நிலவு பற்றிய தமிழனின் அபார அறிவு

supermoon-may-2012-tim-mccord

 

ச. சுவாமிநாதன்

This article is already posted in English: swami

நிலவு பற்றி ஒவ்வொரு நாட்டிலும் பல நம்பிக்கைகள் உள்ளன. ஆனால் பாரத நாட்டில் இமயம் முதல் குமரி வரை ஒரே நம்பிக்கைகள் இருப்பது குறிப்பிடத் தக்கது. ஆரிய திராவிட வாதத்தில் அமுங்கித் திணறும் ‘’அறிஞர்களுக்கு’’ இந்த நம்பிக்கைகள் அடி மேல் அடி கொடுக்கும்.

1.கிரகணம் பற்றிய நம்பிக்கை நாடு முழுதும் ஒன்றே. வட மொழி, தமிழ் மொழி இலக்கியங்கள் ஒன்றே கூறும். பூமியின் நிழல்தான் கிரகணத்துக்குக் காரணம் என்பதை அவர்கள் நன்கு அறிந்ததால்தான் சரியாக பஞ்சாங்கம் கணக்கிட முடிந்தது. இருந்தபோதிலும் பாமர மக்களுக்காக சுவையாக ராகு என்னும் ராக்ஷசன் முழுங்கியதாவும் அவன் தலை பாம்பு வடிவினது என்றும் கூறுவர். இதையே பாம்பு சந்திரனை விழுங்கியதாகவும் கூறுவர்.

 

2.கிரீஸ் அல்லது பாபிலோனியா போன்ற வேறு எந்த நட்டையும் ‘காப்பி’ அடித்து இவர்கள் சோதிடம் பயிலவில்லை என்பதற்கு நிலவு பற்றிய நம்பிக்கைகளே சான்று பகரும். நமது கலாசாரத்தில் நிலவு என்பது ஆண், நட்சத்திரங்கள் என்பவை பெண்கள். இது வேறு எந்த கலாசாரத்திலும் இல்லை. 27 விண்மீன்களையும் தட்சனின் 27 பெண்களாக புராணங்கள் வருணிக்கின்றன. இந்த நம்பிக்கை வேதம், பிராமணங்கள் ஆகியவற்றிலும் உண்டு.

 

3.வேதத்தில் புருஷசூக்த மந்திரத்தில் சூரியனைக் கண்களுடனும் சந்திரனை மனதுடனும் தொடர்புபடுத்தும் மந்திரம் உள்ளது: சந்திரமா மனசோ ஜாத:, சக்ஷோர் சூர்யோ அஜாயத. மேலை நாட்டிலும் முழு நிலவு அன்று பைத்தியங்கள் அதிகரிக்கும், அந்த நாளன்று சிலர் ஒநாய்களாக மாறுவர் என்ற நம்பிக்கைகள் உண்டு. பைத்தியத்தையே ஆங்கிலத்தில் லுனாடிக் என்பர். லூனா என்றால் சந்திரன் என்று பொருள். கண்கள் ஒளிபெற சூரிய நமஸ்காரம் செய்வதும் இந்த மந்திரத்தின் அடிப்படையில்தான்.

 

4.‘’நிலவு’’ என்று சந்திரனுக்கு தமிழன் பெயர் வைத்தது தன்னிச்சையாக நிகழ்ந்ததா அல்லது அறிவியல் அடிப்படையில் நடந்ததா என்பதே வியப்பான விஷயம். ஏனெனில் நிலவு எப்படி தோன்றியது என்ற பலவிதமான கொள்கைகளில் ஒன்று: ஒரு காலத்தில் பூமியிலிருந்து பிய்த்துக் கொண்டு போன துண்டுதான் நிலவு என்று ஒரு கொள்கை உண்டு. பசிபிக் சமுத்திரத்தில் நிலவை அடக்கிவிடலாம் என்பர். இதை அறிந்து தான் தமிழன் நில உலகிலிருந்த பிரிவு= நிலவு என்று வைத்தானோ என்று நான் வியப்பதுண்டு.

 

5.தமிழர்களுக்கு ஜாதகத்திலும் சோதிடத்திலும் அபார நம்பிக்கை இருந்ததை அக நானூற்றின் பாடல்கள் 86, 136 ஆகியவற்றில் காணலாம். தீய கோள்கள் (பார்வை) இல்லாத நாளில் பவுர்ணமி- ரோகிணி நட்சத்திரம் கூடிய நாளில் தமிழர்கள் விளக்கு ஏற்றி ‘’வெஜிட்டேரியன்’’ சாப்பாட்டோடு மணல் தரையில் திருமணம் செய்ததை அப்பாடல்கள் விளக்குகின்றன. அப்போது சுமங்கலிகள் (திருமணமாகி கணவனுடன் வாழும் பெண்கள்) புது மணத் தம்பதிகளை ‘’தீர்க்க சுமங்கலி பவ:’’ என்று வாழ்த்தியதையும் அவை காட்டுகின்றன.

இந்து மத புராணங்கள் முழுதும் சந்திரன் -ரோஹிணீ காதல் கதை விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. இதைப் பின்பற்றியே ரோகிணி நட்சத்திரத்தில் முகூர்த்தம் வைத்தனர் சங்க காலத் தமிழர்கள். ரோகிணி நட்சத்திரதன்று விதை விதைக்க நன்மை என்று பஞ்சாங்கம் சொல்லுவதும் குறிப்பிடத்தக்கது.

 

6.சந்திரனைப் பற்றிய பல நம்பிக்கைகளில் ஒன்று சந்திரனை தெய்வமாக வழிபடுவதாகும். பெரிய கோவில்களில் சுற்றுப் பிரகாரத்தில் சந்திரன் சூரியனுக்கு சந்நிதிகள் இருப்பதைக் காணலாம். உலகில் இப்படி இன்றுவரை சந்திர வழிபாடு எங்கும் இல்லை. குறுந்தொகையில் மூன்றாம் நாள் பிறை வழிபாடு (பாடல் 170) போற்றப்படுகிறது

 

முஸ்லீம்கள் கூட சந்திரனை நாளும் நேரமும் அறியவே பயன்படுத்துவர், வழிபட அல்ல. அவர்கள் அல்லாவைத் தவிர வழிபட அனுமதிக்கப்பட்ட ஒரே உருவம் காபாவில் உள்ள கல் மட்டுமே.

stars and moon

7.நிலவு பற்றி இந்துக்கள் நம்பும் ஒரு முக்கிய விஷயத்தை இதுவரை விஞ்ஞானம் நிரூபிக்கவில்லை. தாவரங்களுக்கு சக்தி கொடுப்பது சந்திரனே என்று வட மொழி நூல்கள் பகரும். சோம ரசம் என்பது சந்திர ஒளியையும் குறிக்கும், சோமலதையில் இருந்து கிடைக்கும் சோம ரசத்தையும் குறிக்கும் . நவக் கிரஹங்களில் சந்திரனுக்கு சோம என்றே பெயர். திங்கட்கிழமையை சோம வாரம் என்றே குறிப்பிடுவர்.

 

8.பன்னிரெண்டு ராசிகளின் படங்கள் ,ஓவியங்கள் தமிழ் அரண்மனைகளில் இருந்ததை முல்லைப்பாட்டில் காணலாம்.

 

9.இந்துக்களின் ஜாதகத்தில்  சந்திரனுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்பது ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்டோருக்கு விளங்கும்.

 

10.சங்க இலக்கியத்திலும் பிற்கால இலக்கியத்திலும் பல உவமைகள் வருகின்றன. இவைகளும் சம்ஸ்கிருத தமிழ் ஒற்றுமைக்குச் சான்று பகரும் ஏன் எனில் இந்திய இலக்கியங்கள் முழுதும் இவற்றைக் காணலாம். நிலவு என்னும் காதலன் 27 காதலிகளுடன் (நட்சத்திரங்கள்) இருப்பது போல என்ற உவமை, நிலவைப் பார்த்த கடல் பொங்கியது போல என்ற உவமை, நிலவு போன்ற குளிர்ச்சி தருபவன் என்ற உவமை எனப் பல உண்டு.

 

11. சிலப்பதிகாரம் போன்ற காவியங்கள் ‘’திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்’’ என்று கடவுள் வாழ்த்தாகவே சூரியன் சந்திரனைச் சேர்த்திருப்பதும் நோக்கத்தக்கது.

 

12.பிராமணர்கள் சில நாட்களில் வேத வகுப்புக்குப் போக மாட்டார்கள். அன்று விடுமுறை. அமாவாசை, பவுர்ணமி, அதற்கு முந்திய, பிந்திய நாட்கள் (சதுர்தசி, பிரதமை) மற்றும அஷ்டமி ஆகிய ஆறு நாட்கள் உதவா. இந்த நாட்களில் கடல் அலைகளின் மாற்றமும் சீற்றமும் உலகறிந்த உண்மைகள்.

 

13. இதேபோல இலங்கையில் பவுத்தர்களும் அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி நாட்களில் உபவாசம் இருப்பர் (உபோசத் தினங்கள்)

 

14. இந்துக்களின் மிகப் பெரிய பண்டிகைகள் ஒவ்வொரு மாத பவுர்ணமியிலேயே வரும். இதற்கு வேண்டுமானால் ‘பிராக்டிகல்’ காரணங்களைச் சொல்ல முடியும். மின்சார விளக்கு இல்லாத காலங்களில் லட்சக் கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து திருவிழவுக்கு வர இவை உதவின எனலாம்.

NY moon

15. நிலவில் முயல் (நற்றிணை 375) இருப்பதாகக் கூறுவதிலும் சம்ஸ்கிருத தமிழ் மொழி நூல்களில் ஒற்றுமையைக் காணலாம். சில கலாசாரங்களில் இதை மான் என்றும் கிழவி என்றும் சொல்லுவர்.

 

16. சங்கட ஹர சதுர்த்தி: சதுர்த்தி (நாலாம் நாள்) க்கும் பிள்ளையாருக்கும் நெருக்கம் மிகவும் அதிகம். கஷ்டங்களைப் போக்கும் சங்கட ஹர விரதம் (உண்ணாநோன்பு) பவுர்ணமிக்கு நாலாம் நாள் அனுஷ்டிக்கப்படும். அன்று மாலை பிறையைப் பார்த்த பின்னரே விரதிகள் சாப்பிடுவர். முஸ்லீம்களும் பிறை பார்த்துச் சாப்பிடும் வழக்கத்தை நம்மிடம்தான் கற்றனரோ!!

 

அமாவாசைக்கு நாலாம் நாள் வரும் சதுர்த்தியன்று பிறை பளிச்செனக் கண்ணில் தெரியும் ஆனால் இதைப் பார்க்ககூடாது என்று ஒரு நம்பிக்கை உண்டு. நாலாம் பிறை பார்த்தவர் நாயாய் பிறப்பார்கள் என்று ஒரு தமிழ்ப் பழமொழி இருக்கிறது ஆயினும் பெரிய பிள்ளையார் சதுர்த்தி அமாவாசைக்கு அடுத்த நாலாம் நாளே வரும். இந்த கணேஷ் சதுர்த்தியை நாடே கொண்டாடும்.

17.இந்து மதத்தில் பிறைச் சந்திரனுக்கு முக்கியத்துவம் அதிகம். பெரிய கடவுளர்களின் தலையில் பிறைச் சந்திரன் இருப்பதை காணலாம். ‘’பித்தா பிறை சூடி’’ என்று அடியார்கள் சிவ பெருமானை போற்றி வழிபடுவர்.

 

(இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள். இந்தக் கட்டுரையை வேறு எங்காவது வெளியிடுகையில் லண்டன் சுவாமிநாதன் எழுதியது என்றோ அல்லது பிளாக் பெயரையோ வெளியிட்டு தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டுகிறேன். தமிழுக்குத் துரோகம் செய்யாதீர்கள். தமிழ்த் தாய் பொறுக்கமாட்டாள்.)

 

அடுத்த கட்டுரை— சந்திரன் பற்றிய வியப்பான விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள்— நம்முடைய மதக் கொள்கைகளை அனுசரித்துப் போவதைக் காட்டும். இவை அனைத்தும் ‘’லேடெஸ்ட்’’ கண்டுபிடிப்புகள். இரண்டாவது பகுதியைப் படிக்கத் தவறாதீர்கள்.

 

தொடர்பு கொள்ள —  swami_48@yahoo.com

படங்கள் பல்வேறு வெப்சைட்டில் இருந்து எடுக்கப்பட்டன; நன்றி.