நாணிக் கண் புதைத்தல்-2 (Post No.10,356)

WRITTEN BY B.KANNAN, DELHI

Post No. 10,356

Date uploaded in London – –   19 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நயம்பட உரைத்தல்                          

நாணிக் கண் புதைத்தல்-2

 B.Kannan, Delhi

நூல் அரங்கேற்றத்தின் போது கூடியிருந்தப் புலவர்கள் கவிராயரின் ஒரு குறிப்பிட்ட செய்யுளைச் சிறப்பித்துப் போற்றியதாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது இப்போது நினைவுக்கு வருகிறதல்லவா? அது எந்தப் பாடல் எனக் குறிப்பிட்டு எங்கும் பதியப்படவில்லை. அதனாலென்ன, நூலில் முடியிலிருந்து அடி வரைப் பாடல்களை உன்னிப்பாகப் படித்ததில் எதை எடுப்பது, எதை விடுவது என்றே அனுமானிக்க முடியவில்லை! மிகுந்த ரசனை மிக்கப் பாடல்கள் அவை! கவிராயரின் பெயரிலேயே அமுதம் தொற்றியிருக்கும் போது அவரது படைப்புக்களில் அதன் ரசம் ஊடுருவி இருக்குமல்லவா? அப்பாடல் எதுவாய் இருக்கக் கூடும்?

“திருக்கோவையாரில் மாணிக்கவாசகர் அகப்பொருளில் 25 முதன்மைத்               துறைகளை ,ஒவ்வொன்றையும் குறைந்தது 16 உட்பகுதிகளாகப் பிரித்து          மொத்தம் 400 துறைகளில் செய்யுட்களை அமைத்துள்ளார். கல்லாடர்                         (கல்லாடம் நூல்), சடகோபர் (திருவந்தாதி) இருவரும் 100 துறைகளில் பாடல்      இயற்றியுள்ளனர். கவிராயர் அவற்றுள் மறைமுகமாக 6 துறைகளை மட்டுமே மேலோட்டமாக மேற்கோள் காட்டுகிறார். அவற்றில் ஒன்று அப்பாடலாக            இருக்குமோ,    யார்அறிவார்,  அந்த அவைப் புலவர்கள், சேதுபதி மன்னரைத்        தவிர?”

சில செய்யுட்களைத் தேர்ந்தெடுத்து, பொருள் விளக்கத்துடன் கொடுத்துள்ளேன். புத்தகத்தை ரசித்துப் படியுங்கள், முடிந்தால் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்!

பாடல்16 : தார்கொண்ட பாடலம் பேரோடை யாம்ப றருங்கமலச்

          சீர்கொண்ட செங்கரத் தான்ரகு நாயகன் றேவைவெற்பி

          லேர்கொண்ட நீல மடலே றுகைபெரி தீனமன்றோ

          வார்கொண்ட கொம்மைப் புளுகப் படாமுலை வஞ்சியர்க்கே. 

முதலிரண்டு அடிகள் மன்னனின் வள்ளல் தன்மையையும், பின்னிரண்டு அடிகள் மங்கையின் உறுதியானக் கட்டமைப்பையும், பெண்களுக்கு ‘மடலூர்தல்’ கிடையாது என்பதையும் விளக்குகின்றன.

பொருள்: தார்கொண்ட- கிங்கிணிமாலை தரித்த, பாலடம்- குதிரைகளையும், பேர் ஓடை- பெரிய முகபடாம் அணிந்த, ஆம்பல்-யானைகளையும், தரும்-பாவலர்களுக்குப் பரிசளிக்கும் குணமுடைய, கமலச் சீர்கொண்ட-அழகியத் தாமரை மலர் போன்ற, செங்கரத்தான்- சிவந்தக் கைகளை உடையவனான, ரகுநாயகன்-ரகுநாத சேதுபதியின், தேவை வெற்பில்-ராமேஸ்வரம் (கந்தமாதன) மலையில்,

வார்கொண்ட- மார்புக் கச்சையணிந்த, கொம்மை- திரட்சியான, புளகம்- மகிழ்வளிக்கக் கூடிய, படா முலை- தொய்வில்லாத ஸ்தனங்களைக் கொண்ட, வஞ்சியர்க்கு- மங்கைக்கு, ஏர்கொண்ட-அழகுடைய, நீலம்- பனை மரம், மடல் ஏறுகை– மடலூர்தல், பெரிது ஈனம் அன்றோ- மிகவும் இழிவல்லவா?

படா முலை என்ற சொல்லுக்கு வலு சேர்க்க உரையாசிரியர், “கடாஅக்களிற்றின் மேல் கட்படா மாதர், படாஅ முலைமேல் துகில்” எனும் குறளை எடுத்துக்காட்டாக வைக்கிறார். அதாவது,மதங்கொண்ட யானையின் மத்தகத்தின் மேலிட்ட முகபடாம் கண்டேன்; அது மங்கையொருத்தியின் சாயாத கொங்கை மேல் அசைந்தாடும் ஆடைபோல் இருந்தது என்பது பொருள்.

(கண்ணை மறைத்தல் பற்றிக் ‘கட்படாம்’ என்றான். துகிலால் மறைத்தல் நாணுடை மகளிர்க்கு இயல்பு. நீலமடல் ஏறு கை- நீலநிற கருங்குவளை மலரிதழில் ஏறிப் பொத்தியக் கை. கருங்குவளை கண்களைக் குறிப்பதாகும். மற்றொரு பொருள் மடலூர்தல் அனுசரிக்கும் முறையைக் கூறுகிறது.

மடலூர்தல்-

தலைவியை அடைய முடியாத தலைவன், உடம்பெல்லாம் திருநீறு பூசிக் கொண்டு, கையில் தலைவியின் ஓவியம் கொண்ட கிழியுடன் நாற்சந்தியில் பனை மட்டையால் செய்யப்பட்ட குதிரை மீதேறி நிற்க, பிறர் அதனை இழுத்துச் செல்வர். தலைவன் தலைவி நினைவாகவே இருப்பான். பனை மட்டையால் செய்யப்பட்ட குதிரை வடிவம் ‘மடல்’ ஆகும். மடலூரும் தலைவன் அணிந்து கொள்ளும் மாலையில் பூளை, ஆவிரை, எருக்கு ஆகிய பூக்கள் தொடுக்கப் பட்டிருக்கும்.

‘திருக்கோவையார் செய்யுளொன்றும் (74) இதை விளக்குகிறது,

  காய்சின வேலன்ன மின்னியல் கண்ணின் வலைகலந்து

  வீசின போதுள்ள மீனிழந் தார்வியன் றென்புலியூ

  ரீசன சாந்து மெருக்கு மணிந்தோர் கிழிபிடித்துப்

  பாய்சின மாவென வேறுவர் சீறூர்ப் பனைமடலே

இன்னுமொரு செய்யுள் இதோ…                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   

பாடல்305: சேண்டவர் வாழ்திருத் தேவையை யாளுந் திருமணிமார்

                        பாண்டவர் தூதன் ரகுநாத சேது பதிவரைவாய்

                        நாண்டவர் முன்னிட் டதுவே யொளித்துத்தன்    

                        னற்பெயரைப்

                        பூண்டவர் தானத்தைத் தான்வாங்கிக் கொள்ளப்

                        புறப்பட்டதே

முதலில் அருந் தவசீலர்கள் வாழும் இராமேஸ்வரத் தலத்தின் சிறப்பும் (சேண்+தவர்), சேதுபதியின் பெருமையும் கூறப்படுகிறது. இங்கு,மூன்று ராசிகள், ஒரு கிரகம் ஆகியவற்றை மங்கையின் புருவம், கண் மற்றும் மார்பகத்துக்கு ஒப்பிட்டு இருபொருள்படச் சொல்கிறார் கவிராயர். கடைசி இரு அடிகளைப் பார்ப்போம்…

பொருள்: நாண்தவர்- நாணுடன் கூடிய வில் (தனுசு=புருவம்,வில் போல் வளைந்த), முன்னிட்டது–அதை முந்தி இருப்பது மகரம் (கண்) ஒளித்து- இவற்றை மறைத்து, தன் நற்பெயரைப் பூண்டவர்-மெதுவாக நடப்பதையே (மந்தன்) தன் நல்லப் பெயராகக் கொண்ட சனீஸ்வரர் எனும் கோள், தானத்தை–அவரது இடமாகிய கும்பத்தை (மார்பகம்), தான் வாங்கிக்கொள்ள- (மனமே) பெற்றுக் கொள்ள,புறப்பட்டதே–நன்கு வெளிப்பட்டதே (மங்கையிடமிருந்து).

தனுசு, மகரத்தை மறைப்பது என்பது நாணிக் கண் புதைப்பதைக் குறிக்கும். மீனை ஒளித்து வைத்து விட்டதுமில்லாமல் கும்பத்தை (ஸ்தனம்) மட்டும் ஏற்றுக் கொள்ள மனம் விழைவது ஏற்புடையது அல்லவே! மக்களை விற்று யாரேனும் மகரத்தை வாங்குவார்களா? மகரமும்,கும்பமும் சனிக்குரிய வீடாகும். இவ்விரண்டில் ஒன்றை ஒளித்து வைத்துவிட்டு மற்றதை வாங்கிக் கொள்ளச் செய்வது  முறையற்றது என்கிறார் கவிராயர்.

கடைசியாக இந்தச் செய்யுளைப் பார்ப்போம். எண்கள்,நட்சத்திரம், ராசி ஆகியவற்றைச் செய்யுளில் எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறார், பாருங்கள்…

பாடல் 29:  மேகந் தருமணி வெண்முத்த ராசியின் மென்மலர்ப்புன்

            நாகந் தருக்கடற் றேவையர் கோன்ரகு நாதன்வெற்பி

            லேகந் தருபதின் மூன்றொம்ப தான்மறைத் திங்குநின்றீ

            ராகந் தருமைந்து மொன்பது மேவெளி யாகியவே.

பொருள்: மேகம் தரு மணி= மேகம், கற்பக விருட்சம்,சிந்தாமணியைப் போன்ற வன், வெண்முத்த ராசியின்=வெண்மையாகிய முத்துத் தொகுதி போல, புன்னாகம்=புன்னை மரங்கள், மெல் மரு தரு= மெல்லிய மலர்களை உதிர்க்கும், கடல்= சமுத்திரக் கரையிலுள்ள, தேவையர் கோன்= இராமேஸ்வரத்தின் அரசன், ரகுநாதன்=ரகுநாத சேதுபதி, (அவனது) வெற்பில்=மலையுள்ளப் பிரதேசத்தில், ஏகம்தரு பதின்மூன்று= ஒன்றை நீக்கிய பதின்மூன்று அதாவது பனிரெண்டை, ஒன்பதால் மறைத்து=ஒன்பதினால் மூடி,  இங்கு நின்றீர்= இவ்விடத்தில் நிற்பதும், ஆகம் தரும்=மார்பினால் தரப்பட்ட, ஐந்தும்,ஒன்பதும் வெளியாகிய =ஐந்தும், ஒன்பதும் வெளிப்பட்டன.

இங்கு ஒன்றை நீக்கிய பதின்மூன்று என்று சொன்னது பனிரெண்டாவது மீன ( மீனம்=கண்) ராசியைக் குறிக்கும். பதின்மூன்று எனச் சிறப்பாகச் சொன்னது 13-வது நட்சத்திரம் அஸ்தத்தையும் (கை) குறிக்கும், ஒன்பதால் மறைத்து என்பது, குபேரனின் நவநிதிகளுள் ஒன்பதாவது நிதியாக விளங்குபவள் பதுமநிதி. பதுமம் கைக்கு உவமையாதலால், அதனால் கண்களை மூடினாள் எனக் கொள்ள வேண் டும். ஐந்தும், ஒன்பதும் என்று சொல்வது, 5-வது நட்சத்திரம் மிருக சீரிடத்தையும் (ம்ருகம் =மான், சீரிஷம்=தலை), 9-வது நட்சத்திரம் ஆயில்யத்தையும் குறிப்பிடுகிறது. மானின் நிமிர்ந்தத் தலை போல் தோன்றுவதால் மிருகசீரிடத்துக்கு ‘மான்றலை என்றும், ஆயில்யத்துக்கு அரவு, பாம்பு என்றும் தமிழில் பெயர்கள் உண்டு. கூர்மையானதும், வசீகரமிக்க உறுதியானக் கொம்புகள் உள்ள நேர்த்தியான மான் தலையை இளம் மார்பகத்துக்கும், வளைவு    சுளிவுகள் கொண்ட இடையை பாம்புக்கும் ஒப்பிடுகிறார் கவி.

உவமான சங்க்ரகம் (3-ம் தொகுப்பு, 17-ம் நூற்றாண்டு) 10-வது பாடலும் பெண்களின் இடையை இப்படி விவரிக்கிறது:

 பாரிலிடைக் கரவும் பைங்கொடியும் பூங்கொம்பு

 மார னுடம்பும் வகிரிழையு–நேர்கைப்

 பிடியளவுந் தேய்ந்த பிறைக்கொழுந்து மின்னும்

 துடியளவுங் கோளரியுஞ் சொல்.

இதுமாதிரி இன்னும் பலவுண்டு படித்து இன்புற

இந்த வர்ணணைகளைக் கேட்டு உள்ளம் கிளுகிளுக்க, உவகையுடன் அந்தப்புர மாந்தரை நினைத்துக் கனவுலகில் சிறகடித்துப் பறந்திருப்பார் அல்லவா, சேதுபதி மன்னர்? அரசனைக் குளிர்வித்துப் பரிசுகள் பெறுவதில் வல்லவர்கள் ஆயிற்றே பாவலர்கள்! அதனால் அல்லவோ இரகுநாத சேதுபதி அரசர் தம்மீது அப்பிரபந்தத்தைப் பாடியதற்காகத் தம் சமஸ்தானத்திலுள்ளதும், புலவர் பிறந்த இடமுமானப் பொன்னங்கால் என்னும் வளப்பம் மிக்கக் கிராமத்தை அமிர்த கவிராயருக்கு மானியமாகப் பட்டயம் எழுதிக் கொடுத்து உரிமையாக்கினார். அது முதல் அவருக்குப் பொன்னங்கால் அமிர்த கவிராயரென்ற பெயரே வழங்கலாயிற்று.

ஒருதுறைக் கோவைக்கான புதுத்தடம் போட்டவர் அமிர்த கவிராயர். இதை ‘வல்லான்  வெட்டிய வாய்க்கால்’ என்கிறார் வித்வான் கா.நயினார் முகமது. அதில் ஏதும் சந்தேகம் உண்டோ?

               ——————————————————————–

, tags–  அமிர்த கவிராயர், சேதுபதி மன்னர், நாணிக் கண் புதைத்தல்-2