Written by London swaminathan
Date: 18 APRIL 2017
Time uploaded in London:- 8-54 am
Post No. 3829
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
நம்மை யராவது புகழ்ந்தால் உச்சி குளிர்ந்து, தலை நிமிர்ந்து, யாராவது மாலை போட வரமாட்டர்களா, பொன்னாடை போர்த்த எத்தனை பேர் காத்திருக்கிறார்கள் என்று காத்திருப்போம். ஆனால் அறிஞர்களையோ, நல்லோர்களையோ புகழ்ந்தால் அவர்கள் வெட்கப்பட்டு, கன்னம் சிவந்து, தலை குனிந்து பணிவுடன் இருப்பார்களாம். அவர் குனியக் குனிய அவருடைய புகழ் உயர்ந்து கொண்டே போகிறதாம் இவை எல்லாம் காளிதாசனும் வள்ளுவனும் கண்ட உண்மைகள். இதோ வள்ளுவன் வாய்மொழி:-
அணி அன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணி அன்றோ பீடு நடை – குறள் 1014
பொருள்:-
சான்றோர்க்கு நாணம் என்பது ஒரு ஆபரணமாகும். அப்படி நாணுடைமை இன்றி ஒருவர் பெருமையுடன் நடக்கும் நடை அவரைப் பிடித்த நோய்தானே?
இதற்கு உரைகண்ட பரிமேல் அழகர் ஒரு அழகான சம்ஸ்கிருதப் பொன்மொழியை மேற்கோள் காட்டுவார்:-
‘குணாட்யஸ்ய சதஹ பும்சஹ ஸ்துதௌ லஜ்ஜைவ பூஷணம்’
பொருள்:-
குணம் மிக்க நன்மகனுக்கு புகழப்படுங்கால் வெட்கமுறுதலே அணியாகும்.
வள்ளுவன் சொல்லும் மேலும் இரண்டு குறள்களும் இவ்விடத்திலே சாலப் பொருந்தும்:-
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு (1012)
பொருள்:-
உணவு, உடை முதலியவை எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானவை ஆனால் நாணம் என்பது மக்களுக்கே உரித்தான சிறந்த பண்பு.
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன் ஞாலம்
பேணலர் மேலாயவர் (1016)
மேன்மக்களுக்கு நாணமே வேலி; அதுவின்றி இந்தப் பெரிய உலகத்தில் வாழ விரும்ப மாட்டார்கள்.
‘உயிரினும் சிறந்தன்று நாணே’ என்று தொல்காப்பியரும் செப்புவார்.
காளிதாசன் சொல்வது
உலகப் புகழ் கவிஞன் காளிதாசன் , அவனது ரகு வம்ச காவியத்தில் மூன்று இடங்களில் மூன்று மன்னர்களைப் புகழ்ந்த போது வெட்கமுற்றதை எடுத்துக் காட்டுகிறான். இது அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும், , படித்துப் பின்பற்ற வேண்டிய ஒரு பண்பு.
`स्तूयमानः स जिह्राय स्तुत्यमेव समाचरन्।
तथापि ववृधे तस्य तत्कारिद्वेषिणो यशः॥ १७-७३
stūyamānaḥ sa jihrāya stutyameva samācaran |
tathāpi vavṛdhe tasya tatkāridveṣiṇo yaśaḥ|| 17-73
“போற்றத்தக்க காரியங்களையே அதிதி (என்ற மன்னன்) செய்தான். அதனால் அவனைப் புகழ்ந்தனர் அவன் அதைக் கேட்டு வெட்கம் (நாணம்) அடைந்தான். புகழை அவன் வெறுக்க வெறுக்க, அவன் புகழ் வளர்ந்து கொண்டே போனது”- (ரகு 17-73)
तस्य संस्तूयमानस्य चरितार्थैस्तपस्विभिः।
शुशुभे विक्रमोदग्रम् व्रीडयावनतम् शिरः॥ १५-२७
tasya saṁstūyamānasya caritārthaistapasvibhiḥ |
śuśubhe vikramodagram vrīḍayāvanatam śiraḥ|| 15-27
“தங்கள் மனோரதம் நிறைவேறியதால் முனிவர்கள், மன்னன் சத்ருக்னனைப் புகழ்ந்தனர். அவனுடைய வீரத்தால் அவன் தலை நிமிர்ந்து இருக்க வேண்டும். ஆனால் அவனோ தன் புகழ்ச்சியைக் கேட்டு வெட்கம் அடைந்து தலையைக் குனிந்து கொண்டான்”- (ரகு 15-27)
तस्याभवत्सूनुरुदारशीलः शिलः
शिलापट्टविशालवक्षाः।
जितारिपक्षोऽपि शिलीमुखैर्यः
शालीनतामव्रजदीड्यमानः॥ १८-१७
tasyābhavatsūnurudāraśīlaḥ śilaḥ
śilāpaṭṭaviśālavakṣāḥ |
jitāripakṣo’pi śilīmukhairyaḥ
śālīnatāmavrajadīḍyamānaḥ || 18-17
“அந்தப் பாரியாத்ரனுக்கு அகன்ற மார்பையும், பரந்த நோக்கத்தையும் உடைய சீலன் என்ற மகன் பிறந்தான். பகைவர்களை தோல்வி அடையச் செய்து அவன் வெற்றி அடைந்ததை மற்றவர்கள் புகழ்ந்தார்கள். அவன் அதைக் கேட்டு நாணினான்”-ரகு 18-17
வள்ளுவன் பத்து குறள்களிலும் காளிதாசன் மூன்று பாடல்களிலும் நவின்ற நாணுடைமை அருகிக்கொண்டே வருவது வருத்ததிற்குரியது.
பெண்களுக்கு அணி (ஆபரணம்) போன்ற இந்த அருங்குணத்தை மேலை நாட்டுப் பெண்களிடம் இப்போது காண்பது அரிது. லண்டனில் ரயில்களிலும் கூட, பெரும் கூட்டத்துக்கு இடையே, ஆண்கள் புடை சூழ அமர்ந்து கொண்டு, ‘மேக் -அப்’ செட்டை வைத்துக்கொண்டு வர்ணப்பூச்சுகளைப் பெண்கள் பூசிக்கொள்வதை நான் தினமும் காண்கிறேன்!
–Subham–