பனை மரத்துக்கு அடியில் நின்று பாலைக் குடித்தாலும்… (Post No.3904)

Written by London Swaminathan

 

Date: 13 May 2017

 

Time uploaded in London: 6-34 am

 

Post No. 3904

 

Pictures are taken from various sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

தமிழில் அழகான, ஆழமான பொருள் பொதிந்த பழமொழிகள் உள. ஒருவன் செய்யும் காரியம் எவ்வளவுதான் நல்லதானாலும் இடமும் நேரமும் சூழ்நிலையும் சரியாக இல்லாவிடில் நல்ல பெயர் கிடைக்காது

 

பாம்புப் புற்றுக்கு அருகில் ஒரு கயிறு கிடந்தாலும் அதைப் பாம்பென்றே மக்கள் கருதுவர்; சஹவாச தோஷம்!

பனைமரத்துக்கு அடியில் நின்று பாலைக் குடித்தாலும், அதன் வெண்மை நிறமும், இடமும் அதைக் கள் என்று நினக்கச் செய்யும்.

 

நிந்தையிலாத் தூயவரும் நிந்தையைச் சேரில் அவர்

நிந்தையது தம்மிடத்தே நிற்குமே – நிந்தைமிகு

தாலநிழல் கீழிருந்தான் றன்பால் அருந்திடினும்

பாலதனச் சொல்லுவரோ பார்.

-நீதி வெண்பா (எழுதியவர் பெயர் கிடைக்கவில்லை)

 

பொருள்:-

பனை மரத்தின் அடியின் உடகார்ந்துகொண்டு பசுவின் பாலைக் குடித்தாலும், பிறர் அதைப் பால் என்று சொல்லுவரோ? நீ அதனை நினைத்துப் பார். அதுபோல நல்ல பெயருடைய மேலோர், கெட்டவர்களுடன் சேர்ந்தால் அவர்களுடைய கெட்ட பெயர் இவர்களையும் ஒட்டிக்கொள்ளும்.

பழுதும் பாம்பும்

 

இதே கருத்தை வலியுறுத்த இன்னொரு பாடலையும் பாடி வைத்தார் அந்தப் புலவர்!

 

நல்லொழுக்கம் இல்லாரிடம் சேர்ந்த நல்லோர்க்கு

நல்லொழுக்கமில்லாச் சொல் நண்ணுமே – கொல்லும் விடப்

பாம்பென உன்னாரோ பழுதையே ஆனாலும்

தூம்பு அமரும் புற்று அடுத்தாற் சொல்

-நீதி வெண்பா (எழுதியவர் பெயர் கிடைக்கவில்லை)

 

ஓட்டைகள் மிக்க புற்றுக்குப் பக்கத்தில் கயிறே கிடந்தாலும், அதை கொல்லக் கூடிய விஷப் பாம்பு என்று சொல்லுவார்கள் அல்லவா? நீயே சொல்! அது போல நல்ல ஒழுக்கம் இல்லாதவர்களுடன் சேர்ந்த நல்லோரையும் பழிச் சொல் வந்து சேரும்.

 

அழகான இரண்டு உவமைகள் மூலம் நமக்கு உயரிய கருத்துக்களைச் சொல்வர் தமிழ்ப் புலவர். இளம் வயதிலேயே இந்தச் செய்யுட்களை மனப்பாடம் செய்தால், அவை நம் மனதில் பசு மரத்தாணி போலப் பதியும்.

 

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்ப் புலவர்தம் பெருமை!

 

–சுபம்–