பாண்டிய மன்னனின் அளவற்ற பக்தி!

பக்திக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவன் வரகுண பாண்டியன். இவனுடைய கதையைக் கேட்டால் இப்படியும் பித்துப் பிடித்தவர் போல பக்திமான் இருக்க முடியுமா என்று வியக்கத் தோன்றும். பாகவதத்தில் பக்திக்கு இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. நல்ல பக்தனுக்கு ஒன்பது வகையான செயல்கள் உண்டு. இதையே நாரத பக்தி சூத்திரம், அப்பர் பாடல் ஆகியவற்றிலும் காணலாம். ஏறத்தாழ காதல் வயப்பட்ட ஒரு இளைஞனோ யுவதியோ எப்படி இருப்பரோ அப்படி பக்திமானும் இருப்பார். ஆனால் காதலில் கிடைப்பது உடல் சம்பந்தமான சிற்றின்பம். பக்தியில் கிடைப்பாதோ ஆன்மா சம்பந்தமான நிரந்தரமான பேரின்பம்.

 

பாகவத புராணத்தில் வரும் ஸ்லோகம் இதோ:

ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாத சேவனம்

அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் ஸக்ய ஆத்மநிவேதனம் (பாகவதம் 7-5-23)

 

அதாவது கடவுளின் நாமத்தைக் 1.கேட்டல், பக்திப் பரவசத்துடன் 2.பாடுதல், கடவுளின் பெயரை சதாசர்வ காலமும் 3.நினைத்தல், அவனுடைய பாதாரவிந்தங்களில் 4.பணிவிடை செய்தல், பூவாலும் இலையாலும் பொன்னாலும் மணியாலும் அவனை 5.அர்ச்சித்தல், அவனை சிரம் மேற் கைகூப்பி 6.வணங்குதல், அவனுக்கு 7.அடிமைபோல பணியாற்றல், அவனை உயிருக்குயிரான 8.நண்பனாகக் கருதல், இருதயபூர்வமாக 9.தன்னையே அர்ப்பணித்தல் ஆகிய ஒன்பது செயல்களைப் பக்தனிடம் காணலாம். இவைகளை ஆண்டவனுக்கு மட்டுமின்றி இறையடியார்க்கும் செய்வர்.

இந்தக் கருத்துகளை அப்பர் பெருமான் தனது தேவாரப் பாடலில் அப்படியே வடித்துள்ளார்:

 

அப்பர் தேவாரம்

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்

மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்

பின்னம் அவளுடைய ஆரூர் கேட்டாள்

பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்;

அன்னையும் அத்தனையும் அன்றே நீத்தாள்

அகன்றாள் அகலிடத்தே ஆசாரத்தை

தன்னை மறந்தாள் தன் நாமங் கெட்டாள்

தலைப் பட்டாள் நங்கை தலைவன் றாளே

 

சங்க இலக்கியத்தில் அகப்பாட்டுகளைப் படித்தோருக்கு காதலன், காத்லியின் நிலை விளங்கும். அப்பர் கூறிய பக்திப் பித்தை, பைத்தியத்தை அங்கும் காணலாம்.

இந்த குணநலன்களை வரகுண பாண்டியன் விஷயத்தில் நன்கு பார்க்கமுடிகிறது. இது தமிழர்களுக்குப் புதிதல்ல. முல்லைக் கொடிக்குத் தேர் ஈந்தான் பாரி வள்ளல், மேகத்தைக் கண்டு மகிழ்ச்சியாக ஆடிய மயிலைக் கண்டு குளிரால் நடுங்குகிறது என்று போர்வை அளித்தான் பேகன். ராமாயாண உபந்யாசம் கேட்டு உணர்ச்சிவசப்பட்ட குலசேகரன், தனது படைகளை உடனே ராமருக்கு உதவியாக அனுப்ப உத்தரவிட்டான். இது போல புகழ்சோழன், ஏனாதிநாயனார் கதைகளிலும் பல நிகழ்ச்சிகளைப் படிக்கிறோம். மேம்போக்காகப் பார்த்தால் அவர்களுடை செயல்கள் அறிவிழந்தவர் செயல் போலத் தோன்றும். ஆழமாகப் பார்த்தால் அவர்களுடைய ஆத்மார்த்த பக்தி விளங்கும். இன்றும் கூட அரசியல் தலைவர்களுக்காகவும், குருவுக்காகவும் உயிர்கொடுக்கும் தொண்டர்களைக் காண்கிறோம். அந்தக் கண்ணோட்டத்தோடு வரகுணன் கதைகளை அணுகவேண்டும்.

ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த வரகுணன் மாபெரும் சிவ பக்தன் என்பதை பட்டினத்தார் பாடல், மாணிக்க வாசகரின் திருக்கோவையார், தளவாய்புரம் செப்பேடுகளில் காண்கிறோம்:

 

தளவாய்புரம் செப்பேடு

 “மற்றதற்கு மகனாகிய கொற்றவனெங் கோவரகுணன்

பிள்ளைப் பிறைச் சடைக்கணிந்த பினாக பாணி எம்பெருமானை

உள்ளத்தினிலிதிருவி உலகங் காக்கின்ற நாளில்”

******

வரகுணனாம் தென்னவன் ஏத்து சிற்றம்பலத்தான் (திருக்கோவை 306)

******

பன்னிரு திருமுறைகளில் பதினோராவது திருமுறையாக அமைந்தது

‘திருவிடைமருதூர் மும்மணிக்கோவை’. இதில் வரகுணன் செய்த வியப்பான பக்தி விஷயங்கள் வருகின்றன:

 

1.ஒரு திருடனைக் கையும் களவுமாகப் பிடித்து வந்து, வரகுண பாண்டிய மன்னர் முன்னர் நிறுத்துகின்றனர் காவல்காரர்கள். திருடனின் நெற்றியில் விபூதி இருப்பதைப் பார்த்து விடுகிறார். உடனே அவனை விடுதலை செய்ய உத்தரவிடுகிறார்.

2. இரவில் நரிகள் ஊளை இடுகின்றன. அவை அனைத்தும் அரன் நாமத்தை உச்சரிப்பதூபோல இவர் காதில் விழவே அனைத்துக்கும் சால்வை போர்த்த உத்தரவிடுகிறார்!

3.குளத்தில் வாழும் தவளைகள் கத்துகின்றன. அவை அனைத்தும் சிவன் பெயரை உச்சரிப்பதாக எண்ணி குளத்தில் பூவையும் பொன்னையும் தூவ உத்தரவிடுகிறார்.

4.கோவிலில் விளக்கு ஏற்ற எண்ணை தேவை. அதற்காக எள்ளைக் காயவத்திருந்தனர். அதை ஒருவன் தின்றுகொண்டிருந்தான். அதைப் பார்த்த வரகுணனுக்கு ஒரே கோபம். சிவன் சொத்தை இப்படித் தின்னால் உனக்கு என்ன நேரிடும் தெரியுமா? என்று கேட்கவே அவன் பட்டென்று பதில் தந்தான்:’’ ஓ, தெரியுமே, நான் செக்கு மாடாகப் பிறப்பேன். சிவன் கோவிலுக்கு எண்ணை ஆட்டிக் கொடுத்த புண்ணியம் கிடைக்கும்”’. இதைக் கேட்ட அடுத்த நொடியில் எள்ளைத் துப்பசெய்து அதை விழுங்கினான் மன்னன். இப்போது எள்ளித் தின்னவன் கேட்டான், ஓ மன்னரே, நீவீர் ஏன் எள்ளைத் தின்றீர்? என்றான். மன்னரும் பட்டென்று பதில் தந்தார், இது தெரியாதா எள்ளை ஆட்டி எண்ணை எடுக்க இரண்டு மாடுகள் தேவையே. நான் தான் இரண்டாவது மாடு”. இது வரகுணனின் அதீத பக்தியைக் காட்டுகிறது.

5.ஒருநாள் சிவன் கோவில் வளாகத்தில் ஒரு மண்டை ஓடு கிடந்தது. அதைப் பார்த்து மன்னன் வணங்கினான். என்ன புண்ணியம் செய்தனை, இப்படி சிவன் கோவிலில் தலை கிடக்க, எனக்கும் இக்கதி வரவேண்டும் என்றான் வரகுணன்.

6.வேப்பம் பழங்கள் கீழே விழுந்து பாதி மணலிலும் பாதி வெளியிலும் கிடந்தன. அவைகள் அனைத்தும் சிவலிங்கம் போல தோன்றவே, அவைகளுக்கு விதானம் அமைக்க உத்தரவிட்டான்.

7. ஒருநாள் நாயின் மலத்தைக் கோவிலில் பார்த்தவுடன் மன்னன் என்பதையும் மறந்து, தானே அதைச் சுத்தப்படுத்தினான்.

8.மன்னர்கள் பல நாடுகளின் மீது படை எடுத்து வெற்றி கிடைத்தால் தோல்வி அடைந்த நாட்டில் அந்தப்புரத்தில் உள்ள பெண்களை மன்னரிடம் ஒப்புவிப்பர். அவன் விரும்பிய பெண்களை மணப்பான். இப்படி வேற்று நாட்டுப் பெண்கலை அவனிடம் அழைத்து வந்தபோது இவ்வளவு அழகானவர்கள் சிவன் கோவில் சேவைக்கே உரியவர்கள் என்று அனுப்பிவைத்தான் வரகுண பாண்டியன்.

இதோ பட்டினத்தார் பாடலில் இதைப் படியுங்கள்:

 

“வெள்ளை நீறு மெய்யிற்கண்டு

கள்ளன் கையிற் கட்டவிழ்ப்பித்தும்

ஓடும் பல்நரி ஊளை கேட்டு அரனைப் பாடின

என்று படாம்பல அளித்தும்

குவளைப் புனலில் தவளை அரற்ற

ஈசன் தன்னை ஏத்தின என்று

காசும் பொன்னும் கலந்து தூவியும்

வழிபடும் ஒருவன் மஞ்சனத்தியற்றிய

செழுவிடை எள்ளை தின்னக் கண்டு

பிடித்தலும் அவன் இப் பிறப்புக்கென்ன

இடித்துக்கொண்டவன் எச்சிலை நுகர்ந்தும்

மருதவட்டத் தொருகனிக் கிடந்த

தலையைக் கண்டு தலையுற வணங்கி

உம்மைப்போல எம் இத்தலையும்

கிடத்தல் வேண்டுமென்று அடுத்தடுத்திரந்தும்

கோயில் முற்றத்து மீமிசை கிடப்ப

வாய்த்ததென்று நாய்க்கட்டம் எடுத்தும்

காம்பவிழ்த்துதிர்ந்த கனியுறுக் கண்டு

வேம்புகட்கெல்லாம் விதானம் அமைத்தும்

விரும்பின கொடுக்கை பரம்பரற்கென்று

புரி‘குழல்தேவியைப் பரிவுடன் கொடுத்த

பெரிய அன்பின் வரகுண தேவர்’’

 

ராமகிருஷ்ண பரமஹம்சர் வழ்விலும் இப்படிப் பல நிகழ்ச்சிகலைக் காண்கிறோம்.ஒரு நாள் வானத்தில் கருமையான மேகக் கூட்டம் காணப்பட்டது. அங்கு வெள்ளை நிறக் கொக்குகள் பறந்தன. அந்தக் காட்சியைக் கண்ட பரமஹம்சர், அப்படியே சமாதி நிலையில் ஆழ்ந்துவிட்டார். இயற்கைக் காட்சியைக்கூட இறைவனின் லீலையாகக் கண்டார்.

Contact: swami_48@yahoo.com