பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு கேள்விகள்! – 3 (Post No.5709)

 

Written by S Nagarajan

Date: 28 November 2018

GMT Time uploaded in London –6- 49 am
Post No. 5709

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

தமிழ் இலக்கியம்; அறநூல்!

பாண்டியன் வள்ளுவரிடம் கேட்கச் செய்த நூறு இரகசியம் விளக்கும் கேள்விகள்! – 3

ச.நாகராஜன்

அவை கூடியது.

அனைவரும் திருவள்ளுவரைப் பார்க்க அவர் கையை அசைத்தார்- துவங்கலாம் என்று.

“ஐயனே! பெண் என்பவள் யார்? நாங்கள் எப்படி இருக்க வேண்டும் “ – இப்படி மகளிர் அமர்ந்திருந்த பக்கத்திலிருந்து ஒரு பேரிளம் பெண் கேட்டாள்.

அனைவருக்கும் ஒரு உற்சாகம் ஏற்பட, வள்ளுவரை நோக்கினர்.

வள்ளுவர் முழங்கினார் :

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண் (56)

அனைவரும் ‘ஆ’ என்று வியந்து பாராட்டினர் இந்த வரையறுப்பைக் கண்டு. கேள்வி கேட்ட அழகியை அனைவரும் பாராட்ட இன்னொரு பெண் எழுந்து கேட்டாள் :  ‘என்னையும் காத்துக் கொள்கிறேன். கணவன் உள்ளிட்ட என் குடும்பத்தினரையும் நான் பேணுகிறேன் புகழையும் என்னால் சேர்க்கிறேன். இப்படிப்பட்ட பெண்ணை எப்படி அறிஞர் பார்ப்பார்கள்?’

வள்ளுவர் மஹாராணியையும் அந்தப் பெண்ணையும் பார்த்தார்; பின்னர்

கூறினார் :

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

திண்மை உண்டாகப் பெறின் (54)

அனைவரும் மஹாராணியின் கற்பின் திண்மையை முதல் நாள் பார்த்தவர்கள் ஆதலால் மிகவும் மகிழ்ந்தனர்.

மகளிர் அனைவரும் மகிழ்ந்த போது ஆண்கள் பக்கத்திலிருந்து ஒருவர் எழுந்தார்:

“ஐயனே! பெண்களிடம் அப்படி என்ன தான் உள்ளது?”

வள்ளுவர் புன்முறுவல் பூத்தார்:

கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்தொடி கண்ணே உள (1101)

இதைக் கேட்டு ஆண்களும் பெண்களும் பரவசப்பட்டுக் கத்தினர்.

ஐம்புலன்களுக்கு இன்பம் தர வல்லவள் பெண்ணல்லவோ! அவள் இல்லாமல் உலகம் இயங்குமா? இருக்கத் தான் செய்யுமா?

மகளிர் சிலர் நாணத்துடன் தலை கவிழ பலரோ வள்ளுவரைப் பாராட்டிக் கூவினர்.

மகளிர் அணியிலிருந்து எழுந்த ஒரு அழகிய இளம் பெண் கண்ணீர் மல்கவே மஹாராணியாரும் ஏனையோரும் துணுக்குற்றனர்:

அவள் விசும்பியவாறே கூறினாள்: “ என்னைக் கைப்பிடித்தவர் இன்னொருத்தியின் வீட்டில் அல்லவா இருக்கிறார்; இது நியாயமா?” என்று கேட்டாள்.

வள்ளுவர் வருந்திய முகத்துடன் கூறினார்:

“பொருட் பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்

ஏதில் பிணந்தழீஇ அற்று” (913)

கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒருவன் எழுந்து ஓடி வந்து அந்த அழகியை நோக்கிக் கூறினான்” என் தலைவியே! என்னை மன்னித்து விடு! இருட்டறையில் பிணத்தைத் தழுவி அல்லவா இது வரை வாழ்ந்தேன் என்று வள்ளுவப் பிரான் கூறுகிறார்; என் அறிவுக் கண்ணைத் திறந்து விட்டார்” என்று கூறி அழ, மன்னன் அவர்கள் இருவரையும் மேடைக்கு அழைத்தான்.

மஹாராணி தன் மார்பிலிருந்த  பாண்டி நாட்டு தங்கச் சங்கிலியில் கோர்த்த  முத்தாரத்தை எடுத்தாள்; மன்னரிடம் கொடுத்தாள்.

குறிப்பறிந்த மன்னன் அதை திருந்திய தனது குடிமக்களுள் ஒருவனான அவன் கையில் தந்து தன் தலையை அசைக்க அவன் உடனடியாக அந்த அழகியின் கழுத்தில் அணிவித்து தன்னை மன்னிக்குமாறு இறைஞ்சினான்.

கூட்டத்தினர் கை தட்டி, தங்கள் தோள்களில் இருந்த உத்தரீயங்களை மேலே எறிந்து பிடித்து ஆரவாரித்தனர்.

கண் கலங்கி, ஆனந்தக் கண்ணீர் விட்ட இளம் பெண் மஹாராணியின் காலில் விழ, அந்த இருவரையும் மஹாராணி வள்ளுவரை வணங்கி ஆசிப் பெறச் சொன்னாள்.

வள்ளுவர் கைகளை உயர்த்தி ஆசிகளைத் தர, கூட்டத்தினருக்கு ஒரு பெரிய நல் கூத்தைப் பார்த்த திருப்தி ஏற்பட்டது; இங்கு வந்தது நமது புண்ணியமே என்று எண்ணினர்.

இதே போல பரத்தையர் வீடு செல்பவர்கள் இனி திருந்துவர் என மகளிர் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

உடனடியாக புலவர் ஒருவர் எழுந்தார்:

“ஐயனே, அந்தணர் யார்?” என்று கேட்டார்

வள்ளுவர் பளீரென்று பகர்ந்தார்:

அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுகலான்

அனைவரும் அந்தணர்களைப் பார்த்து வணங்கினர்.

இன்னொருவர் கேட்டார் : அவர்கள் அறத்தை வழுவில்லாமல் காப்பது எப்படி? அனைவருக்கும் இது பொருத்தமான கேள்வி தான் என்ற எண்ணம் எழ, இதன் இரகசியத்தை வள்ளுவர் எப்படி விளக்கப் போகிறாரோ என்று பார்த்தனர்:

வள்ளுவர் கூறினார்:

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல்

பாண்டியன் பெரிதும் மகிழ்ந்தான். அனைவரும் ஆஹாகாரம் செய்தனர்.

வளையா செங்கோல் நிமிர்ந்து நிற்க அந்தணர் பிறர்க்குரியாளராக வாழ்வதை அனைவரும் போற்றினர். பாண்டியன் பெருமிதத்துடன் மக்களைப் பார்க்க மக்களும் பாண்டியனை வெற்றிப் புன்னகையுடன் பார்த்தனர்.

அந்தணர் ஒருவர் எழுந்தார்:

“ஐயனே! மற்று எவ்வுயிர்க்கும் இப்படி செந்தண்மை பூண்டு வாழ்தலால் என்ன பயன்?”

வள்ளுவர் பகர்ந்தார்:

“கொல்லான் புலானை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிருந் தொழும்”

அடடா! என்ன ஒரு  பதில்! புலாலை மறுத்தவர் அல்லவோ அந்தணர்! மன்னுயிர் எல்லாம் தொழும் என்பதில் என்ன ஒரு அர்த்தம் பொதிந்திருக்கிறது!

புலவர்கள் பேச எழுந்தனர். வள்ளுவர் கூறிய பெண்மையைப் போற்றும் கூற்றுகளையும், அந்தணர் சிறப்பையும், கொல்லாமையையும் பற்றி அவர்கள் பெரிதும் பேச கூட்டத்தினர் உன்னிப்பாகக் கேட்டனர்.

மாலை சூரிய அஸ்தமனம் ஆகவே கூட்டம் கலைய மக்கள் உற்சாகத்துடன் தமக்குள் பேசியவாறே வீடு திரும்பினர்

தொடரும்

***

இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள குறட்பாக்களின் எண்கள் : 56,54,1101,913,30,543,260

Tags–பாண்டியன் வள்ளுவர,  நூறு கேள்விகள்! – 3