Date: 23 JANUARY 2018
Time uploaded in London- 6-11 am
Written by S NAGARAJAN
Post No. 4651
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
19-1-2018 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (ஏழாம் ஆண்டு 48வது) கட்டுரை
பரபரப்பூட்டும் விண்வெளி ஆய்வுத் தகவல்கள்!
ச.நாகராஜன்
“வானம் கண்களுக்கான தினசரி உணவு!” – ரால்ப் வால்டோ எமர்ஸன்
(The sky is the daily bread of the eyes! – Ralph Waldo Emerson)
1
பறக்கும் தட்டைப் பார்த்த பைலட்!
விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டு பிடித்தவற்றில் ‘டாப் ஸ்டோரீஸ்’ எவை என்று அறிய ஆவலாக இருக்கிறதா?
விண்வெளிப் பத்திரிகைகள் தொகுத்து விட்டன.
அவற்றில் முதலிடம் பெறும் சிலவற்றைக் காண்போம்.
அமெரிக்க சூப்பர்சானிக் ஜெட்டின் பெயர் F18. இதனுடைய வேகத்தை விட அதிகமாகப் பறந்த ஒன்றை விஞ்ஞானிகள் இப்போது அறிந்துள்ளனர்!
அது பறந்த வேகத்தில் கீழே இருந்த கடல் கொதித்துக் கொந்தளித்தது!. எங்கிருந்து வந்தது, எங்கு போனது என்பதைக் கண்டுபிடிக்க முடியாதபடி மாயமாய் அது மறைந்து விட்டது!
நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு ஒரு கடற்படையைச் சேர்ந்த ஒரு பைலட் இந்த தகவலை அளித்துள்ளார். டேவி ஃபேவர் என்ற அந்த பைலட் இப்படிப்பட்ட பறக்கும் தட்டை 2004இல் பார்த்தாராம். அது பறந்த வேகத்தைப் போல இன்னொரு பொருளை நான் வாழ்நாளில் பார்த்ததில்லை என்பதை பிரமிப்புடன் அவர் பதிவு செய்திருக்கிறார்
2007ஆம் ஆண்டு அமெரிக்க அரசு இப்படிப்பட்ட பறக்கும் தட்டுகளைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டது. 2012இல் இந்த ஆய்வுக்கான செலவு 220 லட்சம் டாலர் என்ற தொகையை எட்டிய போது செலவைத் தாக்குப் பிடிக்க முடியாமல் இந்தத் திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் டைம்ஸ் பத்திரிகையோ இந்தத் திட்டம் இன்னும் இருக்கிறது என்று அழுத்தம் திருத்தமாக இப்போது தெரிவித்துள்ளது.
1950களில் காணப்பட்ட பறக்கும் தட்டுகளைப் பற்றிய இரகசிய ஆவணங்களை அமெரிக்க புலனாய்வு ஏஜன்ஸி 2016இல் வெளியிட்டுவிட்டது. இந்தப் பறக்கும் தட்டு செய்தி தான் இன்றைய பரபரப்புச் செய்தி!
2
நம் மண்டலத்திற்கு வந்த விருந்தாளி ஔமுவாமுவா!
இன்னொரு செய்தி, 2017ஆம் ஆண்டு, நமது சூரிய மண்டலத்திற்கு வருகை புரிந்த ஒரு “விருந்தாளியைப்” பற்றிச் சொல்கிறது!
அது எங்கிருந்து வந்தது என்பது புரியவில்லை. ஆனால் உற்சாகமடைந்த விண்வெளி ஆர்வலர்கள் அது பல்வேறு கிரகங்களுக்கு இடையே பறக்கும் ‘இண்டர்ஸ்டெல்லர் விண்கலம்’ என்று குதூகலப்படுகின்றனர்.
ஹவாயில் பான் STARRSI என்ற ஒரு அரியவகை டெலஸ்கோப்பை வைத்து ஆராயும் போது இது சென்ற 2017 அக்டோபரில் தென்பட்டது.
இது செல்லும் பாதையை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அது சூரிய மண்டலத்தையும் விட்டுத் தாண்டிச் சென்று ஓடும் ஒரு பாதையில் செல்லும் விண்கலம் என்று கண்டுபிடித்துள்ளனர். சும்மா போகிற போக்கில் இது நமது சூரிய மண்டலத்தை எட்டிப் பார்த்திருக்கிறது.
டிசம்பரில் இது பற்றிய ஆய்வு நடத்திய விஞ்ஞானிகள் இதற்கு ஔமுவாமுவா (Oumuamua) என்ற பெயரைச் சூட்டினர். இது ஒரு ‘காமட்’டாக இருக்கலாம் என்பது அவர்களின் கணிப்பு.
சூரியனால் அது எப்படி தகிக்கப்படாமல் இருக்கிறது? இதற்கு விஞ்ஞானிகள் சொல்லும் சமாதானம் அந்த விண்பொருளைச் சுற்றி கார்பன் நிறைந்த பூச்சு இருந்து அதைச் சூரிய உஷ்ணத்திலிருந்து காத்திருக்கக்கூடும் என்கின்றனர். இதன் சிக்னலைக் கண்டுபிடிக்க பல ரேடியோ அலைவரிசையில் முயன்று பார்த்தும் இது சிக்கவில்லை. ஆகவே மறைந்திருந்து தாக்கும் ஒரு ரகசிய முறையில் இது பறந்திருக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள். அப்படியானால் இது அயல் கிரகம் ஒன்றிலிருந்து வந்த பறக்கும் பொருள் என்று ஆகி விடும்.
3
அயல்கிரக பாக்டீரியா!
அடுத்த செய்தி ரஷியாவிலிருந்து வருகிறது. ரஷிய விண்வெளி வீரரான ஆண்டன் ஷ்காப்லெரோவ் (Anton Shkaplerov) 2017 நவம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பாக்டீரியாவைப் பற்றித் தகவல் அளித்திருக்கிறார்.பன்னாட்டு விண்வெளி நிலையமான இண்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு வெளியில் காணப்பட்ட இந்த பாக்டீரியா அயல்கிரகம் சார்ந்த ஒன்று என்கிறார். ரஷிய அரசு செய்தி நிறுவனமான டாஸ் நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் விண்வெளி ஸ்டேஷனின் முகப்பிலிருந்து சேகரிக்கப்பட்ட சாம்பிள்கள் பூமிக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்கிறார்.
ஆனால் சில ஆய்வாளர்களோ இது பூமியிலிருந்து ஏற்பட்ட தொற்றுக் கிருமி தான் என்கின்றனர். இப்படி விண்வெளி உயிரினம் பற்றி ரஷியா 2014இல் ஒரு பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளது. அதை அப்போதே அமெரிக்கா மறுத்தது. இப்போதும் இந்த செய்தி ரஷிய செய்தி என்பதால் “என்னத்தைச் சொல்வது” என்கிறது!
4
செவ்வாயில் நீர் ஆதாரம் இல்லை!
இன்னொரு செய்தி செவ்வாய் கிரகம் பற்றியது! அவ்வப்பொழுது செவ்வாயில் நீர்ப் பரப்பு இருக்கிறது; நிச்சயமாக இருக்கிறது என்று தகவல்கள் வரும். 2015இல் இப்படி நீர் இருப்பதற்கான அறிகுறியை அறிவியல் ஆய்வு உறுதி செய்தது. ஆனால் 2016இல் இப்படி நீர் இருப்பது ஒருவேளை விண் மண்டலத்திலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு வந்து விழுந்ததோ என்ற ஐயப்பாட்டை இன்னொரு ஆய்வு ஏற்படுத்தியது.
ஆனால் 2017இல் நடத்தப்பட்ட இரு ஆய்வுகள் மூலமாக அங்கு நீர் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று அறியப்படுகிறது!
5
உஷ்ண கிரகத்தில் டைட்டானியம் பனி!
கொசுறுத் தகவல் ஒன்று! ஹப்பிள் டெலஸ்கோப்பை வைத்து விண்வெளியை ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகள் கெப்ளர் – 13 Ab என்ற கிரகத்தை ஆராய்ந்த போது அவர்கள் திகைத்தனர். இது ஒரு எக்ஸோபிளானட். அதாவது சூரிய மண்டலத்திற்கு அப்பால் இருக்கும் ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வரும் கிரகம்!
இது பிரம்மாண்டமான வியாழ கிரகத்தை விட ஆறு மடங்கு பெரியது. 1730 ஒளி ஆண்டு தூரத்தில் இருக்கிறது. (இதை மைல் கணக்கில் கணக்கிட்டால் மலைப்பு தான் வரும்). இதன் உஷ்ணம் 2760 டிகிரி செல்ஸியஸ்! இந்த கிரகத்தில் டைட்டானியம் டை ஆக்ஸைடு பனி போல படர்ந்திருக்கிறதாம்!
மிக அதிக உஷ்ணநிலை கொண்ட கிரகத்தில் டைட்டானியம் எப்படிப் படர முடியும். விஞ்ஞானிகள் பல்வேறு கொள்கைகளை முன் வைக்கின்றனர்.
ஆக இப்படிப் பல மர்மங்களை விண்வெளி நமக்குத் தருகிறது.
விஞ்ஞானிகள் ஆர்வத்துடன் “துப்புத் துலக்கும்” வேலையை ஷெர்லாக்ஹோம்ஸ் போலச் செய்து வருகின்றனர்.
எல்லையற்ற பிரபஞ்சவெளியில் எல்லையற்ற மர்மங்கள்!!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல கணித மேதையும் விஞ்ஞானியும் தத்துவ ஞானியுமான ப்ளெய்ஸ் பாஸ்கல் (Blaise Pascal பிறப்பு 19-6-1923 மறைவு 23-11-1662) வாழ்நாள் முழுவதும் உடல் வியாதியால் அவஸ்தைப்பட்டவர். பதினெட்டாம் வயதிலிருந்து தினமும் வலியினால் துடித்து வந்தவர்.
அவருக்கு 1654ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் தேதியன்று ஒரு விசித்திரமான சம்பவம் நடைபெற்றது. இரவு 10.30லிருந்து 12.30க்குள் ஒரு அபூர்வமான ஆன்மீக அனுபவத்தை தனது பாரிஸ் வீட்டில் படுத்துக் கொண்டிருந்த போது அவர் அனுபவித்தார். அதை அவரது வரலாற்றை எழுதிய ஆசிரியர்கள் ‘தி நைட் ஆஃப் ஃபயர்’ (The night of Fire) என்று பெயர் சூட்டிக் குறிப்பிடுகின்றனர்.
தனது அனுபவத்தை அவர் ஒரு சின்ன பேப்பரில் எழுதி வைத்துக் கொண்டார். அதை வாழ்நாள் முழுவதும் இரகசியமாகப் பாதுகாத்தார். அந்த பேப்பரை தனது சட்டையின் உள் பையில் வைத்துக் கொண்டே வாழ்ந்தார்.
அப்படி ஒரு பேப்பர் இருப்பது அவர் இறந்த பிறகு தான் தெரிந்தது. அந்த வரிகளுக்கு மெமோரியல் (Memorial) என்று பெயர்.
அந்த ஜொலிக்கும் தீயில் அவர் கண்டது என்ன? தனது தெய்வீகக் காட்சியைக் கண்டவுடன் அவர் உடனடியாக எழுதியது இது:
God of Abraham, God of Isaac, God of Jacob, not of the philosophers and scholars. Certitude, certitude, feeling, joy, peace. God of Jesus Christ. My God and your God. Thy God will be my God.
இப்படி ஆரம்பித்துத் தொடர்கிறது வரிகள். ‘இயேசு கிறிஸ்துவுக்கு முழுதுமாக சரணாகதி’ என்ற இந்த அனுபவத்தைத் தொடர்ந்து அவர் கணிதத்தையும் அறிவியலையும் விட்டு விட்டார்.
ஆன்மீக திசையில் அவர் பாதை திரும்பியது.
“என்னைக் கடவுள் ஒருபோதும் கைவிட வேண்டாம்” (May God never Abandon me) என்பது தான் அவர் இறப்பதற்கு முன் எழுதிய கடைசி வரி!
அபூர்வமான ஆன்மீக அனுபவம் பெற்ற உலகின் ஒரே அதிசய விஞ்ஞானி பாஸ்கல் தான்!
***