உயிரின் மர்மம் துலங்க ஒரு விண்வெளிப் பயணம்! (Post No.3233)

osiris

Written by S. NAGARAJAN

Date: 9 October 2016

Time uploaded in London: 6-44 AM

Post No.3233

Pictures are taken from various sources; thanks

Contact :– swami_48@yahoo.com

 

 

பாக்யா 30-9-2016 இதழில் அறிவியல் துளிகள் தொடரின் 295வது அத்தியாயமாக வெளியாகியுள்ள கட்டுரை

 உயிரின் மர்மம் துலங்க ஒரு விண்வெளிப் பயணம்!

ச.நாகராஜன்

கவலைப்பட வேண்டாம், டைனோஸர் இனத்தை அழித்த ஒரு விண்கல் மோதல் போல இன்னும் ஒரு மோதல் பூமி மீது ஏற்பட இன்னும் 150 லட்சம் வருடங்கள் ஆகும்.                                                                                 

                                     – எல். நீல் ஸ்மித் 

 

 

meteor_shower-shooting_stars-istock_81472339

12 ஆண்டுகளுக்கு முன்னர் 2004இல் நடந்த சம்பவம் இது. அமெரிக்காவில் டக்ஸன் நகரில் உள்ள அரிஜோனா பல்கலைக் கழகத்தில் தாந்தே லாரட்டா என்ற விண்கற்களை ஆராயும் ஒரு விஞ்ஞானி பெரிய ஒரு கண்டுபிடிப்பைக் கண்டுபிடிக்கும் தருணத்தில் இருந்தார். கார்பன் அதிகம் உள்ள எரிகற்களை ஆராய்ந்து வந்த அவர் உயிர் வாழ்க்கையின் தோற்றத்திற்குக் காரணமான ட்ரைபாஸ்பேட் என்னும் அணுத்துகளை எரிகல்லில் கண்டு பிடித்தார். ஆனால் அவரால் எதையும் உறுதிப் படுத்த முடியவில்லை. ஏனெனில் விண்வெளியில் இருந்த அசுத்தத்தால் அந்த அணுத்துகளை அவரால் சரியாக ஆராய முடியவில்லை.

 

உடனடியாக அந்த விஷயத்தைத் தன் பேராசிரியரான மைக்கேல் மார்டினிடம் தெரிவித்தார். இதில் தீவிர கவனம் செலுத்திய மார்டின் நாஸாவை நாடி இதற்காகத் தனியே ஒரு விண்கலத்தை விண்ணில் ஏவி ஒரு புதிய சாம்பிளை விண்கல் ஒன்றிலிருந்து எடுத்து வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

லாரெட்டாவும் மார்டினும் விரும்பிய படி உயிரின் மர்மத்தைத் துலங்கிக் கொள்ள விண்வெளியில் ஒரு நீண்ட ஏழாண்டு காலப் பயணத்தை மேற்கொண்டுள்ளது ஒரு விண்கலம்.

 

 

இந்த விண்கலம் சமீபத்தில் 2016, செப்டம்பர் 8ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டிருக்கிறது.

நூறு கோடி டாலர் என்ற பிரம்மாண்டமான பட்ஜெட் செலவில் விண்ணில் செலுத்தப்பட்டுள்ள இந்த விண்கலத்தின் பெயர் சற்று விசித்திரமானது, நீளமானதும் கூட!

இதன் பெயர் – ஆரிஜின்ஸ் ஸ்பெக்ட்ரல் இண்டர்ப்ரடேஷன் – ரிஸோர்ஸ் ஐடெண்டிஃபிகேஷன்- செக்யூரிட்டி ரிகோலித் எக்ஸ்ப்ளோரர் (Origins – Spectral Interpretation- Resource Identification –Security- Regolith-Explorer – OSIRIS  -REx)  என்பதாகும்.

 

இந்தப் பெயரைப் பார்த்து ஏகத்திற்குக் கிண்டலடிக்கின்றனர் பலரும். இவ்வளவு பெரிய பெயர் தேவையா? கடைசியில் ரெக்ஸ் என்பதில் ஒரு ஸ்மால் எக்ஸ் வேறு ஒரு கேடா? என்ற கிண்டலைத் தாங்கி இது விண்ணில் பறக்கிறது. ஆனால் பெயரில் இருக்குது எல்லாமே என்று இதைப் போற்றுவாரும் உண்டு!

 

இது பென்னு (Bennu) என்ற அரைக் கிலோமீட்டர் அகலமுள்ள விண்கல்லை நோக்கிப் போகிறது. ஆகஸ்ட் 2018இல் இது பென்னுவைச் சென்றடையும். இது 240 மீட்டர் உயரத்திலிருந்து அதைக் கண்காணித்து ‘யார்கோவ்ஸ்கி விளைவு என்பதைப் பற்றி முதலில் ஆராயும்.

 

meteorite

ஒரு சிறிய விண்கல் சூரியனால் வறுத்தெடுக்கப்பட்டு விட்ட போது அதிலிருந்து வெளியாகும் போட்டான்கள் ஒரு சிறிய விசையை வெளிப்படுத்தி அதன் சுழற்சிப் பாதையைச் சற்று மாற்றும். இதை விஞ்ஞானிகள் ஆராயப் பெரிதும் விரும்புகின்றனர். பென்னு பல லட்சம் கோடி வருடங்களுக்கு முன்னர் உருவாகியிருக்கக் கூடும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு!

 

மேலிருந்து ஆராயும் விண்கலம் 12 இடங்களை சாம்பிளைச் சேகரிப்பதற்காகத் தேர்தெடுக்கும். லாரட்டாவின் குழுவினர் இந்த 12 இடங்களில் பாதுகாப்பு, அணுக எளிதாக இருத்தல் போன்றவற்றின் அடிப்படையில் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுப்பர். சிலர் விண்கல்லின் உள்பாகத்தின் மாதிரி வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். சிலரோ மேற்பரப்பு சாம்பிள் கூடப் போதும் என்கின்றனர்.

ஆஸிரிஸ் – ரெக்ஸ் விண்கல்லான பென்னுவில் இறங்காது. விசேஷமாக வடிவமைக்கப்பட்ட ஒரு கரத்தை விண்கலத்திலிருந்து நீட்டி அதன்  மேற்பரப்பைத் தொட்டு மூன்று முதல் ஐந்து வினாடிகளில் நைட்ரஜனைப் பயன்படுத்தி ஒரு பெரிய வெடிப்பை ஏற்படுத்தும்.

உடனேயே வெடிப்பினால் அதிலிருந்து கிளம்பும் மாதிரிகள் சேகரிக்கப்படும். இந்த தூசி அறுவடை (Dust Harvest)  சுமார் 60  முதல் 300 கிராம் எடையுள்ள சாம்பிள்களைச் சேகரிக்கும்.

 

 

இதற்குத் தான் இத்தனை பாடா என்று வியக்கிறோம். ஆனால் இது பெரிய விஷயம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

இந்த மாதிரிகளை ஆராய்ந்தால் உயிரின் தோற்றம் பற்றிய மர்மத்தை விடுவித்து விடுவோம் என்கின்றனர் விஞ்ஞானிகள்!

மாதிரிகளைச் சேகரிப்பது ஒரு புறம் இருக்கட்டும் அவற்றை அப்படியே பத்திரமாகத் திருப்பிப் பூமிக்குக் கொண்டு வருவதில் தான் உண்மையான சவால் இருக்கிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

 

Meteor Outburst

FILE – In this early morning, Aug. 13, 2013 file photo, a meteor streaks past the faint band of the Milky Way galaxy above the Wyoming countryside north of Cheyenne, Wyo., during a Perseids meteor shower. On Thursday night, Aug. 11, 2016 into early Friday morning, the Perseid meteor shower is expected to peak with double the normal number of meteors. Scientists call this an outburst, and they say it could reach up to 200 meteors per hour. (AP Photo/The Wyoming Tribune Eagle, Blaine McCartney)

2023ஆம் ஆண்டு வாக்கில் இந்த விண்கலம் பூமிக்குத் திரும்பி வந்து உடா பாலைவனத்தின்  மேற்குப் பகுதியில் இறங்கும்.

இதற்கு முன்னர் ஜப்பான் விண்கல்லை ஆராய்வதெற்கென ஒரு விண்கலத்தை ஏவியுள்ளது. அதன் பெயர் ஹயபுஷா-2 . அது 2014இல் ஏவப்பட்டது. 2020ஆம் ஆண்டு 100 மில்லிகிராம் விண்கல் சாம்பிளுடன் அது பூமியில் இறங்கும்.

 

 

இதில் வெற்றி யாருக்கு? ஜப்பானுக்கா, அமெரிக்காவிற்கா? விஞ்ஞானிகள் சிரிக்கின்றனர்.  இரண்டு விண்கலங்களின் சாம்பிள்களையும் ஆராய்ந்த பின்னர் அந்த முடிவுகளை ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை இன்னும் துல்லியமாக விளங்குமே, இதில் போட்டி எங்கே இருக்கிறது என்கின்றனர் அவர்கள்!

சபாஷ், சரியான அணுகுமுறை! உயிர் எப்படித் தோன்றியது என்பது பற்றிய உண்மையை அறிய உலகமே ஆவலுடன் காத்திருக்கிறது!

normna-weiner

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..  

பிரபல  அமெரிக்க கணித மேதையான நார்மன் வெய்னர் (Norman Weiner தோற்றம் 26-11-1894 மறைவு 18-3-1964)  ஒரு மறதி மன்னர். அத்தோடு அவருக்கு கண்பார்வைக் கோளாறும் உண்டு. தூரத்திலிருக்கும் எதுவும் அவருக்குத் தெரியாது. ஒரு நாள் பிரான்ஸை சேர்ந்த ஒரு கணித மேதை மசாசூஸெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜிக்கு வருகை புரிந்தார். அவரை அருகில் ஒரு இடத்தில் நடந்த பார்ட்டிக்கு வெய்னர் தன்னுடன் வருமாறு அழைத்தார். காரில் ஏறிக் கொண்ட அந்த மேதைக்கு ஆபத்து கை மேல் காத்திருந்தது. வெய்னர் காரை ஓட்டும் போது படு பயங்கரமான மயிரிழையில் பிழைத்த மோதல்களைக் கண்டு திகைத்த அவர் இன்று நமக்கு நேரம் சரியில்லை என்று நினைக்க ஆரம்பித்தார்.இறுதியில் கார் ஒரு டெலிபோன் கம்பத்தின் மீது மோதி நின்றது. தப்பித்தோம் பிழைத்தோம் என்று கீழே இறங்கி ஓடிய் அந்த மேதை ஒரு வழியாக பார்ட்டி நடக்கும் இடத்தைச் சென்றடைந்தார். இரண்டு மணி நேரம் பார்ட்டியில் ரிலாக்ஸாகக் கழிந்தது. திடீரென அவர் தோள் மீது ஒரு கை விழுந்தது. திரும்பிப் பார்த்தார் அவர் – வெய்னர் தான் அவரை அன்புடன் அரவணைத்தது!

 

கையில் ஒரு கிளாஸுடன் புன்சிரிப்புடன் அவரை நோக்கிய வெய்னர், “கவலைப்பட ஒன்றுமில்லை, இன்னொரு காரைக் கடன் வாங்கி இங்கே வந்து விட்டேன். எப்போது உங்களுக்குத் திரும்ப வேண்டுமோ அப்போது சொல்லுங்கள், உங்களை உங்கள் இடத்தில் கொண்டு போய் விட்டு விடுகிறேன்” என்றார்!

பிரஞ்சு கணித மேதை எப்படி பயந்திருப்பார் என்பதை யாரும் எளிதில் ஊகித்துக் கொள்ளலாம்!

**********