Written BY S NAGARAJAN
Date: 10 August 2017
Time uploaded in London:- 5-22 am
Post No.4144
Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.
பாரதி இயல்
மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 36
பாரதிதாசன் கவிதைகள்!
ச.நாகராஜன்
பாரதியாருடன் நெருங்கிப் பழகி அவரது கவிதா சந்நிதானத்தில் பெரிதும் ஆழ்ந்து ஈடுபட்டு மகிழ்ந்தவர்; பாரதியின் புகழை இடைவிடாது பரப்பியவர்; பாரதியாருக்குத் தன் அருமையான கவிதைகளினால் புகழாரம் சூட்டியவர் – இத்தனை பெருமைக்கும் உரியவர் பாரதிதாசன்.
புதுவையில் வாழ்ந்த காலத்தில் பாரதியார் பற்றி அதிகாரபூர்வமாக நடந்த நிகழ்ச்சிகளைச் சொல்லும் பாங்கும் வன்மையும் தொடர்பையும் பெற்றவர் பாரதி தாசன் என்பதால் பாரதியார் பற்றிய அவரது எழுத்துக்களும் கவிதைகளும் மிக முக்கியமானவை.
பாரதிதாசன் கவிதைத் தொகுப்புகளில் அவர் பாரதிக்குச் சூட்டிய கவிதை முத்தாரங்களைப் படித்து மகிழலாம்.
அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட கவிதை ‘புதுநெறி காட்டிய புலவன்” என்ற கவிதையாகும்.
அதில் வரும் வரிகள் வைர வரிகள்:
“பைந்தமிழ்த் தேர்ப்பாகன். அவனொரு
செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!
குவிக்கும் கவிதைக் குயில்! இந் நாட்டினைக்
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு;
நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா;
காடு கமழும் கற்பூரச் சொற்கோ;
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்
திறம் பாட வந்த மறவன்; புதிய
அறம் பாட வந்த அறிஞன்; நாட்டிற்
படரும் சாதிப் படைக்கு மருந்து!
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்;
அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்;
என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்’ தமிழால், பாரதி தகுதி பெற்றதும்
தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும்
எவ்வாறென்பதை எடுத்துரைக்கின்றேன்”
இப்படி இனிய கம்பீரமான அழகிய சொற்களால் பாரதியைப் போற்றி மகிழ்ந்தார் பாரதிதாசன்; இந்தப் பாடலைப் பாடி மகிழ்கிறோம் நாம்!
“பாரதி உள்ளம்” என்ற கவிதையில்,
“மேலவர் கீழவர் இல்லை– இதை
மேலுக்குச் சொல்லிட வில்லை”
என்று கூறும் கவிஞர் பாரதியார் ‘நாலாயிரத்தவர் காண, தோலினில் தாழ்ந்தவ்ர் என்று சொல்லும் தோழர் சமைத்ததை உண்பார்’ என்று கூறுகிறார்.
கல்கி ஆரம்ப காலத்தில் பாரதியாரை உலக மகாகவி என்று சொல்ல முடியாது என்று ஆனந்தவிகடனில் எழுதிய போது வெகுண்டெழுந்தார் பாரதிதாசன்.
“ஞானரதம் போலொரு நூல் எழுதுதற்கு
நானிலத்தில் ஆளில்லை; கண்ணன் பாட்டுப்
போல் நவிலக் கற்பனைக்குப் போவதெங்கே?
புதிய நெறிப் பாஞ்சாலி சபதம் போலே
தேனினிப்பில் தருபவர் யார்? மற்றும் இந் நாள்
ஜெய பேரிகை கொட்டடா என் றோதிக்
கூனர்களும் குவலயத்தை அளாவும் வண்ணம்
கொட்டி வைத்த கவிதை திசை எட்டும் காணோம்”
என்று முழங்கி அடுக்கடுக்கான காரணங்களை அள்ளி வீசி மஹாகவி சாதாரண கவிஞர் அல்ல; உலக மகா கவி என்று சான்று காட்டி நிறுவினார்.
பின்னால் கல்கி மனம் மாறி பாரதிக்கு மணி மண்டபம் அமைத்ததை நாம் அறிவோம். அதற்குக் காரணமாய் அமைந்த பாரதி தாசர்களில் முத்ல் தாசனாக பெயரில் மட்டுமல்லாமல் செயலிலும் அமைந்தார் பாரதி தாசன்.
செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற கவிதையில் இந்தத் தலைப்பில் பாரதியார் பாடிய கவிதை எப்படி எதனால் பிறந்தது என்ற கதையைச் சொல்கிறார் பாரதிதாசன்.
மதுரைத் தமிழ்ச்சங்கம் “தமிழ்நாட்டைப் பற்றித் தமிழ்ப்பாக்கள் தந்தால் அமைவான பாட்டுக்களிப்போம் பரிசு” என்று அறிவிப்பை வெளியிட அதனால் அன்பர்கள் பாரதியாரை வேண்ட அவர் எழுதிய கவிதை தான் செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற கவிதை!
திருப்பள்ளியெழுச்சி என்ற பாடலை பாரதியார் ஏன் பாடினார்? அதற்கான விடையைத் தருகிறார் தன் கவிதையில் பாரதிதாசன்.
ஒரு நாள், “பொற்பு மிகும் மடு நீரினில் ஆடிடப் போகும் வழியினில்” நண்பர் ஒருவரைப் பெற்ற முதுவயதன்னையார் அவரை வேண்டிக்கொள்ள, அவர் திருப்பள்ளி எழுச்சி பாடலைப் பாடினார்.
நாடக விமர்சனம் என்ற கவிதையில் பாரதியார் வாழ்க்கையில் நடந்த நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றைக் கவிஞர் தருகிறார்.
ஒரு நாள் அனைவருடனும் ஒரு நாடகம் பார்க்கச் சென்றார் பாரதியார். அதில் விஷமருந்திய மன்னன் ஒருவன், “என்றனுக்கோ ஒருவித மயக்கந்தானே வருகுதையோ” என்று பாடத் தொடங்கினான். இதைக் கேட்ட பாரதியார், மயக்கம் வந்தால் படுத்துக் கொள்ள வேண்டியது தானே! வசங்கெட்ட மனிதனுக்குப் பாட்டா?” என்றார்.
அனைவரும் சிரித்தனர். இயல்புக்கு அல்லாததை ஒரு நாளும் ஏற்றவர் இல்லை கவிஞர் பிரான்.
பாரதியாரைப் பற்றி தெள்ளு தமிழ் வார்த்தைகளில் பாரதி தாசன் எழுதிய கவிதைகள் காலத்தால் அழியாதவை.
பாரதி இயலில் ஆர்வம் கொண்டோர் பாரதியாரைப் போற்றி பாரதிதாசன் இயற்றிய கவிதைகளைப் படித்தால் களியுவகை கொள்வது நிச்சயம்!
***