WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,361
Date uploaded in London – – 21 NOVEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ச.நாகராஜன் எழுதியுள்ள சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பற்றிய பத்து உரைகள் ஆல் இந்தியா ரேடியே சென்னை வானொலி A அலைவரிசையில் (720 Hz) 11-11-2021 முதல் ஒலிபரப்பாகி வருகிறது. நேரம் தினமும் காலை 6.55 (மாநிலச் செய்திகள் முடிந்த பின்னர்). இதை ஆன்லைன் வாயிலாகவும் கேட்டு மகிழலாம்.
இணையதளம் : https://onlineradiofm.in/tamil-nadu/chennai/all-india-air-chennai-pc
15-11-2021 காலை ஒலிபரப்பான ஐந்தாவது உரை கீழே தரப்படுகிறது.
நிலத்தடி நீரைச் சேமிப்போம்!
ச.நாகராஜன்
உலகில் உள்ள பாதி நாடுகளில் மக்கள் நிலத்தடி நீரையே அதிகம் பயன் படுத்துகின்றனர். ஆகவே கிணறு, குளம், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகள் சுத்தமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை ஒவ்வொருவரும் உணர வேண்டும். நிலத்தடி நீர் நிறைவாக வளமுடன் இருந்தால் மட்டுமே நீரோடை, நீரூற்றுகள், ஆறு, ஏரி, குளம் ஆகியவை நல்ல நீரைக் கொண்டிருக்கும். ஆகவே இந்த நிலத்தடி நீரை, சுத்தமாக இருக்கும் வண்ணம் எப்போதும் பாதுகாத்தல் வேண்டும். ஆறு, நீரோடை உள்ளிட்டவற்றில் காணப்படும் மணலைச் சுரண்டினால் நிலத்தடி நீரைச் சேமிக்க முடியாது.
நீங்கள் வாழும் பகுதிகளில் உள்ள திறந்த வெளி மைதானங்கள், பள்ளிக் கூட மைதானங்கள் ஆகியவற்றில் RAIN GARDEN எனப்படும் மழைத் தோட்டப் பகுதிகளை அமைப்பதன் மூலம் நீர் வளம் சிறக்கும். உங்கள் வீட்டில் உள்ள கிணற்றை அடிக்கடிச் சுத்தப்படுத்தல், நீரோடை, குளங்கள் ஆகியவற்றில் அவ்வப்பொழுது தூர் வாருதல் போன்ற செயல்கள் அந்த நீரைச் சுத்தமானதாக தக்க வைத்துக் கொள்வதற்கான வழிகளாகும்.
நிலத்தடி நீரானது கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் பாய்வதைப் பற்றிய அறிவியல் பூர்வமான செய்திகளைச் சேகரித்து உரிய அணுகுமுறை மூலம் அதைப் பாதுகாப்பதே சிறந்த வழியாகும். நீங்கள் வாழும் பகுதிக்கும் அங்கு நிலவும் சீதோஷ்ண நிலைக்கும் தக்கபடியான செடிகளை மட்டுமே தேர்ந்தெடுத்து உங்கள் இல்லத்தைச் சுற்றி வளர்க்கலாம். இரசாயன உரங்களை அறவே தவிர்க்க வேண்டும். முற்றிலும் தவிர்க்க இயலாதெனில் அதை முடிந்த அளவு குறைக்கலாம். மருந்துகள், பயன்படுத்தப்படாத ரசாயனப் பொருள்கள், பெயிண்ட், மோட்டார் ஆயில் போன்றவற்றை முறையாக உரிய முறைப்படி அப்புறப்படுத்தல் வேண்டும்.
ஒவ்வொரு சொட்டு நீரும் இன்றியமையாதது என்ற காலத்தில் வாழும் நாம், வீட்டில் குழாய்களில் நீர் ஒழுகல் ஏற்பட்டால் அதை உடனே சரி செய்து நமது நீர் வளத்தைப் பாதுகாக்க வேண்டும். சிறப்பாகக் குளித்து முடிக்க குறைந்த பட்ச நீர் எவ்வளவு தேவை என்பதை குடும்ப உறுப்பினர்களுக்கு, குடும்பத் தலைவர் உணர்த்துதல் அவசியமான ஒன்று. குழாயைத் திறந்தவாறே பல் துலக்கல், குளித்தல் போன்ற செயல்களால் வீணாகும் நீரைத் தவிர்க்க வேண்டும்.
REDUCE – குறை – REUSE – மறுபடி பயன்படுத்து – RECYCLE – மறுசுழற்சிக்கு உள்ளாக்கு என்ற இந்த மூன்றையும் எப்போதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளல் வேண்டும். இதை மனதில் கொண்டு பேப்பர், பிளாஸ்டிக், கார்ட்போர்ட், கண்ணாடி உள்ளிட்ட அனைத்துப் பொருள்களையும் உரிய முறையில் பயன்படுத்தினால் சுற்றுப்புறச் சூழல் கேடு பெருமளவு குறையும். எலுமிச்சம்பழம், பேகிங் சோடா, வினிகர் ஆகியவற்றைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தினால் சுற்றுப்புறச் சூழலைக் காத்தவர்களாவோம்.
இப்படி அன்றாட வாழ்வில் ஒவ்வொருவரும் பல வழிகளைக் கடைப்பிடித்தால் உலகின் நீர் வளம் குன்றாது; குறையாது. சீரைத் தேடின் நீரைத் தேடு என்பது பழமொழி. நீர் வளம் காப்போம்; உலகைக் காப்போம்!
***
tags – நிலத்தடி , நீர் ,சீரைத் தேடின்,
You must be logged in to post a comment.