
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 8059
Date uploaded in London – 28 May 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கிளியாகப் பிறந்த புத்தர் சொன்ன நீதி

ஜாதகக் கதைகள் புத்தரின் பூர்வ ஜன்மக் கதைகள் ஆகும் . இவற்றில் அவர் மனிதர்கள், மிருகங்கள், பறவைகள் முதலியனவாகப் பிறந்த கதைகளும் உண்டு. இவை குறைந்தது 2300 ஆண்டுப் பழமை உடைத்து; ஏனெனில் இந்தியாவிலும் பல நாடுகளிலும் இந்தக் கதைகள் சித்திரங்களாகவும் சிற் பங்களாகவும் படைக்கப்பட்டுள்ளன. பல மொழிகளில் ஆதிகாலத்திலேயே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன . இன்று 500 க்கும் மேலான ஜாதகக் கதைகள் இருந்த போதிலும் 500 மட்டுமே ‘ஒரிஜினல்’ கதைகள் என்பது தெரியவந்துள்ளது.
ஜாதகக் கதைகள் அனைத்தும் பழங்கால இந்தியாவில் வழங்கிய கதைகள் ; அவற்றை புத்த மதத்தினர் தங்கள் கொள்கைகளைப் பரப்ப பயன்படுத்தினர் என்பதை எல்லா ஆராய்ச்சியாளர்களும் ஒப்புக்கொள்வார்கள். மதம் என்பதை ஒதுக்கிவைத்துவிட்டு இக்கதைகளை ஆராய்ந்தால் அக்கால சமுதாய நிலை தெரியவருகிறது .
ஜாதகக் கதைகளில் 484-ஆவது கதை ‘சாலி கேதார ஜாதகம்’ எனப்படும். அதாவது நெல் வயல் பற்றியது. சாலி என்பது அரிசியைக் குறிக்கும்.

கதைச் சுருக்கம் பின்னவருமாறு :
போதிசத்துவர் ஒரு கிளியாகப் பிறக்கிறார். அறிவின் ஆற்றலால் கிளிகளின் தலைவர் ஆகிறார். தினந்தோறும் மற்ற கிளிகளுடன் சென்று நெல் வயல்களில் நெற் கதிர்களை மேய்வது வழக்கம். வயது முதிர்ந்த பெற்றோர்கள் (கிழ கிளிகள்) கேட்டுக்கொண்டதால் அது இப்பொறுப்பினை ஏற்றது. மற்ற கிளிகள் வயிறு புடைக்க தின்றுவிட்டுத் திரும்பிவிடும். போதி சத்துவராகப் பிறந்த தலைமைக் கிளி மட்டும் தான் சாப்பிட்ட பின்னர் தானியக் கதிர்களையும் எடுத்து செல்லும் . இவை அனைத்தும் ராஜகிருஹத்துக்கு அருகிலுள்ள சாண்டில்ய கிராமத்தில், கௌசிகன் என்ற அந்தணரின் நிலத்தில் நடந்தது. அவருக்கு 1000 ஏக்கர் நிலம் இருந்தது. அதில் 500 ஏக்கரை உறவினர்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டு மீதி 500 ஏக்கர் நிலத்தை வைத்திருந்தார். அதைக் கிளிகள் மேய்ந்த வேகத்தைப் பார்த்தவுடன் காவற்காரன் அந்தணரிடம் சென்று என்ன செய்வதென்று கேட்கிறான். கௌசிகன் என்ற அந்தணரும் உனக்குத் தெரியாதா என்ன? குதிரை மயிரால் ஆன வலையை விரித்து தலைமைக் கிளியைப் பிடித்து வா என்கிறார்.
அவனும் அவ்வாறே செய்து கிளிகளின் தலைவனைச் சிறைப் பிடித்துக் கொண்டுவருகிறான் . பின்னர் அந்த ணருக்கும் கிளிக்கும் உராயாடல் நடக்கிறது. அதில் அந்த பிராமணன் கேட்ட கேள்விக்கு கிளி பதில் சொல்கிறது. தான் தினமும் சாப்பிட்டுவிட்டு மூன்று பேருக்கு தானியம் கொண்டு செல்வதாகாச் சொல்கிறது.
நான் ஒரு கடனைத் திருப்பிக் கொடுக்கிறேன். அதற்கு ஒரு கொத்து தானியம்.
நான் ஒரு கடனும் கொடுக்கிறேன் ; அதற்கு ஒரு கொத்து தானியம்.;
பிற்காலத்துக்காக வைப்பு நிதியும் வைத்துக் கொள்கிறேன் ;அதற்கு ஒரு கொத்து தானியம்.
ஆகையால் மூன்று தானியக் கதிர்களைக் கொண்டு செல்கின்றேன்.
கிளி சொன்ன பதிலைக் கேட்ட பிராமணன் வியப்படைந்து மேலும் விளக்கம் கேட்கிறான்.
அதற்குக் கிளி அளித்த விளக்கம் பின்வருமாறு-
என் வயதான பெற்றோர்க்கு நான் படைக்கும் தானியம் – கடனைத் திருப்பிச் செலுத்துவதாகும்
என் குஞ்ச்சுகளுக்கு நான் கொடுக்கும் உணவு கடன் கொடுப்பதாகும் .
ஏழை எளிய , இயலாத கிளிகளுக்கு நான் கொடுப்பது வைப்பு நிதி ஆகும். (அதாவது வங்கியில் போடும் பிக்ஸட் டெபாசிட் Fixed Deposit) .
இதைக்கேட்ட உடனே அந்தப் பிராமணன் தனக்குச் சொந்தமான 500 ஏக்கர் நிலத்தையும் கிளிக்கே அளிக்கிறான். ஆனால் அதுவோ நிலம் எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிடுகிறது அந்தணனும் நீயும் உன் சுற்றத்தாரும் வேண்டுமளவுக்கு இனிமேல் சாப்பிட்டுக் கொள்ளுங்கள் என்கிறான் . கிளியை விடுதலை செய்து விடுகிறான்.
இது அருமையான கருத்தைச் சொல்கிறது . முதலில் ஒருவன் பெற்றோர்க்கு செய்ய வேண்டிய கடமை ; இரண்டாவது குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டிய கடமை; கடைசி தருமம், சமுதாயத்துக்குச் செய்ய வேண்டிய கடமை. இந்தப் புண்ணியம் மறு ஜன்மப் பிறப்பிலும் உதவும் என்பதை இந்துக்கள் ஒப்புக்கொள்வர்

இது வள்ளுவன் குறளிலும் எதிரொலிக்கிறது:-
துறந்தார்க்கும், துவ்வாதவர்க்கும், இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை – குறள் 42
மூன்று வகை விதிக்களுடனும் இதை ஒப்பிடலாம். பிராரப்தம், சஞ்சிதம், ஆகாம்யம் என்பது மூன்று வகை விதிகளை விளக்கும்.
கதையிலுள்ள நீதியைத் தாவிர நாம் அறியும் விஷயங்கள் –
1.மறு பிறப்பு 2.நம்பிக்கை, 3.அந்தணரும் 1000 ஏக்கர் நெல் வயல் வைத்திருந்தமை, 4.உறவினருக்குப் பிரித்துக் கொடுத்தது, 5.கிளிகளைப் பிடிக்க குதிரை மயிரால் வலை பின்னுவது, 6.சாண்டில்ய கோத்திர பெயரில் கிராமம் இருப்பது, 7.அந்தணரின் அறுதொழில்களில் ஒன்று தானம் கொடுத்தல்- அதன்படி 500 ஏக்கர் நிலத்தையும் அவன் கிளிக்குக்கு கொடுப்பது, 8.பறவைகளின் அறிவு. 9.மனிதர்களுக்குள்ள மூன்று கடமை முதலியன.
தமிழ் இலக்கிய ஒப்பீடு
திருக்குறளில் 42, 43 ல் இதே கருத்து இருப்பது;
சாண்டில்ய கோத்திரப் புலவர் அதே பெயரில் சங்க இலக்கியத்தில் இருப்பது.
கோசிக (கௌசிக) பெயரும் கோத்திரமும் சங்க இலக்கிய, சிலப்பதிகார நூல்களில் காணப்படுவது
இவற்றை ஒப்பிட்டு மகிழலாம்.
ஜாதகக் கதைகள் இமயம் முதல் குமரி வரை ஒரே பண்புகள் நிலவியத்தைக் காட்டுகின்றன.
இதில் வரும் கவிதைகளை ஆங்கிலத்தில் கவிதை வடிவிலேயே மொழி பெயர்த்துள்ளனர். கவிதைப் பகுதியை தமிழிலும் கவிதைகளாகச் செய்வது சுவையை அதிகரிக்கும் .
குறள் 42 என்பது மநு நீதி நூலின் 6-89 ஸ்லோகத்தின் மொழிபெயர்ப்பு. இல்வாழ்வான் என்பவன் பிரம்மச்சர்ய மாணவர்களுக்கும் , வானப்ரஸ்தாஸ்ரம PENSIONERS பென்ஷனர்களுக்கும் , யாசகம் கேட்கும் துறவியர்க்கும் உதவுவதால் இல்லலறத்தானே சிறந்தவன் என்பது மனுவின் வாக்கு. குறளிலும் ‘இறந்தார்’ என்பதை இரு பொருள்பட உரைகாரர்கள் வியாக்கியானம் செய்துள்ளனர்.

tags– கிளி, புத்தர் , நீதி
–subham–