Written by London swaminathan
Date: 21 January 2017
Time uploaded in London:- 9-17 am
Post No.3563
Pictures are taken from different sources; thanks.
contact: swami_48@yahoo.com
பெரிய தத்துவங்களை அன்றாடம் காணும் சிறிய பொருட்களைக் கொண்டு விளக்குவதில் சமர்த்தர் பட்டினத்தார். காதற்ற ஊசி, ஒன்பது வாய் தோல் பை, எண் சாண் உடம்பு, ஆற்றில் கரைத்த புளி, ஒருவன் வாழ்நாளில் மூன்று முறை முழங்கும் சங்கு, உளியிட்ட கல் என்று நிறைய அழகான எடுத்துக்காட்டுகளையும் உவமைகளையும் நமக்களிக்கிறார்.
அவர் சிறு வயதில் நாம் எல்லோரும் விளையாடிய பம்பரத்தையும் பட்டத்தையும் கூடப் பாடலில் பதித்து, நம் மனதில் அரிய கருத்துகளைப் புதைக்கிறார்.
நமது உடல் பற்றி சந்யாசிகள் என்ன சொல்கிறார்கள் என்பது அத்தனையையும் சிலவரிகளில் சொல்லும் அழகே தனி அழகு!
பீற்றல் துண்டம் பேய்ச்சுரைத் தோட்டம்
அடலைப் பெரிய சுடலைத் திடருள்
ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்
ஓயா நோய்க்கிடம் ஓடு மரக்கலம்
மாயா விகாரம் மரணப் பஞ்சரம்
சோற்றுத் துருத்தி கானப் பட்டம்
விதி வழித் தருமன் வெட்டும் கட்டை
சதுர்முகப் பாணன் தைக்கும் சட்டை
ஈமக் கனலில் இடு விருந்து
காமக் கனலில் கருகும் சருகு
என்று கோயில் திருப்பதிகத்தில் பாடி நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். இப்படிப்பட்ட உஅடலுக்குத் தான் நாம் தினமும் அலங்காரம் செய்டு நேரத்தை வீணாக்குகிறொம். இதைவிட முக்கியமான விஷயங்களைப் புறக்கணிக்கிறோம் என்பது ப்ட்டினத்தாரின் ஆதங்கம்.
ஒரு அழகான வாலிபன் அல்லது யுவதியின் 20 வயதுப் படத்தையும் எண்பது வயதுப் படத்தையும் அகுகருகே வைத்துப் பார்த்தால் பட்டினத்தார் சொல்லும் செய்தி நன்கு விளங்கும்.
ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம், கானப் பட்டம் (காற்றில் சலசலக்கும் பட்டம்) என்பன மிகவும் அருமையான உவமைகள்.
திருவள்ளுவரும் இந்த உடல் போடும் ஆட்ட பாட்டங்களை நமக்கு நினைவு படுத்துகிறார்:-
நில்லாதனவற்றை நிலையின என்றுணரும்
புல்லறிவாண்மை கடை (குறள் 331)
உலகில் அழியக்கூடிய பொருட்களை நிலையாக இருக்கப்போகிறது என்று எண்ணினால் அந்த சிற்றறிவு ஒருவருக்கு இழிவான நிலை ஆகும்.
இதை எல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்று அதே அதிகாரத்தில் (நிலையாமை) வேறு ஒரு குறளில் சொல்லிவிட்டார்:-
நாச்செற்று விக்குள் மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப்படும் (335)
நாக்கு பேச முடியாமல் இழுத்துக்கொண்டு கடைசி விக்கல் (மரணம்) வருவதற்கு முன்னரே ஒருவன் விரைவாக தரும கைங்கரியங்களைச் செய்ய வேண்டும். நல்லறங்களைச் செய்ய வேண்டும்.
ஒன்றே செய்க, அதுவும் நன்றே செய்க, அதையும் இன்றே செய்க என்ற ஆன்றோரின் வாக்கை இதை விட தெளிவாக எப்படிச் சொல்ல முடியும்?
இன்னொரு இடத்தில் பம்பரத்தையும் காற்றாடியையும் குறிப்பிடுகிறார் பட்டினத்தார்!
கோபத்தீ மூட்டும் கொல்லன் துருத்தியை
ஐம்புலப் பறவை விளைமரப் பொதும்பை
ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரத்தை
காசில் பணத்தில் சுழலும் காற்றாடியை
என்று அடுக்கிக் கொண்டே போய்
எம்பெருமான் நின் இணையடிக்கபயம்
அம்பலத் தரசே அடைக்கலம் உனக்கே
என்று இறைவனிடம் சரண் அடைந்து விடுகிறார். கோபத்தால் நாம் அனல் பறக்கும் மூச்சு விடுவதை ‘கொல்லன் துருத்தி’ என்றும் காசுக்காக நாம் ஆளாய்ப் பறப்பதை ‘காற்றாடி’ என்றும் சொல்லி கடவுளின் காலில்
விழுகிறார்.
அதுவும் கூட வள்ளுவன் சொன்னதே!
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல (குறள் 4)
விருப்பு வெறுப்பற்ற கடவுளின் காலில் விழுந்தவருக்கு எந்தக் காலத்திலும் துன்பம் வராது — என்கிறான் வள்ளுவனும்.
நாமும் பட்டினத்தார், வள்ளுவன் வாய்ச்சொல் வழி நிற்போம்.
–சுபம்–