அக்னி பகவான் பற்றிய அதிசய விஷயங்கள்!

bm_agni_goat_

Agni Statue in British Museum, London

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1354; தேதி அக்டோபர் 18, 2014.

1.உலகின் முதல் அகராதியும் முதல் திசாரஸுமான Thesarus (ஒரு பொருள் குறித்த பல சொற்கள் வழங்கும் நிகண்டு) அமரகோசம், — அக்னி பகவானுக்கு 34 பெயர்களை அடுக்குகிறது. இதற்கு உரை எழுதிய உரைகாரர்கள் ஒரு கலைக் களஞ்சியம் கொள்ளும் அளவுக்கு அரிய தகவல்களை அளிக்கின்றனர்.

2.உலகின் மிகப் பழைய நூலும் மனித குல வரலாற்றின் – குறிப்பாக இந்தப் பூ உலகின் ஆதி குடிகளான இந்துக்களின் – குறிப்புப் புத்தகம் என்று கருதப்படும் ரிக் வேதத்தில் அக்னி பகவான்தான் அதிக துதிகளில் அடிபடுகிறார். தனியான துதிகள் என்றால் இந்திரனுக்கு முதல் பரிசு— தனியாகவும் வேறு பல துதிகளிலும் சேர்ந்து புகழப்படுபவர் யார் என்றால் அக்னி பகவானுக்கு முதல் பரிசு!

3.அக்னி பகவானுக்கும் எண் ஏழுக்கும் (Number Seven) ஏனோ ரகசிய தொடர்பு இருக்கிறது. அவருக்கு நாக்குகள் ஏழு— அவருடைய ரதத்தின் சக்க்ரங்கள் ஏழு—- அவருடைய பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், மனைவி ஸ்வாஹா தேவி என்பவர்கள் கூட்டுத் தொகை 49. அதாவது ஏழு X ஏழு.—(7X7=49) ரிக் வேதத்தில் பல துதிகளிலும் இவர் ஏழு அல்லது ஏழின் மடங்குகளில் போற்றப் படுகிறார். புது மணத் தம்பதிகள் அக்னியை வலம் வருகையில் ஏழு அடி (சப்த பதி Saptapadi) நடந்த பின் அது சட்டபூர்வ கல்யாணம் ஆகிவிடும்—- அக்னி பகவானுக்கு சப்த ஜிஹ்வா, சப்த அர்ச்சி என்ற பெயர்கள் உண்டு. இதன் பொருள்—ஏழு நாக்குடையோன், ஏழு கிரணம் உடையோன்.

agni, guimet
Agni with two heads in Guimet Museum, Paris

4.அக்னிக்கு அம்மாவும் அப்பாவும் இரண்டு குச்சிகள் அல்லது இரண்டு கட்டைகள். அதை இரண்டையும் உரசினால் அவர் பிறக்கிறார். அதாவது ஆதிகாலத்தில் யாகம் செய்யும் வேதப் பிராமணர்கள் அரணிக்கட்டை என்று ஒன்று வைத்திருப்பார்கள். அதில் தயிர் கடைவது போல ஒரு கட்டையின் குழியில் இன்னொரு கட்டையை வைத்துக் கடைவார்கள். தீப்பொறி எழும். இதில் ஒரு கட்டை பூமி என்றும் மற்றொன்று ஆகாயம் அல்லது சுவர்கம் என்றும் தத்துவ விளக்கம் கொடுப்பர்.

5.அக்னியை அப்பா, நண்பன், குரு, புரோகிதர் என்று பல வகைகளில் பாடும் வேதகால ரிஷி முனிவர்கள் அந்த அக்னியைக் கொண்டு நம் வீட்டிலும் விளக்கேற்றுகிறார்கள். நமது ஆன்மாவிலும் விளக்கு ஏற்றுகிறார்கள். சாதாரணக் கொள்ளிக் கட்டையைப் பாடுபவர்கள் பெரிய ஆன்ம ஞானத்தை தட்டி எழுப்பவும் பாடுகிறார்கள்.

6.வேதம் பயின்ற பிராமணர்கள் தினமும் அக்னியை வழிபடுவர். சந்தியா வந்தனம் செய்யும் பிராமணர்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை அக்னியை வழிபடுவர். ((அக்னி, வாயு, அர்க, வாகீச, வருண, இந்திர, விஸ்வே தேவா: என்ற மந்திரத்தைச் சொல்லுவர்.))

7.அக்னியின் சொரூபமே சுப்ரமண்யர் எனப்படும் முருகப் பெருமான். ஆகவே முருகனை வழிபடுவோர் எல்லோரும் ஒரு வகையில் அக்னியை ( யாகத் தீ எழுப்பாமல் ) — வழிபடுவதாகச் சொல்லலாம்.

8.முருகனை ஆறு கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததாகச் சொல்லுவர். அக்னியை பத்து பெண்கள் — அதாவது பிராமணர்களின் பத்து விரல்கள் — வளர்த்ததாகப் பாடுவர் வேத கால ரிஷி முனிவர்கள்— விரல் என்பதற்கு அங்குலி என்ற பெண்பாற் சொல் பயன்படுத்தப்படும்.

வேத காலக் கவிஞர்கள் பாடும் பாடல்களைப் படித்தால் பாபிலோனிய, எபிரேயப் பாடல்கள் எல்லாம் நாகரீகமற்ற ஆதிமனிதன் பாடல்கள் என்னும் முடிவுக்கு வர அதிக நேரம் பிடிக்காது. இவ்வளவுக்கும் அவை எல்லாம் வேதத்துக்குப் பின் எழுந்தவை. இப்போது மைகேல் விட்சல் போன்ற அமெரிக்க அறிஞர்கள்கூட இதற்கு கி.மு.1700 என்று முத்திரை குத்திவிட்டார்கள். இந்திய அறிஞர்கள் வேத காலத்தை கி.மு 6000 வரை கொண்டு செல்கின்றனர்.

9.ரிக் வேதத்தின் முதல் துதியும் கடைசி துதியும் அக்னி பகவான் மேல்தான் — அளவில், ரிக் வேதம் என்பது ஏறத்தாழ சங்க இலக்கியத்தின் 2400 பாடல்களுக்குச் சமமானது– ஆனால் முழுக்கவும் இறைவனைப் பற்றியது.

fritstal book

10.எப்படி ரிக் வேதத்தின் முதல் துதியும் கடைசி துதியும் அக்னி பகவான் பற்றி இருக்கிறதோ அப்படியே மனிதனின் வாழ்வும் நெருப்புடன் பின்னிப் பிணைந்தது. மனிதன் பிறந்த அன்று வீட்டில் ஒரு அக்னியை ஸ்தாபிப்பர். அதவது பிராமணர் வீடுகளில் ஒரு பானையில் உமிக் கரியில் நெருப்பு வைப்பர். இந்த நெருப்புதான் அவருக்கு வாழ்நாளின் இறுதி நாளன்று சிதைத் தீக்கும் பயன்படுத்தப்படும். பானைக்குள் உமியில் இருக்கும் நெருப்பு எப்போதும் அணையாது.

11.திருமணத்தின் போதும் அக்னி சாட்சியாகவே திருமணம் செய்ய வேண்டும். சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் திருமணக் காட்சியைப் படித்தவர்களுக்கு இது தெள்ளிதின் விளங்கும். புது மணத் தம்பதிகள் அக்னியை வலம் வர வேண்டும். ஏழு அடிகள் நடந்த பின்னர் திருமணம் சட்டப்படி நிறைவேறியதாக அர்த்தம்.

12. ஒவ்வொரு பெண்ணும் ஏற்கனவே அக்னி பகவானைக் கல்யாணம் செய்து கொண்டதாகவும் உண்மைத் திருமணத்தன்று அவளை புது மாப்பிள்ளைக்கு அக்னி கொடுத்துவிடுகிறான் என்றும் வேதம் பகரும். இதன் தாத்பர்யம் என்னவென்றால் எப்படி, அப்பன் முன்னிலையில் ஒரு பெண் அதிகார பூர்வமாக இன்னொரு ஆண்மகனுக்கு உரிமையாக்கப் படுகிறாளோ அப்படி அக்னியின் முன்னிலையில் அவளைக் கொடுக்கவேண்டும் என்பதாகும். முடியுடைய மூவேந்தர்கள் பலர் வேளிர் குல அழகிகளைக் கண் வைத்தபோது அவர்களுடைய அப்பன்மார்கள் முடியாது என்று சொன்னதை புற நானூறு அக நானூறு மூலம் அறிவோம். அதாவது பெண்களின் எதிர்காலம் அப்பாக்களாலும் அக்னியாலும் நிச்சயிக்கப்படும்.

agni
Agni with goat vahana

13. அக்னியின் மனைவி பெயர் ஸ்வாஹா தேவி. அதவது ஒவ்வொரு முறை யாகத்தீயில் பொருள்களைப் போடும் போதும் ‘’ஸ்வாஹா’’ என்ற மந்திரத்தைச் சொல்லிப் போடுவர். அதையே இப்படி அடையாளபூர்வமாக மனைவி என்று சொல்வர். இதே போல அவருக்கு மூன்று பிள்ளைகள்: பாவக, பவமான, சுசி. அவர்களுக்கு 45 பிள்ளைகள். அக்னியின் அப்பா, அம்மா காஸ்யபர், அதிதி ஆவர் — சில புராணங்களில் பிரம்மா இவரது தந்தை என்றும் சொல்வர்.

14.அக்னி பகவானுக்கு வாகனம் ஆடு; சில நேரங்களில் கிளியோ சிவப்பு நிறக் குதிரையோ ரதத்தை இழுத்துச் செல்வதாகவும் காட்டப் படும். இவரது சிற்பங்கள் இரண்டு தலைகளுடன் காட்டப்பட்டிருக்கும். இவருக்கு வேதத்தில் மிகவும் அடிக்கடி அடிபடும் பெயர் :–ஜாத வேதஸ் — அதாவது எல்லாம் அறிந்தவர்!!

15.ஒவ்வொரு பிராமணர் வீட்டிலும் கார்கபத்யம், தட்சினாக்கினீயம், ஆகவனீயம் என்று முத்தீ உண்டு. இதை சங்க இலக்கியத்தில் பல இடங்களில் வரும் ‘’முத்தீ அந்தணர்’’ என்ற குறிப்பால் உணரலாம். பிராமணச் சிறுவர்கள் ‘’சமிதாதானம்’’ என்று தினமும் ஓமத் தீ (ஹோம அக்னி) வளர்ப்பர். திருமணமானோர் ‘’ஔபாசனம்’’ என்று காலை மாலையில் அக்னியை வைத்து வழிபடுவர். இந்தப் பொற்காலம் பற்றி எல்லாம் இப்போது பல பிராமணர்களுக்கே தெரியாது !!

losangelese
Agni in Los Angelese Museum

16. அக்னியின் பெயர் மூலம் ‘’இக்னிஷன், இக்னைட்’’ Ignite, Ignition, Ignite rocks முதலிய பல ஆங்கிலச் சொற்கள் உருவாயின. அக்னியின் பெயரை ஒட்டி உக்னிஸ், ஒக்னிஸ், இக்னிஸ் (Ugnis, Ognis,Ignis) என்ற சொற்கள் ஐரோப்பிய மொழிகளில் உண்டு

17.அக்னி பற்றி நாம் இதுவரை அறிந்ததில் இரண்டு உண்மைகள் வெட்ட வெளிச்சத்துகு வந்துவிட்டன:

அ) பாரதமே இந்துக்களின் சொந்த பூமி. இவர்கள் வெளியில் இருந்து வந்திருந்தால் அங்கெல்லாம் அக்னி வழிபாட்டின் சுவடுகள் தென்பட்டிருக்கும் . ஆனால் அப்படி இல்லை. வெறும் சொற்கள் அளவே ஒற்றுமை— பாரசீகர் மட்டுமே தீயை வழிபடுபவர். அவர்களும் இந்தியாவில் இருந்து சென்றவர்கள். அவர்களுடைய மொழியும் ரிக்வேதத்துக்கு மிகவும் பிற்பட்டது. அவர்களைத் தவிர “தீ வழிபாடு” ஐரோப்பாவில் கிடையாது. நம்மவர்கள் அங்கு சென்று தங்கிய காலத்தில் செய்தது எல்லாம், பின்னர் குறைந்து போனது என்றே கருத வேண்டியுள்ளது.

நாமோ இன்றும் வழிபடுகிறோம். சத்ய சாய்பாபா போன்ற மாபெரும் தவ சீலர்கள் 14641 முறை நீண்ட ருத்ர மந்திரத்தைச் சொல்லி அக்னியில் ஆகுதி போடும் பிரம்மாண்டமான அதிருத்ர யக்ஞத்தை நமது காலத்திலேயே நடத்திக் காட்டினர். அமெரிக்க அறிஞர் பிரிட் ஸ்டால் கேரளத்துக்கு வந்து வேத கால யக்ஞத்தை செய்துகாட்டினார். சங்க இலக்கியத்தில் பருந்து வடிவத்தில் யாக குண்டம் கட்டிய கரிகால் சோழன் பற்றிய பாடல் வருகிறது. அதே வடிவத்தில் இந்த அமெரிக்க அறிஞர் கேரளத்தில் யாக குண்டம் அமைத்து யாகம் செய்தார்.

ஆ)இரண்டாவது உண்மை: வேதகால முனிவர்களின் அறிவுக்கு முன் பாபிலோனிய ஜில்காமேஷ் எல்லாம்—நர்சரி ரைம் Nursery Rhyme போன்றவை. வேதத்தில் காணப்படும் மிகப் பெரிய எண்களும் வார்த்தா ஜாலங்களும், சொற் சிலம்பங்களும், சங்கேத மொழிகளும், மறைகளும் அற்புதமானவை. அவர்கள் ‘’சொல் வலை வேட்டுவர்கள்’’. இதே காலத்தில் உலகில் எழுந்த மிகச் சில வேற்று மொழிக் கவிதைகள்- கற்றுக் குட்டி களின் கவிதைகள் என்றால் மிகை இல்லை.

homam chandru
Kancheepuram Chandru Kurukkal performing Havan in the United Kingdom

18. அக்னி பகவானுக்கு அக்னி, வைஸ்வானர, வன்னி, வீதிஹோத்ர, தனஞ்சய, க்ரூபீடயோனி, ஜ்வலன, தனூனபாத், ஜாதவேத, பர்ஹி, சுஷ்மா, க்ர்ஷ்ணவத்ம, சோசிகேச, உஷர்புத், ஆஸ்ரேயச (சேர்ந்தாரைக்கொல்லி), ப்ருஹத்பானு, கிருஷ்ணாகு, பாவக, அனல, ரோகிதாஸ்வ, வாயுசக, ஷிகாவன், ஆசு சுஷ்கனி, ஹிரன்யரேத, ஹுதபுக், தஹன, ஹவ்யவாஹன, சப்தார்ச்சி, தமுன, சுக்ர, சித்ரபானு, வைவாவசு, சுசி, ஆபபித்த ஆகிய பெயர்கள் அமரகோசத்தில் உள்ளன. அப்ஜஹஸ்த, தூமகேது, சாஹரத, சப்தஜிஹ்வ, தோமரதார என்ற பெயர்களும் புராணங்களில் உண்டு. இவற்றின் பொருள் வேண்டுவோர் எனது ஆங்கிலக் கட்டுரையில் காண்க.

19.இதில் க்ருபீடயோனி என்னும் பெயர் விஞ்ஞான விஷயங்களை உள்ளடக்கியது.— அக்னேர் ஆப: — என்று வடமொழியில் ஒரு வாசகம் உண்டு. அதாவது தீயில் இருந்து தண்ணீர் வந்தது. இதையே மாற்றியும் சொல்வர். தண்ணீரில் இருந்து தீ வந்தது. அவர்களுக்கு ஹைட்ரஜன், ஆக்சிஜன் பற்றித் தெரியும் போலத் தோன்றுகிறது. கடலில் தோன்றும் படவாக்னி (வடவை கனல்) பற்றி நான் ஏற்கனவே எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையில் பல விஷயங்களைச் சொல்லிவிட்டேன்.

20.தமிழில் அக்னிக்கு “தீ, நெருப்பு, கனல், கங்கு” முதலிய பல சொற்கள் இருப்பதால் அது தனிப்பட எழுந்த, வளர்ந்த ஒரு மொழி என்றும் தெரிகிறது.

yaga mylai

21.அக்னியின் ஏழு நாக்குகளுக்கும் பெயர்கள் உண்டு: காளி, கராலா, மனோஜவா, சுதூம்ரவர்ணா, ஸ்புலிங்கினி, சுலோஹிதா, விஸ்வதாரா.

22.அக்னி பகவானின் சிவப்பு குதிரைக்குப் பெயர்—ரோஹிதஸ்வ. இதே போல வேறு பல தெய்வங்களின் குதிரைகள் பற்றியும் அமரகோசம் தகவல் தருகிறது:
அக்னி – சிவப்பு குதிரை
வருணன் — வெள்ளைக் குதிரை
குபேரன் = குமுத மலர் நிறமுடைய குதிரை
வாயு – பழுப்பு நிறக் குதிரை

பாரதியும் அக்னி பகவானும்

23.வேதங்களைப் படித்து ஊற்றுணர்ச்சி பெற்ற பாரதியார், அவரது பல பாடல்களில் வேத மந்திரக் கருத்துகளை அழகிய சொற்களில் வடித்திருக்கிறார். ‘’அக்கினிக் குஞ்சு’’, ‘’வேள்வித் தீ’’, ‘’தீ வளர்த்திடுவோம்’’ முதலிய பல பாடல்களில் வேத மந்திர மொழி பெயர்ப்புகளைக் காணலாம்.
அமிழ்தம், அமிழ்தம் என்று கூவுவோம் – நித்தம்
அனலைப் பணிந்து மலர் தூவுவோம்;
தமிழில் பழ மறையைப் பாடுவோம் – என்றும்
தலைமை பெருமை புகழ் கூடுவோம்

தெய்வக் கனல் விளைந்து காக்குமே – நம்மைச்
சேரும் இருள் அழியத் தாக்குமே

என்று பல இடங்களில் பாடி, — அக்னி என்பது நாம் நினைக்கும் வெறும் நெருப்பு அல்ல, — அது ஞானாக்னி என்று நமக்கு உணர்த்துகிறார். இதனால் அன்றோ வேதத்திலும் அதிகமான பாடல்களில் அக்னி போற்றப்படுகிறான்.

24.சாயனரும் கூட, தமது வேத பாஷ்யத்தில் வயிற்றுக்குள் இருக்கும் ஜடராக்னி, சூரியன், சந்திரன் ஆகிய எல்லாவறையும் அக்னி பற்றிய வேத மந்திரங்களுக்குப் பொருளாகக் கூறுவார்.

தீ பரவட்டும் !! ஞானத் தீ பரவட்டும்!!!

contact swami_48@yahoo.com