பாணினியில் நான் கண்ட தமிழ் அதிசயங்கள் ! (Post No.8768)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8768

Date uploaded in London – –3 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பாணினியில் நான் கண்ட தமிழ் அதிசயங்கள்

2700 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டு, உலகம் முழுதும் போற்றப்படும் பாணினீயத்தில் தமிழர்கள் மெச்சக் கூடிய பல அதிசய செய்திகள் உள்ளன.

கோழியிலிருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா என்பதை போன்ற ஒரு கேள்வி தமிழில் உண்டு. தொல் காப்பியன் என்பவன் எழுதியதால் அந்தப் புஸ்தகத்துக்கு தொல்காப்பியம் என்ற பெயர் வந்ததா? அல்லது தொன்மையான ஒரு காப்பியத்தைச் செய்ததால் அந்த ஆசிரியருக்கு தொல்காப்பியன் என்ற பெயர் வந்ததா? என்ற ஒரு கேள்வி விவாதிக்கப்படுவதுண்டு. பாணினி ஆசிரியரும் உரைகாரர்களும் தெளிவாகச் சொல்லுகின்றனர். பாணினி எழுதியதால் அந்த நூலுக்கு பாணினீயம் என்று பெயர். அதில் எட்டு அத்தியாயங்கள் இருப்பதால் அதற்கு அஷ்டகம் என்றும் பெயர். ஆகையால் காப்பியக்குடியில் பிறந்த தொல்காப்பியர் என்பவர் எழுதியதால் இந்தப் பெயர் என்பது தெளிவாகிறது.

இப்படித்தான் பெயர் வைக்கவேண்டும் என்று பாணினி ஒரு சூத்திரமும் செய்துவிட்டார்

க்ரிதே க்ரந்தே 4-3-116

2700 ஆண்டுகளுக்கு முன்னர் புஸ்தகம்/கிரந்தம் இருந்ததற்கும் இது ஒரு சான்று பாணினி காலத்திலேயே பல புகழ்மிகு புஸ்தகங்கள் இருந்தன.

வரருசி எழுதிய ஸ்லோகங்கள் தொகுப்பு ‘வாரருசா ஸ்லோகாஹா’ ;

சுபத்ராவின் கதை –‘செளபத்ரா’ ;

யயாதியின் கதை –‘யாயாத’

கண்ணன் என்னும் குழந்தையின் அழு குரல் – ‘சிசுகண்டீய’

யமன் சபை பற்றிய கதை – ‘யம ஸபீய’

இந்திரனின் பிறப்பு பற்றிய கதை- ‘இந்திர ஜனநீய’

நூலின் ஆசிரியர் பெயரில் அமைந்தவை , நூல் சொல்லும் விஷயம் பெயரில் அமைந்தவை, நூலின் அத்தியாயம்/அளவின்  பெயரில் அமைந்தவை என்று நீண்ட பட்டியல் தருகிறார்

காண்க 4-3-68 முதல் 4-3-72 வரை .

காசியில் எழுதப்பட்ட நூல் – காசிகா ; இது மிகவும் புகழ்பெற்ற உரை.

XXXXX

ஐங்குறு நூறு , பதிற்றுப்பத்து , நாலடியார், திருக்குறள்

எட்டு அத்தியாயம் இருப்பதால் பாணினி நூலை அஷ்டகம் என்று அழைத்ததை அவருக்குப்பின்னர் வந்த உரைகாரர்கள் கூறினர். தமிழிலும் பதிகம் (10), சதகம் (100) என்பதை நூல் பெயர்களில் காண்கிறோம். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சங்க காலத்திலேயே ஐங்குறு நூறு (5×100) , பதிற்றுப்பத்து (10X10) என்று எண்களின் பெயரில் நூல் செய்தனர். சங்ககாலத்துக்குப் பின்னர், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நாலடியார் (4 LINES) , திருக்குறள் (TWO LINES) என்று செய்யுள் அடிகளின் எண்ணிக்கை பெயரில் நூல்களை யாத்தனர் அல்லது தொகுத்தனர்  . இதற்கெல்லாம் மூலம் பாணினீயத்தில் உள்ளது.

வேதகாலத்திலேயே 100 அத்தியாயங்களைக் கொண்ட நூலை ‘சதபத பிராஹ்மணம்’ என்று அழைத்தனர்.

பாணினி இரண்டு நம்பர் நுல்களைக் குறிப்பிடுகிறார் 5-1-62

30 அத்தியாய நூல் – ‘த்ரைம்ச’

40 அத்தியாய நூல்- ‘சாத்வாரிம்ஸ’.

கௌசீதகி பிராஹ்மண  நூலில் 30 அத்தியாயங்கள் ;

ஐதரேய  பிராஹ்மண  நூலில் 40 அத்தியாயங்கள் ; ஆயினும் நம்பர் மூலமே அதைக் குறிப்பிட்டனர்

100 அத்தியாயங்களைக் கொண்ட சதபத பிராமண நூலிலும் கூட முதல் 60 அத்தியாயங்களை அறுபது என்று – ‘ஷஷ்டிபத’ — என்று அழைத்தனர். அதுமட்டுமல்ல நீ 40 படித்தவனா, அவன் 60 படிக்கும் மாணவன் என்ற பேச்சு வழக்குகளும் உண்டு.

பிற் காலத்தில் நாம் மாணிக்க வாசக சுவாமிகள் போன்றோரும் ‘எட்டும் இரண்டும்’ அறியவில்லையே என்று புலம்புவதை பார்க்கிறோம் .

ஆக எண்களைக் கொண்டு நூலுக்குப் பெயரிடுவது வேத கால வழக்கம். அதைத் தமிழரும் பின்பற்றினர் என்பதைப் பார்க்கையில் இமயம் முதல் குமரி வரை  ஒன்னு; அதை அறியாதவன் வாயிலே மண்ணு  என்று சொல்லத் தோன்றுகிறது.

XXXX

கண்ணகி, ஆதிமந்தி , மாதவி,புனிதவதி, திலகவதி

சம்ஸ்கிருதத்தில் பெண்கள் பெயர்கள் எல்லாம் ‘ஈ’ அல்லது ‘ஆ’- என்ற நெடில் எழுத்துக்களில் முடியும்.

தமிழில் பெண்கள் பெயர்கள் எல்லாம் ‘இ’ அல்லது ‘ஐ’ என்னும் குறிலில்  முடியும்.

சங்க கால ஆதிமந்தி, நப்பசலை, நச்செள்ளை , காமக் கண்ணி என்று அடுக்கிக்கொண்டே போகலாம் . சங்க காலப் பெயர்கள் என்று தமிழர்கள் கருதும்  கண்ணகி, மாதவி, மாதரி, ஐயை, (சிலப்பதிகாரம் கி.பி 132) வாசுகி பெயர்களிலும் இதைக் காணலாம். தேவார காலத்தில் புனிதவதி, திலகவதி என்ற ஸம்ஸ்க்ருதப் பெயர்களிலும் இதைக் காணலாம்.

பாணினி இரண்டு அதிசயங்களை நமக்குச் சொல்கிறார்.

பெண்பால் பெயர்கள் பற்றிச் சொல்கையில் இந்த ‘ஈ’ ஓட்டுக்களை விளக்குகிறார்.

அதிசயமான ஒற்றுமை தமிழிலும் பெண்கள் பெயர்கள் ‘இ’- யில் முடிவது! தமிழும் சம்ஸ்கிருதமும் ஒரே மூலத்தைக் கொண்ட மொழிகள் என்பதற்கு இன்னும் ஒரு சான்று . ஏனைய ‘வேற்றுமை’, ‘சாந்தி விதி’ ஒற்றுமைகளை முன்னமே விளக்கிவிட்டேன்.

இதில் இரண்டாவது அதிசய ஒற்றுமை என்னவென்றால் ஆண்களின் பெயர்களை பெண்களின் பெயராக மாற்றுவது எப்படி என்பதாகும் :-

பவ – பவானி , சிவ – ஷிவானி , ருத்ர- ருத்ராணி, , இந்திர – இந்திராணி , யவன – யவனானி

தமிழர்களும் இதே ‘இ’ முடிவைப் பின்பற்றுகிறார்கள்

குறவன்-குறத்தி, கிழவன் – கிழத்தி, ஆயன்- ஆய்ச்சி , இடையன்- இடைச்சி, உழவர்- உழத்தி, கடையர்- கடைசியர், நுளையன் – நுளைச்சி , மறவன்- மறத்தி

இப்படி  அடுக்கிக்கொண்டே போகலாம்.

பழைய மொழிகளில் தமிழுக்கும்- சம்ஸ்கிருதத்துக்கும் உள்ள ‘வேற்றுமை’, ‘சந்தி /புணர்ச்சி’ விதி, ‘பெயரிடும் ஒற்றுமை’யை உலகில் வேறு எந்த இரண்டு மொழிகளிலும் காண முடியாது. ஆகையால் மீண்டும் எனது ‘தியரி’ theoryயை அடித்துச் சொல்கிறேன் —

தமிழும் சம்ஸ்கிருதமும் இரண்டு வேறு மொழிகள் என்பதில் ஐயமில்லை.

ஆனால் திராவிட மொழிக்குடும்பம் என்பது பெரிய பித்தலாட்டம். இந்திய மொழிக் குடும்பத்தில் தமிழும் சம்ஸ்கிருதமும் இரண்டு கண்கள். ஒரே மூலத்தை உடையவை.

திராவிட மொழிக்குடும்பம் என்று கால்டுவெல்களும் மாக்ஸ்முல்லர்களும் பிதற்றியதை எவனாவது திரும்பிச் சொன்னால் “உடல், (Body parts and numbers)எண்கள், போ, வா சாப்பிடு , தூங்கு முதலிய முக்கிய (verbs) வினைச் சொற்கள் , நிறங்கள், (colours, pronouns) நான், நீ, அவன், அவள்” முதலிய  சொற்களில் 100 ஒற்றுமைகளைக் காட்டச் சொல்லுங்கள். பிராஹுய் (Brahui) என்னும் மொழி தமிழுடன் தொடர்புடையது என்று சொல்லும் ஆட்கள் மூன்று சொற்களுக்கு மேல் காட்ட முடியவில்லை. அதைவிட ஆயிரம் தமிழ்ச் சொற்கள் ஆங்கிலத்தில் உள்ளன.அவர்கள் ஆங்கிலமும் தமிழும் ஒரே குடும்பம் என்று ஏன் சொல்லவில்லை? அலெக்சாண்டர் படை எடுப்புக்கு முன்னரே கிரேக்க மொழியில் உள்ள சுமார் 30 சொற்களை நான் பட்டியலிட்டேனே . கிரேக்கமும் தமிழும் ஒன்றா?

பாணினீயத்தில் தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன! அதை இன்னும் ஒரு கட்டுரையில் தருகிறேன்.

tags– பாணினி, நான் கண்ட, தமிழ் அதிசயங்கள்,

–சுபம் —

நான் கண்ட நால்வர்

bharati malar

Article No. 2102

Written by S NAGARAJAN
Date : 27 August  2015
Time uploaded in London :– காலை 8-43

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்! – 4

ச.நாகராஜன்

நான் கண்ட நால்வர்

1959ஆம் ஆண்டு பிரபஞ்ச ஜோதி பிரசுராலயத்தால் வெளியிடப்பட்ட இந்த அருமையான நூலை எழுதியவர் தமிழ் உலகம் நன்கு அறிந்த அறிஞர் வெ.சாமிநாத சர்மா (1895-1978) ஆவார். மீண்டும் செப்டம்பர் 1998இல் இதை மறுபதிப்பு செய்த பெருமை திரு வே.சுப்பையா (அமரர் வெ.சாமிநாத சர்மாவின் பக்தர் இவர்) பூங்கொடி பதிப்பகம் சென்னையைச் சாரும்.

திரு.வி.கலியாண சுந்தர முதலியார், வ.வே.சு. ஐயர், சுப்ரமணிய சிவா, மகாகவி பாரதியார் ஆகிய நால்வரைப் பற்றிய நூல் இது.

இந்த நூலைப் படிக்கும் போது திரு வி.க, வ.வே.சு.ஐயர், சுப்ரமணிய சிவா, பாரதியார் ஆகியோரிடையே நிலவிய நட்பை நன்கு உணர முடியும். திரு வி.க. ஆசிரியராக இருந்த தேசபக்தன் பத்திரிக்கையின் வரலாறு மிக சுவையாக நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. அதில் வெ.சாமிநாத சர்மா பணி புரிந்து வந்ததால் ஒரு நேரடி அனுபவத்தை நாம் உணர்கிறோம். ஏராளமான சுவையான சம்பவங்களை விவரிக்கும் இந்த நூலை பாரதி ஆர்வலர்கள் நிச்சயம் படிக்க வேண்டும்.

 

நேர்வழி செல்வோம்

சென்னை திலகர் கட்டத்தில் ஹிந்து பத்திரிகையின் ஆசிரியர் ஶ்ரீ கஸ்தூரி ரங்க ஐயங்கார் தலைமை வகித்துப் பேசிக் கொண்டிருந்த கூட்டத்தில் கூட்டத்தைக் கிழித்துக் கொண்டு, அதாவது உட்கார்ந்திருப்பவர்களைத் தள்ளி விட்டுக் கொண்டு வந்தார் மகாகவி பாரதியார்.

மேடையுடன் இணைக்கப்பட்டிருந்த பெஞ்சு ஒன்றை மேஜையாகக் கொண்டு பத்திரிகை பிரதிநிதியாக குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தார் வெ.சாமிநாத சர்மா. அங்கு வந்த கவிஞர் சர்மாவையும் ஹிந்து பத்திரிகையின் பிரதிநிதியாக வந்திருந்த வாசுதேவய்யர் என்பவரையும் சிறிது தள்ளி விட்டு நடுவில் உட்கார்ந்தார்.

சர்மாவுக்கு சிறிது ஆத்திரம் வந்தது. கவிஞரை முறைத்துப் பார்த்தார். “என்ன, முறைத்துப் பார்க்கிறீர்?” என்றார் கவிஞர்.

“ஒன்றுமில்லை, கூட்டத்தைக் கிழித்துக் கொண்டு இப்படிக் குறுக்காக வந்தீர்களே? சுற்றிக் கொண்டு வரக் கூடாதா?” என்று கேட்டார் சர்மா.

நாம் சுற்றுவழி செல்லமாட்டோம். நேர்வழி தான் செல்வோம்என்று உரக்கச் சொல்லிக் கொண்டே அவர் துடைமீது ஓங்கி ஓர் அறை அறைந்தார் கவிஞர். அறைந்து விட்டு ஹ, ஹவென்று சிரிக்கவும் செய்தார்.

இந்த வார்த்தைகளை மட்டும் மனிதர்கள் கடைப்பிடிக்க ஆரம்பித்தால் கடவுள் ராஜ்யம் என்பது பூவுலகில் வந்து இறங்கி விடும் என்று சொல்கிறார் சர்மா.

முருகா, முருகா, முருகா

 

 

சர்மா அவர்கள் கூறும் இன்னொரு சம்பவத்தை அவர் வார்த்தைகளிலேயே பார்ப்போம்:-

“பாரதியார் ஒரு சமயம் சென்னை ராயப்பேட்டை மோபரீஸ் ரோடிலுள்ள குகானந்த நிலையத்திற்கு வந்திருந்தார். அப்பொழுது கலியாணசுந்தர முதலியாரும் நானும் வேறு சில நண்பர்களும் அங்கிருந்தோம். மாலை நேரம். நிலையத்து மண்டபத்தில் குமரக் கடவுளின் திருவுருவப் படம் வைக்கப்பட்டிருந்தது. அந்த உருவம் பாரதியாரின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்து விட்டது. “முருகா, முருகா, முருகா”, என்று தொடங்கும் பாடலை உணர்ச்சி ததும்பப் பாடினார். மாலை நேரத்து மஞ்சள் வெயில் அந்தப் படத்தின் மீது லேசாக படிந்து, முருகனுடைய  திருவுருவத்திற்குத் தனிச் சோபை கொடுத்தது. “வருவாய் மயில் மீதினிலே வடிவேலுடனே வருவாய்” என்ற சரணத்தை அவர் பாடி அதையே திரும்பத் திரும்பச் சொன்ன போது, அந்தக் குமர வடிவம் அவரை நோக்கி மெதுமெதுவாக வருவது போலவே இருந்தது. நாங்கள் அனைவரும் பரவசர்களானோம். அந்தக் காட்சி என் நெஞ்சத்தை விட்டு அகலவே அகலாது. முதலியார் இந்த நிகழ்ச்சியைப் பற்றி அடிக்கடி கூறி ஆனந்தப்பட்டிருக்கிறார்.

தேசபக்தன் பத்திரிகை மீது பாரதியாருக்குத் தனி அன்பு உண்டு. அதன் கருத்துக்களும் தமிழ் நடையும் அவருக்குப் பிடித்திருந்தன. இதற்காக முதலியாரைக் காணும்போதெல்லாம் அவரைப் பாராட்டுவார்.”

புத்தகம் முழுவதும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஏராளமான சுவையான செய்திகள் உள்ளன.

பாரதியார் திருநாளை முதலில் கொண்டாடியவர் சிவா

சுப்ரமணிய சிவா பற்றிய பகுதியில் பல செய்திகளைப் படித்து மகிழலாம்.

பாரதியார் அமரரான பிறகு சென்னையில் அவருடைய திருநாளைக் கொண்டாட வேண்டுமென்று முதன்முதலாக ஏற்பாடு செய்தவர் சிவனார் தான். திருவல்லிக்கேணியில் இப்பொழுது தேசீயப் பெண் பாடசாலை இருக்கிறதல்லவா, அது முந்தி தென்னந்தோப்பாயிருந்தது. அந்த இடத்தில் 1924ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் பாரதியார் அமரரான திருநாளன்று ஒரு பொதுக் கூட்டம் கூட்டினார். கூட்டத்திற்குச் சுமார் நூறு பேரே வந்திருந்தனர். கூட்டத் தொடக்கத்தில் ஶ்ரீ ரா.கிருஷ்ணமூர்த்தி (கல்கி) பாரதியாரின் வந்தே மாதரமென்போம், எங்கள் மாநிலத்தாயை வணங்குதுமென்போம்’ என்ற தொடக்கத்துப் பாடலையும் ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே” என்ற தொடக்கத்துப் பாடலையும் பாடினார். பிறகு திரு வி.கலியாணசுந்தர முதலியார் வீராவேசத்துடன் பேசினார்.”

272 பக்கங்கள் அடங்கிய இந்த நூல் பாரதி ஆர்வலர் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய நூல்!

*************