நான் புத்தர்! (Post No.5126)

Written by S NAGARAJAN

 

Date: 19 JUNE 2018

 

Time uploaded in London –  6-29 am  (British Summer Time)

 

Post No. 5126

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

புத்த தரிசனம்

 

நான் புத்தர்!

 

ச.நாகராஜன்

துரோணர் என்று ஒரு பிராம்மணர். நல்ல விஷயங்கள் அறிந்த பிராம்மணர். உக்கதம் என்ற நகரிலிருந்து சேதவ்யம் என்ற நகரை நோக்கி விரைந்து நடந்து கொண்டிருந்தார்.

 

புத்தர் சற்று முன்னர் தான் அந்தப் பாதையில் நடந்து சென்றிருந்தார். அவரது கால் தடங்கள் சாலையிலே பதிந்து இருந்தன.

 

துரோணர் அந்தத் தடங்களைப் பார்த்தார். இது மனித தடங்கள் அல்ல என்ற முடிவுக்கு வந்தார் அந்த கற்றறிந்த பிராம்மணர்.

அந்தத் தடங்களை அடியொட்டி முன்னேறலானார்.

புத்தர் சற்று இளைப்பாற சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் அடியில் அமர்ந்தார்.

 

துரோணர் அவரை நோக்கி நடந்து அவர் அருகில் வந்தார்.

புத்தரின் முகம் எல்லையற்ற அமைதியுடனும் பிரகாசத்துடனும் தூய்மையுடனும் விகசித்தது. துரோணர் பரவசமடைந்தார்.

அவரை நோக்கிக் கேட்டார் :

 

துரோணர் : நீங்கள் கடவுளா?

புத்தர் : பிராம்மணரே! நான் கடவுள் இல்லை.

 

துரோணர் : நீங்கள் கந்தர்வரா? (இசையில் வல்ல தேவதைகள்)

புத்தர் : பிராம்மணரே! நான் கந்தர்வன் இல்லை.

 

துரோணர் : நீங்கள் யக்ஷரா?

புத்தர் : பிராம்மணரே! நான் யக்ஷன் இல்லை.

 

துரோணர் : அப்படியானால் நீங்கள் மனிதரா?

புத்தர் : பிராம்மணரே! நான் மனிதன் இல்லை.

 

துரோணர் : நீங்கள் கடவுளா என்று கேட்டேன். இல்லை என்றீர்கள். நீங்கள் கந்தர்வரா என்று கேட்டேன். இல்லை

என்றீர்கள். நீங்கள் யக்ஷரா என்று கேட்டேன். இல்லை என்றீர்கள்.

நீங்கள் மனிதரா என்று கேட்டேன். அதற்கும் இல்லை என்று பதில் சொன்னீர்கள். அப்படியானால் நீங்கள் யார்?

 

புத்தர் : ஓ, பிராம்மணரே! நான் கடவுள் என்றால் புலன்கள் பற்றிய ஆசை இருந்திருக்கும். ஆனால் நானோ புலன்கள் ஆசையை முற்றிலுமாக ஒழித்து விட்டேன். ஆகவே நான் கடவுள் இல்லை. நான் கந்தர்வன் என்றால் புலன்கள் பற்றிய ஆசை இருந்திருக்கும். ஆனால் நானோ புலன்கள் ஆசையை  ஒழித்து விட்டேன். ஆகவே நான் கந்தர்வனும் இல்லை.நான் யக்ஷன் என்றால் புலன்கள் பற்றிய ஆசை இருந்திருக்கும். ஆனால் நானோ புலன்கள் ஆசையை ஒழித்து விட்டேன். ஆகவே நான் யக்ஷனும் இல்லை.நான் மனிதன் என்றால் புலன்கள் பற்றிய ஆசை இருந்திருக்கும். ஆனால் நானோ புலன்கள் ஆசையை ஒழித்து விட்டேன். ஆகவே நான் மனிதன் இல்லை.

 

ஓ! பிராம்மணரே! நீரில் நீலத் தாமரை, வெள்ளைத் தாமரை, செந்தாமரை பூத்திருக்கும். அவை நீரிலேயே வளர்கின்றன.என்றாலும் கூட நீரைப் பற்றாமல்,படாமலிருக்கும். நீரினால் அது பாதிக்கப்படாது. அது போலவே நானும் மனிதர்களில் ஒருவனாக இந்த உலகத்தில் பிறந்தேன். அவர்களில் ஒருவனாகவே நானும் வளர்ந்தேன். ஆனால்  இதர ஆண்களைப் போலவோ அல்லது பெண்களைப் போலவோ அல்லாமல் அவர்களிடமிருந்து உயர்ந்திருக்கிறேன். உலகத்தின் மீது நான் பற்று கொள்ளவில்லை. ஆகவே சாதாரண மனிதர்களுக்கு உள்ள பலஹீனங்களைக் களைந்து விட்டு உயர்ந்த மனிதனாக – உத்தர மனுஷனாக – இருக்கிறேன்.

சுருக்கமாகச் சொல்லப் போனால் நான் ஒரு புத்தன். என்னை மிகச் சரியாகச் சொல்ல வேண்டுமானால் புத்தன் என்று சொல்லலாம். ஓ! பிராம்மணரே, என்னை புத்தன் என்று அழையுங்கள்.

 

 

பிராம்மணருக்கும் புத்தருக்கும் இடையே நடந்த இந்த சம்வாதம் உலகியல் புலனிபங்களில் திளைப்பவரை மனிதர் என்றும் அதற்கு அப்பாற்பட்டு அனைத்தையும் துறந்த உயர் நிலையில் இருப்பவரை புத்தர் என்றும் இனம் பிரித்துக் காட்டுகிறது.

சுரர், அசுரர், நாகர், நரர் என்று பலரையும் இனம் பிரித்துக் காட்டுகிறோம். புத்தர் தான் யார் என்பதை விளக்கிக் காட்டினார்.

 

 

சித்தார்த்தனாகப் பிறந்து ராஜகுமாரனாக வளர்ந்த இளவரசன் மனிதனே. ஆனால் பூரண ஞானத்தை போதி மரத்தடியில் அடைந்தவுடன் அவனே புத்தனாக உருவெடுத்தான்.

எல்லா ராகங்களையும் துறந்ததால் அவர் புத்தரானார்.

புத்தரானவுடன் மக்களோடு மக்களாக இணைந்து அவர்களுக்கு நல்லுபதேசங்களைத் தந்தார்.

 

அதையும் எளிமையாக அவர்கள் மொழியிலேயே அவர்களுக்குப் புரியுமாறு எடுத்துரைத்தார்.

மக்கள் வியப்புடன் அவரை மதித்து வணங்கி அந்தச் சொற்களை பயபக்தியுடன் கேட்டு உயர்ந்தனர்.

 

கடைசி நாட்களில் ஓரிடத்தில் கூடியிருந்த மக்களிடையே பேசுகையில் அவர் கூறினார்:

 

“இப்போது நான் வயதானவனாக ஆகி விட்டேன். வாழ்வதற்கு, எனக்கு இன்னும் சொற்ப காலமே இருக்கிறது. பின்னர் உங்களை விட்டுப் பிரிந்திடுவேன். நான் உங்களுக்கான எனது கடமையைச் செய்து விட்டேன்.”

 

அப்பா மரண காலத்தில் மரணப் படுக்கையில் இருக்கும் போது சுற்றி இருக்கும் தன் பிள்ளைகளுக்குச் சொல்லும் அன்புரை போல அறவுரை போல அவரது கூற்று இருக்கிறது.

நெகிழ்ந்து போன மக்கள் உருகி அவரது உரைகளை சிரமேற் கொண்டனர்.

 

புத்தர் புத்தர் என்று அவரைப் போற்றி வணங்கினர்.

மனித குலம் கண்ட மகத்தான உத்தர புருஷன் – உத்தர மனுஷ்யன் – புத்தர் என்றால் அதுவே சத்தியம்!

***