நாயக்கர் ஆட்சியில் சம்ஸ்கிருத மறுமலர்ச்சி! (Post No.3765)

Written by London swaminathan

 

Date: 28 March 2017

 

Time uploaded in London:- 12-46

 

Post No. 3765

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

சம்ஸ்கிருதம் உயிருடன் வாழும் மொழி என்பதற்கு நாயக்கர் ஆட்சிக் காலத்தில் பெருகிய சம்ஸ்கிருத நூல்கள் சாட்சி பூதங்களாக நிற்கின்றன. நாயக்க மன்னர்களும் எழுதினர். அவர்களிடம் அமைச்சரான தீட்சிதர்களும் எழுதிக் குவித்தனர்.

நூற்றுக்கணக்கான சம்ஸ்கிருத நாடகங்களும், காவியங்களும், சாஸ்திர நூல்களும்,அலங்கார சாஸ்திர நூல்களும் இயற்றப்பட்டன.

நாயக்கர் ஆட்சிபற்றி விஜய விலாச காவியம், சாகித்ய ரத்னாகர காவியம் முதலியன சொல்கின்றன.

 

 

கி.பி. 1614 முதல் அரசாண்ட தஞ்சை மன்னர் ரகுநாத நாயக்கர்

பாரிஜாதஹரணம்

நளாப்யுதயம்

அச்சுதாப்பியுதயம்

ராமாயண ஸார சங்கிரஹம்

மஹாபாரத ஸார சங்ரஹம்

 

முதலிய பல கிரந்தஙளை தாமே இயற்றினார்.

 

ரகுநாத நாயக்கர து ஆட்சிக்கால அமைச்சர்கள் எல்லோரும் பெரிய வித்வான்கள். சம்ஸ்கிருதத்தில் காவியம் எழுதிப் புகழ்பெற்ற  கவிஞர்கள்.

 

சீனிவாச தீட்சிதர்

இவர் பாரதம் முழுதும் புகழ் பெற்ற பண்டிதர். பாஷ்யக்காரர் என்று பெயர்பெற்ற பவஸ்வாமி பட்டரின் ஆறவாது தலைமு றை யில் வந்தவர்.

அவர் வட ஆற்காடு ஜில்லா சத்திய மங்கலத்தில் பிறந்தார். அக்கால அரசர்,  அவரைப் பார்த்து வானத்திலுள்ள ஜோதியை வருணிக்கச் சொல்ல,உடனே அவர் “சந்தியாசந்து…………….” என்ற சம்ஸ்கிருத கவியைப் பாடினார். “உதய கிரி, அஸ்த கிரி என்ற இரு வீரர்கள் போரிட்டனர். மேகங்கள் எனும் பீரங்கிகள்  செவ்வானத்தை உண்டாக்கின. அவைகளிலிருந்து நட்சத்திரங்கள் என்னும் குண்டுகள் வெளி வந்தன. அவ் வீரர்கள் இருவரும், இந்தக் குண்டுகள் மேலே படாமல் பிடித்த கேடயங்களே சந்திரனும் சூரியனும். இதோ பாருங்கள் சந்திரனையும் சூரியனையும்” — என்று காட்டினாராம்..

இதைத் தொடர்ந்து அவருக்கு இரத்தின “கேடய” தீட்சிதர் என்ற பட்டத்தை மன்னர் வழங்கினார்.

அவர் பாவனா புரு ஷோத்தமம் முதலிய 18 நாடகங்களையும், சதகண்ட விஜயம் முதலாக 60 காவியங்களையும், சாஹித்ய சஞ்சீவினி, ரசாஸ்ரவம் முதலிய அலங்கார கிரந்தங்களையும், வேதாந்த ரத்னாவளி, வரத தாராவளி, மணிதருப்பணம், அத்துவைத கௌஸ்துபம், விதிநிர்ணயம், சர்வ சமய சர்வஸ்வம், ஸ்மிருதி ரத்னப் ரதீபம், ஹஸ்தபங்கம் முதலிய வியாக்கியானக் கிரந்தங்களையும், தத்துவாவ போதம், பரிசுத்தி முதலிய சாஸ்திரக் கிரந்தங்களையும் இயற்றினார்.

 

அவருக்கு கேசவ தீட்சிதர், அர்த்தநாரீசுவர தீட்சிதர் , ராஜசூடாமணி தீட்சிதர் என்று மூன்று புதல்வர்கள். ராஜசூடாமணி தீட்சிதர் சிறு வயதாயிருக்கும்போது அவரது தந்தை தேக வியோகம் அடைந்தார்.

 

 

ராஜசூடாமணி தீட்சிதர்

புகழ்பெற்ற ராஜசூடாமணி தீட்சிதர் ருக்மிணி பரிணயம் என்ற நூலை எழுதினார். கம்சத்வம்சனம், காந்திமத்தியுபமயம், சங்கராப்யுதயம்,  ரத்ன கேட விஜயம் முதலிய காவியங்களும், கமலினீகளஹம்சம், ஆனந்தராகவம் முதலிய நாடகங்களும், சித்திரமஞ்சரி, சிங்காரசர்வஸ்வம்,முதலிய நூல்களும், காவியதர்பணம், அலங்காரசூடாமணி, சாஹித்ய சாம்ராஜ்யம் முதலிய அலங்கார கிரந்தங்களும், தந்திர சிகாமணி, சங்கர்ஷமுக்தாவளி, நியாய சூடாமணி,முதலிய சாஸ்திரக் க்ரந்தங்களும் இவரால் இயற்றப்பட்டன.

 

கோவிந்த தீட்சிதர்  

இவர் அச்சுதப்ப நாயக்கர் காலத்திலும் ரகுநாத நாயக்கர் காலத்திலும் அமைச்சராக இருந்தவர். ஹரிவம்ச ஸார சரித்திரம் என்னும் 23 சர்கங்களடங்கிய ஒரு காவியம் படைத்திருக்கிறார்.

அந்தக் காவியத்திற்கு அப்பய்ய தீட்சிதர் எழுதிய ஒரு வியாக்கியானமிருக்கிறது

அவர் பெரிய இசைமேதை; சங்கீத ஸுதாந்தி என்ற ஒரு நூலும் செய்திருக்கிறார்.

 

யக்ஞநாராயண தீட்சிதர்

கோவிந்த தீட்சிதரது மூத்த புதல்வர் யக்ஞநாராயண தீட்சிதர்.

அவருக்கு அரசரிட்ட பெயர் ராஜசூடாமணி தீட்சிதர்.

சாகித்ய ரத்னாகர காவியம்

ரகுநாத பூப விஜயம்

ரகுநாத விலாச நாடகம் முதலியன இவர் எழுதிய நூல்கள்.

 

சாகித்ய ரத்னாகார காவியத்தில், இப்பொழுது 16 சர்கங்கள் மட்டுமே கிடைத்துள்ளது.

தீட்சிதர், மன்னர் ரகுநாத நாயக்கரைவிட வயதில் சிறியவர் என்றும், அவர் கால சரித்திரம் பற்றி இக்காவியங்களில் சொல்லப்பட்டிருக்கி றதென்றும் தெரிகிறது.

 

வேங்கடேசுவர தீட்சிதர்

இவர் யக்ஞ நாராயண தீட்சிதரின் சகோதரர். அவரிடம் கல்வி கற்றவர். இவர் இயற்றிய நூல்கள்: 1.சதுர் தண்டிப் ப்ரகாசிகை; இது சங்கீதம் பற்றியது. 2.வார்த்திகாபரணம். இவர் 1638 ஆம் ஆண்டு நீலகண்ட விஜய சம்பூ காவியம் செய்த நீலகண்ட தீட்சிதருக்கு ஆசிரியர்.

சம்ஸ்கிருதம் இறந்துபோன மொழி என்று  யாராவது சொன்னால் அவர்களுக்கு இதையெல்லாம் எடுத்துக் காட்டுவோம். காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) சம்ஸ்கிருதத்தில் இயற்றிய சம்ஸ்கிருதக் கவிதை/ பாடல் ஐ,நா. சபையில் திருமதி எம்.எஸ். சுப்புலெட்சுமி  மூலம் ஒலித்ததையும் சுட்டிக்காட்டுவோம்.

 

வாழ்க சம்ஸ்கிருதம்! வளர்க இந்து மதம்!!

 

–Subham–