Written by London Swaminathan
Date: 2 JUNE 2018
Time uploaded in London – 14-54
Post No. 5069
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
பல நாட்டுப்புறக் கதைகள் பழங்காலத் தமிழில் உள; அவைகளை நான் அவ்வப்பொழுது புதுத் தமிழில் செதுக்கிக் கொடுக்கிறேன்
ஒரு கிராமத்தில் ஒரு பயில்வான் இருந்தான்; உடல் பலம் இருந்தும் அவனுக்கு புத்தி ‘மந்த புத்தி’தான்; ஒரு கேள்விக்குப் பதில் சொல்ல ஐந்து நிமிடமாவது ஆகும். ஆனால் வேறு எவரும் அசைக்கக்கூட முடியாத பாரத்தை மிக எளிதாகத் தூக்கி விடுவான். அவனை எல்லோரும் வல்லாள கண்டன் என்று அழைப்பர்.
அருகிலுள்ள மற்றொரு கிராமத்தில் உடல் பலம் இல்லாத, ஆனால் மஹா புத்திசாலியான ஒருவன் இருந்தான். அவனை வாய்ச்சொல் வீரன் என்று அழைப்பர். மிகவும் புத்திநுட்பம் உடையவன். மற்றவர்களுக்குத் தோன்றாத விஷயங்கள் அவனுக்கு எளிதில் புலப்படும் தட்டுத் தடங்கலின்றி பேசுவான். பதில்கள் அனைத்தும் அக்ஷர லக்ஷம் பெறும்.
வாய்ச்சொல் வீரனின் புகழ் எங்கும் பரவவே வல்லாள கண்டனுக்குப் பொறாமை ஏற்பட்டது. உடல் பலமின்றி வாய்ச் சொல் வீரம் இருந்து என்ன பயன் என்று கிண்டல் செய்தான். ‘பேச்சுக்கு ராவணன், பின்னர் பார்த்தால் கும்பகர்ணன் போல’ இருக்கிறதே என்பான். ‘சொல்லுதல் யார்க்கும் எளிதாம்; சொல்லியவாறு செய்தல் அல்லவோ கடினம்’ என்பான். இருவரும் சந்திப்பது நல்லது என்று இரண்டு கிராம மக்களும் முடிவு செய்தனர்.
இருவரும் வாய்ச்சொல் வீரனின் கிராமத்தில் சந்தித்தபோது வல்லாள கண்டன் சொன்னான்; ஒரு நாள் முழுதும் உன்னுடன் தங்கியிருந்து உடல் பலமே பெரிது என்பதைக் காட்டப்போகிறேன் பார்! என்று சவால் விடுத்தான்.
முதல் சோதனை
சரி அடுத்த கிராமத்திலுள்ள இடையன் நிறைய ஆடுகள் வைத்திருக்கிறான். அதை என் உடல் பலத்தால் களவாடி வருகிறேன். உன்னால் முடியுமா என்றும் யோசித்துப் பார் என்றான் வல்லாள கண்டன் . மாலையில் இருட்டத் துவங்கியது
இடையன் எப்போதும் சாப்பிடப் போகும்போது, ஒரு ஆள் இருப்பது போலத் தெரியட்டும் என்று ஒரு கம்பளியைக் கம்பின்மீது போட்டுவிட்டுப் போவான்; யாரோ ஒருவர் கூடவே இருப்பது போல பாவனை செய்து பெரிதாச் சொல்வான்: . “தம்பி ஆடுகளைப் பார்த்துக்கொள்; இந்தப் பக்கம் திருடர்களும் பேய்களும், சிப்பாய்களும் அதிகம். ஆடுகளைத் தூக்கிச் செல்லாமல் பார்த்துக்கொள்” என்பான்; இது வழக்கமான பல்லவி.
இதை எல்லாம் கவனித்த மஹா புத்திசாலி வா, வா, போய் ஒரு ஆட்டை எடுத்துக்கொண்டு ஓடி விடுவோம் என்றான். வல்லாளகண்டனுக்குப் புத்தி குறைவு என்பதால் அந்தக் கம்பின் மீது போட்ட கம்பளியை ஆள் என்றே நினத்துத் தயங்கினான். பின்னர் அது வெறும் கம்பளி அங்கு யாரும் இல்லை என்று காட்டவே வல்லாளகண்டனுக்கு ஒரே ஆச்சர்யம்!! ஒரு ஆட்டை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு நடந்தான்.
அந்தக் கிராமத்தில் உண்மையிலேயே பேய்கள் உண்டு; அவைகளும் இடையனின் பேச்சை கேட்டு ‘’சிப்பாய்கள்’’ என்றால் என்ன என்று யோசித்துக் கொண்டிருந்தன. அப்போது ஆட்டைத் திருடிய வல்லாளகண்டனும் வாய்ச்சொல் வீரனும் வந்தனர். இதுவரை இந்த மாதிரி ஆட்களைப் பார்த்ததே இல்லை. ஓ! இவர்கள்தான் சிப்பாய்கள் போல என்று நினைத்து ஆடுகள் உருவத்தில் போய் செடி கொடிகளை பேய்கள் மேய்ந்தன. அப்படிச் செய்தால் வெறும் ஆடுகள் என்று எண்ணி இருவரும் போய்விடுவர் என்று அவை எண்ணின
அவைகளைப் பார்த்துக் கொண்டு வந்த வல்லாள கண்டன் ஒரு பேய் ஆட்டைத் தொட்டுப் பார்த்து, அட, இது நாம் திருடிய ஆட்டை விடக் கொழுத்து இருக்கிறது என்று கருதி அதில் ஒன்றைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டான்.
பேய் ஆட்டுக்குப் பயம் வந்துவிட்டது. எப்படித் தப்பிக்கலாம் என்று யோசித்த போது, பின்னால் வாய்ச் சொல்வீரன் நடந்து வருவதைப் பார்த்து அவனும் ஒரு சிப்பாய் என்று பயந்தது. அந்த நேரத்தில் கொழுத்த ஆட்டின் எடை தாங்காமல் ‘ஏய், இதை ஒரு நிமிடம் உன் தோளில் வைத்திரு. கொஞ்சம் முதுகை நெளித்து வளைத்து உடலைச் சரி செய்கிறேன் என்று சொல்லி மஹா புத்திசாலியின் தோளில் வைத்தான். அவனுக்கு உடல் வலு இல்லாததால் அவன் அதை ‘தொபுக்’ என்று கீழே போட்டான். பேய் ஆடு தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி விட்டது பின்னர் மாயமாய் மறைந்தும் போனது.
ஏற்கனவே இடையன் பேச்சில் பேய்கள் பற்றிச் சொன்னதைக் கேட்டு இருந்ததால் அது பேய்தான் என்று பயந்து இருவரும் வேகமாக நடந்தனர்.
இதைப் பார்த்த சில பேய்கள் நம்மைத்தான் ‘சிப்பாய்கள்’ பிடிக்க வருகிறார்கள் என்று பேசிக்கொண்டு தலை தெறிக்க ஓடின. மற்ற பேய்கள் சிரித்துக் கொண்டே சிப்பாய்களும் இல்லை, குப்பாய்களும் இல்லை என்று நக்கல் அடித்தன.
இருவரும் வீட்டுக்குப் போய் தாங்கள் பார்த்த கொழுத்த ஆடு பேய்தான் என்று பேசிக்கொண்டே தூங்கிவிட்டார்கள். அந்த வீட்டில் அன்று எதேச்சையாக பேய்கள் போய் மதில் ஏறிக் குதித்தன. இதைப் பார்த்த வல்லாள கண்டன் அவனது நண்பன் வாய்ச்சொல் வீரனிடம் போய் பேய்கள் இங்கும் வந்து விட்டன. நாம் என்ன செய்வது? என்றான். உடனே மஹா புத்திசாலியான வாய்ச்சொல் வீரன் ‘’நீ ஒன்றும் தெரியாதது போல உருண்டு போய் உன் இடத்திலேயே படுத்துக்கொள்’ என்று சொல்லிவிட்டு ரஹஸியமாக தாழ்ந்த குரலில் தனது பெண்டாட்டியிடம் சொன்னான்: நீ போய் இலை போட்டு, இருக்கும் சாப்பாட்டைப் பரிமாறு; என்ன இது? இன்று காலையில் நான் பிடித்து வந்த மூன்று பேய்களைச் சமைக்கவில்லையா? அவை எல்லாம் பழையதாய்ப் போனால் நன்றாக இராது என்பேன்; நீ உடனே மூன்று பேய்களையும் உங்கள் மகன் பக்ஷணம் பண்ணிவிட்டு மேலும் வேண்டும் என்றான்; நான் இல்லை என்று சொன்னவுடன் கோபித்துக்கொண்டு பேய் பிடிக்கப் போய்விட்டன் என்று சொல்லு’’ என்றான். மனைவியும் சரி என்று சொல்லிவிட்டு அவன் சொன்ன படியெல்லாம் செய்தாள்.
இதைக் கேட்ட பேய்கள் நடுநடுங்கி ஓட்டம் பிடித்தன. ஏற்கனவே ஆடாக இருந்து தப்பித்த பேயிடம் அவை எல்லாம்,’ நீ சொன்னது உண்மைதான்; சிப்பாய்கள் பொல்லாதவர்கள்; அவன் மகனே மூன்று பேய்களைத் தின்றுவிட்டு நம்மையும் பிடிக்க அலைகிறானாம். நாம் வேறு காட்டுக்குப் போய்விடுவோம் என்று ஓடி விட்டன. அப்போதுதான் வல்லாளகண்டனுக்குப் புரிந்தது: உடல் பலத்தை விட புத்தி பலமே பெரிதென்று.
இருவரும் மறு நாளைக்கு வேறு ஒரு கிராமத்துக்குப் போவோம் என்று புறப்பட்டனர். பேய்கள் போன புதுக் காட்டின் வழியே திரும்பி வந்து கொண்டிருந்தனர். மாலை நேரம் ஆகி இருட்டத் துவங்கியது. வல்லாள கண்டனுக்கு ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயா’கத் தென்பட்டது. ஆகையால் நாம் ஒரு அரச மரத்தின் மீது ஏறி இரவைக் கழிப்போம்; பொழுது விடிந்ததும் புறப்படுவோம் என்றான். அதற்கு இணங்கிய மஹா புத்தி சாலியும் இரவு முழுதும் பல கதைகளைச் சொல்லிப் பொழுதைக் கழித்தான். அதே மரத்துக்கு அடியில் நள்ளிரவில் பேய்கள் வந்து குழுமி கூட்டம் போட்டன. அதைப் பார்த்த வல்லாள கண்டன் பயந்து நடுங்கி பேய்கள் மீது தொபுக் என்று விழுந்தான். அவன் வாய் குளறிப் போய் ஏதோதோ பிதற்றத் துவங்கினான்.
அவைகளைக் அதைக் கேட்ட மஹா புத்தி சாலி, அட நீ ஏன் இந்தப் பேய்களையும் தின்ன வேண்டும் என்று துடிக்கிறாய்? இன்றுதான் ஐந்தாறு பேய்களை அடித்துக் கொன்று தின்னோமே; இவைகளை நாளை இரவுச் சாப்பாட்டுக்கு வைத்துக் கொள்வோம். சூடாகச் சாப்பிடுவோம்’’ என்று மரத்தின் மீதிருந்து சொன்னான்.
இதைக் கேட்ட அவை அனைத்தும் அடக்கடவுளே! இவன் மூன்று பேய்களை பக்ஷணம் பண்ணியவனின் தகப்பன் அல்லாவா? என்று பயந்து நடுங்கி ஓட்டம் பிடித்தன.
மறு நாள் காலையில் வல்லாள கண்டன் சொன்னான்: “புத்திமான் பலவான் ஆவான்; உடல் பலம் இருந்தும் என்னால் பேய்களை விரட்ட முடியவில்லை; நீ உன் புத்திசாலித் தனத்தால் விரட்டிவிட்டாய் என்று புகழ்ந்துவிட்டு தனது கிராமத்துக்கே சென்றான்.
–சுபம்–
You must be logged in to post a comment.