ஏற்றம் தரும் ஏலாதி!-Part 1

05FRLIBRARY8_UVS_1507555g (1)

ச.நாகராஜன்

Post No 1098; Dated 11th June 2014.

தமிழ் அறநூல்கள்

தமிழில் அறநூல்களுக்கு ஒரு தனி இடம் உண்டு. திருக்குறள் உள்ளிட்ட வாழ்வாங்கு வாழ வேண்டிய அற நெறிகளைக் கூறும் நூல்கள் ஏராளம் தமிழில் உள்ளன.

இந்த வகையில் பதிணென்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான ஏலாதி சுவையான விதத்தில் அறநெறிகளைக் கூறுவதோடு சற்று வித்தியாசமாகவும் அமைந்துள்ள ஒரு நூல்.பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று புறம் பற்றியும்,ஆறு நூல்கள் அகம் பற்றியும் ஏனைய பதினோரு நூல்கள் அறம் பற்றியும் கூறுவது உற்று நோக்கத் தக்கது. கி.பி.100 முதல் கி.பி 500 முடிய உள்ள காலத்தில் மலர்ந்த இந்த நூல்கள் பெரும்பாலும் அறநெறிகளை வலியுறுத்த எண்ணிய முனிவர்கள், பொய்மை இல்லாப் புலவர்கள் மற்றும் சமண ஆசாரியர்களால் எழுதப்பட்டவையாகும். இதே காலகட்டத்தில் வாழ்ந்தவராகக் கருதப்படும் பர்த்ருஹரியின் நீதி சதகம் நூறு பாடல்களில் அற்புதமாக பல நீதி உரைகளை விளக்குகிறது. வடமொழியில் அமைந்துள்ள இந்த நூலை மேற்கோள் காட்டாதவர் இல்லைஆக பற்பல அற நூல்கள் பாரதமெங்கும் எழுந்தமையால் இதை அறநூல்களின் காலம் என அழைக்கலாம்.

அறநெறிகளின் முக்கியத்துவம்
அறநெறிகளின் முக்கியத்துவத்தை, “தனது ஆளுமையின் அகத்தன்மையின் நிறைவான நிலையை அடைய மனிதனின் செயல்பாடுகளே அறநெறிகள்” (Ethics is the activity of man directed to secure the inner perfection of his own personality) என்று ஆல்பர்ட் ஸ்வைட்சர் கூறுவார். உலகின் பெரும் விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனோ, தனது ஒப்புமைத் தத்துவத்தையே எடுத்துக் கொண்டு ஒப்புமைத் தத்துவம் இயற்பியலுக்கு மட்டும் தான்;அறநெறிகளுக்கு அல்ல (Relativity applies to physics, not ethics) என்று கூறி மாற்றுக் குறையாத அறநெறி கடைப்பிடிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்! இந்த வகையில் ஏலாதி போன்ற அறநூலின் தேவையும் வலிமையும் நமக்கு நன்கு புலனாகிறது!

கணிமேதாவியார்
ஏலாதி நூலை எழுதியவர் கணிமேதாவியார். கணித்தலில் மேதையாக இவர் இருப்பதாக இவரது பெயர் சுட்டுவதால் இவர் சோதிடத்தில் வல்லவராக இருத்தல் வேண்டும் எனக் கருதப்படுகிறது. இறைவாழ்த்து நீங்கலாக எண்பது பாடல்களைக் கொண்டது ஏலாதி. அருகக் கடவுளை இவர் வாழ்த்துவதால் இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிகிறது.

cardamom

ஏலாதி என்ற பெயர் ஏன்
ஏலாதி சூர்ணம் பழைய தமிழ் மருத்துவ நூல்களில் காணப்படும் முக்கியமான ஒரு சூர்ணம். ஏலம் ஒரு பங்கும்,இலவங்கப்பட்டை இரண்டு பங்கும்,நாககேசரம் மூன்று பங்கும், மிளகு நாலு பங்கும், திப்பிலி ஐந்து பங்கும் சுக்கு ஆறு பங்கும் கலந்த ஒரு கலவை ஏலாதி சூர்ணம்.அரிய மருத்துவ குணங்கள் கொண்ட இந்த சூர்ணம் உடல் நலத்தைச் சீராகக் காக்கும் ஒரு அற்புத சூர்ணம்.
இதே போல மன நலத்தையும் அதை முதலாகக் கொண்ட வாழ்க்கை நலத்தையும் சீராக ஆக்கிக் கொள்வதற்கான வழிமுறைகளைக் காண்பிக்கும் வாழ்வியல் நூல் என்பதால் இதற்கு ஆசிரியர் கணிமேதாவியார் ஏலாதி என்ற அதிசயப் பெயரை, அற்புதப் பெயரைச் சூட்டியுள்ளார்.அத்தோடு ஏலாதி சூர்ணத்தை உருவாக்குவதில் ஆறு மூலப்பொருள்கள் இருப்பது போல ஏலாதி பாடல்களில் ஆறு பொருள்களை கணிமேதாவியார் வகுத்து வலியுறுத்துகிறார்.
அற ஸ்பரிசஸங்கள் அன்றாடம் வாழ்க்கையில் ஏற்பட ஏற்பட அறம், பொருள்,இன்பம், வீடு ஆகிய பெறுதற்கரிய நான்கு பேறுகளையும் பெறலாம் என்பதை அனைத்து அறநூல்களும் வலியுறுத்துகின்றன.

இல்லற நூல், துறவற நூல், நல்லற நூல்
இந்த நூலின் சிறப்புப் பாயிரம்
“இல்லற நூல் ஏற்ற துறவற நூல் ஏயுங்கால்
சொல்லறநூல் சோர்வின்றித் தொக்குரைத்து – நல்ல
அணிமேதையாய் நல்ல வீட்டு நெறியும்
கணிமேதை செய்தான் கலந்து” என்று வலியுறுத்துவது போல ஏலாதி ஒரு இல்லற நூல்; அத்தோடு துறவிலக்கணம் கூறும் துறவற நூல் அனைத்து அறங்களையும் வலியுறுத்துவதால் ஒரு நல்லற நூல் என்பது நூலைப் படித்தால் விளங்கும்.

பழங்காலத்தில் உளவியல் அடிப்படையில் வாழும் நல் மன வாழ்க்கையைப் பெரியோர் பெரிதும் வற்புறுத்தி வந்தனர். அதற்கான செம்மையான நலங்களை அறநெறி நூல்கள் சுட்டிக் காட்டின.ஆகவே அவற்றைக் கடைப்பிடித்தோர்க்கு மனத்தினால் உண்டாகும் நோய்கள் அறவே இல்லாமல் போனது; அவர்களுக்குப் புகழுடைய வாழ்க்கையும் அமையப் பெற்றது.

யாருக்கு இந்த அறநூல் தேவை இல்லை!
கணி மேதாவியார், அற நூல் எதுவும் தேவை இல்லை என்று அறுதியிட்டு உறுதி கூறுகையில் யாருக்குத் தேவை இல்லை என்ற வினா ‘சஸ்பென்ஸாக’ நம் மனதில் எழுகிறது.
பொய்யான் புலாலொடு கள் போக்கி தீயன
செய்யான் சிறியார் இனம் சேரான் – வையான்
கயல் இயல் உண் கண்ணாய், கருதுங்கால் என்றும்
அயல அயலவர் நூல் (பாடல் 14)

பொய்யே சொல்லாதவன், மாமிசம், மது இவற்றை நீக்கியவன், மற்றவர்க்குத் தீங்கு செய்யாதவன், சிறியவர் சேர்க்கையைக் கொள்ளாதவன் மற்றவர்க்கு இன்னாதவற்றைச் சொல்லாதவன் ஆகிய நல் குணங்களைக் கொண்டவனுக்கு மீன் போன்ற கண்களை உடையவளே அறநூல்கள் தேவை இல்லை என்ற பாடலைப் படித்தவுடன் அதில் உள்ள பொருளின் ஆழம் நமக்குப் புரியும்.

chola-flag-2

பொய் பற்றிய அறிவியல் ஆராய்ச்சி
சமீபத்தில் பெனிஸில்வேனியா பல்கலைக் கழகத்தில் டாக்டர் டேனியல் லாங்பெலோ நடத்திய ஆராய்ச்சி ஒன்றில் மனிதர்கள் உண்மை பேசுவதற்காகவே படைக்கப்பட்டவர்கள் என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு நிகழ்வைக் கண்டார். ஒரு மனிதனைப் பொய் பேசுமாறு சொல்லி அவன் மூளையில் என்ன மாறுதல்கள் ஏற்படுகிறது என்பதை ஸ்கேன் செய்து பார்க்கையில் மூளைப் பகுதிகளுக்கு அதிக இரத்தம் செலுத்தப்படுவதோடு அங்கு ரசாயன மாறுதல்கள் ஏற்படுவதை விஞ்ஞானிகள் கண்டு அதிசயித்தனர்! சிவப்பும் மஞ்சளுமுமாக மூளை ஸ்கேனிங் இயந்திரத்தில் பதிவான மூளைப் படலங்களை அவர்கள் கண்டு வியந்து மேலும் அதிக ஆராய்ச்சிகளைச் செய்தனர். மிகவும் சிக்கலான பொய்களைக் கூட ஒருவன் பேசும் போது கண்டுபிடித்து விடலாம் என்பது அவர்களின் ஆய்வின் முடிவு. பொய் சொல்லச் சொல்ல அந்தப் பொய்யே சொன்னவனைச் சுடும் (தன்னஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும் – குறள் 273) என்று அற நூல்கள் சொல்வதை விஞ்ஞான ஆய்வுகளும் இன்று அங்கீகரிக்கின்றன!

இதே போல மாமிசமும் மதுவும் உடலுக்கும் மனதிற்கும் ஏற்படுத்தும் தீங்குகளையும் இன்று மருத்துவ வல்லுநர்கள் திறம்பட எடுத்துரைக்கின்றனர்.ஆக வாழ்வாங்கு வாழ ஆறு குணங்கள் தேவை என்பதை இந்தப் பாடல் எடுத்துரைக்கிறது.தனது பல பாடல்களில் பொய்யை உரைக்காதே என்று அவர் வலியுறுத்திக் கூறுவது அமெரிக்க ஆராய்ச்சியை நினைவுபடுத்தி விஞ்ஞான பூர்வமான வாழ்க்கையை வாழத் தூண்டும் நூல்களின் பெருமை நமக்குப் புலப்படுகிறது!

குபேர பட்டம் பெற வழி!
குபேர பட்டமும் கை கூடும் என்று ஒரு பாடல் வலியுறுத்தும் போது அது எப்படி கை கூடும் என்ற கேள்வி நமக்கு இயல்பாகவே எழும்!. 49ம் பாடல் பதில் கூறுகிறது!

யானை குதிரை பொன் கன்னியே ஆநிரையோடு
ஏனை ஒழிந்த இவை எல்லாம் – ஆன் நெய்யால்
எண்ணன் ஆய் மாதவர்க்கு ஊண் ஈந்தான் வைசிர
வண்ணன் ஆய் வாழ்வான் வகுத்து
வகையறிந்து யானை, குதிரை, பொன், கன்னி,பசு இவற்றையும் தவம் புரிவோர்க்கு பசு நெய்யோடு உணவளிப்பவர் வைசிரவண்ணன் எனும் குபேரனது வாழ்க்கையை அடைவர் என்று கூறுகிறது இந்தப் பாடல். தானம் புரிவோருக்கு தனம் தானே வந்து சேரும் என்பது பொருள்!

((லேடீஸ் ஸ்பெஷல் 2010ஆம் ஆண்டு தீபாவளி மலரில் வெளியான கட்டுரை .))

(This two part article is written by my brother S Nagarajan:Second part will be published tomorrow: swami)