ஔவையார் லா! வள்ளுவர் ரூல்!! பாரதியார் ஃபார்முலா!!! (Post No.8006)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8006

Date uploaded in London – – – 20 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

மர்பி லா (law) பற்றிய இரு கட்டுரைகளைத் தொடர்ந்து இடம் பெறும் மூன்றாவது கட்டுரை இது! நாமே மர்பி லாக்கள் போன்ற பல விதிகளை நம் இலக்கியத்திலிருந்து உருவாக்கிக் கொள்ளலாம், இல்லையா, இதோ, பாருங்கள் ..

ஔவையார் லா! (Law)  வள்ளுவர் ரூல்!!(Rule) பாரதியார் ஃபார்முலா!!! (Formula)

ச.நாகராஜன்

மர்பி என்ற எஞ்ஜினியர் ஒரு விதியைச் சொன்னாலும் சொன்னார் மர்பி லா (Murphy’s Law)  என்று அது அமர்க்களப்படுகிறது.

அதே வழியில் ஏராளமானோர் ஏராளமான ‘பொன்மொழிகளை’ உதிர்க்க அவையும் சிறப்பான ‘லா’ (LAW)க்களாக ஆகி விட்டன.

இணையதளத்திற்கு விஜயம் செய்யுங்கள்; ஆயிரக்கணக்கில் அவரவர் கூறிய ‘லா’க்களைப் பார்க்கலாம்.

யோசனை செய்து பார்த்த போது அட, நம்ம ஔவையார் சொல்லாத ‘லா’வா என்ன என்று தோன்றியது.

மளமளவென்று ‘லா’க்கள் வந்து குவிந்தன.

ஔவையார் ‘லா’(ஸ்) (Laws)

ஆத்திசூடியை எடுத்துக் கொள்ளுங்கள்:

உடையது விளம்பேல்

கண்டு ஒன்று சொல்லேல்

‘ங’ப் போல் வளை

கெடுப்பது ஒழி

சக்கர நெறி நில்

தக்கோன் எனத் திரி

நொய்ய உரையேல்

நோய்க்கு இடம் கொடேல்

வல்லமை பேசேல்

வாதுக்கு இடம் கொடேல்

அடுத்து கொன்றை வேந்தன்

அன்னையும் பிதாவும் முன்னெறி தெயவம்

நல் இணக்கம் அல்லது அல்லல் படுத்தும்

நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை

பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்

பீரம் பேணி பாரம் தாங்கும்

மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை

மீகாமன் இல்லாமல் மரக்கலம் ஓடாது

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

மொழிவது மறுக்கின் அழிவது கருமம்

அடுத்து ஔவையாரின் வாக்குண்டாம்

அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி எடுத்த கருமங்கள் ஆகா!

தவத்து அளவே ஆகுமாம் தாம் பெற்ற செல்வம்; குலத்து அளவே ஆகும் குணம்!

பாங்கு அறியாப் புல்லறிவாளர்க்குச் செய்த உபகாரம் கல்லின் மேல் இட்ட கலம்!

பொன்னின் குடம் உடைந்தக்கால் பொன் ஆகும், என் ஆகும், மண்ணின் குடம் உடைந்தக்கால்?

மூர்க்கரை மூர்க்கர் முகப்பர்; முதுகாட்டில் காக்கை உகக்கும் பிணம்!

அடுத்து ஔவையாரின் நல்வழி

புண்ணியம் ஆம்; பாவம் போம்; போன நாள் செய்த அவை மண்ணில் பிறந்தார்க்குப் பொருள்!

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா; பொருந்துவன போயின் என்றால் போகா!

ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்று ஆகும்; அன்றி அது வரினும் வந்து எய்தும்! ஒன்றை நினையாத முன் வந்து நிற்பினும் நிற்கும்!

அடுத்து அதிவீரராம பாண்டியரின் விதிகளைப் பார்ப்போம்:

வெற்றி வேற்கை

அரைக்கினும் சந்தனம் தன் மணம் அறாது

புகைக்கினும் கார் அகில் பொல்லார்க்கு கமழாது

கலக்கினும் தண் கடல் சேறாகாது

யானைக்கு இல்லை தானமும் தருமமும்

பூனைக்கு இல்லை தவமும் தயையும்

தன் ஆயுதமும் தன் கையில் பொருளும்                                   பிறன் கையில் கொடுக்கும் பேதையும் பதரே.

அடுத்து உலகநாத பண்டிதர் இயற்றிய உலக நீதி

கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்                              கணக்கு அழிவை ஒருநாளும் பேச வேண்டாம்

கூறாக்கி ஒரு குடியைக் கெடுக்க வேண்டாம்                           கொண்டை மேல் பூத்தேடி முடிக்க வேண்டாம்

குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம் தருவன:

மனத்த கறுப்பு எனின் நல்ல செய்யினும் அனைத்து எவையும் தீயவே ஆகும்!

தீய செயல் செய்வார் ஆக்கம் பெருகினும் தீயன தீயனவே! வேறு அல்ல!!

அடுத்து சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நன்னெறி கூறுவது:

இன்சொலால் அன்றி இருநீர் வியன் உலகம் வன்சொலால் என்றும் மகிழாதே!

பெரியார் முன் தன்னைப் புனைந்து உரைத்த பேதை  தரியாது உயர்வு அகன்று தாழும்!

அடுத்து வள்ளுவர் தரும் ரூல்(ஸ்) (Rules) பல!                       அவற்றில் சில :-

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை! (குறள் 439)

உள்ளற்க உள்ளம் சிறுகுவ (குறள் 778)

தன் நெஞ்சு அறிவது பொய்யற்க (குறள் 293)

கெடல் வேண்டின் கேளாது செய்க; அடல் வேண்டின் ஆற்றுபவர் கண் இழுக்கு (குறள் 893)

கற்க கசடறக் கற்க; கற்றிலனாயினும் கேட்க (குறள் 391, குறள் 419)

அடுத்து பாரதியார் தரும் சில பார்முலாக்களைப் பார்ப்போம்:

காவித் துணி வேண்டா கற்றைச் சடை வேண்டா                         பாவித்தல் போதும் பரமநிலை எய்துதற்கே (பரசிவ வெள்ளம் பாடல்)

இன்று கட்டுண்டோம்; பொறுத்திருப்போம்; காலம் மாறும் (பாஞ்சாலி சபதம் ; விஜயன் வீமனுக்குச் சொல்வது)

காலமே மதியினுக்கோர் கருவி! ( அழகுத் தெய்வம் பாடல்)

சினம் கொள்வார் தமைத் தாமே தீயால் சுட்டுச் செத்திடுவார் ஒப்பாவார்! (பாரதி அறுபத்தாறு – சினத்தின் கேடு)

தோன்றி அழிவது வாழ்க்கை – இதில்                            துன்பத்தோடின்பம் வெறுமை என்றோதும்                               மூன்றில் எது வருமேனும் – களி                                                மூழ்கி நடத்தல் பரசிவ முக்தி!

இது போல சங்கப் புலவர்கள், தேவார ‘லா’க்கள், ஆழ்வார்களின் அற்புத ‘லா’க்கள், அருணகிரிநாதர் போன்ற எண்ணற்றோரின் சூத்திரங்களை எடுத்துத் தனியே தொகுத்தால் மர்பி லாவும் மற்ற விதிகளும் அவற்றிற்கு முன் எம்மாத்திரம், சொல்லுங்கள்!

Tags –மர்பி, வள்ளுவர் Rule, ஔவையார் Law, பாரதியார் Formula

***