மாணிக்கவாசகரின் உண்மைப் பெயர் என்ன? (Post No. 3475)

Written by London swaminathan

 

Date: 23 December 2016

 

Time uploaded in London:- 8-27 AM

 

Post No.3475

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

மாணிக்கவாசகர் வாழ்க்கை வரலாற்றில் எல்லாம் ஒரே மர்மம்தான். அவர் வாழ்ந்த காலம் என்ன? ஒரே புதிர்! இருந்தபோதிலும் அப்பர் நரி-பரி ஆன லீலையைக் குறிப்பிடுவதால் சம்பந்தருக்கும் அப்பருக்கும் முன்னர் வாழ்ந்தவர் என்று தெரிகிறது. (நான் சில ஆண்டுகளுக்கு முன் இதே பிளாக்கில் எழுதிய எனது ஆய்வுக் கட்டுரையில் மேலும் பல சான்றுகளைக் கொடுத்துள்ளேன்).

 

 

அது சரி! அப்படியானால் இவர் ஏன் அப்பரையும் சம்பந்தரையும் குறிப்பிடவில்லை. அவர்கள் ஏன் இவர் பெயரைச் சொல்லவில்லை? ஒரே மர்மம்

 

அது போகட்டும்? இவரை 63 நாயன்மார்களில் சேர்க்காதது ஏன்? ஒரே புதிர்! திருத் தொண்டத்தொகையிலும் பாடவில்லை ( ஆனால் நான் இவர் பெயர் சத்ய வாகீஸ்வரர் என்று கண்டுபிடித்துள்ளேன்; அதை பொய்யடிமை இலாத புலவர் என்று திருத்தொண்டத் தொகையும் குறிப்பிடும்)

 

எனினும் எல்லோரும் அவர் பெயரை எங்குமே சொல்லாமல் திருவாதவூரர் என்றும் இறைவன் கொடுத்த மாணிக்க வாசகர் என்ற பெயரையுமே பயன்படுத்துகின்றனர். அப்பா, அம்மா வைத்த பெயர் என்ன என்பது எழுத்தில் எங்ஙனும் இல்லை. மதுரைக்குப் பக்கத்தில் இருக்கும் திருவாதவூரில் பிறந்ததால் ஊர்ப்பெயரே இவருக்குச் சூட்டப்பட்டது.

 

 

சரி, பெயர்தான் தெரியவில்லை. சத்யவாகீஸ்வரன் என்பதெல்லாம் ஊகமே. கடவுள் ஏன் இவரை “மாணிக்க வாசக” என்று அழைத்தார்?

 

இவர் பாடிய 656 பாடல்களில், 3000 வரிகளுக்கு மேலுள்ள திருவாசகத்தில் அருமையான சொற்பிரயோகம் இருப்பதை தமிழ் ஆர்வலர் எல்லோரும் ரசிப்பர். ஒரு சில சொற்களை மட்டும் காண்போம்.

 

இரும்பின் பாவை

நம் எல்லோருக்கும் மரப்பாவை (மரப்பாச்சி), மண் பொம்மைகள் (சுதை) தெரியும். பார்த்து இருக்கிறோம். பஞ்சலோக விக்ரஹம் எனப்படும் ஐம்பொன் சிலைகளும் தெரியும். பாவை விளக்கு போன்ற பித்தளை பொம்மைகளையும் பார்த்து இருக்கிறோம். இவரோ தன்னை “இரும்பின் பாவை” என்று சொல்லுகிறார். யாருக்கும் இல்லாத ஒரு கற்பனை! இதற்கு உரை எழுதிய ஆன்றோர், இறைவன் காந்தம் என்றும் அவரால் இவர் கவர்ந்திழுக்கப்பட்டதால் இரும்பின் பாவை என்றும் சொல்லுகிறார் என்பர். மிகப் பெருத்தமகவே தோன்றுகிறது. ஏனெனில் இரும்பு-காந்த உவமையை காளிதாசன், திருமூலர், ஆதிசங்கரர் போன்ற பலரும் பயனன்படுத்தியுள்ளனர்.

 

 

வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று

போதுநான் வினைக்கேடன் என்பாய் போல

இனையனானென்றுன்னை யறிவித்தென்னை

ஆட்கொண்டெம்பிரானாய் இரும்பின் பாவை

அனைய நான் பாடேனின் றாடே நந்தோ

அலறிடேன், உலறிடேன் ஆவி சோரேன்

முனைவனே முறையோ நானானவாறு

முடிவறியேன் முதல் அந்தம் ஆயினானே

 

பொருள்:

கடவுளே! தோற்றம், இறுதிக்குக் காரணமானவனே! இருவினைக் குவியலில் கிடந்து வருந்தும் என்னை வலிய ஆட்கொண்டு, ” வா, உன் வினைகளை ஒழிப்பேன் என்று கூறுவது போல சொல்லி என்னை அடிமையாக ஏற்றாய்.  நானோ இரும்பின் பாவை போல இருக்கிறேன். உன்னைப் பாடவில்லை; ஆடவில்லை; வாய் உலரவில்லை;  உயிர் மயங்கவில்லை. நான் இப்படி இருப்பது முறையா? இதன் முடிவை அடியேன் அறிகின்றேன். இல்லை

 

பொல்லாமணி

புகவேதகேன் உனக்கன்பருள்

யானென் பொல்லா மணியே

தவே யெனை யுனக் காட்கொண்ட

தன்மையெப்புன்மையரை

மிகவேயுயர்த்திவிண் நோரைப்

பணித்தியண்ணாவமுதே

நகவேதகும் எம்பிரான் என்னை

நீ செய்த நாடகமே

–திருச்சதகம் பாடல் 10, திருவாசகம்

பொருள்:

என் முழு மாணிக்கமே! யான் உன் அடியார் கூட்டத்தில் புகவே தகுதி இல்லாதவன். அங்கனம் இருந்தும் என்னை ஏற்றுக் கொண்டாய்? இது உனக்கு பெருமை தருமா? எவ்வளவு இழிந்தவரானாலும் அவர்களை  மிகவும் உயரச் செய்கிறாய். உயர்ந்த தேவர்களைத் தாழ்த்துகிறாய். தந்தையே! அமுதமே! எம்பிரானே! நீ செய்த நாடகம் தான் என்ன? இது நகைப்புக்கு இடம் தருகிறதே!

 

இதில் பொல்லாமணி என்ற சொல் மிகவும் முக்கியமானது. பொள்ளல் என்றால் துளைபோடுதல் என்று பெயர். முத்து, பவளம் போன்ற நவரத்னங்களை மாலையாகக் கட்டுகையில் அதில் துளைபோட்டுக் கோர்க்கமுடியும். ஆனால் வைரம், மாணிக்கம், மரகதம் போன்ற உயர்ந்த ரத்னக் கற்களைத் துளையிட முடியாது; அதாவது பொள்ள முடியாது. ஆகையால் இறைவா நீ ஒரு முழு மாணிக்கம். (இதைத் தங்கத்துக்கிடையே வைத்துதான் மாலை கட்டலாமே தவிர ஓட்டை போட முடியாது. ஆகையால் பொல்லா மணியே என்றழைக்கிறார்.)

 

நான்கு முறை ஓம்காரம்!

 

போற்றியோ நமச்சிவாய

புயங்கனே மயங்குகின்றேன்

போற்றியோ நமச்சிவாய

புகலிடம் பிறிதொன்றில்லை

போற்றியோ நமச்சிவாய

புறமெனப் போக்கல் கண்டாய்

போற்றியோ நமச்சிவாய

சயசய போற்றி போற்றி

—–திருச்சதகம் பாடல் 64, திருவாசகம்

 

பொருள்:-

ஓம் நமச்சிவாய போற்றி. பாம்பை அணிந்தவனே மயங்குகின்றேன். ஓம் நமச்சிவாய போற்றி. அடைக்கலம் புகுவதற்கு வேறு வழியொன்றும் இல்லை. ஓம் நமச்சிவாய போற்றி. அடியேனைப் புறத்தே தள்ளிவிடாதே; ஓம் நமச்சிவாய போற்றி. ஜய ஜய போற்றி

 

இதில் ஓம் நமச்சிவாய என்ற பிரணவ பஞ்சாக்ஷரம் நான்கு முறை வந்திருத்தல் காண்க.

 

வேதங்களைப் போலவே ஓம்காரத்துடன் துவங்கி அதிலேயே முடிக்க வேண்டும் என்று கருதி திருவாசகத்தில் முதல்பாட்டையும் (சிவ புராணம்), கடைசி பாட்டையும் (அச்சோ பதிகம்) ஓம்காரத்துடன் அமை த்துள்ளார் என்பதை முன்னரே ஓம்காரம் பற்றிய கட்டுரையில் கொடுத்துள்ளேன்.

 

இது போல இன்னும் நிறைய சொற்கள் உள்ளன. நேரம் கிடைத்தபோது பகிர்வேன்.

 

–சுபம்—