சேரன் செங்குட்டுவனுடன் சென்ற 102 நாட்டியப் பெண்கள் !!!

cheran senguttuvan

கண்ணகி சிலையுடன் செங்குட்டுவன் ஊர்வலம்

ஆய்வுக் கட்டுரை :– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:-1193; தேதி:- 25 ஜூலை 2014.

“நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் ஆரம் படைத்த தமிழ்நாடு: — என்று சுவைபடப் பாடினான் பாரதி. உண்மயிலேயே சுவையான காவியம் மட்டும் அன்று; தமிழ் கலைக் களஞ்சியமும் கூட!

தமிழ் மன்னர்களில் இமயம் வரை சென்று வெற்றிக் கொடி நாட்டியோர் சிலரே; அத்தகைய மாவீரர்களில் ஒருவன் சேரன் செங்குட்டுவன். இவன் செய்த சாதனைகள் பற்பல:–

1.இமயம் வரை சென்று புண்ய இமய மாமலையில் கல் எடுத்து, அதைப் புனித கங்கையில் நீராட்டி, பத்தினித் தெய்வத்துக்கு – கண்ணகி தேவிக்கு சிலை எடுத்தான்.

2. தமிழர்களை இகழ்ந்த கனக விசயன் என்ற சின்ன அரசர்களை தலையில் கல் சுமக்க வைத்தான.

3.மாபெரும் சாம்ராஜ்யம் அமைத்த சாதவாஹன பிராமண மன்னர்களுடன் நட்பு பூண்டான். இமயம் வரை எளிதில் செல்ல இது உதவியது.

4.கடற்கொள்ளையர்களை ஒழித்துக் கட்டினான்.

5. செங்குட்டுவன் தந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் யவனர்களைச் சிறைப்பிடித்து தலையை மொட்டை அடித்து தலையில் எண்ணையை ஊற்றி அவமானப்படுத்தினான். செங்குட்டுவன் காலத்தில் அவர்கள் அடங்கி ஒடுங்கி சேவகம் புரிந்தனர்.

6. இவன் ஒரு தீவிர தமிழ் ஹிந்து; இமயம் ஏகுவதற்கு முன்பாக உலகப் புகழ்பெற்ற திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவிலை வலம் வந்தான். சிவனின் திருப்பாதங்களைத் தலையில் சுமந்தான். அந்த நேரத்தில் பெருமாள் கோவில் பட்டர்கள் ஓடிவந்து கொடுத்த பிரசாதத்தை தோள் மேல் வைத்து வலம் வந்தான். தலையில் சிவன் பாதம், தோளில் விஷ்ணு பிரசாதம். “அரியும் சிவனும் ஒன்னு, அரியாதவன் வாயில் மண்ணு” என்பதைச் சொல்லாமல் சொல்லிக் காட்டினான்!! அசல் தமிழ் ஹிந்து!!!

“குடக்கோக் குட்டுவன் கொற்றங் கொள் கென
ஆடகமாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
சேடம் கொண்டு, சிலர் நின்று ஏத்தத்
தெண்ணீர் கரந்த செஞ்சடைக கடவுள்
வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்,
ஆங்கது வங்கி, அணிமணிப் புயத்துத்
தாங்கினன் ஆகித் தகைமையின் செவ்வுழி”– கால்கோட்காதை

kannaki andkovalan

பூம்புகாரில் கண்ணகி, கோவலன் சிலைகள்

7.இமய மலை சென்றவுடன் அவன் போட்ட முதல் உத்தரவு:
“வடதிசை மருங்கின் மறைகாத்து ஓம்புநர்
தடவுத்தீ அவியாத் தண்பெரு வாழ்க்கை,
காற்றூதாளரைப் போற்றிக் காமியென” (சிலப். கால்கோட்காதை)

பொருள்:– வடதிசையில் வேதங்களைக் காத்தும், ஹோம குண்டத்தில் எரியும் முத்தீயை அணைந்து போகாத வாறு வளர்த்தும், அருள் பொங்கும் வாழ்க்கை நடத்தும் மக்களுக்கு இடையூறு ஏற்படாதபடி நடந்து கொள்ளுங்கள்— என்று படைகளுக்கு உத்தரவிட்டான்.

காற்றூதாளர்கள்= காற்றினும் விரைந்து செல்லும் தூதர்கள் மூலம் படைகளுக்கு இந்த உத்தரவு பறந்தது!!!

8.பிராமணனுக்கு 50 கிலோ+ தங்கம்: துலாபாரம்
“பெருமகன் மறையோர் பேணி, ஆங்கு, அவற்கு
ஆடகப் பெருநிறை ஐயைந்து இரட்டி,
தோடோர் போந்தை வேலோன், ‘தன்னிறை
மாடல மறையோன் கொள்க’ என்று அளித்து – ஆங்கு
ஆரிய மன்னர் ஐயிரு பதின்மரை,
சீர்கெழு நன்னாட்டுச் செல்க’ என்று ஏவி” (சிலப்ப. நீர்ப்படைக் காதை)

பொருள்:
மாடல மறையோனே! இவற்றை நீ கொள்க! என்று பனம்பூ மாலை ஏந்தியவனும், வேலை ஏந்தியவனுமான செங்குட்டுவன் தன்னுடைய எடைக்குச் சமமான 50 துலாம் தங்கத்தைக் கொடுத்தான். அங்கிருந்த பிராமண சாம்ராஜ்ய சாதவாஹனர்களை விடைகொடுத்து அனுப்பினான்.
ஆந்திரத்தில் இருந்துகொண்டு வட இந்தியாவை ஆண்ட நூற்றுவர்கன்னர் (சாதவாஹனர்) பிராமணர்கள்— உலகமே நடுங்கும் மகத்தான படை பலத்துடன் மாட்சிமை பொருந்திய ஆட்சி புரிந்தவர்கள்—- இவர்கள் ஆதரவுடன் தான் செங்குட்டுவன் வட இமயம் வரை சென்றான்— கடலுக்கு அப்பாலும் இவர்கள் ஆதிக்கம் பரவியதை இவர்களுடைய கப்பல் பொறித்த நாணயங்கள் மூலம் அறிய முடிகிறது!!

((ஒரு துலாம் என்பது ஆறு வீசை என்று வாய்ப்பாடு கூறும். செங்குட்டுவன் (50 x 6) 300 வீசை இருந்திருக்க முடியாது. ஒரு நூறு, நூறைம்பது கிலோ இருந்திருக்கலாம் என்பது என் கணிப்பு.))

9. நாட்டிய மகளிர், இசைவாணர் கூட்டம்

செங்குட்டுவனுடன் போனோர் பட்டியல் இதோ:–
தேர்கள் 100
யானைகள் 500
குதிரைகள் 10,000
வண்டிகள் 20,000
கஞ்சுகர் 1000
நாட்டியப் பெண்கள் 102
இசைக் கலைஞர்கள் 208
விகடகவிக்கள் 100

:நாடக மகளிர் ஈரைம்திருவரும்
கூடிசைக்குயிலுவர் இருநூற்று எண்மரும்
தொண்ணூற்று அறுவகைப் பாசண்டத்துறை
நண்ணிய நூற்றுவர் நகைவேழம்பரும்
கொடுஞ்சி நெடுந்தேர் ஐம்பதிற்று இரட்டியும்
கடுங்களி யானை ஓரைஞ்ஞூறும்
ஐ ஈ ராயிரம் கொய்யுளைப் புரவியும்
எய்யா வடவளத்து இருபதினாயிரம்
கண்ணெழுத்துப் படுத்தன கைபுனை சகடமும்
சஞ்சயன் முதலாத் தலைக்கீடுபெற்ற
கஞ்சுக முதல்வர் ஈர் ஐஞ்ஞூற்றுவரும்
சேயுயர் விற்கொடிச் செங்கோல் வேந்தே!
—(சிலப்பதிகாரம், கால்கோட்காதை)

((கஞ்சுகர்= போலீஸ், தூதர், அரசாங்க அதிகாரிகள், செக்யூரிட்டி கார்ட்ஸ்)

ஆதி காலத்தில் நாடகமும் நாட்டியமும் ஒன்றே. நாடக/ நாட்டிய வளர்ச்சிக்கு தமிழ் மன்னர்கள் ஆற்றிய அரும் பணி நாயக்கர் காலம் வரை நீடித்தது. சோழ மா மன்னன் ராஜ ராஜ சோழன் தஞ்சையில் 400 நாட்டிய மகளிர்க்கு வீடு கொடுத்து இருந்தான். ஒவ்வொருவர் வீட்டு எண் (டோர் நம்பர்) கொடுத்து அது யாருக்குச் சொந்தம் என்று கல்வெட்டு வெளியிட்டு இருக்கிறான். அந்தப் பெண்கள் அழகான தமிழ், சம்ஸ்கிருதப் பெயர்கள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் — (டாக்டர் இரா நாகசாமி வெளியிட்ட தஞ்சைப் பெருவுடையார் கோவில் கல்வெட்டுகள் என்ற நூலில் மேல் விவரம் பெறலாம்).

contact swami_48 @ yahoo.com
–சுபம்–