பழம் நீ அப்பா! (Post No.8742)

WRITTEN BY S NAGARAJAN                                    

Post No. 8742

Date uploaded in London – – 27 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

பழம் நீ அப்பா!

ச.நாகராஜன்

பழநி என்ற பெயர் ஏன் வந்தது? அனைவருக்கும் தெரிந்த புராணக் கதை தான்!

முன்னொரு காலத்தில் பிரமதேவன் முன்னால் நாரத முனிவர் வீணையை வாசித்தார். அதைக் கேட்டு மகிழ்ந்த நான்முகன் ஒரு மாங்கனியை நாரதருக்குத் தந்தார். மாங்கனியைப் பெற்றுக் கொண்ட நாரதர் நேராக திருக்கைலாயத்திற்குச் சென்று அந்த மாங்கனியை சிவபிரான் முன்னர் வைத்து வணங்கினார்.

சிவபிரான் அருகிலே விநாயகரும், முருகனும் இருந்தனர். யாருக்கு கனியைக் கொடுப்பது?

சிவபிரான் இருவரையும் நோக்கிக் கூறினார்: “உங்களில் யார் ஒருவர் இந்த உலகைச் சுற்றி முதலில் வந்து என்னிடம் கனியைக் கேட்பீர்களோ அவருக்கு இதைத் தருவேன்.”

முருகன் தன் மயில் வாகனத்தில் அமர்ந்து உலகைச் சுற்ற வேகமாகப் புறப்பட்டார்.

விநாயகரோ அம்மையையும் அப்பனையும் ஒரு வலம் வந்து கனியைக் கேட்டார்.

சிவபிரான் அவரைப் பார்க்க, “அனைத்து அண்டமும் சுற்றி வந்து விட்டேன் -உங்களைச் சுற்றியதால்!” என்றார்.

அந்த பதிலில் பொதிந்து கிடந்த உண்மையை உணர்ந்த சிவபிரான் மாங்கனியை விநாயகருக்கு வழங்கினார்.

பின்னால் வந்த முருகக் கடவுள் நடந்ததை அறிந்தார். மனச் சோர்வுற்றார்.

கோபத்துடன் நேராக திரு ஆவினன் குடி வந்தடைந்தார்.

உமாதேவியுடன் சிவபிரான் முருகனிடம் வந்தார். அவரை எடுத்து அணைத்துக் கொண்டார். “பழம் நீ”யே” என்றார் சிவபிரான.

உடனே முருகனின்  கோபம் நீங்கியது.

இதனால் திரு ஆவினன் குடி தலமானது பழநி என்ற பெயரைப் பெற்றது.

வையாபுரி நாட்டில் உள்ள இந்தத் தலம் ‘பொதினி’ என்ற பெயராலும் வழங்கப்பட்டு வந்தது.

இப்படிப்பட்ட பெருமையைக் கொண்ட பழநி இருப்பது கொங்கு மண்டலத்தில் தான் என கொங்கு மண்டல சதகம் 22ஆம் பாடலில் கூறுகிறது.

பாடல் இதோ:-

தீத்திகழ் மேனி  சிவன்கையி லோர்கனி தேவர்மெச்சி

ஏத்திய நாரதர் நல்கக் கண் டேயிப மாமுகத்து

மூத்தவன் கொள்ள விளையோனை யீசன் முகந்திருத்தி

வாய்த்த பழநியென் றோதின துங்கொங்கு மண்டலமே

பொருள் : நாரத முனிவர், சிவ பெருமான் திருவடியில் ஒரு மாம்பழத்தை வைத்து வணங்கினார். அதனை விநாயகக் கடவுள் பெற்றுக் கொண்டனர். கோபம் கொண்ட குமரக் கடவுளை சிவபிரான் சமாதானப்படுத்தி ‘பழம் நீ’ என்று சொல்லி அருளியதும் கொங்கு மண்டலத்திலேயாம்.

இந்த வரலாற்றை பழனித்தல புராணம் இப்படி விவரிக்கிறது:

ஈசனுருகி மடியினில் வைத்தென்று மிளையோயறிவுடைமை

தேசு தருநம் வாணுதற்கண் மணி நீ சிறுவனோபெரியை

வாச நறுமென் கனியுமொரு கனியோ மதுரமொழிவாயாற்

பேசவரிய மறை ஞானப் பிள்ளை பழநியெனப் புகன்றார்         

  • பழனித்தல புராணம்
  •  

சிவ பிரானின் ஆனந்தத் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று!

tags– பழம் நீ அப்பா, பழனி

***