Written by London swaminathan
Date: 15 March 2017
Time uploaded in London:- 8-39 am
Post No. 3725
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com
வால்மீகி ராமாயணத்தில் 135-க்கும் மேலான ஆயுதங்களின் பெயர்கள் உள்ளன. இவைகளை ஆங்கிலத்தில் ராமாயணத்தை மொழிபெயர்த்த ஹரிபிரசாத் சாஸ்திரி கடைசியில் பிற்சேர்க்கையாகத் தனியாகக் கொடுத்துள்ளார். இது போல கம்ப ராமாயணத்தில் வரும் ஆயுதப் பட்டியலையும், பிற தமிழ் இலக்கியங்களில் வரும் ஆயுதப் பட்டியலையும் தொகுத்தல் நலம் பயக்கும். ஆயினும் அவைகளின் வடிவங்களையும் முழுச் செயற்பாட் டையும் நாம் அறியோம். கம்போடியா, இந்தோநேஷியா முதலிய நாடுகளில் உள்ள ராமாயணச் சிற்பங்களைப் பார்த்தாலும் அத்தனை ஆயுதங்களையும் அடையாளம் காண முடியுமா என்பது ஐயப்பாடே!
பழங்காலத்தில் போர்த் தொழிலே முக்கியத் தொழிலாக விளங்கியிருக்க வேண்டும். இதற்குப் பின்னர்தான் விவசாயம் முதலிய தொழில்கள் இருந்திருக்க வேண்டும். எகிப்து போன்ற சில இடங்களில் மட்டும் கட்டிடத் தொழில் (பிரமிடு கட்டுதல்) போர்த் தொழிலுக்கு அடுத்தபடியாக இருந்திருக்கலாம். இதற்கு அடுத்த படியாக சமயம் தொடர்பான பணிகள் வந்திருக்கலாம்.
கம்ப ராமாயணத்தில் கம்பன் தரும் படைகளின் எண்ணிக்கையைக் கூட்டினால் வியப்பாகவும் வேடிக்கையாகவும் இருக்கும். ஏனெனில் அது அப்போதைய உலக ஜனத்தொகைக்கும் அதிகம்! நிற்க.
சுந்தர காண்டத்தில் இரண்டு பாடல்களில், கம்பன் தரும் ஆயுதங்களின் பெயர்களை மட்டும் பார்போம். அவற்றைக் கண்ணால் காண்பது அரிது. அகராதிகளிலும் மேம்போக்காகவே பொருள் தருவர்; ஆகையால் அவற்றின் உருவத்தை அறிதல் அரிதிலும் அரிது. இது குறித்து மேற்கொண்டு ஆராய்ச்சிகள் தேவை. சங்க இலக்கியத்தில் கோட்டைகளின் மதில் சுவரில் பொருத்தப்பட்ட ஆயுதங்கள் பற்றிய செய்திகள் உண்டு.
சூலம், மழு, வாளொடு, அயில், தோமரம், உலக்கை,
காலன் வரி வில், பகழி, கற்பணம், முசுண்டி,
கோல், கணையம்,நேமி, குலிசம், சுரிகை, குந்தம்,
வாலம் முதல் ஆயுதம் வலித்தனர் வலத்தார்
சூலாயுதம் (முத்தலை வேல்), மழு (கோடரி), வாள், வேல், பேரீட்டி (தோமரம்), இருப்புலக்கை, உயிர்களை எடுக்கும் எமன் போன்ற வில்-அம்பு, இரும்பு நெரிஞ்சி முள் (கற்பணம்), முசுண்டி, தடி, வளைதடி (கணையம்), சக்கரம், வச்சிராயுதம் (குலிசம்), உடை வாள், கை வேல், திருகுதடி (பிண்டி பாலம்) முத்லிய ஆயுதங்களை உறுதியாகப் பிடித்திருந்தார்கள்.
இவை எல்லாம் அரக்கர் கைகளில் ஏந்தியிருந்த ஆயுதங்கள்
அடுத்த பாடலில்
அங்குசம், நெடுங்கவண் அயில் சிலை வழங்கும்
வெங்குசைய பாச முதல் வெய்ய பயில் கையார்;
செங்குருதி அன்ன செறி குஞ்சியர்; சினத்தோர்;
பங்குனி மலர்ந்து ஒளிர் பலாசவனம் ஒப்பார்
–ஊர்தேடு படலம், சுந்தர காண்டம்
அரக்கர்கள் மேலும் அங்குசம் (மாவெட்டி; யானைகளை அடக்கப் பயன்படுத்துவது) நீண்ட கல் எறி கயிறு, நுனியில் கூர்மையுடையதும், வீசும்போது ஒலி எழுப்புவதுமான தர்ப்பைப் புல் போல அறுக்க வல்லதுமான கயிற்று வடிவிலுள்ள பாசக் கயிறு, முதலான ஆயுதனக்களைக் கைகளில் வைத்திருந்தார்கள். அவர்கள் ரத்தம் போலச் சிவந்த செம்பட்டை முடியினர்; கண்களும் கோபக் கனலை வீசின; அவர்களுடைய தோற்றம் பங்குனி மாதத்தில் மலர்ந்து விளங்கும் கல்யாண முருங்கைமரக் காட்டை ஒத்திருந்தது.
கல்யாண முருங்கை மரத்தை பூடியா மானோஸ்பெர்மா Butea monosperma என்ற தாவரவியல் பெயரால் அழைப்பர். அது ஹிமாசலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் காடு முழுதும் காணப்படும். வசந்த கலத்தில் அது காலை, மாலைச் சூரிய ஒளியில் காடே தீப்பற்றி எரிவதுபோலக் காட்சியை உண்டாக்கும். ஆகையால் இதைத் தாவரவியல் பிரியர்கள் (Flame of the Forest) காட்டின் தீ என்று அழைப்பர். கம்பன், இதைக் கண்டிருக்க வேண்டும். அரக்கர்களின் தலை செம்பட்டை முடியை அதற்கு ஒப்பிட்டது தாவரவியல் படித்தோருக்கும் பூங்காக்களில் செம் முருங்கை (Butea monosperma) மரங்கள் பூத்துக் குலுங்குவதை ரசிப்போருக்கும் விசேஷ அர்த்தத்தைத் தரும்.
வாழ்க கம்பன் ! வளர்க அவன் புகழ்!!
From my old article: —
இலங்காதேவியின் தோற்றம்
வேல் வாள் சூலம் வெங்கதை பாகம் விளி சங்கம்
கோல்வாள் சாபம் கொண்ட கரத்தாள் வடகுன்றம்
போல்வள் திங்கள் போழின் எயிற்றாள் புகை வாயில்
கால்வாள் காணின் காலனும் உட்கும் கதம் மிக்காள்
அவள் வேல், வாள், சூலம், கதை, பாசம், சங்கம், கோல், குந்தம் ஆகிய எட்டுக்கருவிகளைக் எட்டுக் கைகளில் ஏந்தியவள். வடக்கிலுள்ள மேரு மலை போன்றவள்; சந்திரனைப் பிளந்தது போல பற்களை உடையவள். வாயிலே புகை கக்குபவள்; எமனையும் கலங்கச் செய்யும் கடும் கோபம் உடையவள்.
–Subham–