Research Article by London Swaminathan
Date: 18 October 2016
Time uploaded in London: 14-59
Post No.3264
Pictures are taken from various sources; thanks. (Picture is used only for representational purpose; no connection with the current article.)
Contact swami_48@yahoo.com
பாம்புகள் மணி மந்திர ஔஷதத்துக்குக் கட்டுப்படும் என்ற நம்பிக்கை வேத காலத்திலிருந்து இருந்து வருகிறது (மணி= இரத்தினக் கற்கள், மந்திரம்= மந்திர உச்சாடனம், ஔஷதம்= மூலிகை, மருந்துகள்).
இதைப் புலவர்களும் அடிக்கடி உவமையாகப் பயன் படுத்துவர். கம்பனும் காளிதாசனும் பயன்படுத்தியதால் மக்களிடையே இந்த நம்பிக்கை வேரூன்றி இருக்கிறது.
குயவர் ஜாதியினர், கோயமுத்தூர் பகுதியில் பாம்பு கடித்த ஒருவனைக் காப்பாற்றிய செய்தியை ஆர்தர் மைல்ஸ் என்பவர் குறிப்பிடுகிறார். அந்த ஜாதியைச் சேர்ந்த ஒருவர் ஒரு பழுப்பு நிற பொடியைப் பாம்பு கடித்த இடத்தில் தூவி, விஷத்தை உடம்பிலிருந்து இறக்குவது போல பலவித சைகைகளைச் செய்த சிறிது நேரத்தில் அந்தப் பையன் பாம்பு கடிக்காத மாதிரி நடந்து சென்றான். அதற்கு முன் அவன் கைகள் எல்லாம் மரத்துப் போயிருந்தன் என்கிறார்.
துர் ஜனங்கள் (Bad people) பற்றி நீதி வெண்பா என்ற நூலில் வரும் பாடல்:
துர்ச்சனரும் பாம்புந் துலையொக்கினும் பாம்பு
துர்ச்சனரையொக்குமோ தோகையே — துர்ச்சனர்தாம்
எந்தவிதத்தாலும் இணங்காரே பாம்புமணி
மந்திரத்தாலே வசம்
பொருள்:- மயில் போன்ற பெண்ணே! கீழ் மக்களும் பாம்பும் தீங்கு செய்வதில் தராசுத்தட்டில் சமமாக இருப்பினும், பாம்பானது கீழ் மக்களுக்குச் சமமாகுமோ! ஆகாது ஏனெனில் கீழ் மக்களை என்ன சொன்னாலும் திருத்த முடிவதில்லை. ஆனால் பாம்போ இரத்தினக் கல், மந்திர உச்சாடனங்களுக்கும் கட்டுப்படும்.
Christian Priest blesses Snakes
கந்த சஷ்டிக் கவசம் போன்ற கவசங்களைப் படிப்போருக்குத் தெரியும் அதை பக்தியுடன் சொல்லுவோரை விஷமும் ஒன்றும் செய்யாது. இதைக் கவச வரிகளிலேயே காணலாம்.
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துயர் அங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க……. (கந்த சஷ்டி கவசம்)
அதர்வவேதம் அருளும் ஆனந்த வாழ்வு என்னும் நூலில் கவிமாமணி தமிழ்மாறன் பின்வரும் செய்தியை எழுதியுள்ளார்:
“கம்பநாடர் நாகபாசப்பாடலைப் பாடி (கம்ப ராமாயணம்) , பாம்புக்கடி விஷத்தை இறக்கி, தில்லை மூவாயிரர் மகனை உயிர்ப்பித்தார். வைத்தீஸ்வரன் கோயில் ஸ்டேஷன் மாஸ்டர் ஒருவர் பாம்புக்கடி விஷத்தை ஜபம் செய்தே போக்கி வந்துள்ளார்.”
கம்பர், வேளாளர்கள் பெருமையைப் பாடும் ஏர்ழுபது நூல் அரங்கேற்றத்துக்கு வந்திருந்த புதுவைச் சேதிராயன் என்பவன் காலில் பாம்பு கடித்தது. உடனே கம்பர் ஒரு பாட்டுப் பாடவே ஒரு பாம்பு வந்து கடிபட்ட இடத்திலிருந்த விஷத்தை உறிஞ்சியது. அவரும் உயிர்தப்பினார்.
தேவாரம் பாடிய மூவரும் இப்படி விஷம் தீர்க்கும் பாடல்களைப் பாடி, அற்புதங்களைச் செய்ததை நாம் அறிவோம்.
அப்பூதி அடிகளாரின் மகனை அரவம் தீண்டியபோது அப்பர் பெருமான் பதிகம் பாடி உயிர்ப்பித்தார்.
திருமருகலில் வணிகர் குல மகனைப் பாம்பு தீண்டவே ஞான சம்பந்தர் பதிகம் பாடி உயிர்கொடுத்தார்
இப்படி புனித நூல்கள் முழுதும் உயிர்பெற்ற அதிர்ஷ்டசாலிகளின் கதைகளைப் படித்தறியலாம்.
பண்டரீபுரத்தில் வாழ்ந்த சுமதி-கமலாகர் என்ற பக்தர்களின் மகனான பத்மாகரை பாம்பு தீண்டி இறந்தபோது, நாமதேவர் துதி பாடி அவனை எழுப்பித்தார்.
விஷத்தை நீக்கும் இரத்தினக் கற்கள்
மனு தம சாத்திரமும் விஷம் பாதிக்காமல் இருக்க அதற்கான ரத்தினக் கற்களை அணிய வேண்டும் என்கிறது (மனு 7-218)
காளிதாசன் சொல்லுகிறான்:- ரகுவம்சம் 2-32
திலீபன் மேய்த்த தெய்வீகப் பசுவை சிங்கம் தாக்கியது. உடனே கோபமடைந்த திலீபன் தனது அம்பை எடுக்க கையை பின்னே கொண்டு சென்றான். ஆனால் அக்கை செயலிழந்து மரத்துப் போனது. எப்படி மரத்துப் போனது என்றால் மந்திரத்தாலும் மூலிகை மருந்துகளாலும் கட்டப்பட்டுச் செயலற்றுப் போகும் பாம்பு போல அவனுடைய கைகள் செயலிழந்தன என்கிறான் காளிதாசன் (ரகு வம்சம் 2-32)
கம்பன் பாட்டு
ஆரண்ய காண்டம், அயோமுகிப் படலம்
நல் மதியார் புகல் மந்திர நாமச்
சொல் மதியா அரவின் கடுகிற்பாள்
தன் மதனோடு தன் வெம்மை தணிந்தாள்
மன்மதன் ஆம் இவன் என்னும் மனத்தாள்
பொருள்:-
அந்த அரக்கி அயோமுகி, நல்லறிவு உள்ளவர்கள் சொல்லும் மந்திரங்களுக்கும் தெய்வீகச் சொற்களுக்கும் அடங்காத பாம்பைப் போல, இலக்குமணனைத் தொடந்து வந்தாள். அவன் அழகில் மயங்கி அவன் மன்மதனே என்று எண்ணினாள். அவனை அடைய வேண்டும் என்ற ஆசையால் தனது செருக்கையும் கொடுமையையும் குறைத்துக்கொண்டாள்.
(அதாவது பாம்பு கூட மந்திரம் , கவசம் போன்ற பாடல்களுக்கு அடங்கி விடும். ஆனால் அயோமுகியின் காம வெறியில் அவள் அடங்கவில்லை)
சுபாஷித ரத்ன பாண்டாகாரம் என்னும் சம்ஸ்கிருத தனிப்பாடல் தொகுப்பிலும் இவ்விஷயம் உள்ளது:-
க்வசித் சர்போபி மித்ரத்வமாயாத் நைவ கல: க்வசித்
அதர்வண வேத ரகசியங்கள்
அதர்வண வேதத்தின் ஆறாவது காண்டத்தில் பாம்பு விஷத்தை இறக்கும் மந்திரம் உள்ளது:-
“சூரியனுக்கு பிரபஞ்சத்தின் ரஹசியங்கள் தெரியும். அது போல எனக்கு பாம்புகள் தோன்றிய கதைகள் தெரியும். சூரியன் இருளை விலக்குவது போல நான் உனது உடலில் இருந்து விஷத்தை அகற்றுகிறேன்
முனிவர்களுக்கும் கடவுளருக்கும் பிராமணர்களுக்கும் பாம்பு விஷத்தை நீக்கும் உபாயம் தெரியும். அது எங்களுக்குக் கடந்த காலத்திலிருந்து வந்தது. இனி எதிர்காலத்திலும் இதை உபயோகிப்போம். அந்த அறிவைக் கொண்டு உனது உடலிலுள்ள விஷத்தை நீக்குகிறேன்.
இதோ மலைகளில் இருந்தும் ஆறுகளில் இருந்தும் கொண்டுவந்த நீரை உன் மீது தெளிக்கிறேன். பாருஷ்ணி, சிப்லா நதிகளின் நீரை உன் மீது தெளிக்கிறேன். . உனது முகத்தில் சாந்தம் தவழட்டும். உனது இருதயத்தில் அமைதி நிலவட்டும்.
(பாருஷ்ணி நதியின் தற்போதைய பெயர் ரவி, சிபலா நதி எது என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஒருவேளை ஷைவல என்னும் நீர்த் தாவரம் வளர்ந்த நதியாக இருக்கலாம்)
எனது முந்தைய (Snake Vs Mongoose Fight) கட்டுரை:
அருகம் புல் ரகசியங்கள், ஜூலை 12, 2013
–subahm–
You must be logged in to post a comment.