மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 14 (Post No.3431)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 9 December 2016

 

Time uploaded in London: 5-35 am

 

Post No.3431

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 14

பாரதியை ஒட்டிய நினைவுகள் – பெ.நா.அப்புஸ்வாமியின் பல கட்டுரைத் தொகுப்புகள்

 

ச.நாகராஜன்

 

தினமணி சுடரில் வெளியான பல கட்டுரைத் தொகுப்புகள்

‘பாரதியை ஒட்டிய சில நினைவுகள்’ என்ற தலைப்பில் பெ.நா.அப்புஸ்வாமி அவர்கள் தினமணி சுடரில் ஏராளமான கட்டுரைகளை எழுதி வந்துள்ளார்.

பாரதியும் திலகரும் பற்றிச் சென்ற கட்டுரையில் பார்த்தோம்.

இதர சில கட்டுரைகளின் தலைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 

 

அறிவியல் கோணத்தில் 1 (6-9-1981 சுடர் இதழில் ஆரம்பம்)

சரசுவதி தேவியின் புகழ் 1 (22-11-1981 சுடரில் ஆரம்பம்)

பாரதியும் பிற மொழிகளும் 13-12-1981, 20-12-1981 சுடர் இதழ்கள்

பாரதி பாடும் தனிப்பாணி 1,2 (7-2-1982, 14-2-1982 சுடர் இதழ்கள்)

பாரதியின் நாட்டுப் பற்று 1,2 (21-2-1982,28-2-1982 சுடர் இதழ்கள்)

பாரதி பிரசுராலயம் 1,2,3,4 (21-3-1982,28-3-1982,4-4-198211-4-1982 சுடர் இதழ்கள்)

இந்தக் கட்டுரைகளின் தலைப்புகளைப் பார்த்தாலேயே பெ.நா.அப்புஸ்வாமி பாரதியாரைப் பற்றி எத்தனை தகவல்களை அளித்திருப்பார் என்பதை எளிதில் ஊகிக்க முடியும்.

தனது நினைவிலிருந்தே இந்தத் தகவல்களை அவர் அளித்திருப்பதால், சில இடங்களில் தனக்கு நினைவு சரியாக வரவில்லை என்பதையும் வெளிப்படையாக குறிப்பிடுகிறார்.

 

அறிவியல் கோணத்தில்

 

இந்தக் கட்டுரைத் தொடரில் பெ.நா.அப்புஸ்வாமி பாரதியாரைப் பற்றிக் குறிப்பிடுகையில், “நேரில் பழகாத குறை தான், ஆயினும் தொடர்புகள் பல. ஆகையால் பாரதியை நேரில் காணாமலும், அவருடைய குரலை நேரில் கேட்காமலும் இருந்த போதிலும் அவரைப் பற்றி எழுத எனக்கு உரிமை உண்டு” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்.

 

 

பின்னர் வந்தே மாதரம் கீதத்தை பாரதியார் இரு முறைகள் மொழிபெயர்த்த நயத்தைப் பாராட்டுகிறார்.

உணர்ச்சி வேகத்தில் புதுமைப் பெண் என்ற பாடல் பாரதியார் வாயிலிருந்து எப்படி எழுந்தது என்ற சம்பவத்தைப் படிக்கச் சுவையாக இருக்கும்.

 

 

சாது கணபதி பந்துலு என்னும் தேசபக்தர் திருநெல்வேலி வீரராகவபுரத்தில் வாழ்ந்தவர். அவர் வீட்டில் சில காலம் பாரதி தங்கியதுண்டு.

 

அந்த வீட்டில், ஒரு நாள் மாலை ‘அதோ பார் புதுமைப் பெண்ணை, அதோ நிற்கிறாளே தெரியவில்லையா’ என்று கூறி நிமிர்ந்த நன்னடை,நேர் கொண்ட பார்வை கொண்ட பெண்ணைப் பற்றிய பாடலை பாரதியார் பாட நண்பர்கள் அதை எழுதிக் கொண்டனராம்.

 

சரசுவதி தேவியின் புகழ்

 

இந்தத் தொடரில் பாரதி ஸரஸ்வதி தேவியின் புகழ் என்ற பாரதி பாடலை அவர் எப்பொழுது பாடினார் என்பது பற்றித் தனக்குத் தெரிந்த ஒரு தகவலை  முன் வைக்கிறார்.

 

 

பாரதியும் பிற மொழிகளும்

 

பாரதியாரின் பன்மொழிப் புலமையை விரிவாக இந்தத் தொடரில் தருகிறார் பெ.நா.அப்புஸ்வாமி

இயல்பாகவே எட்டயபுரத்தில் இருந்த சங்கீத சூழ்நிலையில் தமிழும் தெலுங்கும் பாரதியாருக்கு இயல்பான மொழிகளாக இருந்தன. இந்துக் கல்லூரியில் பயின்றதால் ஆங்கிலத்தில் வல்லமை பெற்றார்

காசியில் வடமொழியில் தேர்ந்தார். பாண்டிச்சேரியில் பிரெஞ்சு மொழியில் தேர்ந்தார்.

ஆங்கிலத்திலும் சம்ஸ்கிருதத்திலும் அவர் கவிதைகள், கட்டுரைகள் புனைந்துள்ளார்.

 

பாரதி பாடும் தனிப்பாணி

 

பாரதி வாழ்ந்த காலத்தில் எட்டயபுரத்தில் வாழ்ந்த இசை மேதை சுப்பராம தீக்ஷிதர். அவர் காலமான போது பாரதியார் அவரைப் பற்றிய கவிதை ஒன்றைப் புனைந்தார்.

 

பாரதியார் திருவல்லிக்கேணி கடற்கரையில் தனிப்பாணியுடன் தன் பாடல்களை இசைப்பதையும், அதைத் தான் நேரில் கேட்கவில்லை என்றாலும் பாரதியாரின் (ஒன்று விட்ட) தம்பி விசுவநாதையர் பாடிக் கேட்டிருப்பதாகவும் பெ.நா.அப்புஸ்வாமி இந்தக் கட்டுரைத் தொடரில் குறிப்பிடுகிறார்.

 

பாரதியின் நாட்டுப் பற்று

 

இந்தத் தொடரில் பாரதியாரின் நாட்டுப் பற்றைப் பற்றி விவரிக்கும் பெ.நா.அப்புஸ்வாமி மதுரையில் சேதுபதி பள்ளியில் பாரதியார் பணியாற்றியபோது அவருடன் பணியாற்றிய கோபால கிருஷ்ணய்யரைத் தான் சந்தித்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

பாரதியார் வந்தேமாதரம் கீதம் வரும் பங்கிம் சந்திர சட்டர்ஜியின் ஆனந்த ம்டத்தை மொழி பெயர்த்த மஹேசகுமார் சர்மாவைப் புகழ்ந்து எழுதியது ஒரு அருமையான செய்தி.

அரவிந்தரும் வந்தேமாதரத்தை மொழி பெயர்த்துள்ளார். ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட அந்த கீதத்தின் முதல் அடி

Rich with thy hurrying streams, Bright with thy Orchard gleams’  என்பதாகும்.

 

பாரதி பிரசுராலயம்

 

பாரதி பிரசுராலயம் தோன்றிய விதத்தையும் விசுவநாதையர் பெரு முயற்சி எடுத்து பாரதியின் பல நூல்களைப் பதிப்பித்ததையும் இந்தத் தொடரில் பெ.நா.அப்புஸ்வாமி எடுத்துரைக்கிறார். பல்வேறு செய்திகளை அவர் பகிர்ந்து கொள்ளும் போது பல புதிய விஷயங்கள் பாரதியாரைப் பற்றி நமக்குத் தெரிய வருகிறது.

 

இந்தத் தொடர் கட்டுரைகள் பாரதி அன்பர்களுக்கு ஒரு வர பிரசாதம் தான்.

 

பல செய்திகள் நினைவிலிருந்தே எழுதப்பட்டிருப்பதால் இவற்றை  மேலும் ஆராய்ந்து பல விஷயங்களில் பாரதி ஆர்வலர்கள் தெளிவு பெற முடியும்.

தினமணியும் தினமணி சுட்ரும் பாரதி பற்றிய பல செய்திகளை ஆரம்ப காலத்தில்ருந்தே சேகரித்து வந்திருக்கிறது. பயன் தரும் விதத்தில் அவற்றைத் தமிழர்கள் பெற பிரசுரித்திருக்கிறது.  தமிழுக்குச் சேவை செய்த தினமணி பாரதியைப் பற்றிய பல புதிய விஷயங்களைத் தொகுத்திருப்பது பாராட்டுக்குரிய ஒரு பெரிய விஷயம்.

 

பெ.நா.அப்புஸ்வாமியின் எழுத்துக்கள் புத்தக வடிவில் முழுமையாக வந்ததாகத் தெரியவில்லை.

அவற்றைத் தமிழ் உலகம் பெறுமானால் அது ஒரு பொக்கிஷமாகவே அமையும்!

*********