நீர் மேல் நடக்கும் அற்புத வித்தை! (Post No.5032)

WRITTEN by London Swaminathan 

 

Date: 21 May 2018

 

Time uploaded in London – 10-31 AM (British Summer Time)

 

Post No. 5032

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

 

அஷ்டமா சித்தி (எட்டு வகை அற்புத சக்திகள்) பெற்றவர்களுக்கு நீர் மேல் நடக்கும் வித்தை மிகவும் எளிது. ஹடயோகம் பயின்றவர்களுக்கு இது இயலும்.

 

கண்ணன் பிறந்தவுடன் வசுதேவர், அக்குழந்தையைக் கூடையில் வைத்துக்கொண்டு சென்றபோது யமுனை நதி திறந்து வழிவிட்டதை நாம் அறிவோம். இந்துக்களின் கணக்குப்படி இது சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது. பின்னர் இது போன்ற தண்ணீர் அற்புதங்களை பைபிளின் பழைய, புதிய ஏற்பாடுகளிலும் புத்த மத நூல்களிலும் அலெக்ஸாண்டரின் வரலாற்றிலும், ஆதி சங்கரர் வரலாற்றிலும் காண்கிறோம்.

 

இதற்கெல்லாம் ஆதி மூலமாக இருப்பது ரிக் வேதக் கவிதையாகும் (3-33). அந்தக் கவிதை விஸ்வாமித்ர மஹரிஷிக்கும் இரண்டு நதி தேவதைகளுக்கும் இடையே நடந்த உரையாடல் ஆகும். கவிதை என்ற கண்ணோட்டத்திலும் மிக அற்புதான கவிதை. நதிகளைப் பெண்களாகப் போற்றும் கவிதை; உவமைகள் மிக்க கவிதை. அந்த ‘’தண்ணீர் அற்புதக்’’ கவிதையைக் காண்பதற்கு முன்னர் நீர் வித்தைகளை வில்லியம் நார்மன் பிரவுன் என்பவர் எப்படிப் பிரித்துள்ளார் என்பதைக் காண்போம்.

தண்ணீர் வித்தைகள் ஆறு வகையானது:-

1.ஒருவர் தனது அற்புத சக்தியினால் கடல் அல்லது ஆறுகளை இரண்டாகப் பிரியும் படி செய்து காய்ந்த தரையில் நடந்து போவது.

 

2.அற்புத சக்தியினால் நீரின் ஆழத்தைக் குறைத்து அதில் நடந்து செல்வது.

 

  1. தண்ணீர் அப்படியே நிற்க, அதன் மேல் நடந்து செல்வது

 

4.தண்ணீரில் விரைந்து செல்ல காற்றோ அலைகளோ அல்லது தாமரை போன்ற பொருள்களோ உதவுவது

 

  1. அல்லது தண்ணீர் மேல் HOVERCRAFT ஹோவர்கிராஃட் போன்று பறந்து செல்வது

 

  1. மேற்கூறிய காரணங்களில் ஒன்றோ இரண்டோ கலந்து உதவுவது.

 

ஆதி சங்கரரின் சீடரான பத்மபாதரை எதிர்க்கரையில் இருந்த சங்கரர் அழைத்தார். உடனே அவர் நீர் என்றும் பாராது விரைந்து செல்ல அவர் நீர் மீது கால் வைத்த இடம் எல்லாம் தாமரை மலர் தோன்றி அவரைத் தாங்கிச் சென்றது. இதனால் அந்த சிஷ்யருக்கு பழைய பெயர் மறைந்து போய் தாமரைக் காலன் (பத்மபாதர்) என்ற புதுப்பெயர் தோன்றியது.

 

புத்தர் கடல்மேல் பறந்து வந்து இலங்கைக்கு வந்ததாக புத்த மத நூல்கள் இயம்பும். புத்தர்களின் சீடர்கள் அற்புத சக்தியால் ஆற்று வெள்ளத்தைக் கடந்ததையும் அவைகள் விளம்பும்.

பைபிளின் பழைய ஏற்பாட்டில் இஸ்ரேலியர்களுக்கும் மோஸசுக்கும் செங்கடல் திறந்து வழிவிட்டதாகப் பகரும்

 

ஏசுவின் நான்கு முக்கிய சீடர்களில் ஒருவரான பீட்டர் நீரின் மேல் நடந்த கதையை பைபிள் நுவலும்.

 

இப்படி ஏராளமான கதைகளைப் பழங்குடி மக்களும் பகர்வர்.

 

ஆனால் உலகிலேயே பழமையான நூலில் — ரிக் வேதத்தில் – இவைகளைக் காணும்போது நாம்தான் இந்தக் கலையை உலகிற்குக் கற்பித்தோமோ என்றும் தோன்றும். ரிக் வேதத்தின் காலம் கி.மு 1500 முதல் 6000 வரை என்று அறிஞர்கள் செப்புவர்.

 

ரிக்வேதக் கவிதை 3-33

 

விபாசா (வியாஸ), சுதுத்ரி (சட்லெஜ்) இரண்டு பஞ்சாப் நதிகள் இப்பாடலில் இடம் பெறுகின்றன.

 

விஸ்வாமித்ரர்–

அடடா! என்ன அற்புதம் ! மலைகளில் பிறந்து கடலுக்குப் போகும் உங்கள் அழகே, அழகு! போட்டி போடும் இரண்டு குதிரைகளப் போல பாய்கிறீர்களே. கன்றுகளை அன்பாக நாவால் நக்கிக் கொடுக்கும் தாய்ப் பசு போல இரு கரைகளையும் அலைகள் என்னும் நாவால் தொடுகிறீர்களே.

 

இந்திரனுடைய கட்டளைக்குப் பணிந்து தேரில் விரைந்து செல்லும் தேவர்கள்  போலப் பிரகாஸிக்கிறீர்கள். அதே வேகத்தில் கடலை நோக்கி ஓடுகிறீர்கள்! அலைகள் ஒன்றன் மீது ஒன்று புரள்வது ஒருவரை ஒருவர் நாடுவது போல உளதே!

 

தாய் போன்ற சுதுத்ரி நதியே! சௌபாக்கியவதியான விபாஸையே! கன்றுகளை நாடும் தாய் போல ஒருமித்துப் பாய்கிறீர்களே!

 

 

இரண்டு நதிகளும் சொல்லுகின்றன

நாங்கள் நீரினால் நிலத்தை வளப்படுத்தி இறைவனால் படைக்கப்பட்ட கடலுக்குப் போகிறோம். எங்களை எவராலும் தடுக்க இயலாது. நீவீர் எம்மை அழைத்த காரணம் யாதோ?

விஸ்வா:-

 

நான் ஸோம லதை எனப்படும் அற்புத மூலிகையை எடுக்க செல்கிறேன். நான் குஸிகனின் புதல்வன்; ஏ, சுதுத்ரி நதியே ஒரு கணப்பொழுது  ஓடாமல்தான் நில்லேன்.

 

நதிகள் பதில்

விருத்திரன் எங்களைத் தடுத்து நிறுத்திய போது வஜ்ராயுதம் ஏந்திய இந்திரன் அந்த விருத்ரனைக் கொன்றான். நல்ல கைகள் உள்ள ஸவிதா எங்களை இந்த வழியில் செலுத்தினான். அவன் கட்டளைபடி வெள்ளப் பிரவாஹம் எடுத்து ஓடிக் கொண்டு இருக்கிறோம்.

 

விஸ்வா

நல்லது; இந்திரன் அந்த அஹி என்னும் பாம்பைக் கொன்று செய்த நற்செயல் என்றும் போற்றப்பட வேண்டியதே தடை செய்தவர்களை அவன் வஜ்ர ஆயுதம் கொண்டு அழித்தான்

 

நதிகள் பதில்

 

ஓ, துதிபாடும் முனிவா; எதிர்கால சந்ததியினர் உன்னுடைய இந்தக் கவிதையைப் போற்றுவார்கள் ; நீயும் மறந்து விடாதே; ஆனால் மக்களுக்கு முன்னர் எங்களைத் தாழ்திவிடாதே.

விஸ்வா:

சஹோதரிகளான நதிகளே! நான் சொல்லுவதை அன்போடு செவிமடுங்கள்; நான் தொலை தூரத்தில் இருந்து தேரோடும் வண்டிகளோடும் வந்து இருக்கிறேன். கொஞ்சம் தாழ்வாகப் பாய்ந்து செல்லுங்கள் உங்கள் நீரோட்டம் காளை மாட்டு வண்டியின் அச்சுக்குக் கீழே பாயட்டும்

நதிகள் பதில்

ஓ, கவிஞரே! நீ தொலைவில் இருந்து தேர், காளை மாட்டு வண்டிகளோடு வந்ததாகச் சொல்லுவது எங்கள் காதில் விழுந்தது குழந்தைக்குப் பால் ஊட்டும் தாய் போலவும் காதலனைக் கட்டித் தழுவ ஓடிவரும் காதலியின் அன்பு போலவும் நாங்களும் உன்னைத் தாழ்ந்து வணங்குவோம்.

விஸ்வா:–

நதிகளே; என்னைக் கடக்க உதவினீர்கள்; அதைப் போல பரதர்களும் படைகளும் கடந்து செல்ல உதவுங்கள்; பின்னர் பிரவாஹம் எடுத்துப் பாய்ந்து செல்லுங்கள்; உங்களைப் போற்றுவேன்

 

பரதர்களும் பசுக்களை நாடிக் கடந்து சென்றனர்.  உங்கள் அன்பு எனக்குக் கிடைத்தது; உங்கள் அலைபோல செல்வத்தைப் பொழியுங்கள்;  உணவு தான்யம் பெருகட்டும்; வளம் கொழிக்கட்டும்; பாய்ந்து செல்க.

 

எங்கள் மாட்டு வண்டியின் நுகத்துக்கு கீழே பாயுங்கள். எங்கள் காளை மாடுகள் ஒரு பாவமும் அறியாத ஜந்துக்கள் அவைகளுக்குத் தீங்கு செய்துவிடாதீர்கள்.

 

 

இது போல பல அற்புதக் கவிதைகள மந்திர சக்தியால் நதிகளைக் கட்டுப்படுத்தியதைக் காட்டுகின்றன (குறிப்பாக 10-136)

இந்தக் கவிதையில் என்ன அற்புதம் இருக்கிறது?

விஸ்வாமித்ரன் வேண்டியவுடன் நதிப் பிரவாஹம் குறைந்தது. வண்டியின் அச்சுக்குக் கீழே பாய்ந்தது. உடனே அவரும், பரதர்களும்  கடந்து சென்றனர்.

 

பாடலில் உள்ள உவமைகள் ‘பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து’ என்ற மாணிக்க வாசகரின் பாடலை நினைவு படுத்தும்

நதிகளைத் தாயாக போற்றுவதையும் பூமியைத் தாயாக போற்றுவதையும் உலகம் நம்மிடம் கற்றது.

காளை மாடுகளுக்கும் தீங்கு செய்யக்கூடாது என்ற அன்புப் பிரவாஹம் நதிப் பிரவாஹம் போல உளது.

 

வேத கால இந்துக்களுக்கு கடல் தெரியாது என்று பிதற்றும் பித்துக்குளிகளுக்கு  இந்த நதிக் கவிதையும் ஸரஸ்வதி நதிக் கவிதையும் சாட்டை அடி கொடுக்கிறது. மலைமீது தோன்றி கடல் வரை செல்லும் நதிகள் பற்றிய மாபெரும் பூகோள அறிவு அக்காலத்தில் இருந்தது. அதுமட்டுமல்ல கவிதையில் காணும் உவமைகள் அமைதியான ,நனி நாகரீகம் மிக்க வேத காலத்தை நம் கண்களுக்கு முன்னால் கொணர்கிறது.

 

‘வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே’– பாரதி.

 

-சுபம்-