருதம் தெரியும் என்ற செய்தியும் வருகிறது ஆகையால் அக்காலத்தில் காளிதாசனை தமிழ் மக்கள் அறிந்திருப்பர். அவருடைய நாடகங்களையும் படித்திருப்பர். அவருடைய 1500 உவமைகளில் குறைந்ததது 200 உவமை கள் அப்படியே தமிழில் உள்ளன.

எல்லாக்  கலைகளும் வளர்ச்சி  அடையும்; அதுவும் பிற கலாசாரங்க்ளில் உள்ள நல்ல அம்சங்களைக் கடன் வா ங்கத் தயங்காது என்பதை உலக இலக்கியங்கள் காட்டுகின்றன. அவ்வகையில் கண்டோமானால் பிற்கால சம்ஸ்கிருத நாடகங்களில் சில அம்சங்கள் கிரேக்க நாடகங்களில் இருந்து வந்திருக்கலாம். மேலும் யவன என்ற சொல் துவக்க காலத்தில் ரோமானியர்கள் போன்ற அனைத்து வெளிநாட்டினரையும் குறித்தது. ஆகையால் யவனிகா என்ற திரைச் சீலை சொல்லை  மட்டும் வைத்து பெரிய கற்பனைக் கோபுரம் கட்டுவது பொருந்தாது.

கட்டுரையின் இரண்டாவது பகுதியில் ரிக் வேத உரையாடல் கவிதை பட்டியலைத் தருகிறேன்..

–தொடரும்

–சுபம்—

TAGS- நாடகம், தோற்றம், ரிக்வேதம், உரையாடல் , கவிதைகள்

சோக நாடக மன்னன் யுரிபிடீஸ் (Post No.9790)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9790

Date uploaded in London – –29 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

2500 ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க நாட்டில் பல நாடக ஆசிரியர்கள் சோக நாடகங்களை (Tragic Dramas) எழுதிவந்தனர் . அந்த வரிசையில் முன்னணியில் நின்றவர் யுரிபிடீஸ் (EURIPIDES)  ஆவார். அவருக்கு முன்னால் , ஏஸ்கைலஸ் (AESCHYLUS), சோபோக்ளீஸ் (SOPHOCLES) போன்றோர் சோக நாடகங்களையும் கவிதைகளையும் எழுதினார்கள் . ஆனாலும் அந்த அழுகுணி எழுத்தாளர்க ளிடையையே முதலிடம் பெற்றவர் இவர்தான். சோக எழுத்தாளர்களிடையே மிகவும் சோகமாக எழுதியவர் யூரிபிடீஸ்தான் என்று அரிஸ்டாட்டிலே (ARISTOTLE) கூறிவிட்டார்.

யுரிபிடீஸ், ஏதென்ஸ் நகரத்தில் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தார். கசடறக் கற்றார். அந்தக் கால புகழ்மிகு தத்துவ ஞானிகளான சாக்ரடீஸ் SOCRATES முதலியோருடன் தொடர்பு வைத்துக்கொண்டார். அவர்களுடைய போதனைகள் இவர் மீது ஏற்படுத்திய தாக்கத்தினால் தலை சிறந்த , கொள்கைப் பிடிப்புள்ள எழுத்தாளர் ஆனார் .அவருடைய காலத்தில் எழில் மிகு ஏதென்ஸில் புதிய கொள்கைகள், தத்துவங்கள் துளிர்விட்டன;  அந்த புதிய அணுகுமுறையை சிக்கெனப்பிடித்த யூரிபிடீஸ் பழைய பத்தாம்பசலிக் கொள்கைகளுக்கு சவால் விட்டார்..

கிரேக்க மக்களின் வாழ்க்கையில் நாடகம் முக்கிய இடம்பெற்றது. அவ்வப்போது நாடகப் போட்டிகளும் நடைபெற்றன. அதில் வெற்றி பெறுவோர், சமுதாயத்தில் பிரமுகர் ஆகிவிடுவார்கள். அவர்கள் எங்கு சென்றினும் மதிப்பும் மரியாதையும் கிடைத்தன. முப்பது வயதிலேயே நாடகப் போட்டியில் கலந்து கொண்டார். ஆனால் வெற்றி கிட்டவில்லை. மீண்டும் மீண்டும் பகீரதப் பிரயத்தனம் செய்தார் . 14 ஆண்டுகளுக்குப் பின்னர் பரிசை வென்றார். ‘அடிக்க அடிக்க அம்மியும் நகரும் அன்றோ!’

முதல் முதலில் அவரது நாடகங்கள் அரங்கேறியபோது வாதப் பிரதிவாதங்கள் வெடித்தன. சர்ச்சைப் புயல் வீசியது. ஏனைய நாடக ஆசிரியர்களைப் போல கிரேக்க நாட்டின் இதிஹாச, புராண கதாநாயகர்களையே  அவரும் நாடக மேடை ஏற்றினார். ஆனால்  அவர்கள் பேசிய வசனங்களோ புதுமையாக இருந்தன. அவர்கள் யதார்த்த மனிதர்களை போல பேசினர் . இது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது எல்லோரும் அறிந்த புராண கதாபாத்திரங்கள், தற்காலத்த்தில் வாழ்ந்தால் என்ன செய்வார்கள், எப்படிப் பேசுவார்கள் என்று காட்டினார். அதுமட்டும் அல்லாமல் இரும்பு நெஞ்சம்  படைத்த உணர்ச்சிமிக்க ஒரு பெண்ணை முக்கிய கதா பாத்திரமாகவும் நுழைத்தார். அவருடைய மெடியா MEDEA நாடகம் இதற்கு ஒரு சான்று.

92 நாடகங்களை எழுதிய போதும் அவருடைய நான்கு நாடகங்களுக்கு மட்டுமே முதல் பரிசு கிடைத்தது. அவர் இறந்த பின்னர்தான் மேலும் புகழ் பரவியது. அவருடைய நாடகங்களை ரசிகர்கள் நகல்/ படி எடுத்து தொடர்ந்து நடித்தனர். ஆகையால் அவருடைய பல நாடகங்கள் காலத்தை வென்று இப்போது நம் கைகளில் தவழ்கின்றன.

யூரிபிடீஸ் பிறந்த ஆண்டு – கி.மு 485

இறந்த ஆண்டு – கி.மு.406

வாழ்ந்த காலம் – 79 ஆண்டுகள்

அவர் எழுதிய நாடகங்களில் நமக்குக் கிடைத்தவை:-

Publications

All years in BCE

431 – MEDEA

426- ANDROMACHE

422 – THE SUPPLIANTS

415 – THE TROJAN WOMEN

413 – ELECTRA

412 – HELEN

410 – THE PHOENICIAN WOMEN

408 – ORESTES

PUBLISHED AFTER HE DIED —–

405 – THE BACCHAE

–SUBHAM—

TAGS- யுரிபிடீஸ் , சோக, கிரேக்க, நாடகம்,EURIPIDES

நகைச்சுவை மன்னன் மஹேந்திர பல்லவன் (Post No.4434)

Written by London Swaminathan 

 

Date: 26 NOVEMBER 2017

 

Time uploaded in London- 9-09 am

 

 

Post No. 4434

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

அப்பர் என்னும் திருநாவுக்கரசரைப் படாதபாடு படுத்திய மன்னன் மஹேந்திரபல்லவன். சைவ சமயத்திலிருந்து சமணத்துக்குத் தாவி மீண்டும் சைவத்துக்கே திரும்பிய கட்சி மாறி; இக்கால ஆயாராம், கயாரம் கட்சிமாறிகளுக்கு முன்னோடி.

அப்பர் காலம் வரை நிலவிய அழியும் கோவில்களை அகற்றி முதலில் குகைக் கோவில்களை நிறுவியவன். திருச்சி வரை ஆட்சியை விஸ்தரித்து திருச்சி அருகில் பல கோட்டைகளை நிறுவியவன். மாபெரும் சம்ஸ்கிருத பண்டிதன்; பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணுவின் மகன். வாதாபி கொண்ட நரசிம்ம பல்லவனுக்குத் தந்தை.

 

ஷேக்ஸ்பியருக்கும் முன்னால் காமெடி (Comedy) எழுதி புகழ்பெற்றவன்.

பாஷா, சூத்ரகன், காளிதாசன் முதலானோர் எழுதிய நாடகங்களில் நகைச்சுவை (comedy) நடிகர்கள் (விதூஷகன்) உண்டு. ஆயினும் முழுக்க முழுக்க முதல் காமெடி நாடகம் எழுதியவன் இவனாகத்தான் இருக்க வேண்டும்.

இவன் எழுதிய நகைச் சுவை நாடகத்தின் பெயர் மத்த விலாசப் பிரஹசனம்.

 

காவியக் கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை விற்பன்னன். 1400 ஆண்டுகளுக்கு முன்னர் பல் கலை வித்தகன், ஒரு மாபெரும் மன்னனாக விளங்கமுடியும் என்பதற்கு இவன் ஒரு சான்று. வடக்கில் ஒரு போஜ மன்னன் என்றால் தெற்கில் ஒரு மஹேந்திர பல்லவன்.

 

மஹேந்திர பல்லவன் சகல கலா வல்லவன். இதோ அவனது பட்டப் பெயர்களையும் விருதுகளையும் பாருங்கள்:-

 

மத்தவிலாஸன்= ஆனந்த ஆட்டக்காரன்

குணபரன்= நற்குண நாயகன்

அவநிபாஜனன்= பூமியாகிய பாத்திரத்தில் தன் புகழை நிரப்பியவன்

சத்ரு மல்லன்= பகைவரை புறங்காட்டச் செய்த மாவீரன்

லளிதாங்குரன்= பல்லவ குல மரத்தின் இளம் தளிர்

விசித்திரசித்தன்= புதுமைகளைப் படைப்போன், சிந்திப்போன்

ஸங்கீர்ணஜாதி=பல நறுமணம் கமழும்ஜாதி மலர் போன்றவன்

சேதக்காரி= நினைத்தை முடிப்பவன்

பிரஹசனம் என்பது நகைச்சுவை நாடகம்; இதில் மூன்று வகை உண்டு:சுத்தம், விகிர்தம், சங்கீர்ணம்; அவைகளில், மத்தவிலாசப் பிரஹசனம் , சுத்தப் பிரஹசனம் வகையினது.

 

கதைச் சுருக்கம் பின்வருமாறு:-

காபாலி ஒருவனும், பாசுபதன் ஒருவனும், ஒரு பௌத்த பிக்ஷுவும், பைத்தியக்காரனும், சூத்திரதாரனும், காபலிகனுடைய காதலியும் ஆகிய அறுவர் இதில் நடிப்பவர்கள் ஆவர். அவர்கள் நகைச்சுவை வசனம் மொழிந்து அனைவரையும் மகிழ்விப்பர்.

 

நாடக சூத்திரதாரி முன்னுரை வழங்கிய பின்னர், காபாலியும் அவனது காதலியும் காஞ்சீபுர வீதிகளில் உலா வருவதுடன் காட்சி துவங்குகிறது.

 

முதல் காட்சியில் காபாலிகன் அவன் காதலி தேவசோமையுடன் வாதாடுகிறான். தனது பிக்ஷை ஏற்கும் கபாலத்தைக் காணவில்லை என்று சொல்கிறான். அதைத் தேட முயற்சி செய்கின்றனர்.

 

இரண்டாவது காட்சி:-மதுக்கடை வருணனை

மூன்றாம் காட்சி:- அவ்வழியே வந்த சாக்கிய (பௌத்த) பிஷுவிடம் இருந்த கப்பரை (கபாலம்) தன்னுடையது என்று பிடுங்க, அந்தப் பக்கம் வந்த பாசுபதனிடம் இருவரும் தங்கள் வழக்கை முறையிடுகின்றனர்

நாலாம் காட்சி:பைத்தியக்காரன் ஒருவன், ஒரு வெறி நாயிடமிருந்து பிடுங்கிய

கப்பரையுடன் வருகிறான்; அ தைக் கண்ட காபாலிகன் மகிழ்கிறான்.

பின்னர் அனைவரும் சமாதானமாகச் செல்கின்றனர். இது சம்ஸ்கிருத மொழியில் அமைந்த நாடகம். நாடகத்தில் மஹேந்திரனின் பட்டப்பெயர்கள், விருதுகள் அனைத்தும் பயன்படுத்தப்படுகின்றன. குடிகாரன் பேச்சு,பைத்தியக்காரன் பேச்சு ஆகியவற்றில் நகைச்சுவை ததும்புகிறது.

TAGS:– மத்தவிலாசப் பிரகசனம், மகேந்திர, பல்லவன், மஹேந்திர,

நகைச்சுவை, நாடகம், மன்னன்

 

–Subham–