சம்ஸ்கிருத பொன்மொழிகள்
Written by London swaminathan
Post No.2251
Date: 17 October 2015
Time uploaded in London: 13-26
Thanks for the pictures.
Don’t use pictures. Don’t reblog for at least a week.
“நீல வர்ண ஸ்ருகால:”
ஆத்மபக்ஷம் பரித்யஜ்ய பரபக்ஷேசு யோ ரத:
ச பரைர் ஹன்யதே மூடோ நீலவர்ண ஸ்ருகாலவத் (ஹிதோபதேச)
தன்னுடைய சொந்த இனத்தை விட்டு யார் ஒருவர் வேறுபக்கம் செல்கிறாரோ, அவர்களை அந்த வேறுபக்க ஆட்கள் கொன்றுவிடுவார்கள்- நீல வர்ண நரிக்கு ஏற்பட்ட கதியே ஏற்படும் என்பது சம்ஸ்கிருதப் பாடலின் பொருள்.
ஹிதோபதேசம் கதை
ஒரு காட்டில் ஒரு நரி இருந்தது. ஒரு நாள் பக்கத்திலுள்ள நகரத்தில் நுழைந்தது. அதைப் பார்த்து நாய்கள் குரைக்கவே அது, துணிகளுக்கு சாயமேற்றும் ஒரு சாயப் பட்டறையில் நுழைந்தது. அங்கே இருட்டாக இருந்தது. அந்த நரி தவறிப்போய், ஒரு சாயம் வைத்திருந்த ‘டிரம்’மில் விழுந்தது. உடலெல்லாம் நீலச் சாயம் ஏறியது. காலையில் காட்டுக்குள் வந்தவுடன் எல்லா மிருகங்களும் அதை விநோதப் பிராணியாகப் பார்த்தன. உடனே நரி, தான் தேவலோகத்திலிருந்து வந்திருப்பதாகவும் தானே அரசன் என்றும் பறைசாற்றியது. தன்னுடைய சொந்த இன நரிகளை அலட்சியம் செய்தது. சிங்கம் உள்பட, எல்லா மிருகங்களும் அடங்கி ஒடுங்கி , அதற்கு அடிமையாக இருந்தன. ஒரு நாள் எங்கோ நரிகள் கூட்டம் ஊளையிடுவதைக் கேட்டவுடன் நீலவர்ண நரிக்கும் பிறவிக்குணம் தலைக்கேறியது. மிகப் பெரிய சத்தத்தோடு ஊளையிட்டது. இதைப் பார்த்த் சிங்கம் முதலிய கொடிய விலங்குகள், அது வெறும் நரி, இவ்வளவு காலம் நம்மை ஏமாற்றியிருக்கிறது என்று அறிந்து அதன் மீது பாய்ந்து அதைக் குதறிக் கொன்றன.
xxx
பெண்ணுக்கு ‘அழகு’ குறி, அம்மாவுக்குப் ‘பணம்’ குறி!
ரூபம் வரயதே கன்யா, மாதா வித்தம், பிதா ஸ்ருதம்
பாந்தவா: கலுமிச்சந்தி மிஷ்டான்னமிதரே ஜனா: – பஞ்ச தந்திரம்
கல்யாணம் என்று வந்து விட்டால் பெண்ணுக்கு மாப்பிள்ளையின் அழகும், அம்மாவுக்கு மாப்பிள்ளையின் பணவசதியும், அப்பாவுக்கு மாப்பிள்ளையின் அறிவும், சொந்தக் காரர்களுக்கு அவனது குலமும், ஏனையோருக்கு கல்யாண விருந்தும் குறியாக (முக்கியம்) இருக்கும்!!!
Xxx
விக்ரீயந்தே ந கண்டாபிர்காவ: க்ஷீரவிவர்ஜிதா: — சார்ங்கதர பத்ததி:
பால் இல்லாத பசுக்களின் கழுத்தில் மணி கட்டினாலும் அதிக விலைக்கு விற்கமுடியாது.
Xxx
விஹ்வலா ஹி ராஜப்ரக்ருதி: — காதம்பரி
ராஜாவின் போக்கு சந்தேகத்துக்குரியது (அரசனிடம் கவனமாக இருக்க வேண்டும்)
ஒப்பிடுக:
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல் வேந்தர்ச் சேர்ந்தொழுகுவார் – குறள் 691
பொருள்: –மன்னன் அருகில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். தீ மூட்டி குளிர்காயும்போது எப்படி தீக்கு மிக அருகிலும் அல்லது தீயிலிருந்து மிகத் தொலைவிலும் செல்வதில்லையோ அப்படி அகலாது, அணுகாது பழக வேண்டும்
“பாம்பு என்று தாண்டுவதா, பழுது என்று மிதிப்பதா?”
“பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகல் – திரிகடுகம்”
Xxx
வ்ருத்தா நாரீ தபஸ்வினீ – சாணக்ய நீதி தர்பணம்
வயது முதிர்ந்துவிட்டால் பெண்கள் எல்லாம் தவசிகள் (அவ்வையார்) ஆகிவிடுவர்.
ஒப்பிடுக:
சௌ சூஹே காகர் பில்லீ ஹஜ் கோ சலீ
Xxx
நாஸ்தி கங்கா சமம் தீர்த்தம் நாஸ்தி மாத்ரு சமோ குரு:
கங்கையின் புனிதத்துக்குச் சமமான ஜலம் இல்லை’
அம்மாவுக்குச் சமமான குருவும் இல்லை.
ராமகிருஷ்ண பரம ஹம்சரும் மூன்று “க” முக்கியம் என்பார். கங்கை, கோவிந்தன், காயத்ரி.
ஆதிசங்கரர் பஜகோவிந்தத்திலும் கங்கா ஜலம், கோவிந்தன் (முராரி), பகவத் கீதை ஆகிய மூன்று ‘க’ முக்கியம் என்பார்.
—சுபம்–
You must be logged in to post a comment.