

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN
Post No. 9699
Date uploaded in London – – 7 JUNE 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 6-6-2021 அன்று ஒளிபரப்பான உரை!
ஆலயம் அறிவோம் – பகுதி 32
சிவனொடொக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனொடொப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரையானே
திருமூலர் திருவடி போற்றி! ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்திருக்கும் ஒரே ஒரு மலைப்பகுதியான ஆரவல்லி மலைத் தொடரில் உள்ள அபு மலைத் தலமாகும். இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்தத் தலம் ஜெய்பூரிலிருந்து 276 கிலோமீட்டர் பயணித்து தோல்பூர் மாவட்டத்தை அடைந்து அங்கிருந்து 60 கிலோமீட்டர் தூரம் மலைப்பாதையில் பயணித்தால் அடையும் தலமாகும். அபுரோடு பேருந்து நிலையத்திலிருந்து 27 கிலோமீட்டர் தூரத்தில் இது அமைந்துள்ளது.
அபு என்றால் அற்புதம் என்று பொருள். அற்புதா என்று இருந்த பெயர் காலப்போக்கில் மாறி அபுவாகி விட்டது. இங்கு தான் அசலேஷ்வர் மஹாதேவரின் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் ஏராளமான சிறப்புக்களைக் கொண்ட ஒரு ஆலயமாகும். சிவபெருமான் லிங்க வடிவில் அமைந்து அருள் பாலிக்கிறார். அவரது திருநாமம் அசலேஷ்வர் மஹாதேவ். இந்த லிங்கம் காலை நேரத்தில் சிவப்பு நிறமாகவும் உச்சிப் பொழுதில் அடர்ந்த குங்குமப் பூ நிறமாகவும் மாலை சற்று நிறம் மங்கியும் ஆக இப்படி ஒரே நாளில் மூன்று நிறங்களைக் கொண்டிருக்கும் அதிசயம் வாய்ந்தது. ஸ்வயம்புவாகத் தோன்றி அமைந்துள்ள இந்த லிங்கத்தின் அடியை யாராலும் காண முடியவில்லை. பாதாளத்தில் இது செல்கிறது. அசலம் என்றால் அசைக்க முடியாத என்ற பொருள் உண்டு.
இந்தக் கோவிலை முகலாயர்கள் ஐந்து முறை கொள்ளையடிக்க முயன்றபோது இங்கிருந்து தேனீக்கள் எண்ணற்ற அளவில் தோன்றி முகலாயப் படையை விரட்டி அடித்தன. ஏராளமான ரிஷிகளும் மகான்களும் தவம் புரிந்த பூமி என்பதால் நிறைய புராண வரலாறுகள் இதற்கு உண்டு. வசிஷ்டர் தனது மனைவி அருந்ததியுடனும் தெய்வீகப் பசுவான நந்தினியுடனும் இங்கு வாழ்ந்து வந்தார்.
ஒரு முறை நந்தினி இங்குள்ள மலையிலிருந்து பெரும் பள்ளத்தில் வீழ்ந்து விட்டது. ஆகவே சிவனை நோக்கித் தவம் புரிந்து பள்ளத்தை நிரப்ப அருள் புரியுமாறு வசிஷ்டர் வேண்ட, அந்தப் பள்ளத்தை நிரப்ப சிவபிரான் அற்புதா என்ற ஒரு நாகத்தை உருவாக்கினார். பாம்பால் நிரப்பப்பட்ட அந்தப் பிரதேசம் பாம்பு போல மாறியது. பாம்பு, பக்கத்தில் உள்ள மலைப்பாறைகளை அசைத்துப் பிடுங்கியதால் அந்தப் பகுதி நடுநடுங்கியது. உடனே சிவபிரான் தன் கால் பெருவிரலால் அந்த இடத்தை அழுத்தவே நடுக்கம் நின்றது. அதனால் அது அற்புத மலை என்று பெயர் பெற்றது.
வசிஷ்டர் இங்கு பசுவின் சிலை ஒன்றின் வாயிலிருந்து வெளிவரும் நீரூற்றைக் கொண்ட கோமுக் எனப்படும் இடத்தில் வேள்விகளை இயற்றி
வந்தார். அற்புதா என்ற நாகத்தை அடிப்படையாகக் கொண்டு இன்னும் பல வரலாறுகளும் சொல்லப்படுகின்றன. கௌதம முனிவர் தன் மனைவியான் அகல்யாவுடன் இங்கு வசித்து வந்தார். அவரது சீடரான உதங்கர் குருகுலம் முடிந்த சமயத்தில் குரு தக்ஷிணையாக என்ன வேண்டும் என்று கேட்ட போது அகல்யா, சௌதேசர் என்ற முனிவருடைய மனைவியின் காதில் அவர் அணிந்திருந்த குண்டலங்கள் தனக்கு வேண்டும் என்று கேட்டார். அதைப் பெற்றுத் திரும்பிய உதங்கர் திரும்பி வரும் போது இந்தப் பகுதியில் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தார். அவர் உறங்கும் போது அந்த மரத்தில் இருந்த அற்புதன் என்ற பாம்பு அந்தக் குண்டலங்களைக் கவர்ந்தது. விழித்து எழுந்த உதங்கர் குண்டலங்களைக் காணாமல் மலையரசனாகிய இமயவானை வேண்ட அவனும் தன் மகனை அனுப்பிக் குண்டலங்களை மீட்டு உதங்கருக்கு அளித்தான். உதங்கர் அகல்யாவிடம் குண்டலங்களைத் தர அகல்யா பெரிதும் மகிழ்ச்சியுற்றாள். இதனாலும் இந்த இடம் அற்புதா என்ற பெயரைப் பெற்றது.
அற்புதா என்ற நாகம் இங்குள்ள நந்தி தேவரைக் காப்பாற்றியதால் இது அற்புதா மலை என்ற பெயரைப் பெற்றது என்ற ஒரு வரலாறும் உண்டு.

இந்தக் கோவிலில் அமைந்துள்ள பிரம்மாண்டமான நந்தியின் சிறப்பும் தனி தான். நந்தியின் சிலை 4 டன் எடை கொண்ட தங்கம், வெள்ளி, தாமிரம் , வெங்கலம், துத்தநாகம் ஆகிய பஞ்சலோகங்களின் கலவையால் விசேஷமாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் ஏராளமான மிக முக்கியமான ஜைனத் தலங்களும் உள்ளன.
இந்த மலையில் உள்ள பாறைகள் இயற்கையாகவே பல விலங்குகளைப் போல அமைந்து காணப்படுகின்றன. தேரையைப் போல உள்ள ஒரு பாறை தேரைப் பாறை என்று அழைக்கப்படுகிறது.
இங்குள்ள நக்கி ஏரி தெய்வீகமானதாகக் கருதப்படுகிறது. பாஷ்கலி என்ற அசுரன் தேவர்களைக் கொடுமைப் படுத்தி வந்தான். அவனிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பிரம்மாவின் ஆணையால் தேவர்கள் இங்கு வந்து தங்கள் நகத்தால் கீறி இந்த ஏரியை உருவாக்கியதாக புராண வரலாறு கூறுகிறது. நக்கி என்றால் நகம் என்று பொருள்.
அபு தலமானது சக்தி பீடங்களில் ஒன்றாகும். அபுமலையில் அமைந்துள்ள சக்தியின் கோவில் ஆதார் தேவி கோவில் ஆகும். அபு ரோடிலிருந்து வடக்கே 3 கிலோ மீட்டர் தூரத்தில் இது உள்ளது. செங்குத்தான மலைப்பாறை வழியே சென்றால் மலைக் குகையில் உள்ள ஒரு சிறு துவாரத்தின் வழியே சென்று கோவிலை அடையலாம். நவராத்திரி விழாக் காலங்களில் துர்க்கை எனப் போற்றப்படும் இந்த அம்மனை வணங்கி வழி பட ஏராளமான மக்கள் திரள்கின்றனர்.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அசலேஷ்வர் மஹாதேவரும் ஆதார் தேவியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.



வான் ஆகி மண் ஆகி வளி ஆகி ஒளி ஆகி
ஊன் ஆகி உயிர் ஆகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோன் ஆகி யான் எனது என்று அவர் அவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே!

நன்றி வணக்கம்
***
Tags- நிறம் மாறும் லிங்கம் , அபு மலை, அசலேஷ்வர் , அற்புத நந்தி