
Post No. 8810
Date uploaded in London – – –14 OCTOBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஒவ்வொரு திங்களன்றும் லண்டன் நேரப்படி மதியம் 2 மணிக்கும் இந்திய நேரப்படை மாலை 6.30 மணிக்கும் ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சிக்கு (facebook.com/gnanamayam) அனைவரையும் அழைக்கிறோம். இதில் கேள்வி- பதில் நிகழ்ச்சியும் இடம் பெறுகிறது. 12-10-2020 திங்கள்கிழமையன்று நடைபெற்ற கேள்வி-பதில் நிகழ்ச்சியில் இடம் பெற்ற கேள்வியும் பதிலும் இங்கு தரப்படுகிறது.
பகவத் கீதையை தமிழில் படிக்க எந்த நூல் சிறந்தது?

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்.
பகவத் கீதையை தமிழில் படிக்க எந்த நூல் சிறந்த நூல் என்பது கேள்வி.
தமிழில் பகவத்கீதையை விளக்க பல சிறந்த நூல்கள் உள்ளன.
மஹாகவி பாரதியார் பகவத் கீதையில் தோய்ந்தவர். அதன் முழு அர்த்தத்தையும் நன்கு கிரஹித்தவர்.
இதை அவரது பல பாடல்களிலும் காணலாம்.
பகவத் கீதையின் சாரத்தை அவர் இரண்டே இரண்டு வரிகளில் தந்து விடுகிறார்.
பக்தி பண்ணி பிழைக்கச் சொன்னான்
பலனை எண்ணாமல் உழைக்கச் சொன்னான்.
மாம் அனுஸ்மர ; மாம் ஏகம் சரணம் வ்ரஜ

என்னையே தொடர்ந்து நினை; என் ஒருவனையே சரணமாக அடை என்பது கீதையில் கண்ணன் வாக்கு.
கர்மண்யேவாதிகரஸ்தே மா ஃபலேஷு கதாசன – கர்மம் செய்வதிலே தான் உனக்கு அதிகாரம்; அதன் பயனில் ஒருபோதும் இல்லை என்பதும் கண்ணபிரானின் அருள்வாக்கு. இதையே மேலே கண்ட இரு வரிகளில் மஹாகவி தந்தார்.
அது மட்டுமல்ல.
செய்தல் உன் கடனே – அறம்
செய்தல் உன் கடனே – அதில்
எய்துறும் விளைவினில் எண்ணம் வைக்காதே
என்று வேறு விளக்கமாக அவர் இன்னொரு பாடலில் எடுத்துரைத்திருக்கிறார்.
சத்ரபதி சிவாஜி தனது சைநியத்தாருக்குக் கூறியது என்ற நீண்ட பாடலில் பகவத்கீதையின் ஆரம்பத்தை அப்படியே இனிய சொற்களால் தரும் பாரதியார், “பேடிமை அகற்று நின் பெருமையை மறந்திடேல்
ஈடிலாப் புகழினோய் எழுகவோ எழுக” என்ற கீதாசார்யனின் வரிகளை முன் வைக்கிறார். “க்லைப்யம் மாஸ்ம கம: பார்த்த. உத்திஷ்ட பரந்தப” என்ற வார்த்தைகளை இப்படி மெய் சிலிர்க்கும் வண்ணம் தருகிறார் அவர்.
ஆக இப்படி பகவத் கீதையில் தோய்ந்த அவரது விளக்கவுரை படிக்கப் படிக்கத் திகட்டாதது. கீதைக்கு அவர் எழுதிய முன்னுரை அபாரமான, அற்புதமான முன்னுரை. ஆகவே பாரதியாரின் பகவத் கீதை நூலை முதலாவதாகப் படிக்கலாம்.
கீதா பிரஸ் கோரக்பூர் பகவத் கீதைக்கு ஆற்றி வரும் அரிய தொண்டு சொல்லில் விளக்க முடியாத ஒன்று.
பகவத் கீதை புத்தகத்தை பல லட்சம் பிரதிகள் அச்சடித்து விநியோகித்து அது ஆற்றி வரும் பணி மெய் சிலிர்க்க வைக்கும் அரும் பணி.
கீதா பிரஸை நிறுவிய ஸ்ரீ ஜயதயால் கோயந்தகா அவர்கள், பகவத்கீதைக்கு வழங்கியுள்ள சிறந்த ஆங்கில விளக்கவுரையின் சிறப்பைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. இவரது கீதை பற்றிய ஸ்ரீமத் பகவத் கீதை என்ற நூல் கீதை ஸ்லோகத்தின் மூலம், தமிழில் பதவுரை, பொழிப்புரை ஆகியவற்றுடன் கீதா பிரஸ் வெளியீடாக கிடைக்கிறது. இதை உடனடியாக வாங்கிப் படிக்கலாம்.
அடுத்து காலத்திற்கேற்ப அற்புதமாக கீதையின் சாரத்தை மிக அழகாக விளக்கி சுவாமி சித்பவானந்தர் எழுதிய ஸ்ரீமத் பகவத் கீதை என்ற நூல் குறிப்பிடத்தகுந்தது. ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் அருமையான விளக்கவுரை; எளிய அனைவருக்கும் புரியும்படியான தமிழ்.

திருச்சியை அடுத்துள்ள திருப்பராய்துறையில் அமைந்துள்ள ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் வெளியீடாக அமைந்துள்ள இந்த நூலை உடனடியாக வாங்கலாம்; ஏனெனில் இது ஒரு வாழ்க்கைத் துணைவன்.#
அடுத்து சென்னை ராமகிருஷ்ண மட வெளியீடாக அமைந்துள்ள அண்ணா அவர்களின் பகவத் கீதை புத்தகம் குறிப்பிடத் தகுந்தது. பாரம்பரியத்துடனான அர்த்தத்தை இதில் காணலாம். அண்ணா சுப்ரமண்ய ஐயர் அவர்களின் எந்த நூலும் நல்ல நூலே.
அடுத்து சென்னை லிப்கோ நிறுவனத்தார் வெளியிட்டுள்ள பகவத் கீதை நூலானது, மூல ஸ்லோகத்தையும அதன் கீழ் அர்த்தத்தையும் தரும் ஒரு நல்ல நூல். இதில் தமிழுரையைத் தருபவர் வித்வான் ஸ்ரீ உ.வே. கீழாத்தூர் ஸ்ரீநிவாஸாச்சாரியார் அவர்கள்.
பகவத் கீதை ஒவ்வொரு அத்தியாயத்தைப் படிப்பதால் ஏற்படும் பயன் என்ன என்பதை பத்ம புராணம் விளக்குகிறது. அதில் கூறப்படும் கதைகளும் இந்த நூலில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் இணைக்கப்பட்டுள்ளன.
பகவத் கீதை பற்றி வினோபா பாவே அவர்களின் நூல் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். 1932ஆம் ஆண்டு வினோபா பாவே மஹாராஷ்டிர மாநிலத்தில் தூலியா என்ற இடத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் தனது சக அரசியல் கைதிகளுக்கு பகவத் கீதை என்ன சொல்கிறது என்பதை சொற்பொழிவுகள் மூலம் விளக்கி வந்தார். மராத்தி மொழியிலிருந்து இது தமிழாக்கம் செய்யப்பட்டு கீதைப் பேருரைகள் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூலில் அருமையான உதாரணங்களும், விளக்கங்களும் அடங்கியுள்ளன. இதுவும் படிக்க வேண்டிய ஒரு நல்ல நூலே.
இன்னும் பல ஆசாரியர்கள் தம் தம் கோணத்தில் கீதையை விளக்க எழுதியுள்ள நூல்களும் பல உள்ளன.

ஸ்ரீ சத்யசாயிபாபா, ஸ்வாமி விவேகானந்தர், மஹரிஷி அரவிந்தர், சுவாமி சின்மயாநந்தர், சுவாமி ஸ்ரீ பிரபுபாதா உள்ளிட்ட ஏராளமானோரின் உரைகளும் ஆங்கிலத்தில் உள்ளன. இவற்றையும் அவரவர் தம்தம் வசதிக்குத் தக வாங்கி கீதை பற்றிய நூலகத்தையே வீட்டில் அமைத்து கீதையில் ஆழ்ந்து மூழ்கலாம்.
ஜய பகவத் கீதே ஜய பகவத் கீதே என்று பாடி கீதையை ஆராதித்து கீதை காட்டும் பாதையில் கண்ணனையே சரணாகதியாக அடையலாம்.
நன்றி, வணக்கம்.
tags – பகவத் கீதை, தமிழில், தமிழ்
***