எல்லாப் பழியும் சமணன் தலையிலே! (Post No.5015)

Written by S NAGARAJAN

 

Date: 16 MAY 2018

 

Time uploaded in London –  7-04 AM   (British Summer Time)

 

Post No. 5015

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

ச.நாகராஜன்

 

பகவான் ராமராக அவதரித்த போது இளமைப் பருவத்தில் கூனி மந்தரையைக் கேலி செய்ததாக வரலாறு உண்டு.

ஆனால் இது ராமாவதாரத்திற்கு உரியது அல்ல; இது போன்ற பால்ய லீலைகள் எல்லாம் கிருஷ்ணாவதாரத்திற்கு உரியவையே; ஆக அங்கே தான் இதைச் சொல்ல வேண்டும் என்று பலர் சொல்வதுண்டு.

 

 

இதை பகவத் விஷயம் என்ற நூல் “எல்லாப் பழியும் சமணன் தலையிலே” என்பது போல இருக்கிறது என்கிறது.

அதைப் பற்றிய கதை இது தான்:

 

ராஜா ஒருவனுக்கு ஒரு புகார் வந்தது ஒரு திருடனின் நண்பர்களிடமிருந்து.

 

திருடன் ஒரு பிராம்மணனின் வீட்டில் திருடச் செல்லும் போது சுவர் ஈரமாக இருந்ததால் இடிந்து ன் மேல் விழவே அவன் இறந்து விட்டான். ஆகவே திருடன் இறந்ததற்கு பிராம்மணன் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று திருடனின் நண்பர்கள் பிராம்மணன் மீது வழக்குத் தொடர்ந்தனர்.

 

இரண்டு கட்சிக்காரர்களும் ராஜா முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

 

ராஜா: ஓ! பிராம்மணரே! உங்கள் வீ ட்டின் ஈரச் சுவர் இடிந்ததால் தான் திருடன் இறந்தான். நஷ்ட ஈடைக் கொடுக்க வேண்டும். என்ன சொல்கிறீர்?

 

பிராம்மணன் : எனக்கு ஒன்று தெரியாது ராஜாவே! இந்தச் சுவரைக் கட்டிய வேலையாளைத் தான் நீங்கள் கேட்க வேண்டும்.

 

ராஜா வேலையாளை அழைத்து வரச் செய்து கேட்டான்: நீ தான் சுவரைக் கட்டினாய். ஆகவே நீ தான் நஷ்ட ஈடு தர வேண்டும்.

 

வேலையாள் : இல்லை ராஜாவே! தண்ணீர் ஊற்றியவன் நிறையத் தண்ணீர் ஊற்றி விட்டான்.

 

தண்ணீர் ஊற்றியவன் வந்து சொன்னான்: இல்லை ராஜாவே! பானை செய்தவன் பெரிதாகப் பானை செய்து விட்டான். அவனைத் தான் கேட்க வேண்டும்.

 

பானை செய்தவன் : இல்லை ராஜாவே! பானை செய்யும் போது நடனமாடும் பெண்மணி வழியில் சென்றாள். அவளைக் கவனித்ததால் எனது பானை பெரிதாக ஆகி விட்டது.

 

நடனப் பெண்மணி : அந்த வழியாகச் சென்றதற்குக் காரணம் வண்ணான் என் துணியைத் தராததால் தான்! அவனைக் கேட்பதற்காகத் தான் அந்த வழியாகச் செல்ல நேர்ந்தது.

 

வண்ணான் வந்தான் : நான் துணிகளைத் தோய்க்கப் போகையில் அங்கு சமணன் குளித்துக் கொண்டிருந்தான். அவன்

குளித்து விட்டு வெளியே வரும் வரை காத்திருக்க வேண்டியதாகி விட்டது.

 

சமணன் வந்தான். சமண சமயத்தின் விதிகளின் படி அவன் மௌனத்தைக் கடைப்பிடித்தான். ஒன்றும் சொல்லவில்லை.

 

ராஜா: எல்லாம் சமணனால் வந்தது. சமணன் தான் நஷ்ட ஈடு தர வேண்டும்.

சமணன் மௌன விரதத்தில் இருந்ததால் வாயைத் திறக்கவில்லை.

 

“ஆஹா சமணன் வாயையே திறக்கவில்லை. மௌனம் சம்மதத்திற்கு அடையாளம். அவன் குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டான். அவனைத் தூக்கில் போடு” என்று ராஜா தீர்ப்பை வழங்கினான்.

 

அது போலத் தான் கிருஷ்ணாவதாரமும். எல்லாப் பழியும் சமணன் தலையிலே என்பது போல எல்லா பால்ய லீலைகளும் கிருஷ்ணனின் வாசலுக்கு வந்து விடுகிறது.

இது தான் உண்மை.

இந்தக் கதை பகவத் விஷயத்தில் முதல் பகுதியில் 425ஆம் பக்கத்தில் இடம் பெறுகிறது.

 

அழகிய இந்த நூல் தெலுங்கு மொழியில் உள்ளது. பல பகவத் விஷயங்களை சுவாரசியமாகச் சொல்லும் இந்த நூல் படிக்கப் படிக்க வைணவ சம்பிரதாயத்தில் உள்ள அற்புதமான பல ஆன்மீக விஷயங்களின் நுணுக்கங்களை அள்ளித் தரும்.

 

குறிப்பு :- வட இந்தியாவில் 40000 சுலோகங்களுடன் கூடிய ஒரு ராமாயணத்தில் ராமரின் பால்ய லீலைகள் நிறையக் குறிப்பிடப்பட்டுள்ளதாம்!

***