WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,515
Date uploaded in London – – 2 JANUARY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
யோகவாசிஷ்டக் கதைகள்
ஆத்மாவே உண்மையான பந்து!
ச.நாகராஜன்
யோக வாசிஷ்டத்தில் மஹரிஷி வசிஷ்டருக்கும் ராமருக்குமான உபதேச உரையாடல் தொடர்கிறது :
வசிஷ்டரைப் பொறுத்த மட்டில் ஆத்மாவிற்கு ஆத்மாவே உண்மையான பந்து, அதாவது ஆத்மாவிற்கான உண்மையான உறவு ஆகும்.
ஒருவன் தனது சொந்த முயற்சியினாலேயே தன்னை உயர்த்திக் கொள்ள முடியும்.
{இங்கு கீதையில் கண்ணபிரான் கூறுவதை ஒப்பு நோக்கலாம் – ஆத்மைவ ஆத்மனோ பந்து: ஆத்மைவ ரிபு ராத்மன: ஆத்மாவிற்கு ஆத்மாவே பந்து; ஆத்மாவிற்கு ஆத்மாவே ரிபு (பகைவன்)}
இதை விளக்கும் விதமாக ராமருக்கு வசிஷ்டர் ஒரு கதையைக் கூறுகிறார்:-
மஹரிஷி அத்ரிக்கு மகன்களாகப் பிறந்த பாஸா, விலாஸா இருவரும் சகோதரர்கள். சிறந்த தவ வாழ்க்கையை மேற்கொள்ள அவர்களுக்கு பெற்றோர்களால் நல்ல பயிற்சி அளிக்கப்படுகிறது.
பாஸாவிற்கும் விலாஸாவிற்கும் அவர்கள் பெற்றோர் இறந்தவுடன் மிகவும் துக்கம் ஏற்படுகிறது. ஏனெனில் அவர்களுக்கு ஆத்ம ஞானம் ஏற்படாததால் தான்!
பின்னர் இருவரும் இரு வேறு திசைகளில் சென்று விடுகிறார்கள்.
சிறிது காலம் சென்ற பின்னர் இருவரும் மறுபடி ஒருவரை ஒருவர் சந்திக்கிறார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொள்கின்றனர்.
தவ வாழ்க்கை எப்படி இருக்கிறது, தங்களது பார்வையில் ஏதேனும் மாறுதல் தென்படுகிறதா என்று ஒருவரை ஒருவர் விசாரித்துக் கொள்கின்றனர்.
பாஸா இதற்கு பதில் அளிக்கையில், பெற்றோரையோ நண்பர்களையோ இழந்ததால் ஏற்பட்ட துக்கத்தில் ஒருவன் தவிக்கும் வரை ஒருவன் நிம்மதியான மனதைப் பெற முடியாது என்றும் மன சாந்தியைப் பெறுவது என்பது ஆத்ம ஞானத்தைப் பெறும் போது தான் சாத்தியமாகும் என்றும் , அது வரையில் அதைப் பெறுவது முடியவே முடியாது என்றும் விடை அளிக்கிறார்.
இந்த சம்வாதம் (உரையாடல்) தொடர்கிறது.
முடிவில் அவர்கள் தங்களது மனதைக் கட்டுப்படுத்துகிறார்கள். முக்தியை அடைகிறார்கள்.
ஆத்மனும் உடலும் மிக நெருங்கி இருந்தாலும் கூட, அந்த இரண்டிற்கும் நுட்பமான தொடர்பு இல்லை.
அன்னங்கள் நீரில் மிதக்கின்றன; என்றாலும் கூட நீருக்கும் அவற்றிற்கும் ஒரு தொடர்பும் இல்லை.
கடற்கரை ஓரத்தில் நெடிதுயர்ந்த மலைகள் இருக்கின்றன. என்றாலும் கூட, அவை இரண்டுக்கும் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லை.
என்றாலும் கூட நமது அறியாமையினால், நமது மனதையும் தேவையற்ற விஷயங்களையும் ஒன்றுடன் ஒன்றைத் தொடர்பு படுத்திக் கொள்கிறோம்.
ஆத்மாவை மனதுடன் அடையாளப்படுத்திக் கொள்வதாலேயே ஒருவன் சுகத்தையும் துக்கத்தையும் அடைகிறான்.
எப்போது ஒருவன் இந்த அடையாளத்தைத் துறந்து விடுகிறானோ, அப்போது அவன் உணர்ச்சிகளினால் பாதிக்கப்படுவதில்லை.
வசிஷ்டர் தொடர்ந்து ராமருக்கு கனவு பற்றிய ஒரு ஒப்புவமையைக் கூறுகிறார் :
ஓரிடத்தில் படுத்துக் கொண்டு தூங்கும் போதே கனவில் ஒருவன் எங்கெங்கோ சென்று பலவித உணர்ச்சிகளையும் அனுபவங்களையும் பெறுகிறான்.
உடலானது அந்த அனுபவங்களுடனும் உணர்ச்சிகளுடனும் தொடர்பு கொண்டிருக்கவில்லை என்பதை இது காட்டுகிறது.
மனமே ஒரு முகமையாக (Agengy) கர்த்ருத்வமாக இருக்கிறதே அன்றி உடல் அல்ல.
வசிஷ்டரின் கூற்றுப்படி மனத்திற்கும் ஆத்மாவிற்குமான தொடர்பு மனதினால் ஏற்படும் ஒன்றே தான்! ஆகவே இந்தத் தொடர்பிலிருந்து விடுபடுவது என்பது சாத்தியமான ஒன்று தான்!
உடல் என்பது ஜடம். அசையாதது. ஆத்மா என்பது சித்ரூபம். பிரக்ஞையே அதன் ரூபம். இந்த இரண்டும் தொடர்புக்குள்ளாகும் போது பிரக்ஞை ஒரு எல்லைக்குட்பட்டதாக ஆகி விடுகிறது. இந்த எல்லை உடைபடும் போது பிரக்ஞையானது எல்லையற்ற ஒன்றாக விரிந்து, தளைகளிலிருந்து விடுபட்டு, ஒருவன் ஜீவன் முக்தனாக ஆகி விடுகிறான்.
அற்புதமான வசிஷ்டரின் இந்த உபதேசத்தால் ஒருவனுக்கு பல இரகசியங்கள் புரிய வரும்.
யோக வாசிஷ்டம் அறிவுக்கு எட்டாத அற்புத இரகசியங்களை விண்டு உரைக்கும் நூல் அல்லவா?!
***
tags- ஆத்மா, உண்மையான, பந்து,