எலி கடிக்குது நெசவு நூலை ! கவலை கடிக்குது என் மனதை ! –ரிக்வேதம் ( Post No. 9474)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9474

Date uploaded in London – –9  APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

எலி கடிக்குது நெசவு நூலை ! கவலை கடிக்குது என் மனதை !

TRUE HINDUS AND TRUE TAMILS NEVER DELETE THE AUTHOR’S NAME AND BLOG’S NAME

BY LONDON SWAMINATHAN

உலகிலேயயே பழமையான நூல் ரிக்வேதம் ; ஜெர்மன் அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்கா தர திலகரும் கி.மு 4500 க்கு முந்தையது என்று வான சாஸ்திர ரீதியில் காட்டினார்கள். வில்சன் முதலானோர் கி.மு.2000 என்றனர். மாக்ஸ்முல்லர் முதலில் கி.மு 1200 என்று சொல்லி மற்ற அறிஞர்களிடம் செமை அடி வாங்கிய பின்னர் இது கி.மு. 1500 க்கு முந்தையது; எவரும் இதன் காலத்தைக் கணிக்கவே முடியாது என்று சொல்லி ‘ஜகா’ வாங்கினார்.

துருக்கி-சிரியா எல்லையில் பொகஸ்கொய்  (Bogazkoy Inscription) என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட களிமண் படிவ கியூனிபார்ம் கல்வெட்டும் ரிக் வேத தெய்வங்களை அதே வரிசையில் குறிப்பிடுவதால் தொல்பொருட் துறை ஆதாரமும் கிடைத்துவிட்டது. இப்போது சந்தேகப் பேர்வழிகளும் , இந்து மத விரோதிகளும் கூட  கி.மு 1700 என்று கதைக்கத் துவங்கியுள்ளனர்!

ரிக் வேதம் அற்புதமான கவிதைத் தொகுப்பு ஆகும். அதிகமான உவமைகள் தாய்க்கும் தந்தைக்கும் பிள்ளைகளுக்கும் உள்ள அன்பு, பாசம், நேசம் குறித்துப்  பேசுகின்றன .

ஒரு சில உவமைகளை இப்போது படித்து ரசிப்போம்.

***

புலவர்/ ரிஷி காதினன் விசுவாமித்திரன் பாடுகிறார் :–

நதிகள் இடையே உரையாடலாகவும் , இந்திரன் மீதான துதியாகவும் இந்தப் பாடல் அமைந்துள்ளது

“ஏய் , புலவா ! மறந்துவிடாதே;, நீ எங்களுடன் நடத்திய உரையாடலை மறந்து விடாதே! வருங்கால சந்ததியினர் இதைப் போற்றி பாடப்போகிறார்கள் .

“புலவரே , கவிதைகள் /சூக்தங்கள் மீதுள்ள உன் ஆர்வத்தை எங்களுக்கும் சொல் ; மனிதர்களுக்கு இடையில் எங்களைத் தாழ்த்தி, மட்டம்தட்டிப் பாடி விடாதே ; உனக்கு வணக்கம்” . இவ்வாறு நதிகள் சொல்கின்றன.

உடனே விசுவாமித்திரர் பாடுகிறார் …

நதி சகோதரிகளே! உங்களைப் பாடுகிறேன் ; அன்போடு கேளுங்கள்; நான் தொலை தூரத்திலிருந்து தேரில் வந்து இருக்கிறேன். நீங்கள் தாழ்ந்து வணங்குங்கள்  சுலபமாய் உங்களைத் தாண்ட உதவுங்கள் . உங்கள் நீரோட்டம் என் தேர்ச் சக்கரத்தின் அச்சுக்கும் கீழே இருக்கட்டும்.”

உடனே நதிகள் பதில் சொல்கின்றன

“புலவா , நீ சக்கரம் உடைய தேரோடு வந்திருப்பதை நாம் அறிவோம். . நீ தொலைவிலிருந்து வந்ததாகச் சொன்னதையும் நாங்கள் செவி மடுக்கிறோம்

நாங்கள் குழந்தைக்கு  பாலூட்டும் தாய் போலவும் , காதலன் கட்டி அணைக்க வசதியாக தாழத்தணியும் இளம் அழகி போலவும் உனக்கு உதவி செய்வோம்”.

ரிக் வேதம் 3-33-8/9

இப்படி உரையாடல் நீடிக்கிறது

இதுபற்றி வேதங்களுக்கு பாஷ்யம் எழுதிய சாயனர் ஒரு கதையும் சொல்கிறார் :-

இங்கே விபாஸா , கதுத்ரி என்ற இரண்டு நதிகள் பாடப்படுகின்றன. விசுவாமித்திரர் ஒரு மன்னர். அவர் நிறைய செல்வத்தை ஈட்டிக்கொண்டு இவ்விரு நதிகளும் கூடும்  இடத்திற்கு வந்தபோது இதைப் பாடினார் . இது கவிதை அழகு மிகவும் நிறைந்தது .

விபாஸ என்பது இப்போது பியாஸ் என்று அழைக்கப்படுகிறது. இதை வியாஸ நதியின் மரூஉ என்றும் செப்புவர். கதுத்ரி என்பது அமிர்தசரஸ் நகரின் தெற்கில் பாயும் நதியாக இருக்கலாம் என்றும் யூகிப்பர்

கவிதையை முழுதும் படித்து அனுபவியுங்கள் !

***

என் கருத்துக்கள் :–

என்ன அற்புதமான கவிதை ! இயற்கை பற்றிய வருணனையும் காதலன்-காதலி அன்பும், தாய்ப்பால் ஊட்டும் தாயின் அன்பும் உவமைகளாக வருகின்றன. எந்த அளவுக்கு   வேத கால இந்துக்கள் பாசமும் நேசமும் கொண்டனர் என்பதை இந்தப் பாடல் நமக்குத் தெரிவிக்கிறது.

அது மட்டுமல்ல; வேத கால இந்துக்களை நாடோடிகள் என்று எழுதிய அழுக்கு மூஞ்சிகளின் முகத்தில் கரி பூசுகிறது . எல்லாவற்றுக்கும் மேலாக இந்தக் கவிதையை “எதிர்கால மக்கள் பாடப்போகிறார்கள்” என்று நதியின் கூற்றாக புலவன் சொன்னது எவ்வளவு உண்மையாயிற்று! ஹெர்மன் ஜாகோபி, திலகர் கணக்குப்படி 6500 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தக் கட்டுரையை நாம் ரசித்துக் கொண்டு இருக்கிறோம். ‘பொய்யா நாவுடையோர் புலவர்’ என்பது மெய்யாகிப் போயிற்று . இதற்கு இணையான கவிதையை நான் எங்கும் படித்ததில்லை ( லண் டன் சாமிநாதனாகிய நான் 27,000+++ வரிக ளையுடைய 18 சங்க கால நூல்களையும், எட்டு ஆண்டுகளுக்கு, இரு முறை வாசித்துள்ளேன். அவற்றின் மீது நூற்றுக் கணக்கான கட்டுரைகளை இதே பிளாக்கில் எழுதியுமுள்ளேன்)

‘பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து’ என்றும், ‘அம்மையே அப்பா ! ஒப்பிலா மணியே’ என்றும் மாணிக்கவாசகர் பாடியது இந்த வேத மந்திரத்தைப் பயின்றதால் தானோ!

xxxx

ஐயோ ஐயோ எலி கடிக்குது நெசவு நூலை !

இன்னொரு கவிதையையும் பார்ப்போம். இது நெசவாளர் உவமையைத் தருகிறது. வேத கால இந்துக்கள் என்ன தொழில் செய்தனர் என்பது மிக நீண்ட பட்டியல். ஆனால் அவர்களை நாடோடி என்று சொன்னவர்களுக்கு ‘செமை அடி, மிதி அடி’ கொடுக்கும் பாடல் இது. கவலையில் வாடிய ஒரு புலவனின் புலம்பல். நம்மில் எவருக்கேனும் கவலை இல்லாத வாழ்வு இருந்து இருக்கிறதா ?

கவசன்  ஐலுசன் என்ற புலவர் விஸ்வே தேவர்களை — பல கடவுளரை — நோக்கிப் பாடுகிறார் …

ரிக் வேதம் 10-33-3

“என்னுடைய இருபுற விலா எலும்புகளும் சக்களத்திகளைப் போல ( இரட்டை மனைவி) நோவு கொடுக்கின்றன. என் மனமோ வேடனால் அச்சுறுத்தப்பட்ட பறவை போல படபடக்கிறது நோயும் பசியும், வெறுமையும் என்னை வாட்டுகின்றன.; கவலைகள் நூலைக் கடித்துக் குதறும் எலிகளைப் போல என்னை தின்கின்றன. இந்திரனே, மகவானே, சதக்ரதுவே! ; எங்களுக்கு நிறைய செல்வத்தைத் தந்து ஒரு தந்தை போல கவனித்துக்கொள்.” 

இதைப் படிக்கும்போது சங்க காலக் கவிதைகளில் வரும் வறுமையில் வாடிய பாணர்கள் நினைவுக்கு வரும். எல்லா காலங்களிலும் மனித குலத்தில் ஏற்ற தாழ்வுகள் இருந்தன. கிருஷ்ண பரமாத்மா மாளிகையில் வசித்தபோது, அவருடைய கிளாஸ்மேட்  classmate குசேலர்/ சுதாமா குடிசையில் வறுமையில் சோற்றுக்கு ‘லாட்டரி அடித்ததை’ , ‘தாளம் போட்டதை’ நாம் அறிவோம். அதே போல இந்த நெசவாளர்  காலனி குடும்பமும் வறுமையில் வாடிற்று ; அப்பாவைப் போல  என்னைக் கவனித்துக் கொள் என்ற உவமை அக்கால குடும்பங்களில் நிலவிய  பாச பந்தங்களை எடுத்துக் காட்டுகிறது .

இப்படி எவ்வளவோ கவிதைகள் உள்ளன  கவிதை வேட்டையைத் தொடர்வோம் .

நெசவாளர் இடையே, வறுமையில் வடிய புலவர் போலும் அல்லது அவர்களுடைய வறுமையை பிரதிநிதித்வப் படுத்த(to represent the poor weavers)  பாடினார் போலும் !

கவலைங்களும் வறுமையும் மறையட்டும்!!

–subham–

TAGS- எலி, கடிக்குது ,நெசவு, கவலை ,ரிக்வேதம், நூல், மனது ,