அனுமன் ராமனைக் கொன்றான் ! சம்ஸ்கிருத புதிர் !!

anjaneya,fb

By London Swaminathan
Post No. 1013; Dated 1st May 2014.

தமிழைப் போலவே சம்ஸ்கிருதமும் வளமான மொழி. ஆனால் சம்ஸ்கிருதம் தமிழைவிட 1500 ஆண்டுப் பழமையான மொழி என்பது தொல்பொருட் சின்னங்களால் நிரூபிக்கப்படுள்ளது இது பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். துருக்கி- சிரியா எல்லையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில் வேத கால தெய்வங்கள் பெயர், ரிக் வேதத்தில் உள்ள அதே வரிசையில், ஒரு உடன்படிக்கையில் இருப்பது எல்லோரும் அறிந்ததே. காஞ்சிப் பெரியவர் தனது உரையில் இதை 1932 ஆம் ஆண்டிலேயே சுட்டிக்காட்டினார்.

எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட தசரதன் கடிதங்களும் (ராமாயண தசரதன் அல்ல), கிக்குலி எழுதிய குதிரைப் பயிற்சி நூலும், இராக்-துருக்கி-சிரியா பகுதியை ஆண்ட மிட்டன்னி நாகரீக மன்னர்கள் பிரதர்தனன், தசரதன் ஆகியோர் பெயர்களும் மறுக்கமுடியாத தொல்பொருட் துறை சான்றுகளாகப் பட்டொளி வீசிப் பறக்கின்றன.

இந்தோநேசியாவில் மனிதர்கள் புகமுடியாத காடு என்று எண்ணியிருந்த போர்னியோ தீவில் மூலவர்மனின் நாலாம் நூற்றாண்டு சம்ஸ்கிருதக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டதையும் காஞ்சி மாமுனிவர் தனது உபந்யாசங்களில் குறிப்பிட்டதை நாம் அறிவோம்.

வியட்நாம், கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து, இநதோநேஷியா பகுதிகளில் 800-க்கும் அதிகமான சம்ஸ்கிருத கல்வெட்டுகள் இருப்பதையும் அறிஞர் உலகம் நன்கு அறியும். ஆசியா கண்டம் முழுதும் சம்ஸ்கிருதக் கல்வெட்டுகள் இருப்பதையும் ஆப்பிரிக்காவில் எகிப்தில் தசரதன் கடிதங்கள் இருப்பதையும் அறிஞர் உலகம் எந்தவித ஆட்சேபணையும் இன்றி ஒப்புக்கொள்வது மகிழ்ச்சிக்குரியது.

என்னைப் போன்றோர் எழுதிய மாயா- இந்து தொடர்புகளைப் பலர் ஏற்பதில்லை. அது ஏற்கப் பட்டால் தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள மாயா, ஒலமக், ஆஸ்டெக் (ஆஸ்தீக), இன்கா நாகரீகங்களும் சம்ஸ்கிருதமே என்பதை உலகம் ஏற்கும். நிற்க.

இனி புதிருக்கு வருவோம். தமிழில் 20,000 பழமொழிகள் இருப்பதைப் போல சம்ஸ்கிருதத்திலும் பல்லாயிரக் கணக்கான பழமொழிகள் உண்டு. இது தவிர விடுகதைகளும், புதிர்களும், ஏராளம், ஏராளம். எண்ணி மாளாது. யாரேனும் ஒருவர் தமிழ் மொழி இலக்கியங்களையும் சம்ஸ்கிருத இலக்கியங்களையும் படிக்காமல் இந்தியப் பண்பாட்டை எடைபோட முன்வந்தால், அது குருடன் யானையைப் பார்த்த கதையாக முடியும். குருடர்கள் யானை பார்த்த கதையை திருமூலரும், சம்ஸ்கிருத, பாலி இலக்கியங்களும் பாடி இருப்பதை ஏற்கனவே எழுதிவிட்டேன்.

அனுமன் ராமனைக் கொன்றான்!

“ஹதோ அனூமதா ராமா, சீதா ஹர்ஷம்
உபாகதா ருதந்தி ராக்ஷசா சர்வே ஹா ஹா ராமோ ஹதோ ஹத:”

என்ற சம்ஸ்கிருத ஸ்லோகத்தை இரண்டுவிதமாகப் பிரிக்கலாம்.
ராம என்பது எல்லோரும் அறிந்த புனிதனின் பெயர். ‘ஆராம’ என்றால் தோட்டம். இந்த ஒரு சொல் தெரிந்தால் போதும். புதிரை விடுவித்து விடலாம்.

முதலில் எழுதப்பட்ட ஸ்லோகத்தின் பொருள்: அனுமன் ராமனைக் கொன்றான். சீதைக்கு மகிழ்ச்சி. ராக்ஷசர்களும் ஹா, ஹா, ராமன் கொல்லபட்டான் என்று கூத்தாடுகின்றனர்.

ஆராம என்ற சொல்லுடன் அர்த்தம் கொண்டால் கிடைக்கும் பொருள்: “அனுமன் தோட்டத்தை (அசோகவனம்) அழித்தான், சீதைக்கு மகிழ்ச்சி. ராக்ஷசர்கள், ஹா, ஹா, தோட்டம் அழிக்கப்பட்டுவிட்டது” என்று கூச்சல் இட்டனர்.

இதே போல தமிழிலும் ஏராளமான சுவைமிகு பகுதிகள் உண்டு. அவைகளைத் தனியாகக் காண்போம்.

angry ram

சம்ஸ்கிருத சிலேடை

கவி காளமேகம் பொழிந்த சிலேடைக் கவிதைகளைப் பள்ளிக் கூடத்திலேயே தமிழ்ப்பாட வகுப்பில் படித்து இருக்கிறோம். அதே போல ஒரு சம்ஸ்கிருத (ஸ்லேச) சிலேடைக் கவிதை:
பாணன் என்ற கவிஞன் காளிதாசனுக்குப் பின் தோன்றி புகழ் அடைந்தவன். அவன் எழுதிய காதம்பரி என்னும் புகழ் பாடும் சிலேடைக் கவிதை இதோ:

யுக்தம் காதம்பரீம் ஸ்ருத்வா கவயோ மௌனம் ஆஸ்ரித:
பாணத்வனாவ் அனத்யாயோ பரிதிர் ஸ்ம்ருதிர்யத:

பாண என்ற சொல்லில் இருபொருள் (சிலேடை) அமைந்துள்ளது. பாண என்பது மாபெரும் கவிஞனின் பெயர். இதற்கு ‘அம்பு’ என்ற பொருளும் உண்டு .ராம பாணம் என்ற சொல் தமிழிலும் வழக்கில் உண்டு.

kadambari
முதல் பொருள்: காதம்பரீயைக் கேட்ட மாத்திரத்தில் புலவர்கள் மௌனம் ஆகிவிடவேண்டும் என்பது சரியே ( நிசப்தமாகக் கேட்க வேண்டும் ). ஏனெனில் பாணன் கவிதை என்ற உடனேயே மற்ற கவிதைகளை நிறுத்திவிட வேண்டும் என்பது ஒரு புனித விதி ஆகும்.
அம்பு என்ற பொருள் கொண்டால் வரும் பொருள்:

காதம்பரீயைக் கேட்ட புலவர்கள் மௌனம் ஆகிவிடவேண்டும் என்பது சரியே ( நிசப்தமாகக் கேட்க வேண்டும் ). ஏனெனில் அம்பு ஒலி கேட்ட உடனேயே மற்றவைகளை நிறுத்திவிட வேண்டும் என்பது ஒரு புனித விதி ஆகும்.

போர்க்காலத்தில் அம்பு ஒலி சப்தம் வரும்போது அங்கு கவிதைக்கு என்ன வேலை?

மஹாபாரதத்தை எழுதிக் கொடுக்க பிள்ளையார் போட்ட நிபந்தனையும் அதற்கு வியாசர் போட்ட பதில் நிபந்தனையும் நாம் அனைவரும் அறிந்ததே. யக்ஷப் ப்ரஸ்நம் என்ற பகுதியில் மரதேவதை கேட்ட பல கேள்விகளுக்கு தர்மன் திறம்பட பதில் அளித்ததையும் நான் ஏற்கனவே எழுதிவிட்டேன். இவை அனைத்தும் அந்தக் காலத்தில் இந்துக்களின் அறிவு, குறிப்பாக விடுகதை, புதிர், சிலேடை விஷயங்களில் எவ்வளவு முன்னேறி இருந்தது என்பதைக் காட்டுகின்றன.

bana

contact swami_48@yahoo.com