இசை தரும் நோயற்ற வாழ்வு!– Part 4

music chart

ச.நாகராஜன்

 

கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழ மன்னனின் அரண்மனையில் தேவ கானத்தை ஒரு பெண்ணும் மானுட கானத்தை ஒரு பெண்ணும் இசைத்தனர். மன்னன் மானுட கானம் பாடிய பெண்ணைப் போற்றிப் பரிசளித்தான். இதனால் மன வருத்தமுற்ற தேவ கானப் பெண் அரண்மனையிலிருந்து வெளியேறி கோவில் தோறும் தன் தேவ கானத்தை இசைக்கலானாள். ஒரு முறை இதைக் கேட்ட நாதமுனிகள் உள்ளம் பரவசமாகி அதைப் பாராட்டினார். மன்னன் அவரைத் தன் அரண்மனைக்கு அழைத்து தேவ கானமே சிறந்தது என்று கூறிய அவரது இசைத் திறமையை நிரூபிக்க வேண்டினான். நாதமுனிகள் பல்வேறு எடையுள்ள கற்களைச் செய்யப் பணித்தார். அவற்றிலிருந்து ஒசையை எழுப்புமாறு கூறினார். ஒசைகள் ஒவ்வொரு கல்லிலிருந்தும் எழுந்த உடனேயே அந்தக் கல்லின் எடையை நுட்பமாகச் சரியாகக் கூறினார். இதை நேரில் கண்ட மன்னன் பெரிதும் வியந்து நாத முனிகளின் இசை நுகரும் திறமையை வெகுவாகப் போற்றி அவரைப் பணிந்தான். அவர் கூறிய படியே தேவ கானத்தையே உயரிய கானமாக ஒப்புக் கொண்டான்.தேவ கானம் பாடிய  பெண்ணிற்கு உரிய மரியாதையையும் செலுத்தினான்.

 

 

அறிவியலின் முக்கிய பிரிவான கணிதத்திற்கும் இசைக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. கணிதம் இல்லாமல் இசை இல்லை!

கிரேக்க நாகரிகத்தில் பிதகோரஸ் தான் கணிதத்திற்கும் இசைக்கும் உள்ள தொடர்பை முதலில் கண்டவர். உடனே அவர் இசையையும் கணிதத்தையும் ஒருங்கிணைத்தார்.பிதகோரஸ் கமா (Phythaoral Comma)

பற்றிய அதிசயச் செய்திகளை விரிவாகப் படித்தால் பிரமிப்பே ஏற்படும்.

பிதகோரஸின் பெரும் வருடம் என அழைக்கப்படும் தி பிதகோரியன் க்ரேட் இயர் 25920 வருடங்களைக் கொண்டது. இதற்கும் 25524 நோட்ஸ்

கொண்ட சுழற்சிக்கும் உள்ள தொடர்பை ‘தி காஸ்மிக் ஆக்டேவ்’ என்ற தனது நூலில் குஸ்டோ என்னும் பேரறிஞர் விளக்குகிறார்.

 

 

Musicians, Halabedu

Picture shows musicians in Halabedu, Karnataka.

வானில் உள்ள ஒவ்வொரு ராசி வழியாகவும் வெர்னல் ஈக்வினாக்ஸ் (vernal equinox) எனப்படும் இளவேனில் புள்ளி (இராப்பகல் சமநாள் வருவது) பயணிக்க ஆகும் காலம் சராசரியாக 2160 வருடங்கள் ஆகும். 12 ராசிகளின் வழியே பயணிக்க ஆகும் மொத்தக் காலம் 25920  வருடங்கள்.வானில் உள்ள தெய்வீக இசைக்கும் ஒலியை உணரும் மனிதக் காதுகளுக்கும் உள்ள நுட்பமான தொடர்பை கிரேக்கர்கள் தெரிந்து வைத்திருந்ததோடு 25524 நோட்ஸுகளுடன் அவற்றுக்குள்ள தொடர்பையும் அறிந்திருந்தனர். வான இசையையும் மனித இசையையும் லயப்படுத்திய அவர்களின் அற்புத ஆற்றலை  குஸ்டோ விரிவாக விளக்குவதை காஸ்மிக் ஆக்டேவ் நூலில் படித்து மகிழலாம்.

 

 

தூங்கிக் கிடந்த  தேசங்களை எழ வைத்தவை கீதங்களே! இந்திய நாட்டை பங்கிம் சந்திரரின் வந்தே மாதரம் கீதம் அசைத்து எழுப்பியது. எங்கு பார்த்தாலும் வந்தே மாதரம் கீதம் இசைக்கப்பட்டு தேசத்திற்கே ஒரு புதுத் தெம்பைத் தந்தது. அதன் வலிமையை உணர்ந்த மகாகவி பாரதியார் அதன் பெருமையை வெளிப்படுத்தும் பல பாடல்களை இயற்றியதோடு வந்தே மாதரம் கீதத்தையே இரு முறை தமிழில் மொழி பெயர்த்தார். சுதந்திரப் போராட்ட வீர்ர்களின் சுதந்திர உணர்வின் கீதமான வந்தேமாதரத்திற்கு பயந்த ஆங்கில அரசு அதை இசைக்கக்  கூடாது என்று தடை போட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இந்த கீதத்திற்குத் தனி இடம் உண்டு.மகாகவி பாரதியாரின் தேசீயப் பாடல்களும் சுதந்திர வேள்வியில் தமிழர்கள் தம்மை ஆகுதியாக அர்ப்பணிக்க வைக்கப் பெரும் காரணமாக அமைந்தவை!

 

 

ram in dream

Picture shows great composer Saint Thyagaraja.

 

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு எதிரான அமெரிக்க சுதந்திரப் போரில் இசை கீதங்களே முக்கியப் பங்கு வகித்தன. தி ஃப்ரீடம் சாங் என்ற பாடலை ஜான் டிக்கின்ஸன் 1768ஆம் ஆண்டு இயற்றினார். அதுவே அமெரிக்கர்களின் சுதந்திர எழுச்சிக்குக் காரணமாக அமைந்தது. பின்னர் “யாங்கி டூடில்” என்ற பாடல் அவர்கள் தோல்வியுற்ற போது எழுச்சி பெறச் செய்தது. கடைசியில் இறுதி வெற்றி அடைந்த போது வெற்றி கீதமாகவும் இசைக்கப்பட்டது.

 

சீனர்களோவெனில் சமுதாயத்தை ஒரு கட்டுக்கோப்பாக லயத்துடன் இயங்க வைக்க வல்லது இசை ஒன்றே தான் என்று மனமார நம்பினர்.இசையின் மீது ஆர்வம் குறைந்தது என்றால் அது பண்பாடு அழிவதற்கான ஆரம்ப அறிகுறி என்பது அவர்கள் கொள்கை!

 

 

வென் என்ற  பிரபல இசை அறிஞர் தன் கருவியுடன் அவரது குருவான ஹூசியாங்குடன் மூன்று வருட காலம் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர் கருவியின் நரம்பிலிருந்து ஒரு ஒலியும் எழும்பவில்லை.பொறுமை இழந்த குரு வென்னை நோக்கி”போதும் நீ இசை கற்ற லட்சணம். வீட்டுக்குப் போ” என்று ஆணையிட்டார். பெருமூச்சு விட்ட வென்.”என்னால் கருவியை மீட்ட முடியாது என்பதில்லை. இசை என் இதயத்தின் ஆழத்திலிருந்து வரவேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.சிறிது காலம் அவகாசம் தாருங்கள். பிறகு என்னை சோதியுங்கள்” என்று பணிவாகக் கூறினார்.

 

 

சிறிது காலம் சென்றது. வென் குருவிடம் வந்தார். “என்ன ஆயிற்று உன் இசை” என்றார் குரு.அது அற்புதமான இளவேனில் காலம்.வேன் தன் கருவியை எடுத்து ஷாங் நரம்பை மீட்டலானார்.என்ன ஆச்சரியம். திடீரென இளவேனில் காலம் முடிந்து இலையுதிர் காலம் தோன்ற ஆரம்பித்தது! இலைகள் அனைத்தும் மரங்களிலிருந்து உதிர்ந்தன.அடுத்து சியோ என்ற நரம்பை இசைத்தார்.அற்புதமான தென்றல் காற்று எழுந்தது. அருகிலிருந்த மரங்கள் ஆடின. செடிகள் பூத்துக் குலுங்கின. மரங்களில்  பழங்கள் தோன்ற ஆரம்பித்தன. என்ன ஆச்சரியம்! கோடைகாலம் ஆரம்பித்தது. வென் அடுத்து யூ நரம்பை மீட்ட ஆரம்பித்தார். குளிர் காலம் தோன்றி பனித்துளிகள் விழ ஆரம்பித்தன.வென் தன் இசையைத் தொடர்ந்தார். சிப் என்ற நரம்பை மீட்டலானார். சூரியன் உதயமாகி பனித்துளிகள் உருக ஆரம்பித்தன.கடைசியாக குங் என்ற நரம்பை இதர நரம்புகளுடன்   ஒருசேர இசைத்தவுடன் வானில் மேகங்கள் குழுமின. இனிய துளிகள் விழுந்து ஜல பிரவாகம் பொங்கியது. அனைத்துப் பருவ காலங்களையும்  மாறி மாறி இசை மூலம் அவர் காட்டியவுடன் குரு ஆச்சரியப்பட்டு அவரை நன்கு ஆசீர்வதித்தார்.

 

 

 

இனி இசையை நுணுக்கமாக அறிவியல் ரீதியில் ஆராய்ச்சி செய்த அறிஞர்களையும் ராகங்களின் வலிமையையும் மெல்லிசைப் பாடல்களில் அவை பெற்றிருக்கும் இடத்தையும் பார்ப்போம்.

 

பாக்யா 28-9-2012 இதழில் 84ஆம் அத்தியாயமாக வெளியாகிய இசை தரும் நோயற்ற வாழ்வு கட்டுரையின் நான்காம் பகுதியை மகிழ்வுடன் அளிக்கிறோம் – contd in fifth part; written by S Nagarajan

 

  இதற்கு முன் இதே பிளாக்.கில் வெளியான இசை பற்றிய கட்டுரைகள் written by Santanam Swaminathan

1.இசைத் தமிழ் அதிசயங்கள்

2.சங்கீத ரகசியம்: இளமையில் கல்

3.மழை அற்புதங்கள்

4.தியகராஜருடன் 60 வினாடி பேட்டி