Written by S NAGARAJAN
Date: 10 January 2017
Time uploaded in London:- 5-56 am
Post No.3530
Pictures are taken from different sources; thanks.
Contact: swami_48@yahoo.com
நகைச்சுவையுடன் ஒரு நல்ல கருத்து
வாடிகன் போப்பாண்டவரும் தஞ்சாவூர் அபிராமி பட்டரும்! – கடவுள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார் ?
by ச.நாகராஜன்
ஒருமுறை தஞ்சாவூர் அபிராமி பட்டர் இத்தாலிக்குச் சென்றார். அங்கு வாடிகனில் போப்பாண்டவர் தங்கி இருக்கும் பிரம்மாண்டமான பீடத்திற்குச் சென்று போப்பாண்டவரிடம் நலம் விசாரித்தார். போப்பாண்டவரும் மகிழ்ச்சியுடன் அபிராமி பட்டரை வரவேற்றார்.
பேச்சுக்கிடையே போப்பாண்டவரின் அருகில் இருந்த அழகிய பெரிய சிவப்பு போனைப் பார்த்தார் அபிராமி பட்டர்.
“இதென்ன, சற்று வித்தியாசமான போனாக இருக்கிறதே?” என்று கேட்டார் அவர்.
போப்பாண்டவர் புன்னகையுடன், “ஆமாம், வித்தியாசமானது தான். இது கடவுளுடன் பேசுவதற்கான ஹாட் லைன்” என்றார்.
அபிராமி பட்டர் மெல்லிய புன்சிரிப்புடன், “எனக்குக் கொஞ்சம் லைன் தர முடியுமா? கடவுளிடம் சற்றுப் பேச விரும்புகிறேன்” என்றார்.
“ஆஹா! அதற்கென்ன, இதோ தருகிறேன் லைன்! என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளுங்கள்” என்றார் போப்.
மனம் மகிழ்ந்த அபிராமி பட்டர் கடவுளிடம் பேசலானார். ‘எல்லோரும் நலமாக இருக்க வேண்டும். சர்வே ஜனா: சுகினோ பவந்து’ என்று தனது ஆசையைச் சொன்னார்.
கடவுளும் ‘அப்படியே ஆகட்டும்’ என்று அனுக்ரஹித்தார்.
ஒரு நிமிடம் ஓடிப் போனது.
மகிழ்ச்சியுடன் பட்டர் போப்பாண்டவருக்கு நன்றி தெரிவித்தார்.
“ஒரு நிமிடம்” என்ற போப்பாண்டவர், “ நீங்கள் பேசியதற்கான கட்டணம் நூறு டாலர்” என்றார்.
திகைத்துப் போன பட்டர், “நூறு டாலரா” என்று கூவினார்.
“ஆமாம். இது ஹாட் லைன் இல்லையா! அதுவும் கடவுள் இருக்கும் தூரம் எவ்வளவு தெரியுமா? அதோ! அங்கே இருக்கிறார்” என்று ஆகாயத்தைச் சுட்டிக் காட்டிய போப் “அதனால் தான் இவ்வளவு சார்ஜ்” என்றார்.
அபிராமி பட்டரும் நூறு டாலரை போப்பிடம் கொடுத்து விட்டு ஊர் திரும்பினார்.
நாட்கள் நகர்ந்தன.போப்பாண்டவர் இந்தியா விஜயத்தின் போது மறக்காமல் தஞ்சாவூர் வந்து அபிராமி பட்டரை அவர் குடிலில் பார்த்தார்.
நலம் விசாரித்த போப்பாண்டவரை அபிராமி பட்டர் மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்தார்.
பேச்சினிடையே அபிராமி பட்டரின் அருகில் இருந்த அழகிய பெரிய ஒரு பச்சை வண்ண போனைப் பார்த்த போப்பாண்டவர், “இதென்ன? சற்று வித்தியாசமான போனாக இருக்கிறதே” என்றார்.
“ஆமாம், வித்தியாசமானது தான். இதன் மூலம் கடவுளுடன் உடனுக்குடன் பேசலாம்” என்றார்.
போப்பாண்டவருக்கு மிகுந்த சந்தோஷம் ஏற்பட்டது.
“எனக்குக் கடவுளிடம் சற்று அவசரமாகப் பேச வேண்டும். லைன் தர முடியுமா?” என்று கேட்டார்.” உங்களுக்கு இல்லாமலா” என்ற அபிராமி பட்டர் உடனுக்குடன் கடவுளிடம் பேசுவதற்கான லைனைப் போட்டு போப்பாண்டவரிடம் தந்தார்.
மகிச்சியுடன் போப்பாண்டவர் பேசலானார். எவ்வளவு உலகப் பிரச்சினைகள். ஒவ்வொரு நாட்டிலும் ஒரு பிரச்சினை. அத்துடன் தான் தீர்வு காண வேண்டியவற்றையும் பேசினார்.கடவுள் போப்பாண்டவரை அனுக்ரஹித்தார்.
போன் பேசி முடிந்ததும் போப் அபிராமி பட்டருக்குத் தன் மனமார்ந்த நன்றியைச் சொன்னார்.
“ஒரு நிமிடம்” என்ற பட்டர், “இதற்கான சார்ஜை நீங்கள் தர வேண்டும். சார்ஜ் பத்து ரூபாய்” என்றார்.
போப் திகைத்துப் போனார். அவர் பேசியதோ பதினைந்து நிமிடங்கள். வெறும் பத்து ரூபாய் தானா?
“சரியாகப் பாருங்கள். வெறும் பத்து ரூபாய் தானா! பதினைந்து நிமிடங்கள் பேசி இருக்கிறேன்” பிரமித்தவாறே போப் கேட்டார்.
ஆனால் அபிராமி பட்டரோ, “ஆமாம், பத்து ரூபாய் தான். இங்கு இது லோக்கல் கால். கடவுள் இங்கேயே தான் இருக்கிறார்!” என்றார்.
*
கடவுள் எங்கே, எவ்வளவு தூரத்தில் இருக்கிறார் என்று மன்னன் ஒருவன் கேட்ட சிக்கலான கேள்விக்கு ஞானி ஒருவர் சிரித்தவாறே,”அவன் கூப்பிடு தூரத்தில் இருக்கிறான்” என்றார்.
அதற்கு அர்த்தம் என்ன என்று மன்னன் கேட்ட போது ‘உள்ளார்ந்து கஜேந்திரன் ஆதிமூலமே என்று கூப்பிட்டவுடன் ஓடி வந்தான் இல்லையா, பகவான்! அதனால் தான் சொன்னேன், அவன் கூப்பிடு தூரத்தில் இருக்கிறான் என்று.’ என்றார்.
“திரௌபதியும் இதயத்தில் உறைபவனே என்ற அர்த்தத்தில் ஹ்ரூஷீகேசா என்று அலறிக் கூப்பிட்டவுடன் ஓடோடி வந்து பரந்தாமன் அவள் துயரைத் தீர்த்தான், இல்லையா!”
ஞானி சிரிக்க, மன்னன் பெரிய தத்துவத்தைப் புரிந்து கொண்டான்.
உள்ளுவார் உள்ளத்துள் உளன் என்பது தேவார வாக்கு. டைரக்ட் டயலிங் (Direct Dialing) ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இருக்கிறது!
***********