பாரதி நான் கண்டதும் கேட்டதும்:பி.ஸ்ரீ.

ப்ஹரடி2

எழுதியவர்:–  ச.நாகராஜன்

Date: 10 November 2015

Post No:2316

Time uploaded in London :– காலை- 4-56

( Thanks for the Pictures  ) 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

பாரதி இயல்

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்! – 11

ச.நாகராஜன்

பாரதி நான் கண்டதும் கேட்டதும்

பாரதியைச் சந்திக்கும் பேறு பெற்றவர்களின் ஒருவரான பி.ஶ்ரீ எழுதிய நூல் இது. 195ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் பதிப்பாக வெளி வந்த இந்த நூல் பின்னர் தொடர்ந்து 1963, 1966 என மேலும் பதிப்புகளைக் கண்ட சுவையான நூல்.

பி.ஶ்ரீ பற்றி அறியாத தமிழர்கள் இருக்க மாட்டார்கள். கவிதைச் சுவையை ரஸித்து ரஸித்து அனுபவிப்பவர். மற்றவரை அனுபவிக்கச் செய்பவர்.

முத்தான பத்து அத்தியாயங்கள்

இந்த நூலில் உள்ள அத்தியாயங்கள்:- கவிஞர் திரும்பினார், இதுவோ தமிழ், பாரதியின் நாட்டுப் பற்று, பாரதியாரின் தோழர்களுடன், கடைச் சங்கத்தில் புரட்சிக் கவிஞர், விருந்தும் மறு விருந்தும், பாரதியாரும் டாக்டர் நண்பரும், ஒரு நாளும் இல்லாத திருநாள், பாரதி சித்தாந்தம், மனம் வெளுக்கும் சாணை ஆகிய அருமையான பத்து அத்தியாயங்களை 116 பக்கங்களில் தருகிறது இந்த நூல்.

பாரதியார் பாடும் விதம்

முதல் கட்டுரையில் பாரதி பாடும் விதத்தை பி.ஶ்ரீ குறிப்பிடுகிறார் இப்படி: “இவர் பாட ஆரம்பித்து விட்டால் ஒரே வியப்பு – உணர்ச்சி மேலிட்டு நிற்கும். பாடப் பாட வசீகர சக்தி அதிகரித்துக் கொண்டே போகும். பராசக்தி வீர முரசு கொட்டிக் கோழைகளுக்குத் தைரியத்தை ஊட்டுவது போலவும், தரும முரசு கொட்டி அதருமத்தை வீழ்த்துவது போலவும் தோன்றும். பொதுவாகப் பாரதியாரின் தேசீய கீதங்களையெல்லாம் ஒரு வகையில் ’முரசுப் பாட;ல்கள்’ என்றே குறிப்பிடலாம்.

அடுத்த கட்டுரையில் அவர் பாரதியாரின் தமிழ் பற்றி ‘இதுவோ தமிழ்’ என வியக்கிறார். அவரது சொற்களைப் பார்ப்போம்: “பால கங்காதர திலகர், விபின சந்திரபாலர், லாலா லஜபதிராய் ஆகிய மூவரையும் தேசீய மும்மூர்த்திகளாகத் தமிழ் இளைருலகத்திற்குக் காட்டியவர் பாரதியார். லஜபதி ராய் ‘நாடு கடத்தப்பட்ட’தும் அது குறித்துப் பாரதியார் பாடிய பாட்டை ஒரு மாணாக்கன் இசையோடு உருக்கமாய்ப் பாடக் கேட்ட பின், ‘இதுவோ தமிழ்’ என்று வியந்து போனேன்.

தோழருடன் பாரதியார்

‘பாரதியாரின் தோழர்களுடன்’ என்ற கட்டுரையில் பி.ஶ்ரீ வையாபுரி பிள்ளையின் அனுபவத்தைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

‘என் குருநாதர் பாரதியார்’ என்ற நூலின் பதிப்புரையில் வையாபுரிப் பிள்ளை பின்வருமாறு கூறுகிறார்… பேசிக் கொண்டிருக்கும்போதே ஒரு சிறு சம்பவம் நிகழ்ந்தது. பாரதியாருக்குத் தாகம் அதிகமாயிருக்கிறதென்பதைக் குறிப்பால் உணர்ந்தேன். உடனே ‘ஐஸ்’ இட்டு ஆரஞ்சு நீர் கொண்டு வரும்படியாக ஒருவனை அனுப்பினேன். இதைத் தெரிந்து கொண்டு, ‘தண்ணீர் போதுமானது’ என்று அவர் கூறினார். அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் அந்தணர்கள் அல்லரென்று சொன்னேன். பாரதி கண்ணில் தோன்றிய ஓர் அபூர்வமான ஒளி என்னை வாட்டிற்று. தாம் அவ்வாறான சாதி வேறுபாடுகளைக் பாராட்டுவதில்லையென்று சிறிது கடுமையாக எனக்குத் தெரிவித்தார்.

‘பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே’ என்றும் ‘எல்லோரும் ஒன்ரென்னும் காலம் வந்ததே’ என்றும் அவர் தமது சுதந்திரப் பள்ளிற் பாடியுள்ளமை என் நினைவிற்கு வந்தது. முடிவில் நான் கொண்டு வரச் சொன்ன பானத்தையே பருகி நீர் வேட்கையைத் தணித்துக் கொண்டார்.

பாரதியின் சித்தாந்தம்

இன்னொரு நிகழ்ச்சியை ‘பாரதி சித்தாந்தம்’ என்ற கட்டுரையில் பி.ஶ்ரீ விவரிக்கிறார். அதில் முக்கியமான ஒரு பகுதி:-“கவிதை என்றால் என்ன? அதனால் என்ன பயன்?’ என்று ஒரு கேள்வி போட்டார் டாக்டர் சஞ்சீவி. பாரதியார் கேள்விக்குப் பதில் சொல்லாமலே ‘ஜயமுண்டு, பயமில்லை’ என்று பாடத் தொடங்யே, ‘பயனுண்டு பக்தியினாலே’ என்று அனுபல்லவியிலேயே தமது சித்தாந்தத்தை வெளியிடத் தொடங்கி விட்டார்…

இப்படியெல்லாம் நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே பாரதியார் சிற்றுண்டிச் சாலையிலிருந்து திரும்பி வந்தார். வந்ததும், எங்கள் பேச்சை நிறுத்தி விட்டோம். டாக்டர் சஞ்சீவி கவிஞரை நோக்கி, ‘அந்தப் பாட்டை மறுபடியும் கேட்க ஆசைப்படுகிறோம். பாடுவீர்களா?” என்று வெகு வினயமாய்க் கேட்டார். இந்தத் தடவையும் பாரதியார் பாட்டைக் கமாஸிலேயே பாடிக் கொண்டு வந்தார். ஆனால் ஏதோ ஓர் இராணுவ கீதம் பாடுவது போலத் தோன்றியது. ‘இதை’ பாடிக்கொண்டே எங்கேயோ ஏதோ ஒரு போருக்குப் புறப்பட்டுப் போகலாமென்று தோன்றுகிறதே!’ என்றார் டாக்டர் சஞ்சீவி.

‘ஆம்; சோர்வுடன் போர், பயத்துடன் போர், அவநம்பிக்கையுடன் போர்; மூட நம்பிக்கையுடன் போர்; வறுமையுடன் போர்; செல்வச் செருக்குடன் போர்: தீமையுடன் போர் – இப்படி எத்தனையோ போர்களுக்குப் பட்டாளம் திரட்டி நடத்திக் கொண்டு போக வேண்டியிருக்கிறதே, அது தான் என் தொழில்!” என்றார் பாரதியார்.

இப்படி பல சுவையான நிகழ்ச்சிகளை பி.ஶ்ரீ தனக்கே உரித்தான பாணியில் அழகுறச் சொல்கிறார்.

பி.ஶ்ரீ. யார்?

இனி பி.ஶ்ரீயைப் பற்றி சில விவரங்களைப் பார்ப்போம்.

பி.ஶ்ரீயைப் பற்றி பிரபல எழுத்தாளர் தேவன் அவர்கள் பம்பாய் கோரேகான் தமிழ்ச் சங்க மலருக்காக எழுதிய ‘நான் கண்ட பி.ஶ்ரீ.’ என்ற கட்டுரையில் குறிப்பிடுவது (இந்தக் கட்டுரையை, சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கம் 1959ஆம் ஆண்டு நடந்த மாநாட்டை ஒட்டி வெளியிட்ட சிறப்பிதழில் மறு பிரசுரம் செய்தது)

தமிழ் உலகத்திற்குக் கம்பன் கவிதா நயத்தை திராக்ஷா பாகமாக எடுத்துக் கொடுத்தவர் பி.ஶ்ரீ. அவர்கள் எத்தனை முறை கம்பனைத் திரும்பத் திரும்பச் சொன்னாலும் தெவிட்டாத சுவையுள்ளது ராம காதை என்பதை இன்றும் எடுத்துக்காட்டி வருகிறவரும் அவர் தான்…..

கவி பாரதியாருடன் 1918ம் வருஷம் முதல் மூன்றாண்டுகள் நெருங்கிய தொடர்பு கொண்டு வந்தார். பாரதியார், பி.ஶ்ரீ அவர்களின் இல்லத்திற்கு வருவது வழக்கம் என்பதை நான் அவரிடமிருந்தே கேட்டறிந்திருக்கிறேன். தவிர, பாரதியாரின் இளமைப் பருவத் தோழரான வேதநாயகம் பிள்ளை இல்லத்திலும் வேறு பல இடங்களிலும், பாரதியாரே தம் பாடல்களைப் பாடக் கேட்டுக் கேட்டுப் பரவசமாகி இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

எல்லாவற்றிற்கும் மேலாக பி.ஶ்ரீ. தம்மை “தமிழின் ஆயுள் மாணவன்” என்று சொல்லிக் கொள்வதில் மிகுந்த திருப்தியும், பெருமையும் கொள்வார்.”

*

தேர்ந்த ஒரு தமிழ் இலக்கிய ரஸிகர், உலக மகாகவி ஒருவரைப் பற்றி எழுதி இருக்கும் இந்த நூலை பாரதி ஆர்வலர்கள் படிக்க வேண்டும்; தம் இல்லத்தில் உள்ள நூலகத்திலும் சேர்த்துக் கொள்ள வேண்டும்!

*****************