மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 23 (Post No.3755)

Written by S NAGARAJAN

 

Date: 24 March 2017

 

Time uploaded in London:-  7-09 am

 

 

Post No.3755

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 23

 

ஏ.கே.செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 8

 

by ச.நாகராஜன்

 

ஏ.கே. செட்டியாரின் குமரி மலரில் வெளியான கட்டுரைகள்

 

குமரி மலரில் வெளியாகியுள்ள இன்னும் சில கட்டுரைகள் பற்றிய செய்திகளை காண்போம்/

 

 • மாதர்களைப் பற்றி ஸ்வாமி விவேகாநந்தரின் அபிப்பிராயம் – 1

       ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதி (1920)

 

மேலே கண்ட தலைப்பில் சுதேசமித்திரன் 1920 வருஷ அனுபந்தம் வெளியிட்டுள்ள கட்டுரை இது.

நீண்ட கட்டுரையில் சுவையான செய்திகள் பலவற்றை பாரதியார் தொகுத்து வழங்குகிறார்.

1898 ஜூலை 9ஆம் தேதியன்று ஸ்வாமிஜி எழுதிய ஆங்கிலக் கடிதத்தைத் தமிழ்ப்படுத்தி இதில் பாரதியார் தந்துள்ளார். 1893 ஆகஸ்ட் 20ஆம் தேதி கடிதத்தையும் காண்கிறோம்.

ஸ்வாமிஜியின் கருத்துக்களை வெகுவாக பாரதியார் ஆதரிக்கிறார்.

 

 

கட்டுரையின் இறுதியில் அவர் கூறுவது:

 

“மேற்கூறப்பட்ட வசனங்களிலிருந்து ஸ்வாமி விவேகானந்தர், நம்முடைய தேசத்துக்கு விமோசனம் ஏற்பட வேண்டுமானால் அதற்கு மூலாதாரமாக, நம்முடைய ஸ்தீரிகளுக்கும் பரிபூரண ஸ்வதந்திரம் கொடுக்க வேண்டுமென்றும், அவர்கள் வானத்துப் பறவைகள் போல் விடுதலை கொண்டு திரிய இடங்கொடுக்க வேண்டுமென்றும், அவர்கள் பாடசாலைகளிலும் கலாசலைகளிலும் நிறைந்து கிடக்க வேண்டுமென்றும், தமக்கு வேண்டிய பொருளைத் தாமே உத்யோகங்கள் பண்ணித் தேடிக்கொள்ள் இடங்கொடுக்க வேண்டுமென்றும், ஆண்மக்கள் தொழில் புரியும் எல்லாத் துறைகளிலும் பெண்கள் தொழில் புரிய இடந்தர வேண்டுமென்றும், ஸ்தீரிகளைப் பொதுவாக நாம் பராசக்தியின் அவதாரங்களெனக் கருத வேண்டுமென்றும் (ஸ்வாமி விவேகானந்தர்) கருதினாரென்பது தெளிவாகப் புலப்படுகிறது.

 

 ஸ்வாமி விவேகாநந்தரின் கல்விப் பெருமையும், அறிவுத் தெளிவும், தெய்வீகமான அன்பும், அவருடைய தைர்யமும் மேருவைப் போன்ற மனோபலமும், அவர் செய்திருக்கும் உபந்யாசங்களிலும் நூல்களிலும் விளங்குவதைக் காட்டிலும் அவருடைய கடிதங்களில் ஒருவாறு அதிகமாகவே விளங்குகின்றன என்று கூறுதல் தவறாகாது.

 

 • மாதர் நிலை பற்றி ஸ்வாமி விவேகாநந்தரின்

   அபிப்பிராயம் – 2

       ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதி (1920)

 

கட்டுரையின் முதற் பகுதியைத் தொடர்ந்து இரண்டாம் பகுதியையும் சுதேசமித்திரன்  1920 வருஷ அனுபந்தம் வெளியிட்டிருப்பதைக் காண்கிறோம்.

இதிலும் ஸ்வாமிஜியின் கடிதங்களைக் காண்கிறோம்.

மிகப் பிரமாதமாக ஸ்வாமிஜிக்கு பாரதியார் இப்படிப் புக்ழாரம் சூட்டுகிறார்:

 

 

ஸந்யாசத் துறையில் இறங்காமல் ஸ்வாமி விவேகாநந்தர் இல்லற வாழ்க்கையைக் கைக் கொண்டிருப்பாராயின், மானுஷ்ய ஜாதியின் கலியை ஒரேயடியாக வேரறுத்துத் தள்ளியிருப்பாரென்று தோன்றுகிறது. அவர் யோசனை பண்ணாத பெரிய விஷயமே கிடையாது. அவருக்குத் தெரியாத முக்ய சாஸ்திரம் கிடையாது. அவருடைய அறிவின் வேகத்துக்குத் தடையே கிடையாது. அவருடைய தைர்யத்துக்கோ எல்லை கிடையாது. கண்ணபிரான கீதை உபதேசம் புரிந்து ஸகலவித ம்னுஷ்ய ஸம்சயங்களையும் அறுத்து வேதஞானத்தை நிலை நிறுத்திய காலத்துக்குப் பின்பு, ஹிந்து மதத்தின் உண்மைக் கருத்துக்களை முழுதும் மிகத்தெளிவாக, ஸர்வ ஜனங்களுக்கும் புலப்படும்படி வெளியிட்டுரைத்த ஞானி விவேகாநந்தரே யாவரென்று தோன்றுகிறது.

 

 

 • பாரதியார்

மேலே கண்ட தலைப்பில் இதே குமரி மலர் இதழில் ஒரு குட்டிச் சமபவத்தையும் காண்கிறோம்.

சம்பவம் இது தான்:

 

 

ஒரு சமயம் புதுச்சேரியில் பாரதியாரும் நானும் காலை வேளையிலே சீனிவாஸாச்சாரியாரின் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தோம். வழியிலே, பிரஞ்சு இலக்கியத்தின் பெருமையையும், விக்டர் ஹூகோ அவர்களின் மேதையையும் பற்றி, வெகு நேர்த்தியாக எனக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டு போனார்.

 

 

   திடீரென்று திண்ணையிலிருந்து, ஒரு பையன் “இளமையில் கல்” என்று படித்த குரல் கேட்டது. உடனே பாரதியார் “முதுமையில் மண்” என்றார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. மேதையென்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும் என்று எண்ணித் திகைத்துப் போனேன்.

 • வ.ரா.
 • ‘காந்தி’ 25-3-1934

 

காந்தி இதழில் இப்படி வ.ரா. எழுதியுள்ள அழகிய சம்பவத்தைப் படிக்க முடிகிறது.

 

48) மாதர் நிலை பற்றி ஸ்வாமி விவேகாநந்தரின்  

   அபிப்பிராயம் – 3

பாரதியார் எழுதியுள்ள கட்டுரையின் மூன்றாம் பகுதியுடன் இந்தக் கட்டுரை முடிகிறது.

 

 

கட்டுரையை இப்படி முடிக்கிறார் மஹாகவி:-

 

இங்ஙனம் இந்த அற்புதமான ஸம்பாஷணை முற்றுப் பெற்றது. இங்கு ஸ்வாமி செய்திருக்கும் உபதேசத்தையும், இதனைச் செய்யும்படி தூண்டிய அவரது பேரன்பையும் கைக்கொள்வோமாயின் பாரத தேசத்து ஸ்த்ரீகளுக்குப் பரிபூர்ணமான விடுதலை கிடைத்து விடும்! அதினின்றும் பூ மண்டலத்துக்கு நன்மையுண்டாகும்.

 • சுதேசமித்திரன் 1920 வருஷ அனுபந்தம்

 

– தொடரும்

பாரதியார் பற்றிய நூல்கள் – 22 (Post No.3688)

Written by S NAGARAJAN

 

Date: 4 March 2017

 

Time uploaded in London:-  5-26 am

 

 

Post No.3688

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 22

 

ஏ.கே.செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 7

 

ச.நாகராஜன்

 

ஏ.கே. செட்டியாரின் குமரி மலரில் வெளியான கட்டுரைகள்

 

குமரி மலரில் வெளியாகியுள்ள இன்னும் சில கட்டுரைகள் பற்றிய செய்திகளை காண்போம்

 • ஸ்ரீ மண்டயம் அழகிய சிங்கப் பெருமாளைப் பற்றிய அற்புதமான கட்டுரை ஒன்றை குமரி மலர் வெளியிட்டுள்ளது. கட்டுரையைக் கீழே காணலாம் :

ஸ்ரீ மண்டயம் அழகிய சிங்கப் பெருமாள்

சி.சுப்பிரமணிய பாரதி (1909)

 

     சென்னப் பட்டணம் திருவல்லிக்கேணியில், சென்ற செவ்வாய்க்கிழமை மாலை ஸ்ரீமண்டயம் அழகிய சிங்கப் பெருமாள் காலஞ்சென்று விட்டாரென்ற மஹா துக்ககரமான செய்தி மறுநாள் நமக்கெட்டிற்று.

 

 

     தேச பக்தர்கள் இருவகைப் படுவர். ஒருவகை அரங்கத்திலாடுவது. மற்றொரு வகை திரைக்குப் பின்னேயிருந்து புகழறியாமல் பாடுபடுவது. இவற்றுள் முன்னதினும் பின்னது சிறந்ததாகக் கூறலாமேயல்லது குறைந்ததாகக் கருதத் தக்கதன்று.

 

 

     காலஞ்சென்ற ஸ்ரீஅழகியசிங்கப் பெருமாள் பின் வகுப்பைச் சேர்ந்திருந்தவர். சென்னை பச்சையப்பன் காலேஜில் இவர் பல வருஷம் ‘ஹெட்மாஸ்டர்’ வேலை பார்த்துக் கொண்டு வந்தார். இன்னும் பலவிதமான கடமைகளுடையவர்.

 

 

    ஆனால் இவ்வளவு தொழிலுக்குமிடையே, தேசபக்தி தீபத்தை இவர் தமது நெஞ்சில் எப்போதும் அவியாமல் பாதுகாத்து வந்தார். இக்குறிப்பெழுதுபவருக்கு அழகிய சிங்கப் பெருமாள் தமது அனுபவ முதிர்ச்சி கொண்ட தற்போதனைகளாலும், நட்பினாலும் அப்போதப்போது செய்து வந்த உதவி கொஞ்சநஞ்சமன்று.

 

 

    நமது ‘இந்தியா’ பத்திரிகை ஆரம்பம் செய்வதற்கு மூலகாரணங்களா யிருந்தவர்களிலே பெருமாளொருவர். கல்கத்தாவில் நிவேதிதா தேவியிடம் ‘வாலிபராகிய எங்களை எல்லாம் மேலிருந்து நடத்துவதற்குத் தக்க முதுமை கொண்ட தேசபக்தித் தலைவர்கள் சென்னப்பட்டணத்திலில்லையே, என்ன செய்யலாம்’ என்று நாம் கேட்டதற்கு, அந்த அம்மை, ‘அழகிய சிங்கப் பெருமாளிருக்கிறார். பொது விஷயங்களில் தமக்கு சம்சயங்களேற்படுமானால், அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்’ என்றார்.

 

 

     நமது தேசபக்தி  முயற்சிக்குத் தாய் முயற்சியாகிய ஸ்வாமி விவேகானந்தரது வேதாந்தப் பிரசாரத்தினால் அழகிய சிங்கப் பெருமாள் அளவிறந்த சிரத்தை பாராட்டியவர்.

 

    1898-ம் வருஷத்தில் விவேகானந்தர் யரோ ஒரு சாதாரண ஸந்யாசியாக வந்து தென்னிந்தியாவில் ஸஞ்சரித்துக் கொண்டிருந்த காலத்தில், அவருடிய ம்கிமையைக் கண்டுபிடித்து, நாட்டிற்கெல்லாம் பெருமை தேடித் தந்தவர் ஸ்ரீ அழகிய சிங்கப் பெருமாளே.

 

 

    இவருடைய முயற்சிகளினாலேயே ஸ்வாமி அமெரிக்காவுக்குப் போய், ஆரிய தர்மத்தை அந்நாட்டில் பிரகாசப் படுத்தும்படி ஏற்பட்டது. அப்பால் ஸ்வாமியுடைய ஆக்கினைப்படி, இவர் ‘பிரம்மவாதின்’ என்றொரு வேதாந்த மாதப் பத்திரிகை ஏற்படுத்தி மிகத் திறமையுடன் சென்ற பதினைந்து வருஷங்களாக நடத்தி வந்தார்.

 

    இவரை இழந்தது தேசமுழுமைக்கும் பெரு நஷ்டமாகும். மரிக்கும் பொழுது இவருக்கு வயது நாற்பத்து நான்கு. இப்படி அகாலத்தில் இவரைப் பிரிந்து வருந்தும் இவருடைய குடும்பத்தார்களுக்கு நாம் மனப்பூர்வமான அநுதாபம் தெரிவிக்கின்றோம்.

 • ‘இந்தியா’
 • 15-5-1909 தலையங்கம்
 • அடுத்து குமரி மலரில் ஸ்ரீவிவேகான்ந்தரைப் பற்றி மஹாகவி எழுதிய நீண்ட வரலாறு பிரசுரிக்கப்பட்டுள்ளது.

 

சக்கரவர்த்தினி இதழில் (ஆசிரியர் சி.சுப்பிரமணிய பாரதி) சென்னை 1906 மார்ச் தொகுதி 1, பகுதி 8 –இல் இக்கட்டுரை பிரசுரமாகியுள்ளது.

கட்டுரையின் தலைப்பு:-

ஸ்ரீமத் ஸ்வாமி விவேகானந்த பரமஹம்ஸர்

சுப்பிரமணிய பாரதி (1906)

 

மிக நீண்ட இந்தக் கட்டுரையில் ஸ்வாமிஜியின் பிறப்பு, குழந்தைப் பருவம்,இளமை, குரு தரிச்னம் ஆகிய தலைப்புகளில் வாழ்க்கை வரலாற்றைத் தந்துள்ளார் மஹாகவி.

கட்டுரையின் பிற்பகுதி கிடைக்கவில்லை என்ற குறிப்பும் குமரிமலரில் காணப்படுகிறது.                                        

 • அடுத்து ‘பவுத்த மார்க்கத்திலே மாதர்களின் நிலை’ சி.சுப்பிரமணிய பாரதி (1906) என்ற தலைப்பில் உள்ள கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

கட்டுரையின் கீழ் உள்ள குறிப்பு இது:-

சக்ரவர்த்தினி சென்னை

1906 பிப்ரவரி, தொகுதி 1, பகுதி, 7

(ஆசிரியர் சி.சுப்பிரமணிய பாரதி)

இன்னும் சில கட்டுரைகளை அடுத்துப் பார்க்கலாம்.

                      -தொடரும்