Written by London Swaminathan
Date: 10 JANUARY 2018
Time uploaded in London 7-53 AM
Post No. 4602
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
((தமிழ்த் திருடர்களுக்கு எச்சரிக்கை: உங்கள் குலம் வாழ வேண்டுமானால், தமிழ் வாழ வேண்டுமானால், இந்து மதம் வாழ வேண்டுமானால், எனது பிளாக் (blog)கில் உள்ள கட்டுரைகளப் பகிர்வோர்ப் எழுதியவர் பெயரையும் பிளாக்கின் பெயரையும் நீக்காமல் வெளியிடுக. அல்லது சொல்ல நாக்கு கூசுகிறது…………………………. கடவுளே! என் நாவினால் ……………… சாபம் இட வேண்டாம்; நீயே கவனித்துக்கொள்!))
மூன்று பொம்மை கதை
விஜய நகரப் பேரரசன் கிருஷ்ண தேவ ராயர் சபைக்கு ஒரு வணிகன் மூன்று பொம்மைகளைக் கொணர்ந்தான். அவற்றின் ரஹசியங்களைக் கண்டு பிடிக்கும் அறிவாளி யாரேனும் அந்தச் சபையில் உண்டா என்று வினவினான். எல்லோரும் பொம்மைகளை வாங்கிப் பார்த்துவிட்டு திரு திரு என முழித்தனர். விடை காண இயலாமல் தவித்தனர். அரசனும் சில நாட்கள் கழித்து அந்த வியாபாரியை திரும்பி வரும்படி சொல்லி அனுப்பினன். தெனாலி ராமன் கையில் அந்த பொம்மையைக் கொடுத்தவுடன் அவனுக்கு அதன் சூக்ஷ்மம் புரிந்தது.
Masks sold in Bangalore; newspaper picture
மறு நாள் எல்லோரும் ராஜ சபையில் இருக்கையில் ஒரு சிறு கம்பியைக் கொண்டுவருமாறு தெனாலி ராமன்
வேண்டினான்.
கம்பி என்ன? தம்பி; உனக்குத் தங்கக் கம்பியே தருகிறேன் என்றான் மன்னவன்
தம்பி கையில் கம்பி வந்தது.
முதலில் ஒரு பொம்மையை எடுத்து காதின் ஒரு புறத்தில் உள்ள ஓட்டை வழியாக உள்ளே செலுத்தினான். அது மறு புறமுள்ள செவி வழியே வெளி வந்தது.
யாரும் பார்க்காத துளைகளை அவன் மட்டும் பார்த்தது முதலில் எல்லோருக்கும் வியப்பு அளித்தது.
இரண்டாவது பொம்மையை எடுத்தான். இப்போது காது வழியே சென்ற கம்பி வாயின் வெளியே வந்தது. எல்லோரும் அதன் ‘தாத்பர்யம்’ விளங்காமல் விழித்தனர்
இதற்குள் தெனாலி ராமன் மூன்றாவது பொம்மையை எடுத்தனன் ; தங்கக் கம்பியை நுழைத்தனன்; எங்கே கம்பியின் மறு புறம் என்று வியந்தனர்.
தெனாலி ராமன் சொன்னான்; அது அதன் நடுப்பகுதியில் உள்ள மனதுக்குள்—இதயத்துக்குள்– சென்று விட்டது என்று சொன்னான்.
இதன் பொருள் என்ன என்றும் செப்பினான்:
முதல் பொம்மை ‘அதமர்’களுக்குச் சமம்; கீழ் மட்ட மக்கள்; எதைச் சொன்னாலும் காதிலேயே வாங்க மாட்டார்கள் இந்தப் பக்கம் செவியில் விழுவது அடுத்த பக்க செவி வழியே வந்து விடும் ; மனதில் அடங்காது.
இரண்டாவது பொம்மை ‘மத்யமர்’; இடைத் தர மக்கள்; சொன்னதை மற்றவர்களிடம் சொல்லி விடுவர்; ரஹஸியம் தங்காது.
மூன்றாவது பொம்மை ‘உத்தமர்’களைக் குறிக்கும்; உயர் மட்ட மக்கள்; அவர்கள் காதில் வாங்குவதை மனதில் பதிப்பர்; எந்த ரஹஸியத்தையும் வெளியே விடாது காப்பர் என்றான்.எல்லோரும் அவன் பதிலைக் கேட்டு ஆரவாரம் செய்து பாராட்டினர்.
அகம் மகிழ, உளம் குளிர, மாமன்னனும் பரிசு மழை பொழிந்தான்.
இது ரஹஸியத்தின் பெருமைதனைக் கூறும் ஒரு நிகழ்வு.
இதையே புலவர்களும் பாடி வைத்தனர்.
XXXX
சாணக்கியன் எச்சரிக்கை – ரஹஸியம், பரம ரஹஸியம்!!
மனஸா சிந்திதம் கார்யம் வசஸா ந ப்ரகாசயேத்
மந்த்ரேண ரக்ஷயேத் கூடம் கார்யே சாபி நியோஜயேத்
பொருள்
உன் மனதில் உள்ள விஷயங்களை எல்லாம் வார்த்தைகளில் வடிக்காதே; அதை ரஹசியமாக வைத்திருந்து செயல் வடிவில் காட்டுக.
சாணக்கிய நீதி, அத்தியாயம் 2, ஸ்லோகம் 7
இது நல்ல புத்திமதி; ஏன்?
1.ஒருவன் சொன்னபடி செய்ய முடியாமல் போனால் உலகம் அவனைப் பார்த்து சிரிக்கும்
2.முன் கூட்டிச் சொன்னால் அதற்கு யாரேனும் தடை போட முடியும்
3.படை எடுப்பு, தாக்குதல்போன்ற விஷயங்களைச் சொன்னால், எதிரி நம்மையும் விட ஒரு படி மேலே போய்விடுவான்
- ஆராய்ச்சி, கல்வி முதலிய விஷயங்களை முன்கூட்டிச் சொன்னால் வேறு ஒருவர் அதைச் சொல்லி புகழ் பெறுவர்.
- பேடண்ட் PATENT வாங்கும் முன் யோஜனைகளை வெளியிட்டால் நம்மைவிட வேறு ஒருவர் செயலில் இறங்கி நம்மைப் பின்னுக்குத் தள்ளக் கூடும்.
விவேக சிந்தாமணி என்னும் நூலும் எதில் எதில் ரஹஸியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லும்:-
குருவுபதேச மாதர்கூடிய வின்பத் தன்பால்
மருவிய நியாயங் கல்வி வயதுதான் செய்த தருமம்
அரிய மந்திரம் விசார மாண்மையிங் கிவைகளெல்லாம்
ஒருவருந்தெரிய வொண்ணா துரைத்திடி லழிந்து போமே
பொருள்
ஆசிரியர் செய்த உபதேசம்,
ஸ்த்ரீயிடத்தில் தான் அனுபவித்த இன்பம்,
தான் எவ்வளவு நியாயவான்,
எவ்வளவு படித்தவன்,
எவ்வளவு தருமம் செய்தனன்,
என்ன வயது ஆகியவற்றையும்
பரமரஹஸியமாக வைத்திருக்க வேண்டும்.
தனக்கு உபதேசம் செய்யப்பட்ட மந்திரம்,
தனது பலம்,
பலவீனமிவைகள் எல்லாம் ஒருவருக்கும் தெரியக் கூடாது;
அப்படித் தெரிந்தால் அதனால் கிடைக்கக் கூடிய பலன் கிடைக்காமற் போய்விடும்.
திருவள்ளுவனும் திருக்குறளில் ரஹஸியம் பரம ரஹஸியத்தின் சிறப்பை எடுத்துக் காட்டுகிறார்:-
அறை பறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான் – குறள் 1076
பொருள்
சிலர், தாம் கேட்ட ரஹசியச் செய்திகளையும் பல இடங்களுக்குச் சென்று வெளியிடுவர். இப்படிச் செய்பவர்கள் கயவர்கள்; அவர்கள் அறையப்[படும் டமாரம்- அறை- போன்றவர்கள் ஆவர்.
xxx
பழமொழி நானூறு என்னும் நூலிலும் ரஹசியத்தின் பெருமை விதந்து ஓதப்படுகிறது:
பெருமலை நாட! பிறரறியலாகா
அருமறையை ஆன்றோரே காப்பர் – அருமறையை
நெஞ்சிற் சிறியார்க்குரைத்தல் பனையின் மேல்
பஞ்சிவைத் தெஃகிவிட்டற்று
பொருள்
பெரிய மலை நாட்டுக்கு உரிமையுடையோனே! சான்றோர்கள், பிறர் அறியக்கூடாத விஷயத்தை ரஹஸியமாகக் காப்பர்; அதை சிறுமனம் படைத்தோருக்கு — சிற்றறிவு படைத்தோருக்குச்— சொன்னால் அது பனை மரத்தின் மீது பஞ்சு வைத்து அதைப் பறக்கவிட்டது போலாகும்; அதாவது மரத்தின் மீது பஞ்சு மூட்டையைக் கொண்டு வைத்தால் அது எப்படி எல்லாத் திசைகளிலும் எளிதில் பரவுமோ அப்படி ரஹஸியமும் அம்பலத்துக்கு வந்துவிடும்.
இன்னொரு பாடலில் பழமொழி ஆசிரியர் முன்றுரை அரையனார் பகர்வதாவது:-
நயவர நட்டொழுகுவாரும் தாம் கேட்ட
துயவாதொழிவார் ஒருவருமில்லை
புயலமை கூந்தல் பொலந்தொடி! சான்றோர்
கயவர்க் குரையார் மறை
பொருள்
மேகம் போன்ற கரிய கூந்தலையும் தங்க வளையல்களையும் அணிந்த பெண்ணே, கேள்! அன்போடு உள்ள நண்பரிடமும் கூட ஆராயாது எல்லா விஷயங்களையும் சொல்பவர் எவரும் இல்லை. ஆகவே அறிவுடையோர், கீழ் மக்களுக்கு ரஹஸியத்தைச் சொல்ல மாட்டார்கள்
Earlier Article……………….
https://tamilandvedas.com/tag/ரகசியம்/
TAGS: ரகசியம், ரஹசியம், பரம, மந்திரம், ஜொராஸ்டர். இது தொடர்பான எனது பழைய கட்டுரைகள்:–. போலி சாமியார் பற்றிய பழந்தமிழ்ப் … https://tamilandvedas.com/…/போலி-சாமியார்-பற…. 2 days ago – போலி சாமியார் பற்றிய பழந்தமிழ்ப் பாடல்கள் (Post No.4294) … கூடா ஒழுக்கம் என்னும் அதிகாரத்தில், போலி …
— சுபம், சுபம் —