ALL PICTURES WERE TAKEN BY LONDON SWAMINATHAN DURING HIS VISIT TO NERUR IN 2019
WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,472
Date uploaded in London – – 22 DECEMBER 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஸ்ரீ சதாசிவ ப்ரஹ்மேந்திராள் – 2
ச.நாகராஜன்
தஞ்சாவூரில் இரு முஸ்லீம் சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் சதாசிவ ப்ரஹ்மேந்திராளின் பெருமையை அறிந்து அவர் முகமது நபியால் அனுப்பப்பட்டவர் என்று கருதினர். அவரைச் சந்தித்து அவரது அருளாசியையும் அவர்கள் பெற்றனர். தங்களது மத வழக்கப்படி அல்லாவை எப்படித் தொழுவார்களோ அதே போலவே சதாசிவ ப்ரஹ்மேந்திராளையும் அவர்கள் தொழுவார்கள். அவருடனேயே அவர்கள் இருந்து காலத்தைக் கழித்தனர். அவரது அருளைப் பெற்றதால் பெரிய மகான்களாக அவர்கள் ஆனார்கள். அவர்களை இரட்டை மஸ்தான் என அனைவரும் அழைப்பர். அவர்கள் இறந்தபின் அவர்கள் இருவருக்கும் ஒரே இடத்தில் சமாதி எழுப்பப்பட்டது.. அது இரட்டை மஸ்தான் சமாதி என்று அழைக்கப்பட்டு வருகிறது.
ஒரே சமயத்தில் அவர் மூன்று இடங்களில் தோன்றிய சம்பவ்ம் ஒன்று உண்டு. திருச்செந்தூரில் பாம்பு கடித்து இறந்த மணப்பெண்ணை அவர் உயிர்ப்பித்தார்; அதே சமயம் தஞ்சாவூர் அருகே கொதித்துக் கொண்டிருந்த வெல்லப்பாகைத் தண்ணீர் அருந்துவது போல கையால் மொண்டு குடித்துக் கொண்டிருந்தார். அதே சமயம் சிதம்பரத்தில் தரபாடித் திருவிழாவில் ஆனந்தமாக ஆடிப்பாடிக் கொண்டிருந்தார்.
1712-1718இல் தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரின் அமைச்சரான மல்லாரி பண்டிட் அவரைச் சந்தித்து மன்னருக்கு மகன் பிறக்கவில்லை என்றும் அவரது அருளாசி வேண்டும் என்றும் வேண்ட அவர் ஆசி வழங்கி ஆத்ம வித்யாவிலாஸம் என்ற நூலையும் அவருக்கு அளித்தார்.
மௌனமாகவே தன் நாட்களைக் கழித்து வந்த போது ஒரு நாள் திருவிசைநல்லூர் ஐயாவாள் உங்கள் குரு பேசத்தானே கூடாது என்றிருக்கிறார், இறைவனைத் துதிக்கக் கூடாது என்று சொல்லவில்லையே என்றார். அந்தக் கணத்திலிருந்து இறைவன் மீது அற்புதமான பல கிருதிகளை சதாசிவர் இயற்றிப் பாடலானார். பிரபலமான அவரது பாடல்கள் ஏராளமான சங்கீத கச்சேரிகளில் இன்றும் இடம் பெற்று வருகின்றன. அவரது பாடல்கள் பரமஹம்ஸ அல்லது ஹம்ஸ என்ற முத்திரையைக் கொண்டிருக்கும். பஜரே யதுநாதம், பஜரே கோபாலம், ஸ்மர வாரம் சேதஹ போன்ற பாடல்களை எடுத்துக் காட்டாகச் சொல்லலாம். சாமா ராகத்தில் அமைந்த மானஸ சஞ்சரரே மிகவும் பிரபலமான ஒரு பாடல்.
ஏராளமான அபூர்வ நூல்களையும் அவர் இயற்றியுள்ளார். யோகசூத்திர விருத்தி, பிரும்ம சூத்திர விருத்தி, சித்தாந்த கல்பவல்லி, சிவமானஸ பூஜை, ஆகிய நூல்களைக் குறிப்பாகச் சொல்லலாம். குரு ரத்தினமாலிகை என்ற அவரது நூல் காமகோடி பீடத்தை அலங்கரித்த ஆசார்யர்களின் திவ்ய சரிதங்களையும் பாரத தேசத்தில் அவ்வப்பொழுது ஆண்ட மன்னர்களைப் பற்றியும் கவிஞர்களைப் பற்றிய செய்திகளையும் தருகிறது. நவ மணி மாலா என்ற நூல் அவரது குருவான பரமசிவேந்திர சரஸ்வதியைப் போற்றி எழுதப்பட்ட ஒன்றாகும். ஆத்ம வித்யா விலாஸம் என்ற நூல் 62 செய்யுள்களைக் கொண்டுள்ள ஒரு சம்ஸ்கிருத நூல்.
திருவிசைநல்லூரில் வாழ்ந்து வந்த சதாசிவர் அங்கிருந்து நெரூருக்குச் சென்றார். நெரூர் கரூர் நகரிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தவம் செய்யவும் தனித்து வாழவும் உகந்த இடமாக அது அமைந்திருந்தது. அது மட்டுமின்றி அங்குள்ள ஆறு தெற்கு நோக்கிப் பாய்வதால் அது காசிக்குச் சமமாகக் கருதப்பட்டது.
ஸ்ரீ சதாசிவ ப்ரஹ்மேந்திராள் 1755ஆம் ஆண்டு மக நக்ஷத்திரத்தன்று வைசாக சுக்ல தசமியில் சமாதி நிலை எய்தினார். தான் சமாதி அடைவதற்கு முன்னர் அங்கு சமாதியில் ஒரு வில்வ மரம் தழைக்கும் என்று அவர் கூறினார். காசியிலிருந்து ஒரு அந்தணர் லிங்கம் ஒன்றைக் கொண்டு வருவார். அன்றே நமக்கு நிர்யாணம் ஏற்படும். அகண்ட காவிரியின் தென்கரையில் நெரூரில் சமாதி வைத்து வில்வ மரத்தையும் அங்கு வளரச் செய்யுங்கள் என்றார். அதே போலவே நடந்தது. அதே போல சமாதியிலிருந்து குறிப்பிட்ட தூரத்தில் லிங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. அந்த பாணலிங்கத்தை புதுக்கோட்டை விஜய ரகுநாத தொண்டைமான் ஸ்தாபித்தார். அங்கு ஒரு கோவிலும் அமைக்கப்பட்டது.
அவர் மூன்று இடங்களில் சமாதி அடைந்ததாகச் சிலரும் ஐந்து இடங்களில் சமாதி அடைந்ததாகச் சிலரும் கூறுவர்.
தமிழ் நாட்டில் உள்ள நெரூர், மதுரையிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மானாமதுரை மற்றும் பாகிஸ்தானில் உள்ள கராச்சி ஆகிய மூன்று இடங்களில் அவர் சமாதி அடைந்தார்.
மானாமதுரையில் வைகை ஆற்றங்கரையில் உள்ள மானாமதுரை சிவன் கோவிலின் பின்புறம் ஸ்ரீ சதாசிவ ப்ரஹ்மேந்திராளின் சமாதி உள்ளது. அதிஷ்டானத்தின் மீதுள்ள கல் சிற்பத்தில் காயத்ரி, காமதேனு, திரிசூலம் ஆகிய மூன்றும் செதுக்கப்பட்டுள்ளன.
இது தவிர நர்மதா நதிக்கரையில் உள்ள ஓங்காரம் என்ற இடத்தில் அவர் வாழ்ந்ததாகவும் அங்கேயே சமாதி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
காசியிலும் அவர் சமாதி அடைந்ததாகவும் அங்கும் பூஜைகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
தான் வாழ்ந்த காலத்தில் அவர் பல இடங்களிலும் விக்ரஹங்கள் மற்றும் யந்திரங்களைப் பிரதிஷ்டை செய்து கொண்டிருந்தார். பெரம்பலூர் அருகில் உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் அவர் ஸ்ரீ சக்ரம் ஒன்றை ஸ்தாபித்தார்.
இவர் அருளிய கீர்த்தனைகள் மற்றும் நூல்களில் விவரிக்கப்பட்டிருக்கும் பிரும்ம லக்ஷணங்கள் அனைத்தும் இவரிடம் காணப்பட்டதால் அவர் சதாசிவ பிரம்மம் என்ற பெயரை அடைந்து போற்றப்படுகிறார்.
அவருடைய பாதுகைகள் மோஹனூர் அசல தீபேஸ்வரர் சிவாலயத்தில் உள்ளது. இது நெரூரிலிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
மிகப் பெரும் மகானான இவரைப் பற்றி ஆதார பூர்வமான வரலாற்றுக் குறிப்புகளுடனான சரித்திரம் முழுமையாக வெளிவரவில்லை என்பது ஒரு குறையே!
ஸ்ரீ சதாசிவ ப்ரஹ்மேந்திராளை போற்றுவோமாக! அவர் அருளைப் பெறுவோமாக!!
நன்றி வணக்கம்!
tags– நெரூர்,சதாசிவ , ப்ரஹ்மேந்திராள் -2,