மஹரிஷி உதங்கர்! (Post No.9913)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9913

Date uploaded in London – 31 JULY   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மஹரிஷிகள் சரித்திர வரிசை

மஹரிஷி உதங்கர்!

ச.நாகராஜன்

கிருத யுகத்தில் நடந்த சம்பவம் இது.குளிகன் என்றொரு வேடன் வாழ்ந்து வந்தான். அவன் எப்போதும் பிறருடைய மனைவிகள், பொருள்கள், இவற்றை அபகரிப்பான். பிறரை துன்பப்படுத்தல், பிராணிகளை இம்சித்தல், பிராமணர்கள், பசுக்களைக் கொல்லுதல், ஆலயங்களுக்குச் சொந்தமான சொத்துகளைக் கொள்ளையடித்தல் முதலிய பல பாவகரமான காரியங்களைச் செய்து வந்தான். பிராணிகளுக்கெல்லாம் எமன் போன்று விளங்கிய அவன் ஒரு சமயம் சௌவீரன் என்ற அரசனுடைய ராஜ்யத்திற்குச் சென்றான். அந்த நகரோ அமராவதிக்குச் சமமாக இருந்தது. நகரின் மத்தியில் ஒரு விஷ்ணு ஆலயம் இருந்தது. அது தங்க ஸ்தூபிகளால் பிரகாசித்து ஜொலிஜொலித்துக் கொண்டிருந்தது. உடனே அவற்றைத் திருட வேண்டுமென்று எண்ணிய குளிகன் அந்தக் கோவிலுக்குள் சென்றான். அந்தக் கோவிலின் உள்ளே ஸ்வாமிக்கு பூஜை செய்யும் தபஸ்வி ஒருவரைக் கண்டான். அவர் விஷயங்களில் பற்றற்ற முனிவர். தனியாக இருந்தார். அவருடைய பெயர் உதங்கர்.

‘இவர் நமக்கு இடைஞ்சலாக இருக்கிறாரே’ என்று எண்ணிய அந்த வேடன் கொஞ்சமேனும் இரக்கமின்றி தன் வாளை உருவினான். அவருடைய மார்பைத் தன் காலால் உதைத்தான். இன்னொரு கையால் அவருடைய சடையைப் பிடித்துக் கொண்டான். அவரைக் கொல்ல எத்தனித்தான்.

அப்போது அவர், “ஓ! சாதுவே! நான் ஒரு குற்றமும் செய்யவில்லையே! குற்றமற்ற என்னை ஏன் கொல்லுகிறாய்? நான் உனக்கு ஏதேனும் தீங்கு இழைத்திருந்தால் அதைச் சொல்! உலகில் குற்றவாளிகளைத் தண்டிப்பது வழக்கமாக இருக்கிறது. உலகில் நல்ல மனிதன் தனக்கு தீங்கு சம்பவித்த போதிலும், கோடாலியால் சந்தன மரத்தை வெட்டிய போதிலும் அது அந்தக் கோடாலியின் நுனிக்கு வாசனை அளிப்பது போலவே, தீங்கு செய்யாமல் நல்லதையே செய்வான்.

தெய்வம் மிக வலிமையானது. எல்லாப் பற்றுகளையும் விட்டவன் கூட அதிக கஷ்டத்தை அடைகிறான். உலகில் மான்கள் புல்லினாலும், மீன்கள் ஜலத்தினாலும், சாதுக்கள் நல்லொழுக்கத்தில் சந்தோஷம் என்பதினாலும் திருப்தி அடைகின்றனர். ஆனால் குற்றமற்ற இவர்களும் கூட காரணமில்லாமல் இயற்கையிலேயே வேடன், மீனவன், கோள் சொல்கின்றவன் ஆகிய மூன்று விரோதிகளால் கஷ்டப்படுகிறார்கள்.

எந்த இடத்திலிருந்து வந்த போதிலும் எது ஒருவனுக்கு அவசியம் வரவேண்டுமோ அது வந்தே தீரும்!  உலகில் மனிதன் ஆணவத்தினால் மஹா பாவங்களைச் செய்கிறான். தனது மனைவியையும் பிள்ளைகளையும் மிகுந்த முயற்சியுடன் காப்பாற்றுகிறான். இவனால் தேடப்பட்ட செல்வத்தை சுற்றத்தார்கள் நன்கு அனுபவிக்கின்றனர். அந்தச் செல்வத்தை அடைவதற்காக அவன் செய்த பாவ கருமங்களை அடைவது மூடனாகிய அவன் மட்டுமே தான்.”

இவ்வாறு சொல்லிய உதங்க முனிவரைப் பார்த்து வேடன் நடுநடுங்கினான். அந்த மஹரிஷியை விட்டு விட்டு, இரு கரங்களையும் கூப்பியவாறே,” ஓ! மஹரிஷியே! பொறுத்தருள வேண்டும்” என்று பிரார்த்தித்தான்.

சாதுக்களின் சேர்க்கையாலும் விஷ்ணுவின் சந்நிதியில் இருப்பதாலும் பாவங்கள் அவனை விட்டு நீங்கின. அந்த வேடன் மிகுந்த அநுதாபத்தை அடைந்தான். முனிவரை வணங்கி, “ உமது தரிசனத்தால் நான் செய்த அநேக பாவங்கள் நாசமடைந்து போயின். நான் தினந்தோறும் கெட்ட புத்தியுள்ளவனாயும், பெரிய பாவங்களைச் செய்பவனாகவும் இருந்தேன். அந்தப் பாவங்கள் அனைத்தும் நீங்கி பரிசுத்தனாவதற்கு யாரைச் சரணடைய வேண்டும்? நான் பூர்வ ஜன்மத்தில் மிகுதியான பாவங்களைச் செய்து, இழிவான் இந்த வேடப் பிறவியை அடைந்தேன். இப்பிறவியிலும் அளவற்ற பாவங்களைச் செய்வேனாகில் எனக்கு என்ன கதி கிடைக்கும்?” என்று கேட்டவாறே தன்னைத் தானே மிகவும் நொந்து கொண்டான். மிகவும் வருத்தம் கொண்ட அவன் அப்படியே பூமியில் விழுந்து இறந்து போனான்.

அந்தச் சமயத்தில் மிகவும் இரக்க குணம் கொண்ட தயாளுவான உதங்கர், இறந்து கிடக்கின்ற அந்த வேடனின் சரீரத்தை கங்கா ஜலத்தினால் நனைத்தார். அவனுடைய உடலில் கங்கா ஜலம் பட்டவுடன் அவன் பரிசுத்தனானான். திவ்ய விமானத்தில் ஏறிக் கொண்ட அவன் உதங்க முனிவரை நோக்கி, “ ஓ! மஹரிஷியே! நீரா எனது குரு! உமது தயவினால் அளவற்ற பாவத்தைக் கொண்ட நான் அவை நீங்கப் பெற்று பரிசுத்தனானேன்.உமது உபதேசத்தினால் என் மனதிலிருந்த தாபெமெல்லாம் போயிற்று. நீர் கங்கை ஜலத்தினால் அபிஷேகம் செய்ததால் நான் வைகுந்த் பதத்தை அடையும்படியான நல்ல பேற்றைப் பெற்றேன். இதற்கு முன் உமக்குச் செய்த அபராதத்தைப் பொறுத்துக் கொள்ளுங்கள். இதோ நமஸ்கரிக்கிறேன்” என்று இவ்வாறு கூறி விட்டு அந்த வேடன் அந்த மாமுனிவரை சாஸ்திரப்படி மூன்று முறை பிரதக்ஷிணமாக வந்து நமஸ்கரித்தான்.

கந்தர்வர்கள், அப்ஸரஸ்கள் ஆகியோரால் சூழப்பட்டு அவன் மிகவும் அலங்காரமான விமானத்தில் ஏறிக் கொண்டு வைகுண்டத்திற்குச் சென்றான். பிறது தபஸ்வியான உதங்கர அதைக் கண்டு ஆச்சரியப்பட்டு கைகளை சிரம் மேல் கூப்பி பின் வருமாறு ஸ்தோத்ரம் செய்தார்:_

“ தேவர்களுக்கெல்லாம் முதல்வரே!

ஜெகத்துக்கெல்லாம் இருப்பிடமானவரே!

சக்கரம், தாமரை, வில்,கத்தி ஆகியவற்றைத் தரித்தவரே!

உம்மை நினைத்தவர்களின் பீடையைப் போக்கடிப்பவரே! உம்மை நமஸ்கரிக்கிறேன்.

எவர் ஒருவருடைய நாபி கமலத்திலிருந்து உண்டான பிரம்மா உலகங்களை எல்லாம் சிருஷ்டிக்கிறாரோ, எவர் ஒருவருடைய கோபத்தினினின்றும் ருத்ரர் உண்டாகி ஜெகத்தை அழிக்கிறாரோ, அப்பேர்ப்பட்ட விஷ்ணுவாகிய உம்மை நமஸ்கரிக்கிறேன்.

யாதொருவர் ஸ்தூலம், சூக்ஷ்மம் முதலிய் அநேக பேதங்களால் ஏற்படுத்தப்பட்ட ஜெகத்தைத் தாமே வியாபிக்கிறாரோ, அந்த பிரபஞ்சம் முற்றிலும் நீரே. உம்மைக் காட்டிலும் மேலானது வேறொன்றும் கிடையாது. உமது சொரூபத்தை சாதுக்கள் புலன்களுக்கு அகப்படாததாகவும், சுத்தமாயும், மாயா சம்பந்தம் இல்லாததாகவும், குணம், ஜாதி இவைகள் அற்றதாகவும், பாவ புண்ணிய சம்பந்தம் அற்றதாகவும் அளவிட முடியாததாகவும், பரமார்த்தம் என்ற பெயருள்ளதாயும் அறிகிறார்களோ அப்பேர்ப்பட்ட உமக்கு நமஸ்காரம்!

ஒரே தங்கமானது நகை வேறுபாடுகளினால் வெவ்வேறு பெயர்களை எப்படி அடைகிறதோ அதே போலவே, நீர் பல சொரூபங்களுடன் இருந்து கொண்டு அநேக விதமாகக் காணப்படுகிறீர்!

இந்திரியங்கள், மனம், புத்தி, தேஜஸ், பலம், தைரியம் ஆகியவைகள் வாஸுதேவனுடைய சொருபமென்றே சொல்வார்கள். அந்த வாஸுதேவரையே க்ஷேத்திரன், க்ஷேத்திரக்ஞன் என்றும்  சொல்வார்கள்.

எவர் ஒருவருடைய திருவடித் தாமரையினின்றும் உதித்த தீர்த்தமானது சம்சாரம் என்னும் வியாதிக்கு மருந்தாகிறதோ, எவர் ஒருவருடைய பாத தூளியானது பரிசுத்தத்தை உண்டுபண்ணுகிறதோ, எவர் ஒருவருடைய திவ்ய நாமமானது தீவினையை அகற்றுகிறதே அவ்விதமான உம்மை நமஸ்கரிக்கிறேன்.

சம்சாரமாகிய கடலில் மூழ்கி கரையேறமுடியாமல் கஷ்டப்படுகிறவனும், அநேக விதமான மன சங்கல்பத்தினால் கட்டுப்பட்டவனும், கெட்ட கீர்த்தியை அடைந்தவனும், நன்றி இல்லாதவனும், எப்போதும் பாவத்தில் விருப்பமுடையவனாயும், கோபம் உள்ளவனாகவும், மிகவும் பயந்தவனுமாகவும் இருக்கின்ற என்னை கருணைக்கடலாகிய நீர் ரக்ஷிக்க வேண்டும். அடிக்கடி உம்மைச் சரணமடைகிறேன்” என்று இப்படி உதங்கர் ஸ்தோத்ரரித்தார்.

இதனால் பரம சந்தோஷம் அடைந்த பகவான் அவர் முன் தோன்றினார்.

உதங்கர் மகிழ்ச்சிப் பெருக்கினால் ஆனந்தக் கண்ணீர் பெருக்கி அந்த நீரினால் பகவானின் பாதகமலங்களை நனைத்தார்.

பக்தவத்சலான விஷ்ணு பகவான் அவரை வாரி எடுத்து, “குழந்தாய்! உன்ன என்ன வரம் வேண்டும்” என்று கேட்டு நான் பிரசன்னமாயிருக்க்கும் போது உனக்கு சாத்தியம் ஆகாதது ஒன்று உண்டா, என்ன?” என்றார்.

உதங்கர், “பகவானே! உம்மிடத்தில் ஒவ்வொரு ஜன்மத்திலும் நீங்காத திடமான பக்தி வேண்டும். வேறெந்த வரத்தினாலும் யாதும் பயனில்லை” என்றார்.

விஷ்ணு அப்படியே ஆகட்டும் என்றார். தனது பாஞ்சசன்னியம் என்னும் சங்கத்தின் நுனியினால் அவரைத் தொட்டு யோகிகளுக்கும் அரிதான திவ்ய ஞானத்தைக் கொடுத்தார். மீண்டும் உதங்கர் அவரைத் துதிக்கலானார்.

பகவான் அவர் சிரசில் தந்து வலது கையை வைத்தருளி,

 “ ஓ! பிராமணோத்தமரே! என்னை எப்போதும் கிரியைகளாலும், யோகங்களாலும், ஆராதனம் செய். நர நாராயணர்களின் இருப்பிடத்திற்குச் செல். இறுதியில் நீ மோக்ஷத்தை அடைவாய். உன்னால் செய்யப்பட்ட இந்த உத்தமமான ஸ்தோத்ரத்தைப் படிப்பவர்கள் இம்மையில் வேண்டிய அனைத்தும் அடைவர்; பின்னர் மோக்ஷத்தை அடைவர் என்று கூறியருளி மறைந்தார்.

பகவான் கூறியபடியே உதங்கர் நரநாராயணர் இருந்த இடத்திற்குச் சென்று அங்கே கிரியை யோகம் முதலியவற்றைச் செய்து பகவானை பிரார்த்தித்து வந்தார். பின்னர் மோக்ஷத்தை அடைந்தார்.

உதங்க மஹரிஷியின் இந்த வரலாற்றை மஹாபாரதம் ஆதி பர்வத்திலும், நாரதீய புராணத்திலும் விரிவாகக் காணலாம்.

****

INDEX

உதங்கர் வரலாறு, குளிகன் என்ற வேடனுக்கு அருளியது, விஷ்ணு பிரசன்னம், உதங்கரின் விஷ்ணு ஸ்தோத்ரம், நரநாராயணர், மஹாபாரதம் ஆதி பர்வம், நாரதீய புராணம்

Tags- உதங்கர், ஆதி பர்வம், நாரதீய புராணம் ,