Look at the “U” shaped letters
கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1358; தேதி அக்டோபர் 20, 2014.
மிகவும் அதிசயமான ஒரு விஷயம்!! இந்துக்கள் பெயரிடும் முறையாகும்!! எனது நாற்பது ஆண்டு ஆராய்ச்சியில் கண்ட சில விஷயங்களைச் சுருக்கமாகத் தருகிறேன். ஆதிகாலம் முதல் இன்றுவரை இந்துக்கள் தனது பெயர்களில் பின்னொட்டு (விகுதி) களாக ‘’பதி – வதி – மதி’’ —களைப் பயன்படுத்துகின்றனர். இந்தோநேஷியாவின் முஸ்லீம் ஜனாதி’’பதி’’யாக இருந்த பெண் பெயர் கூட மேக’’வதி’’ சுகர்ண புத்ரீ!! தூய சம்ஸ்கிருதம்.
காரைக்கால் அம்மையாரின் பெயர் புனித’’வதி’’. அப்பர் பெருமானின் சகோதரி பெயர் திலக’’வதி’’. இவர்கள் இருவரும் பிராமணர்கள் அல்ல. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த வைஸ்ய குல பெண்ணான காரைக்கால் அம்மையார் வீட்டிலும் அதற்கு முன் பிறந்த வையஸ்குல கோபாலன் (சிலப்பதிகார கோவலன்) பெயர்களும் சம்ஸ்கிருதமே. சங்க இலக்கியப் புலவர்களில் கபில, தாமோதர, பரண, கேசவ, கௌசிக, விஷ்ணுதாச (விண்ணந்தாயன்), கண்ணதாச (தாயங்கண்ணன்), பிரம்மதத்த, வால்மீகி என்று ஏராளமான சம்ஸ்கிருதப் பெயர்களைக் காண்கிறோம்.
ஆண்கள் பெயர்கள் எல்லாம் ‘’பதி’’ யில் முடியும்.பெண்கள் பெயர் எல்லாம் ‘’மதி’’ அல்லது ‘’வதி’’ யில் முடியும். எடுத்துக்காட்டு:–
பசு — பதி
பார்– வதி
இந்து — மதி (வளர் மதி)
முதலில் ஆண்கள் பெயர்களை எடுத்துக் கொள்வோம். இந்தப் பெயர்கள் உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்திலேயே இருக்கின்றன. இந்துக்களை கடித்துக் குதறுவதைப் பொழுது போக்காகக் கொண்ட “”அறிஞர்களும்”” இப்பொழுது ரிக் வேதத்தின் காலத்தை கி.மு. 1700 என்று ஒப்புக் கொண்டுவிட்டனர். அப்படியானால் சிந்து சமவெளியிலும் இந்தப் பெயர்கள் இருக்கதானே வேண்டும்? அப்படி இருக்குமானால் அந்த எழுத்தின் வடிவம் எப்படி இருக்கும்? என்று ஆராய்வோம்.
ப்ருஹஸ் –பதி, வாசஸ் – பதி, த்ரிதஸ பதி, பசு பதி, வனஸ் பதி முதலிய பல பதி–க்கள் வேதங்களில் வருகின்றன. நம்முடைய நண்பர்கள் பெயர்களில் இப்படி நூற்றுக் கணக்கான ‘’பதி’’–க்கள் கட்டாயம் இருப்பர். சில எடுத்துக் காட்டுகள்:
லெட்சுமி பதி (தினமலர் ஆசிரியர்)
உமா பதி
பூ பதி (டென்னிஸ் வீரர்)
கண பதி
தன பதி செட்டியார்
அபாம் பதி (வருணன்)
ஜனாதி – பதி
அதி — பதி
பெண்கள் பெயர்களைப் பார்த்தால் அவை ‘’வதி’’ அல்லது ‘’மதி’’ யில் முடியும் — சில எடுத்துக் காட்டுகள்:
மது மதி, இந்து மதி, வசு மதி, வளர் மதி, சாரு மதி — இப்படி எத்தனையோ அடுக்கிக் கொண்டே போகலாம்.
மஹாபரதத்தில் வரும் மீனவப் பெண்ணின் பெயர் கூட சத்ய – வதி! ((ஆரிய—திராவிட வாதம் பொய் என்பதற்கு இப்படிப் போகிற போக்கில் நான் ஆயிரம் உதாரணங்களைக் கொடுக்க முடியும். அசுரர்கள், ராக்ஷசர்கள் என்பதெலாம் சம்ஸ்கிருதம், அவர்கள் பெயர்களும் சம்ஸ்கிருதம்))
அகத்தியர் மணந்த நாக கன்னிகை பெயர் (வியட்நாம் பெண்) யசோவதி. பார் —வதியை எல்லோருக்கும் தெரியும். பிரபல கணித மேதை லீலா —வதியையும் தெரிந்திருக்கும் (பாஸ்கராச்சார்யார் மகள்).
நகரங்களுக்கும் நதிகளுக்கும் , நல்ல குணங்களுக்கும் இந்துக்கள் பெண்கள் பெயர்களையே சூட்டுவார்கள் (பெண்கள் வாழ்க முதலிய பல கட்டுரைகளில் இது பற்றி எழுதி விட்டேன்)
சபர் மதி, ஷரா வதி, வேக வதி என்பன சில ஆறுகளின் பெயர்கள்.
இந்திரனின் தலை நகர் அமரா வதி
நாகர்களின் தலை நகர் போக வதி
இப்படி நிறைய நதிகள், நகரங்கள் இந்தியாவில் இன்றும் உண்டு. ஆந்திரத்தில் உள்ள புத்தமதச் சிற்பம் உடைய அமரா வதி, குஜராத்தின் பழைய தலை நகர் கர்னா வதி (இப்பொழுதைய பெயர் ஆமதாபாத்).
உண்மையில் மொழியியல் அறிஞர்களுக்குத் தெரியும் ப = ம = வ ஆகிய எழுத்துக்கள் இடம் மாறும் என்பது.
தமிழில் வங்கம் (படகு, கப்பல்) என்றால் வங்காளத்தில் வசிப்போர் பங்கம் என்பர்.
வேதத்தில் ‘’வ்ருக’’ என்றால் பிற்கால சம்ஸ்கிருதத்தில் அது ‘’ம்ருக’’ ஆகும். இது போல நூற்றுக் கணகான சொற்கள் இருக்கின்றன. முற்காலத்தில் இதை மாறி மாறி பயன்படுத்தி இருப்பர். பிற்காலத்தில் இலக்கணம் வகுத்து முறைப்படுத்தி இருப்பர்.
வேதகாலம் முதல் இந்துக்கள் பயன்படுத்தும் இந்த வதி – பதி – மதி சிந்து சமவெளியில் இருந்தால்…………. இருந்திருந்தால்…………. எப்படி இருக்கும்? சிந்து சமவெளி முத்திரைகளில் “U” பல வகைகளில் பயன் படுத்தப்பட்டுள்ளது. இதைப் பாதம் என்று கொண்டால் பத, பதி என்ற ஒலியை உருவாக்கும். அதற்குள்ளும் வெளியேயும் வெவ்வேறு குறியீடுகளைப் பொறிக்கையில் அதற்குத்தக புதிய ஒலிகளும் வரும் என்று ஊகிக்கலாம். இது ஒரு ஊகமே.
“U” இந்த வடிவத்தைச் சிலர், அளக்கும் படி (லிட்டர்) என்றும் இன்னும் சிலர் இது மரியாதைக்குரிய விகுதி/ பின்னொட்டுச் சொல் (கள், ஆர்) என்றும் கூறி இருக்கிறார்கள். (ஆங்கில எழுத்தான யு போன்றது).
சிந்து சமவெளி எழுத்துக்களை யாரேனும் முழுக்க முழுக்க புதிய கோணத்தில் ஆராய்ந்தால்தான் அதன் உண்மைப் பொருள் விளங்கும். மற்ற எழுத்துக்களுக்குக் கிடைத்தது போன்ற இரு மொழிக் கல்வெட்டுகள் கிடைக்காததால் கம்யூட்டரில் போட்ட பின்னரும் இதன் பொருள் தெரியவில்லை!! சிலர் ‘’எண்’’ என்பர், மற்றும் சிலர் ‘’எழுத்து’’ என்பர். இன்னும் சில அமெரிக்கர் இது எழுத்தும் அல்ல, எண்ணும் அல்ல, சுத்தக் ‘’கிறுக்கல்கள்/படங்கள்’’ என்றும் திருவாய் மலர்ந்தருளுவர்!! இதற்கெல்லாம் மூல காரணம் —- ஆரம்ப காலத்தில் அகழ்வாராய்ச்சி செய்தோர், ஆரிய—திராவிட விஷத்தை இதிலும் தூவிவிட்டனர். அதனால் இன்று வரை அறிவு என்னும் மரமோ, பழமோ அங்கே விளையவில்லை!!
contact swami_48@yahoo.com
You must be logged in to post a comment.