திருநெல்வேலி தந்த ஜோதிட விற்பன்னர்

பலதீபிகா அருளிய மந்த்ரேஸ்வர்!

By .நாகராஜன்

திருநெல்வேலி தந்த ஜோதிட விற்பன்னர் 

அற்புதமான ஜோதிட விற்பன்னராக 13ம் நூற்றாண்டில் திகழ்ந்தவர் மகாமுனிவர் மந்த்ரேஸ்வரர். இவர் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள பஞ்சகிரி என்ற கிராமத்தில் பிறந்தார்.இவரது இயற்பெயர் மார்க்கண்டேய பட்டர். இந்த கிராமத்தில் இருந்த சிவாலயத்தில் உள்ள அம்பிகையின் பெயர் சுகந்த குந்தளாம்பாள்.இறைவனின் திருநாமம் குலசேகர பெருமாள்! சுகந்த குந்தளாம்பாளை இடைவிடாமல் துதித்து வந்த மந்த்ரேஸ்வரர் சகல கலைகளிலும் சிறந்த விற்பன்னரானார். ஜோதிடத்தில் தலை சிறந்த வித்தகரானார்.

 

வாழ்க்கையின் பின் பகுதியில் மகாமுனிவராகத் திகழ்ந்த இவர் பாரதமெங்கும் பயணம் மேற்கொண்டார். பத்ரிகாசிரமம், மிதிலா ப்ரதேசம் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று பெரும் ஞானம் பெற்றார். சாஸ்திரம், வேதாங்கம் உள்ளிட்ட அனைத்திலும் வல்லவரானதால் மந்திரங்களில் சித்தி அடைந்த சித்தரானார். ஆகவே மந்த்ரேஸ்வர் என்ற பெயரைப் பெற்றார். இறுதி நாட்களில் திருநெல்வேலிக்கே திரும்பி வந்தார். யோக முறைப்படி தன் உயிரை நீத்து சமாதி அடைந்தார்.

பலதீபிகா

இவர் எழுதிய பலதீபிகா என்ற ஜோதிட நூல் ஜோதிடர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இன்றும் திகழ்கிறது. ஜோதிட ஆர்வலர்கள் விரும்பிப் படிக்கும் சிறந்த நூலாகவும் இது அமைகிறது. இந்த நூலில் அவர் வராஹமிஹிரர்,அத்ரி. பராசரர், சாணக்யர், மயன், யவனாசார்யர், சத்யாசார்யர் உள்ளிட்ட பெரும் மேதைகள் கூறுவதை மேற்கோள் காண்பிப்பதிலிருந்தே அனைத்து நூல்களையும் படித்துக் கரை கண்ட மாமேதை அவர் என்பதை எளிதாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.

பலதீபிகா ஒரு ஜோதிடக் களஞ்சியம்.இந்த நூலில் கிரகங்களின் குணாதிசயங்கள், ராசி மண்டலப் பிரிவுகள், ஷட்பல நிர்ணயம், தொழில் மற்றும் ஆயுளை நிர்ணயிக்கும் விதம்யோகங்களைக் கண்டறியும் முறைகள், மஹா ராஜயோக விளக்கம், சூரியன் உள்ளிட்ட நவகிரகங்களின் பலாபலன்கள், மேஷத்திலிருந்து மீனம் முடிய உள்ள லக்னங்களின் பலன்கள், ஏழாம் இடமான களத்ரபாவம், பெண்களின் ஜாதகங்கள், குழந்தைப் பேறு, ஜனனம், மரணம், நோய்கள் ஆகியவை ஏற்படும் விதம், பாவங்களின் பலன்களை அறிந்து சொல்லும் முறை,கிரக சேர்க்கைகளுக்கான பலன்கள், தசா புக்தி, அந்தரங்களின் பலன்கள், அஷ்டக வர்க்க பலன்கள் உள்ளிட்ட அனைத்து ஜோதிட விஷயங்களும் தெளிவுற அழகாக விளக்கப்பட்டுள்ளன.இருபத்தியெட்டு அத்தியாயங்கள் உள்ள இந்த நூலில் கடைசி அத்தியாயத்தில் ஆறு ஸ்லோகங்கள் உள்ளன.இதில், தான் இயற்றிய பலதீபிகாவில் என்னென்ன விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன என்பதைச் சொல்கிறார்.பின்னர் ஐந்து மற்றும் ஆறா¡ம் ஸ்லோகத்தில் பின் வருமாறு கூறுகிறார்:

ஸ்ரீசாலிவாடி ஜாதேன மயா மந்த்ரேஸ்வரேன வை                           தைவஜ்ஞேன த்விஜாக்ரேன சத்தாம் ஜ்யோதிர்வித்யாம் முதே                 சுகுந்தளாம்பாள் சம்பூஜ்ய சர்வாபீஷ்ட ப்ரதாயினீம்                                  தத் கடாக்ஷ விசேஷன க்ரிதா யா பலதீபிகா

இதன் பொருள் :-சாலிவாடி கிராமத்தில் பிறந்த மந்த்ரேஸ்வரராகிய நான் ஜோதிடர்களின் மகிழ்ச்சிக்காக சுகுந்தகுந்தாளாம்பாளை வணங்கி அவள் ஆசியுடன் இந்த நூலை இயற்றியுள்ளேன். அவள் அனைவருக்கும் ஆசி நல்கட்டும்.

திருநெல்வேலி என்பதன் வடமொழியாக்கமே ஸ்ரீசாலிவாடி என்பதாகும் ஸ்ரீ என்றால் திரு; சாலி என்றால் நெல்; வாடி என்றால் தோட்டம் ஆக திருநெல்வேலியை அழகுற ஸ்ரீசாலிவாடி என்று மகான் மந்த்ரேஸ்வரர் குறிப்பிடுகிறார்.

புத்திரப்பேறு அடைய பரிகாரங்கள் 

இந்த நூலின் விசேஷமே இது அனைத்து விஷயங்களையும் கொண்டுள்ளது என்பது தான். மனித குலத்தின் மீது மிகவும் பரிவு கொண்ட மகான் மந்த்ரேஸ்வர் என்பதற்கு ஆதாரமாக அவர் கூறும் பல பரிகாரங்களைச் சுட்டிக் காட்டலாம்.

 

உதாரணத்திற்கு ஒன்றை மட்டும் பார்க்கலாம். குழந்தைப் பேறு இல்லாதவர்களின் துக்கம் சொல்லி மாளாது. அவர்கள் துயர் நீங்கி புத்திர பாக்கியம் பெற பன்னிரெண்டாம் அத்தியாயம் 24ம் சுலோகத்தில் வழி கூறுகிறார்!

 

ராமேஸ்வரத்தில் புனித நீராடுவது, புனித நூல்களைப் படிப்பது,சிவனைத் துதிப்பது,விஷ்ணுவை உரிய முறையில் ஆராதிப்பது, தர்மங்களை தவறாது செய்வது,  இறந்தவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடன்களைச் செய்வது, நாகதேவதையை பிரதிஷ்டை செய்வது ஆகிய இவை பிள்ளைப் பேறு அடைவதற்கான வெவ்வேறு வழிமுறைகளாகும்.

இப்படி மனிதாபிமானத்தை உள்ளடக்கி இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களையும் அறிய வழி வகுக்கும் நூலை இயற்றியவர் மந்த்ரேஸ்வர் என்பதை உணர்ந்து அவரை வணங்கி அவர் நூலைப் படிப்போர் ஜோதிட திலகமாக ஆவது உறுதி!

This is part of Ancient Astrologers Series written by my brother S Nagarajan, Engineer,Bangalore. More of his articles are available in this blog .Please read them if you are interested in Astrology and Astronomy: swami

************************