Post No. 10,351
Date uploaded in London – – 18 NOVEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நயம்பட உரைத்தல்
நாணிக் கண் புதைத்தல்–1
B.Kannan, Delhi
அன்புள்ளத் தமிழ் நெஞ்சங்களுக்கு தில்லியிலிருந்து கண்ணன் நமஸ்காரம். வணக்கம் பல.
இன்று நாம் பார்க்கப் போவது அகத்துறையைச் சார்ந்தக் கோவை இலக்கியத்தில் பெரிதும் பேசுபொருளாக விளங்கும் ஒருதுறைக்கோவைப் பாடல்களைப் பற்றித்தான். பாடும் புலவர்களுக்கு மட்டுமின்றி அவற்றைக் கேட்போருக்கும்
“இன்பத் தேன் வந்து பாய்ந்திடுமே காதினிலே!”, உள்ளமும் இறக்கைக் கட்டிப் பறந்திடுமே காற்றினிலே!!
நம் பாரத நாட்டில் பல நூற்றாண்டுகளாகக் கல்வி வளர்ச்சி அடைவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர்கள் புலவர்களும், கவிஞர்களும் ஆவர். கவிராயர் எனப்படுபவர் தமிழ் மொழியில் கவி இயற்ற வல்லவருக்கு வழங்கப்படும் பட்டம் ஆகும். தமிழ் மொழியைப் பேண கவிராயர்கள் முக்கியப் பங்காற்றினார்கள். ஏட்டுச் சுவடிகளைப் பாதுகாத்தல், அச்சிலேற்றல் ஆகிய முக்கியப் பணிகளை இவர்கள் செய்தார்கள். அவர்கள் வாழ்க்கை நடத்துவதற்குரிய உதவிகளை வழங்கி அவர்களை ஊக்கமளித்து வந்தவர்கள் மன்னர்களும், ஜமீன்தார்களும், பிரபுக்களும் ஆவார்கள். சேர, சோழ, பாண்டியர்களும் குறுநில மன்னர்களும் தங்கள் அரசவைகளில் பல புலவர்களை ஆஸ்தானக் கவிகளாக அமர்த்தி ஆதரித்தனர். அப்புலவர்களும் பற்பலத் தமிழ் நூல்களை இயற்றி, மன்னர்களின் புகழ் பார் எங்கும் பரவச் செய்தனர். புலவர்களால் பாடப் பெறாவிட்டால் தங்களுக்கு மதிப்புக் குறைவென்றும், வாழ்க்கைப் பயனை இழந்தது போலாகும் என்றும் கருதினர். புலவர்களுக்குப் பல வகைப் பரிசில்களும், மானியமாகக் கிராமங்களையும் அவர்கள் அளித்துள்ளனர்.
இராமநாதபுர சமஸ்தானத்தை அரசாண்ட சேதுபதி மன்னர்கள் தமிழ் வளர்க்கும் பரம்பரையைச் சார்ந்தவர்கள். அவர்களுள் தளவாய் இரகுநாத சேதுபதி (1645-1676) புலவர் பாடும் புகழுடையோராக விளங்கினார்.அவர் தமிழ் நயம் அறிந்து பாராட்டும் வள்ளல். அமிர்த கவிராயர், அனந்த கவிராயர், சர்க்கரைப் புலவர், சவ்வாதுப் புலவர் முதலியவர்கள் அம்மன்னரின் அரசவையை அலங்கரித்தனர். அமிர்த கவிராயர்
சிவகங்கையைச் சார்ந்த ‘பொன்னங்கால்’ எனும் ஊரில் 17-ம் நூற்றாண்டின் முற் பகுதியில் பிறந்தவர். சைவ சமயத்தைச் சார்ந்த வேளாண் மரபினர்.
கோவை இலக்கியம் பாடிய புலவர்கள் அகத்துறையைச் சார்ந்த பாடல்களை வரிசைப்படுத்தி ஒன்றன்பின் ஒன்றாகச் சங்கிலித் தொடர் போலக் கோவையாகப் பாடி உள்ளனர். அகப்பொருள் துறைகள் பலவற்றை நானூறு பாடல்களில் பாடுவதற்குப் பதில் ஒரே ஒரு துறையை நானூறு பாடல்களில் பாடும் மரபும் ஏற்பட்டது. இவ்வகையில் தோன்றிய இலக்கியத்தை ஒரு துறைக் கோவை என்பர். தலைவன் தன்னைப் பார்த்ததை அறிந்த தலைவி நாணித், தன் கண்களைக் கைகளால் மூடிக் கொண்டாள் என்பதே இத்துறையின் பொருளாகும். இப்பாடல்கள் அனைத்திலும் சிலேடை நயம் பொருந்தியிருக்கும். தலைவி கண்மூடி நின்று, தலைவன் தன் வருத்தத்தைக் கூறுவதால் இது ‘இடையூறு கிளத்தல்” எனவும் அழைக்கப்படுகிறது. இறுதியில், கற்பு நிலையில் கூடி மகிழ்ந்து இல்லறம் நடத்துவதே கோவை இலக்கி யங்களின் முடிவுரையாகும்
அமிர்த கவிராயரின் நூல் “நாணிக் கண்புதைத்தல் என்னும் ஒரு துறைக் கோவை” எனவும் “இரகுநாத சேதுபதி ஒரு துறைக்கோவை” எனவும் வழங்கப்படுகிறது. இந்நூலின் 311 பாடல்கள் தற்பொழுது காணப்படுகின்றன. பாடல் 311 முதல் 399 வரை மொத்தம் 89 பாடல்கள் கிடைக்கவில்லை. காஞ்சிபுரம் மகாவித்துவான் இராமசாமி நாயுடு அவர்களின் மூல உரையையொட்டி, தமிழ்ப் பண்டிதர் சொக்கலிங்கம்பிள்ளை என்பார் இந்நூலுக்கு விரிவான உரை எழுதியுள்ளார். எங்கே வேண்டுமோ அந்தச் செய்யுட்களுக்கு மாணிக்கவாசகரின் ‘திருக்கோவையாரில் இருந்தும், திருவள்ளுவரின் குறள் பாக்களிலிருந்தும், உவமான சங்க்ரகம் தொகுப்பிலிருந்தும், புகழேந்தியாரின் இரத்தினச் சுருக்கத்திலிருந்தும் பொருத்தமானப் பாடல்களை மேற்கோள் காட்டியிருப்பது நூலுக்கு மேலும் சிறப்பைச் சேர்க்கிறது.
பின்னாளில், பாஸ்கர சேதுபதி (1888-1903) காலத்தில் அரசவைக் கவிஞராக விளங்கிய மகாவித்துவான் ஸ்ரீ ரா.ராகவவையங்கார் (1870-1946) அமிர்த கவிராயருக்கு இணையாக அதே அகப்பொருளில், பாஸ்கர சேதுபதியின் குமாரர் முத்துராமலிங்க ராஜராஜேஸ்வர சேதுபதியாரின் மீது சுவைபட 400 பாடல்கள் பாடியுள்ளார்
ஒருதுறைக் கோவைகளில், நாணிக் கண் புதைத்தல், வெறி விலக்கல், பாலனைப் பழித்தல், புறங்காட்டல் ஆகியத் தலைப்புக்களில் பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. இது ஒருதுறைக் கோவை என்றாலும், சில செய்யுட்களில் வேறு துறைகளைப் பற்றிய செய்திகளும் கூறப்படுகின்றன–வழி வினாதல் (4), நடுங்க நாட்டம் (5), புறவொடு புலம்பல் (7), மடற்றிரம் (16), பொருள்வயிற் பிரிவு (39), கெடுதி வினாதல் (272).
கவிராயரின் பாடல்கள் எழுந்த விதத்தைப் பார்ப்போம்……
அரண்மனை நந்தவனத்தில் ஒருநாள் மாலைப் பொழுதில் தளவாய் சேதுபதி தம் புலவர் பெருமக்கள் கூறும் பாடல்களைக் கேட்டவாறு உலவிக்கொண்டிருந்தார். அப்போது மன்னர் புலவர்களைப் பார்த்து அகப்பொருள் துறையுள் ஏதேனும் ஒன்று பற்றி பாடல்கள் பல பாட இயலுமா? எனக் கேட்டார்.
அதற்கு ஒவ்வொரு புலவரும் மிகுந்த ஆவலுடன் பத்து, இருபது, முப்பது பாடல்கள் இயற்ற முடியும் எனக் கூறலாயினர். ஏனெனில், இத்துறையில் தலைவன்-தலைவியின் ஊடல்,கூடல் பற்றிக் கிறங்க வைக்கும் செய்யுட்களைப் பாடி மன்னர் மனதைக் கிளுகிளுக்க வைத்துப் பரிசில்களைப் பெற முடியுமே! உடனே தன்னால் நூறு பாடல்கள் பாட முடியும் என மன்னரின் அபிமானத்தைப் பெற்ற அமிர்த கவிராயர் கூறினார். கவிராயர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட சில அவைக்களப் புலவர்கள் நானூறு பாடல்கள் பாடுமாறு கூறினர். இதில் எப்படியும் அவர் தோற்றுவிடுவார் என்றே அவர்கள் எதிர்பார்த்தனர். அதனை ஏற்றுக்கொண்ட அமிர்த கவிராயர், “நானூறு பாடல்களைக் கட்டளைக் கலித்தொகையில் புனைந்து அதுவும் ஒரே பக்கத்தில் எழுதி முடிப்பேன்!” என்றார்.
“நாணிக் கண்புதைத்தல்”என்னும் துறையில் பதினைந்து நாட்களில் நானூறு பாடல்களைப் பாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டார்! ஒவ்வொரு பாடலின் முதல் இரண்டடிகளில் அரசனுடைய பெருமைகளையும் பின்னிரண்டடிகளில் துறைப்பொருள் இருவித அர்த்தம் அமையுமாறு பாடல்கள் பாடப்பட்டுள்ளன.
ஒவ்வொரு செய்யுளிலும் வெவ்வேறு கற்பனைகளை அமைத்து நானூறு பாடல்கள் இயற்றி அமிர்த கவிராயர் அப்பிரபந்ததை முடித்தார். அதன் இனிமையை அரசரும் அரசரைச் சார்ந்தோரும் புலவர்களும் அறிந்து இன்புற்றனர். சிறந்த நூல்களை அரங்கேற்றுதல் பழைய கால வழக்கம். அரங்கேற்றம் பெரிய திருவிழாவைப்போல நடைபெறும்.அமிர்த கவிராயருடைய பிரபந்தமும் அரங்கேற்றப்பட வேண்டுமென்பது பெரும்பாலானப் புலவர் பெருமக்களுடைய விருப்பமாக இருந்தது. அரசர் அது மிகச் சிறப்பாக நடைபெறுவதற்குரிய காரியங்களைச் செய்யும்படி மந்திரிகளுக்கு உத்தர விட்டார்.
உள்ளூரிலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் பலர் அரங்கேற்ற விழாவிற்கு வந்திருந்தனர். பல கனவான்களும் புலவர்களும் கூடியிருந்த மகாசபையில் ஒருதுறைக் கோவையின் அரங்கேற்றம் தொடங்கப்பட்டது. அரசர் தலைமை ஏற்க ஒவ்வொரு செய்யுளாகக் கூறி அமிர்த கவிராயர் பொருள் சொல்லி வந்தார். ஒவ்வொரு செய்யுளும் ஆனவுடன் அரசர் தங்கத்தால் செய்யப்பெற்ற *பொன் தேங்காய் ஒன்றை (எலுமிச்சம் பழம் எனக் கூறுவதும் உண்டு) புலவருக்குப் பரிசாக உருட்டி வந்தார். சில செய்யுட்கள் ஆயின. மேலே ஒரு செய்யுளைச் சொன்னபோது அனைவரும் அதன் பொருட்சிறப்பில் மனதைப் பறிகொடுத்து விட்டனர். மற்றச் செய்யுட்களைக் காட்டிலும் கவிராயருடைய திறமை அதில் அதிகமாக வெளிப்பட்டது. அதனைக் கூறி முடித்தவுடன் அரசர் வழக்கம் போலவே பொன் தேங்காய் ஒன்றை உருட்டினார். அப்பொழுது அருகில் இருந்த புலவர் ஒருவர், “இச்செய்யுள் மிகவும் அருமையாக, உள்ளத்தைக் கவர்வதாக அமைந்துள்ளது. இதை மகாராஜா அவர்கள் நன்றாக உடைத்துப் பார்த்து இதன் சிறப்பை உணரவேண்டும்” என்றார்.
அதைக் கேட்ட அரசர், “நாம் நன்றாக இதன் சுவையை உணர்ந்தோம். இதற்கு உருட்டியத் தேங்காயை உடைத்துப் பார்த்தால் அது தெரிய வரும்” என்றார். உடனே அந்த தேங்காயை உடைத்துப் பார்த்தார்கள். அதனுள்ளே மாணிக்கப் பரல்கள் இருந்தன. அரசர் வரிசையறிந்து பரிசளிக்கும் திறமையை அனைவரும் அறிந்து வியந்து, மகிழ்ச்சிப் பொங்கப் பாராட்டினர். பிறகு அரங்கேற்றம் இனிது நிறைவேறியது.
இதிலுள்ளப் பல செய்யுட்களில் பொதிந்துள்ளச் சொற்பொருள், நடைநயம் படிப்போரை மகிழ்விக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் உண்டாகாது. மங்கையரின் கண்,அதரம்,மார்பகம் ஆகிய அங்கங்களை உபமான, உபமேயத்துடன் விளக்கியும், மங்கையரின் கஜகர்ண, கோகர்ண சாகசங்களைக் கேட்போர், படிப்போர் உள்ளத்தைக் கிறங்கடிக்கும் விதமாக நயம்பட வர்ணித்துச் செல்கிறார்.
“கண்மூடி யோகியர் போலநின் றீரிக் கருத்தினுக்கு
விண்மூடிய வரைக் கைவிடி லேதம் விளைவிக்குமே!” (27),
இதில் முதல் வரி நாணிக் கண் புதைத்தலையும், இரண்டாம் வரி, மார்பகம் வெளிப்பட்டதையும், மூன்றாம் வரி, தலைவனுக்குத் துன்பம் விளைவிப்பதையும் சுட்டுகிறது. நாணத்துடன் கண் புதைத்து நிற்கும் தலைவியை நோக்கி ஏக்கமுடன் வினவுகிறான் தலைவன் என்கிறார் கவி.
“தோளும் கரும்பும் எனது ஆருயிர் வந்து சூறை கொள்ள, நீளும் கணை கொண்டு நின்றால் எவ்வாறு உயிர் நிற்கின்றதே!” (70).
இதில், தோள்= மார்பகத்தையும், கரும்பு=இதழ், மன்மதன் வில், கணை=கண். ‘உனது ஸ்தனம், மன்மதனின் கரும்பு வில் போன்ற இதழ் இரண்டும் என் மனதைப் பறிக்க இருக்கையில் நீ கண் பொத்தி நின்றால் நான் உயிர் வாழ்வது எப்படி?’ என்றும் மருகுகிறான். பின்னொரு இடத்தில்,
மஞ்சாங் கருதிலர் போர்ப்படை மேற்சண்ட மாருதம்போல்
விஞ்சாங்க மூல பலரகு நாதன் வியன்சிலம்பிற்
பஞ்சாங்க மோதி மறைகாட்டிச் சொர்க்கமிப் பாற்படுத்தி
யஞ்சாங் குலத்தவர் பார்ப்பாரைச் சேர்ந்த ததிசயமே (138)
இப்பாடலில் “அஞ்சாங் குலத்தவர் பார்ப்பாரை சேர்ந்த அதிசயமே” என்று இறுதிப் பாடல் அடி வருகிறது. இதில் அஞ்சாங்குலம் என்பது கையையும் (அங்குலம்=விரல், ஐந்து விரல்கள் கொண்டது) ஆறாம் குலம் (ஆறறிவில் ஒன்று=பார்த்தல்) என்பது கண்ணையும் குறிக்கும். பார்ப்பார் கண் வழியே என்பதால் அச்சொல் கண்களைக் குறிப்பதாக அமைந்துள்ளது. கைகளால் கண்களைப் பொத்திக் கொண்டஅதிசயத்தைப் பாரீர் என்கிறான் நாயகன்!
மேலும்,”பஞ்சாங்கம் ஓதி” என்றால் ஐவகை மயிர்முடியை உடையாளே என்பதாகும். ஓதி=தலை முடி. வணர் ஒலி ஐம்பாலர் =வளைந்த தழைத்த ஐவகை முடி பகுப்பினை உடைய பெண்கள் என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. அதாவது ஒரு பெண் தன் கூந்தலை,முடி, கொண்டை, குழல், சுருள், பனிச்சை என ஐந்து வகைகளாக முடியிடுகிறாள்.
மலையின் உச்சிப்பகுதியை முடி என்கிறோம். அதுபோல ஒரு பெண் தன் கூந்தலை மலையின் முடியைப்போலத் தன் தலையுச்சியில் வைத்து முடிவது முடி (அளகம்) எனப்படும்.(இளவரசி குந்தவை பிராட்டி) கொண்டை என்பது நமக்குத் தெரியும். கூந்தலைச் சுருட்டி இடப்பக்கமோ வலப்பக்கமோ திரளாகத் தொகுத்துக்கொள்வது (ஆண்டாள் நாச்சியார்). கூந்தலை மலர்ச்சரங்களோடு வைத்துப் பின்னிச் செருகினால் அதற்குச் சுருள் என்று பெயர். கூந்தலை அள்ளி முடிந்தால் அதற்குக் குழல் என்று பெயர். கூந்தலைச் சடையாகப் பின்னிக்கொண்டால் அதற்குப் பெயர் பனிச்சை. இத்தகைய ஐவகைக் கூந்தல் முடிமுறைகளையும் ஐம்பால் என்கின்றனர். அதுதான் இங்குக் குறிப்பிடப்படுகிறது.
ஓர் ஊசி மேல் (சிறுத்த இடை), இரண்டு பம்பரங்களை (கொங்கை) உறுதியாய் இருத்துகின்ற உபாயம்(169), மார்பகத்தை யானைக்கு ஒப்பிட்டு கஜகர்ண வித்தை கண்டு மகிழ்ந்தோம், கண்களைப் புதைத்துக் கொண்டால் பெண்களுக்கே உரிய கண்ணால் (கோ=கண்)சேதி சொல்லும் கோகர்ண வித்தையின் அழகை எப்படிப் பார்ப்பது?(170), ‘பந்தாடல் கண்டன மம்மானை யாடலும் பார்க்க’ (133) என்ற வரியில், பந்தாட்டத்தின் போது அவள் ஸ்தனங்களின் அசைதலைக் கண்டு களித்தோம், அம்மானை ஆடல் (அ+மான்+ஐ+ஆடல்) விளையாடுகையில் மங்கையின் அழகியக் கண்கள் போகும் போக்கு, கவர்ச்சிகர சரீர அசைவுகளையும் பார்த்து ரசிக்க,கண்மூடி யிராமல் அனுமதிப்பாயா,தேவி! என வேண்டுகோள் விடுக்கிறானாம் தலைவன். இங்கு மான்= பெண், கண் என்று இரு பொருள் கொண்டுச் சொல்லப்படுகிறது.
இது போன்ற மனதைக் கவரும் அடைமொழிகள் (EPITHETS) ஏராளமாய்க் குவிந்துக் கிடக்கின்றன.
மேலும் சில சுவாரசியமானச் செய்யுட்களை அடுத்துக் காண்போம்……
——————————————————————–
tags- நாணிக் கண் புதைத்தல், இரகுநாத சேதுபதி, கோவை இலக்கியம், அமிர்த கவிராயர்